பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 29, 2010

என் ரயிலுக்கு நான் சின்னப்பையன்தான் - வெளியூர்க்காரன்

"காட்சி"க்கு ரயில் அனுபவங்களை எழுத்தாளர்களிடமும் உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தோம். எழுத்தாளர் பாரதிதேவி அவர்களின் அனுபவம் பதியப்பெற்றது. (http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_25.html).
அவ்வரிசையில் காட்சியின் உறுப்பினர் திரு.ஸ்டாலின் பெலிக்ஸ் அவர்களின் அனுபவமும் .(http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_28.html). உறுப்பினர் திரு.விக்னேஷ்வரன் அவர்களின் அனுபவமும் இங்கே இடம் பெற்றது. (http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_5727.html). அதன் தொடர்ச்சியாக காட்சியின் உறுப்பினர் வெளியூர்காரனின் அனுபவம் இங்கே.
சிறந்த படைப்புகளை புத்தகமாய் ரயில் என்ற தலைப்பில் பிரசுரிக்கலாம் என இருக்கிறோம். உங்கள் படைப்புகளையும் எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். நன்றி. காட்சி - kaattchi@gmail.com

அறிமுகம்(அவரைப்பற்றி அவரே):
இவன் தீபன்..அந்நிய மண்ணில் தன் இருப்பை உணர முடியாததால்
வெளியூர்க்காரன் ஆனவன்..கலைஞர் பிறந்த திருவாரூரில் மட்டும் உள்ளூர்காரனாய்..! எழுதுவதை விட வாசிப்பதை அதிகம் விரும்பும் ஒரு நல்ல வாசகன்..டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் சில ஆண்டு காலம் சென்னையில்,தற்போது சிங்கையில்...
வலைப்பூ உலகத்தில் வெளியூர்க்காரனாய்..!
  















என் ரயிலுக்கு நான் சின்னப்பையன்தான் - வெளியூர்க்காரன்



உங்க எல்லாரையும் விட ரயில் பயணம் எனக்கு ரொம்ப புடிக்கும்..இன்னும் சொல்ல போன ரயில் பயணம் மட்டும்தான் புடிக்கும்.. ஏன்னா, சின்ன வயசுல எனக்கு பஸ்ல போனா வாந்தி வரும்..
பஸ்ல எல்லாரும் டிக்கெட் வாங்கும்போது என் அப்பா மட்டும் போய் மு.ரா சன்ஸ் பாலிதீன் கவர வாங்குவாரு..என் மேல அவ்ளோ நம்பிக்கை...அப்டி ஒருதடவ நான் பஸ்ல அரைமயக்கத்துல எங்கப்பா மடில இருந்தப்போ என் வயசு பொண்ணு ஒருத்தி (ஆறு வயசு) என்ன பார்த்து இன்னுமாடா வாந்தி எடுக்கறேன்னு கேவலமா சிரிச்சப்போ ஆரம்பிச்சுது..எனக்கு ரயில் மீதான காதல்..இனி வாழ்க்கைல பஸ்ல போகக்கூடாதுன்னு முடிவெடுத்ததும் அன்னிக்குத்தான்..!

லவ்னா கொஞ்ச நஞ்ச லவ் இல்ல சார்..அப்டி ஒரு லவ்..பெரிய மனுஷனாகி வேலைக்குன்னு போனா அது ட்ரைன் எஞ்சின்ல கரி அள்ளி கொட்ற வேலைக்குதான் போகணும்னு ஒரு வெறியே இருந்துச்சு அந்த வயசுல..தலைல எஞ்சின் டிரைவர் மாதிரியே கர்சீப் கட்டிக்கிட்டு நான் எஞ்சின்ல கரி அள்ளி கொட்றத மாதிரி நடிச்சு காமிச்சத பார்த்து என் தாத்தா ரசிச்சு விழுந்து விழுந்து சிரிச்சத இன்னும் திருவாரூர் ரயில்வே ஸ்டேசன் மறந்துருக்காது...நானும்தான்..!

