பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 24, 2010

இன்று இரவு தோன்றியவை-இயக்குநர் ராம்

1.
மு.க.அழகரி அவர்களுக்கு இருப்பது போல் கலைஞருக்கு ஒரு அப்பா இருந்திருந்தால், குறைந்த பட்சம் இந்தியாவின் பிரதமராகவாது அவர் ஆகியிருப்பார். நல்ல வேளை முத்து வேலர் காரணம்மாக இந்தியா ஏதோ இந்த அளவிற்காவது தப்பியது.




2.
எதிரியை உருவாக்குங்கள், அவன் தான் உங்களுக்கான அடையாளத்தையும்
நேச சக்தியையும் பெற்றுத் தருவான்.கலைஞர் இல்லை எனில் எம்.ஜி. ஆர் இல்லை. எம்.ஜி.ஆர் இல்லை எனில் கலைஞர் இல்லை. எதிரியே இல்லாமல் கூட்டணி கூட்டணி எனப் போனதால் தமிழகத்தில் காங்கிரஸ் இன்று இல்லவே இல்லை.


3.
இயக்குநர் பாலுமகேந்திரா நீங்கள் ஒரு மகா கலைஞர். நீங்கள் பெண்ணாய் இருந்தால், உங்களை நான் துரத்தி துரத்தி காதலித்து இருப்பேன். ஆணாய் இருப்பதால் ஆசானாய் மட்டும்மாய் ஆனிர்கள். வழக்கம் போல் இன்று இரவும் நாளை அதிகாலை நீங்கள் காலைநடை போகும் போது உங்களை சந்திப்பதாய் முடிவு செய்து விட்டேன் இவ்விரவு, உங்களைச் சந்திக்காமலே நாளைக் காலையும் விடியும் எனத் தெரிந்தாலும்.

4.
எங்கிருக்கிறாய் என் மா பேராசானே, சாமூவேல் சுதானந்தாவே?. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் என்ஃபீல்ட் புல்லட்டில் நீ வந்து நிற்கும் தோரணை திடீரென நினைவு வருகிறது. மாணக்கண் ஒருவன் நடு இரவில் உன்னைத் தேடித் தேம்புவான் எனத் தெரியாமல் எங்கோ அமெரிக்கக் கண்டத்தில் எப்படி உன்னால் வாழ முடிகிறது?

5.
ஒரு பெண்ணைப் போல் மென்மையாய் பேசும் பாரதிபுத்திரன்னே. சென்னை
கிறித்துவக்கல்லூரி தமிழ் பேராசிரியனே. உன்னை தோழன் என்பதா? பேராசிரியன் என்பதா? வசீகரன் என்பதா? உனக்கும் 50 வயது ஆகி விட்டது என்பது எனக்கு வருத்தமாய் இருக்கிறது. உன் வகுப்பில் அமர்ந்து சங்க இலக்கியம் கேட்கும் பாக்யம் எனக்கு இன்று இல்லை எனும் போது கண்ணீர் வருகிறது. நீ பாரதிக்காய் கண்ணீர் சிந்தினாயே ஒரு வகுப்பில் அது போல.

6.
உன்னிடம் நான் பேசுவதே இல்லை எனக் குறை படுகிறாய்.
கோபத்தில் மட்டும் அல்ல, நேசத்திலும் சிலசமயம் பேசாமல்
இருக்கும் படியாய்தான் முப்பதைத் தாண்டிய வாழ்வு இருக்கிறது.


7.
க.நண்பர் ஜீவா அவர்களே, எப்படி இருக்கறீர்கள்? கச்சேரி களை கட்டி விட்டதா?
இன்னமும் என் கனவுகளில் 32 டேக் வாங்கிய பிரபாகர் இம்சித்துக் கொண்டே இருக்கிறான். எப்பாவது பிரபாகர் எட்டிப் பார்க்கிறானா உங்கள் மனதில்?

8.
நாளையும் காலை என்று ஒன்று வரும் என்பதால் நிறைய உண்மைகளை
பேச விடாமல் செய்கிறது ஒவ்வொரு இரவும்.

9.
விஜயச் சக்கரவர்த்தி. என் நண்பனே, நீ என்ன ரொம்ப பிஸியா?
உன் மகனும் நானும் ஒன்று என்பதை எப்படி மறந்தாய்?
எங்கு போய் தொலைந்தாய்? ஒரு தெலுங்கு திரைப்படத்திற்காய் தமிழனை உதாசீனப்படுத்தி விட்டாயே?, தமிழினத் துரோகி.

10.
சாம்ராஜ், மலையாளிகளின் துரோகங்களை பதிவு செய்யும் சாம்ராஜ்
நீ எப்படி மலையாள பெண்ணை திருமணம் செய்து கொண்டாய்
(நிஷா சாம்ராஜ் மன்னிக்கவும்,என்ன இருந்தாலும் நீங்க சேச்சிதான்)

11.
மாரி செல்வராஜே, தேவர் மகனின் எதிரியே, கட்டுரை எழுதி
என்னையும் பேச வைத்தவனே, நீ என் உதவி இயக்குநரா?
அல்லது இயக்குநரா?. எதுவாய் இருந்தால் என்ன
உன் வலியும் உன் சமூகத்து வலியும் என்னை சதா
கொல்கிறது. ஒரு படம் எடு உன் சமூக வடுவை
ரணத்தோடும் திரை குணத்தோடும் வரலாற்று ரொளத்தரத்தோடும்.

12.
என் ஒன்னாம் வகுப்பு காலத்தில் திருப்பூர் அரசாங்க குவோட்டர்ஸில்
மூக்கொழுக்கி திரிந்த ஆனந்தியே நீ எங்கிருக்கிறாய்? என்ன ஆனாய்?
உன் நினைவாய் கற்றது தமிழ் கதாநாயகி ஆனந்தியாய் ஆனாள் என்பது
உனக்குத் தெரியும்மா? நிஜமாத்தான் சொல்றேன்.

13
எனக்கு 5 ஆம் வகுப்பில் தமிழ் போதித்த திரு.பூபால் ராயரே
எங்கு இருக்குறீர்கள்?. கற்றது தமிழ் பார்த்தீரா? ஒற்றுப் பிழைக்காய்
உங்களிடம் கொட்டு வாங்கிய அதே பாக்யவான் ச.ராமசுப்ரமணியம் தான் நான்.
இன்னும் ஒற்றுப் பிழைகள் சரியாக வில்லை. கொட்டுவதற்கு நீங்களும் இல்லை
என் அருகில்.


14.
வாழ்வின் பற்சக்கரம் பட்டு வேட்டி நுனிகூட கிழிந்தது இல்லை என்று சொன்ன
என் கல்யாண்ஜியே, வண்ணதாசனே, நான் அறியாமல் பயன் படுத்தும்
ஒரு சொல்லும் உங்கள் நுனியைக் காயப்படுத்தி விடும்மோ
என அஞ்சி எதுவும் சொல்லாமல் குட்நைட் மட்டும் சொல்கிறேன்.
தோட்டத்திற்கு வெளியே பூத்த நான்.

15
.
வழக்கம் போல் இன்று இரவும் வராத காதலி தூக்கம்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com