”கண்ண மூடிக்கோ! கண்ண மூடிக்கோ!
கள்ளன் வரான் ஒளிஞ்சிக்கோ!”,
பொத்திய விரல்கள் விலகுமுன்
தவிட்டுக் குருவிகளாய்
விசுக்கென்று கிளம்பி
மறையும் பொடிசுகள்,
கள்ளன் பிடிபட்டால்
கூச்சலும் கும்மாளமுமாய்
குட்டித் திருவிழாதான்.
தூக்குச்சட்டியை இடுக்கியபடி
தொரட்டியுடன் ஆட்டுமந்தை ஒட்டிவரும்
சுடலையும் வடிவேலும் வந்தால்தான்
வானத்தில் நிலா வரும்
நட்சத்திரங்களை மேய்க்க.
புழுதி எழுப்பிய ஆடுகள்
கடந்த பிறகும்
ஈரப்புழுக்கைகளால்
சூடு பறக்கும் மேற்குத் தெரு.
வீட்டுக்குத் தெரியாதிருக்க
தண்டவளாங்களின் மேல்
புகைப்பிடித்த படி நகரும்
பழக்கமான கொள்ளிவாய் பிசாசுகள்.
அம்மாவின் இடுப்பு நோவெடுக்க
மம்மு சாப்பிடாதவர்களை
மூணு கண்ணன் தேடி வரும் நேரம்.
சரிந்த நட்சத்திரங்களை
திண்ணையில் கிடக்கும் நார்கட்டிலில்
சரி பார்க்கும் தாத்தா
இடுங்கிய கண்ணிரண்டும் வானத்தில்
கூர் தீட்டிய காதிரண்டும் தெருவில்
தண்டடிக்கள் அசைய அசைய
ஊர்கதை பேசிய கிழவிகளின் கைகள்
வறண்ட மார்பின் மேல்
நழிவி விழும் சேலையை
சரி செய்யும் பழக்க தோசத்தில்.
பேச்சுவாக்கில்
எச்சில் சிவப்பைத் துப்புகிற
வாய் மட்டும்
இடம் பொருள் பாரா.
இருளைத் தின்று
பிளந்து நின்ற சுவர்களில்
எட்டிப்பார்த்த மீசைகள்
திசையைத் தேர்ந்தெடுக்க
திணறித்தான் போகும்.
கிராமத்து இரவுகளில்
இருட்டோடு எல்லாம் சேர்ந்தே வந்தது.
- சுமதி ராமசுப்ரமணியம்.
இவருடைய முந்தைய கவிதைகள்
http://kaattchi.blogspot.com/2010/03/1.html
March 30, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