இத்துனூண்டு கரிய போட்டு இவ்ளோ பெரிய ட்ரைன் எப்டி ஓடுதுன்னு என் மனசுக்குள்ள மிக பெரிய கேள்வி இருந்துச்சு அந்த வயசுல ...பியுசி பெயில் ஆன என் அப்பாகிட்ட இந்த கேள்விய கேட்டப்போ, ஒரு ரூபாய்க்கு நிலகடலை வாங்கி குடுத்து என் வாய அடைச்சிட்டாரு. என் கேள்விக்கு பதில் தெரியாத அவருக்கு நான் என்ன வாங்கி குடுத்தா பேசாம இருப்பேன்னு தெளிவா தெரிஞ்சிருந்துருக்கு .ஆனா, அதேமாதிரி என் கேள்விக்கான பதில தெரிஞ்சிக்க நான் ரொம்ப முயற்சி பண்ணவும் இல்ல..எனக்கு ரயில் புடிக்கும்...அவ்ளோதான்..அது எப்டி ஓடுனா என்ன...!

அந்த நீராவி எஞ்சினோட வாசனை, அந்த புகை எல்லாமே கனவு மாதிரி இருக்கு...ஜன்னல் வழியா தலைய எட்டி பார்க்கும்போது எஞ்சின்லேர்ந்து பறந்து வந்து கண்ணுல விழற கரி, கண்ணுக்கு எரிச்சலா இருந்தாலும் மனசுக்கு சந்தோசமா இருக்கும்..எதோ ரயிலே பறந்து வந்து எனக்கு முத்தம் குடுத்த மாதிரி... !

டீசல் எஞ்சின மொதொமொதொள்ள அறிமுகபடுத்துனப்போ எஞ்சின் பக்கத்துலையே நின்னு அதோட சத்தத்த பிரமிப்பா பார்த்துகிட்ருந்தவனை, தலைல கர்சீப் கட்டாத எஞ்சின் டிரைவர் சிரிச்சுகிட்டே மேல வரியாடான்னு கேட்டப்போ ஓடி போய் அப்பா பின்னாடி ஒளிஞ்சுகிட்டு வெக்கத்துல இருக்கற என் முகத்த அந்த டிரைவர் பார்க்காம என் அப்பாவ கட்டிபுடிச்சுக்க எனக்கு அப்போ ரொம்ப புடிச்சுது..!

அட,உங்ககிட்ட சொல்லாம விட்டுட்டனே .என்கூட நின்னு என்னோட ரயில வேடிக்கை பார்க்கறது எங்கப்பாவுக்கும் ரொம்ப புடிக்கும்...அவரு ரயில ரசிச்சாரா இல்ல நான் ரயில ரசிக்கறத ரசிச்சாரான்னு எனக்கு அப்போ தெரியல.ஏன் இப்பவும் தெரியல...ஆனா எங்கப்பா என் கூட நிக்கறப்போ ரயில வேடிக்கை பார்க்கறதுன்னா எனக்கு அவ்ளோ இஷ்டம் .. ரொம்ப வருஷம் கழிச்சு இத எழுதும்போது தோணுது...அன்னிக்கு அந்த டிரைவர் கூப்டப்போ உள்ள ஏறி பார்த்துருக்கலாமேன்னு.....இப்ப அவர் எங்க இருக்காரோ..!

திருவாரூர்லேர்ந்து முத்துபேட்டை வரைக்கும் எத்தனை தந்தி கம்பம் வரும் அதுல எத்தனை குருவி உக்காந்துருக்கும்னு இப்ப கூட சொல்ல முடியும் என்னால... அவ்ளோ ரசிச்சிருக்கேன்..அந்த ரயில் பயணங்கள...!

என் பாட்டி இறந்துட்டதா தகவல் வந்தப்போ என் அப்பா ஊருக்கு கார் புடிச்சு போய்டலாம்னு பேசிகிட்ருந்தத கேட்டுட்டு, என் பாட்டி இறந்த வருத்தத்த விட, ரயில்ல போகமுடியலயேங்கற வருத்தம்தான் எனக்கு அதிகமா இருந்துச்சு....!! அப்டி ஒரு காதல்., என் ரயில் மேல..!!

