இப்போதும் அவர்கள் வருகிறார்கள். என் பிடித்தமான கனவுகளுக்கு முன்னதாகவோ இல்லை இறுதியாகவோ சில நேரம் என் கனவுகளுக்கு நடுவே நின்றுகொண்டு அழுது புலம்புகிறார்கள். என் ஆளில்லா அறையை ஆக்கிரமித்து எனக்கான ஜன்னல்களை சாத்த முயல்கிறார்கள். என் காலை பிடித்து கெஞ்சுகிறார்கள். சில நேரம் என் கழுத்தை பிடித்து நெரித்து கத்துகிறார்கள் . ஆனால் ஏனோ அவர்கள் இருவரும் ஒன்றாய் வருவதில்லை ஆளுக்கொரு இரவை என்னிடமிருந்து எடுத்துக்கொள்கிறார்கள். அவன் வரும் இரவில் அவள் வருவதில்லை, அவள் வரும் இரவில் அவன் வருவதில்லை. ஆனால் இரவெல்லாம் என்னை எவ்வளவு இம்சித்தாலும் போகும்போது என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு என்னை கொன்று விட்டு தான் போகிறார்கள். எனது காலையில் அவர்கள் வந்து போன சுவடுகளே இல்லையென்றாலும் எனது இரவுகள் அவர்கள் வருகையை எதிர்நோக்கி இன்னும் நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
ஒரு எட்டு வருடங்களுக்கு முன் என் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி வசித்த முத்துராஜும் பரமேஸ்வரியும் தான் அவர்கள். முத்துராஜை நீங்கள் எழுதில் பார்த்து விடமுடியும். அவர் இப்போதும் உங்கள் எதிர் வீடுகளில் வசிக்கலாம். உங்களோடு ஒன்றாக பணிபுரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் பரமேஸ்வரியை நீங்கள் அவ்வளவு எளிதில் எங்கும் பார்த்து விட முடியாது அவளை பார்ப்பதற்கு நீங்கள் ஒரு கோவிலில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஒரு மழை நாளில் வெகுநேரம் தன்னை மறந்து நீங்கள் நனைவீர்களானால் ஒருவேளை அவளைப் பார்க்கலாம். ஏனெனில் அவளுக்கு முத்துராஜிக்கு பிறகு மழையைத் தான் பிடிக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பின் சில நேரம் உங்கள் பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்து அவள் பயணிக்கலாம் .அப்படியொரு அழகு அவளுக்கு.
பரமேஸ்வரி, முத்துராஜிக்கு வேற யாருமில்லை, சொந்த அத்தை பெண்தான் இருவருக்கும் சிறு வயதில் அப்படி முட்டிக்குமாம். ஆகவே ஆகாது. முத்துராஜிக்கு சிறுவயதிலே பீடி குடிக்கும் பழக்கம் இருப்பதை அவன் அப்பாவிற்கு காட்டிகொடுத்ததே அவள்தானாம். அதே மாதிரி எட்டாம் வகுப்பு ரேங்க் கார்டில் பரமேஸ்வரி தனது அம்மாவின் கையெழுத்து போட்டிருப்பதை சாந்தா டீச்சரிடம் காட்டிக்கொடுத்தது முத்துராஜிதானாம். ஆனால் இரண்டு பேருக்குமே இருந்த ஒற்றுமை என்ன தெரியுமா, இருவருக்குமே சாந்தா டீச்சரையும் பிடிக்காது படிப்பையும் பிடிக்காது அதுதான்.
