1.
பார்க்கும் கணந்தோறும்
140,150,கி.மீ வேகத்தில் ஓடி
சிறுத்தையோ சிங்கமோ வேட்டையாடுகிறது,
மான்களையும் காட்டெருமைகளையும்
மிக வேகமாகவோ
மிகமிக மெதுவாகவோ..
அவரவர் தொலைக்காட்சிப் பெட்டி அளவில்
முதலைகள் வாய் பிளந்து நகர
அவசர அவசரமாக
மீன்களை விழுங்குவன பனிக்கரடிகள்.
வாய்கொள்ளாமல் இரை தின்பதில்
பாம்புகளுக்கு நிகரில்லை எதுவும்..
கண்ணாடி ஜெல்லிகளுக்கு நடுவில்
அலைந்து திரியும் வண்ண மீன்கள்
எங்கிருந்தோ, எங்கு வேண்டுமானாலும்
திடீரென முளைக்கும் சுறாக்களுக்கு
இரத்தம் சிந்தாமல் இரையாகின்றன.
இரத்தம் ஒழுகிய வாய்கள்
வெறி கொண்ட கண்கள்
கூர் மழுங்கா பற்கள்
இறந்த உயிர்களின் மிச்ச சொச்சங்கள்
ஆர்ப்பாட்டத்துடன் நடந்து முடிந்த
மாபெரும் விருந்து போல்
காட்டப்படும் இறுதிவரை..
அணைக்கப்படாமல் பார்க்கப்படும்
வண்ண பிம்பங்களும் பின்னனி இசையும்
பறைசாற்றுகின்றன
தொடரும்
ஆதிமனிதனின் வேட்டையை.
2.
ஏறக்குறைய அது ஒரு
பின்பனிக்காலம்.
வெப்பம் வீசி நின்ற
பகல் பொழுது.
கைதட்டி இசைப்பாடவோ
கால் சேர்த்து நடனமிடவோ
இணை கைகள்
இணை கால்கள் இல்லாது போய்
அவளுடைய வாய்
ஒரு வெப்ப நீருற்றைப் போல்
வார்த்தைகளை
உமிழ்ந்து கொண்டே இருந்தது.
பைத்தியக்காரி.
அவள் வெப்ப வார்த்தைகள்
அனலில் இட்ட கத்தியாய்
முகங்களைக் கீறிப் போட்டதும்
சிலர் சபித்தார்கள் அவளை
ரணக் கீறல்கள் நிறைந்த
முகத்தை மறைக்கும் சொற்களோடு
பலரை அவளும் சபித்தாள்.
தொடர்ந்து இயங்கும் பிரதான சாலையில்
விதவிதமான வாகனங்கள்.மனிதர்கள்.
அதனதன் இயக்கம் அதனதற்கு
அவரவர் இயக்கம் அவரவருக்கு
என்று சொல்ல எந்த உயர்ந்த திணையும்
இயங்கவில்லை.
அவளைக் கடக்க நினைத்த வாகனம்
ஒன்று திகைத்து நின்றது
மரணத்தையும் அவளிடம் இருந்து அபகரித்து.
நாயாயும் அவளைக் கருதாத வாகனங்கள்
மீண்டும் ஓடின சின்ன காலதாமத்தை
கண்டிக்கும் தொடர் ஒலிகளுடன்.
எளிய விலையில் புடவை ஒன்றும்
சாப்பாட்டு பொட்டலம் ஒன்றும்மாய்
வாங்கித் தந்து போனவளால்
பின் நனைந்து நின்றது நகரம்.
சுமதி ராமசுப்ரமணியத்தின் ஏனைய கவிதைகள்.
http://kaattchi.blogspot.com/2010/03/1.html
http://kaattchi.blogspot.com/2010/03/2_30.html
March 31, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
