பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 30, 2010

அவ்வப்போது உதித்தவை - இயக்குநர் ராம்

1.
சையது பீடி முதலாளியின்
சையது international பள்ளி
வளாகத்தில் பெரிய பலகை
"no smoking zone"
என்ற வாசகத்துடன்.

2.

”வழியெங்கும் பற்பல மைல் கற்கள்
ஏதேதோ ஊர்களுக்கு தூரம் சொன்னன.
டெல்லி எத்தனை தூரம் என்று கூட சொல்லியது
தென்காசியில் ஒரு மைல் கல்.
ஆனால் நான் போக வேண்டிய ஊர் மட்டும்
எந்தக் கல்லிலும் எழுதப்படவில்லை.” என்றேன்.

”மேகங்கள், பறவைகள், நீரோடிகள்
இவற்றிற்கெல்லாம் இன்னமும்
மைல் கற்கள் வைக்கப்படவில்லை” என்றார் என்
அருகில் இருந்த தோழர்.

என்னையும் ஒருவர் மேகம் என்று புகழ்ந்தார்
என்று கைப்பேசியில் சுயபுராணம் பாடியதற்கு
துணைவி,”அரைகிறுக்கு,முழுப்பைத்தியம்,பரதேசி
என இவர்களுக்கெல்லாம் கூட இன்னமும்
மைல் கற்கள் வைக்கப்படவில்லை” என்றாள்.

எது எப்படியோ எனக்கான மைல் கற்கள்
அவர்களுக்கு மட்டும் அல்ல
எனக்கும் தெரியவில்லை என்பது தான்.

3.
பலமுறை ஹாரன் அடித்தும்
நடுத்தெருவில் உறக்கம் கொண்டிருந்த
பிஸ்கட் கலர் நாய்
அசைந்த பாடில்லை.

ஒரு வழியாய் சைடு வாங்கி
பற்பல வார்த்தையால் ட்ரைவர் ஏசி
வண்டியைக் கிளப்பிய போது
பின்பக்கம் பார்த்தேன்
அசையா அந்நாயின் உருவம்
கேட்டது “உன் படுக்கை அறையில்
நான் நுழைந்தால் நீ வழிவிடுவாயா என்ன?”

யார் இடத்தை யார் அபகரித்தார்கள்
என்று இடம் சொல்லாதவரை
“நாயைக் குழிப்பாட்டி நடுவீட்டுல
வச்சாலும் நக்கித்தான் குடிக்கும்”
என்ற பழமொழியும்
வாகன சக்கரங்களில் மசிந்த
நாயின் குடல் எச்சங்களும்
இருக்கத்தான் செய்யும்.

4.
sms அனுப்பலாம், பேசலாம் மணிக்கணக்கில் பேசலாம்.
சேர்ந்து போகலாம், கூடலாம், என்னோடு பாடலாம்
ஓடிப் பிடித்து ஆடலாம்,ஆள் இல்லா திரையரங்கில்
அமர்ந்து படமும் பார்க்கலாம் இப்படி எத்தனையோ
லாம்கள்லாம்கள் இருக்க
லால்சலாம் சொல்லிப் பிரிந்தாயே செந்தோழி.
(தன் தோழர் காலத்தைப் பகிர்ந்த நண்பணுக்கு)

ராம்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com