அதேபோல என்னோட சிறுவயது ரயில் பயணங்கள்ள யாரும் என்கூட பயணிச்சதா நினைவில்ல எனக்கு..நானும் என் ரயிலும் மட்டும்தான் பேசிக்குவோம்..மணலி ரயில்வே கிராசிங், அந்த தூங்கு மூஞ்சி மரம், அந்த ஸ்டேசன்ல முருக்கு விக்கற ஜாக்கெட் போடாத பாட்டி, நிக்கள்ளி , நிக்கள்ளின்னு கத்திக்கிட்டு நிலகடலை விக்கற செவுட்டு தாத்தா.. நோம்பு தொறக்கற பாய்,திருத்துறைபூண்டி ஸ்டேசன்ல ஐயர் கான்டீன் பூரி மசாலா. ரெட்டைஜடை சோபியா .அப்பறம் என்னோட தந்தி மரங்களும் குருவிகளும்...எல்லாமே கடந்து போயிருச்சு... !!

இன்று சிங்கப்பூரின் அதிவேக எம்ஆர்டி ரயில்கள் என்னை ஒரு எடத்துல கவ்வி கொண்டு போய் இன்னொரு எடத்துல துப்புது...ஜன்னல் வழியா தெரியற தந்தி மரங்கள் இல்ல..அதன் கம்பிகளில் எப்போதும் எனக்காக காத்திருக்கும் குருவிகளும் இல்ல...உள்ள ஒரே வெளிச்சம்..வெளில ஒரே இருட்டு...என்னோட பயணிக்கற சின்ன வயசு பசங்க வீடியோ கேம்ல மூழ்கி அவங்களோட ரயில் பயணத்தை உயிரில்லாம பயணிக்கும்போது, ஏண்ணே தெரில எனக்கு எங்கப்பாவ பார்க்கணும் போல இருக்கு...!

நான் இங்க வர்றதுக்கு முன்னாடி ஒரு நாள் தனியா போய் திருவாரூர் ஆத்து பாலத்துல நின்னு என்னோட ரயில் போறத பார்த்தேன்..என்ன மாதிரியே ஒரு சிறுவன் ஜன்னல் வழியா ரொம்ப ஆச்சர்யமா ரசிச்சு எதோ கவனத்துல இருந்தான்..அவனும் கண்டிப்பா என்ன மாதிரியே குருவிகளதான் எண்ணுவானா இருக்கும்..என்னோட ரயில் என்ன கவனிக்காம அந்த சிறுவன ஆச்சர்யபடுத்தரதுல மட்டுமே கவனமா போய்கிட்ருந்துச்சு..தூரத்துல புள்ளியா தெரியற வரைக்கும் பார்த்துகிட்ருந்தேன்..என்ன திரும்பி பார்க்கும்னு...ஆனா கடைசி வரைக்கும் பார்க்கவே இல்ல.
இவ்ளோ நாள் எங்கடா போனேன்னு கோவம் போல..!

இன்னொரு தடவ திருவாரூர் ஸ்டேசன்ல எங்கப்பா கைய புடிச்சுகிட்டு ட்ரைன் எஞ்சின ஆசை தீர வேடிக்க பார்க்கணும். நீங்க எனக்கு இதேமாதிரி ட்ரைன் வாங்கி தர்றேன்னு அப்போ போய்தான சொன்னீங்கன்னு கேட்டு அவர் சிரிக்கறத ரசிக்கணும் திருவாரூர்லேர்ந்து முத்துபேட்டைக்கு சாயங்காலம் ஆறு மணி ரயில்ல போய் சின்ன குழந்தயாட்டமா தந்தி மரங்களையும் அதுல உக்காந்துருக்க குருவிகளையும் மறுபடியும் எண்ணனும்...!

கண்டிப்பா எண்ணுவேன்..யார் சிரிச்சா என்ன சார்...

என் ரயிலுக்கு நான் சின்னப்பையன்தான்...


-வெளியூர்க்காரன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com