பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 29, 2010

சுமதி ராமசுப்ரமணியம் கவிதைகள் தொடர்:1

அறிமுகம்:

சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச் சார்ந்தவர்.
முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,
முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர்.  தற்போது கோவையில்  கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
இவருடையக் கவிதைகள் காட்சியில் தொடராய் இடம் பெறுகின்றன. இவருடைய கவிதைகள், கட்டுரைகள்,காலச்சுவடு, கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன், வார்த்தை, வடக்கு வாசல்
அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.

1.
பணியிடங்களில் நிகழ்வு ஏதுவாயினும்
தேனீருடன் சிறுசிறு இனிப்பு காரப்பொட்டலங்கள்கட்டி
உபசரிக்கையில்
ஏதேனும் ஒன்றை எடுத்து
உணவுப்பையில் பத்திரப்படுத்தும்
சிறுகுழந்தைகள் கொண்ட
பெண் பணியாளர்கள்
குழந்தைகளிடம் காலையிலேயே சொல்லி வந்திருக்கலாம்
மாலை நேரக் காலதாமதத்தை..

நா இனிப்பானாலும்
அவை காலதாமதம் குறித்து கேட்கின்றன
காத்திருப்பின் வருத்தம் மேலிட.

2.


பகல்நேர சாப்பாட்டின் போது
தாத்தாவையே உற்றுப்பார்த்த சிறுமி
புதிதாக ஒன்றை கண்டுபிடித்தாள்.
தாத்தாவின் மீசையை விட
புதிதாக வாங்கிய ஹட்ச் நாய்க்கு
மீசை சிறியதென.

3.

இன்னும் கொஞ்சம்
மழை பெய்திருக்கலாம்
கீற்றுகளில்
நீர் சொட்டும் அழகிற்காகவாவது.

4.

சருகுகளின்
முனகலுடன் கூடிய
வெய்யிற் காலத்து மரநிழலில்
தாழ்வாக மிதந்து விழும்
இலையில்
எப்படித் தொடங்குவது என்ற
மொளனத்துடன் கூடிய

மழையின் சிரிப்பு தெரிகிறது.



தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com