முத்துராஜ் பத்தாம்வகுப்பு பெயிலானதும் பெங்களூர்க்கு ஓடி போய் அங்க முட்டாய் கடையில மைசூர் பாகு கிண்டுற வேலையில் சேர்ந்துட்டான். அதே மாதிரி பரமேஸ்வரி எட்டாம் கிளாஸ் பெயிலானதும் வீட்ல குத்தவைச்சுட்டா. முத்துராஜிக்கு அவங்க அம்மா அன்பா எழுதுற கடிதத்தையும் அவங்க அப்பா அதட்டி எழுதற கடிதத்தையும் பரமேஸ்வரி தான் எழுதுவாளாம். முத்துராஜ் பெங்களூர் போய் இரண்டு வருடம் ஆனபின் தான் எழுதிய நூற்றிப்பத்தாவது கடிதத்தில்தான் ஒரு ஓரத்தில் கேட்டாளாம் பரமேஸ்வரி ” டேய் முத்துராஜ் எப்படி இருக்க உடம்ப பார்த்துக்க இப்படிக்கு பரமேஸ்வரி” என்று . அன்று தொடங்கியது அவர்கள் காதல். எதிர்ப்பு இல்லாத காதலாகவும் எதிர்பார்ப்பு இல்லாத காதலாகவும் வளர்ந்து கல்யாணத்திலே முடிந்தது.
இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா?. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அவர்களை நான் சாதரணமாகத்தான் கடந்து போயிருப்பேன். பத்தாம் வகுப்பு தேர்வில் நான் தோல்வி அடைந்து அம்மா என்னை கம்போடு துரத்தியபோது நான் ஓடி ஒளிந்த இடம் அவர்கள் வீட்டு கோழிமடம். அன்று என் அழுகை கலந்த சிரிப்பு அவர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கும் போல. அன்றிலிருந்து என் பிடித்தமான இடங்களில் ஒன்றாகிப்போனது அவர்கள் வீடு. நான் செய்திதாள்களில் இருந்து கிழித்து கொண்டுபோய் கொடுக்கும் கமல் படங்களுக்காகவும் நான் தினமும் எங்கள் வீட்டில் அடி வாங்கும் காரணங்களுக்காகவும் பரமேஸ்வரிக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது. அதேபோல் முத்துராஜிக்கு நான் பள்ளி கட்டடித்து பார்த்து வந்த புதிய சினிமாக்களின் கதையை அப்படியே சொல்வதாலும் சில நேரம் சினிமா கிசு கிசு பேசுவதாலும் பிடித்துபோனது. திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத குறையை அவர்கள் அவர்களுக்குள்ளாக இருந்த காதலால் மட்டுமே மறைத்திருந்தார்கள்.. சில நேரம் எனக்கு தெரியாமலே என்னை அவர்கள் தங்கள் குழந்தையாக நினைத்து விளையாடியதும் உண்டு. அதன்பின் எனக்கான ஒரு சோத்துருண்டை எப்போதும் அவர்கள் வீட்டில் காத்திருக்கும்.
எனக்கு அவர்களை பிடித்ததை விட அவர்களுக்குள்ளே இருந்த காதல் தான் எனக்கு ஆச்சரியங்களையும் சந்தோசத்தையும் அள்ளிதந்தவாறே இருந்தது. அவர்களின் கண்முன்னே அவர்களின் காதலை நான் காதலித்தேன். எனக்கு தெரியாமல் அவர்கள் ஒளித்து வைக்கும் அந்த காமத்தை கூட அவர்களுக்கு தெரியாமல் பார்த்துவிட முயற்சித்திருக்கிறேன்.
அவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள் தான். ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமல் ஒரு நாள் இருப்பார்கள் தான். ஆனால் அதற்கான காரணங்களை கேட்கும் போது எனக்கு சிரிப்பு தான் வரும். அதோடு மட்டுமல்லாமல் அந்த காரணங்களை நான் தெருவில் எல்லாருக்கும் சொல்லி விடுவேன். எல்லாரும் அவர்களை கேலி செய்யும் போது அவர்களின் காதல் நடுவீதியில் வெட்கப்படுவதை பார்க்க அவ்வளவு அழகாய் இருக்கும் எனக்கு.
ஒரு நாள் முத்துராஜ் தன் கல்யாண போட்டோவில் உள்ள பரமேஸ்வரியின் படத்திற்கு மீசை போட்டுவைத்ததற்காய் ஒரு சண்டை, நடு இரவில் ஒருநாள் முத்துராஜ் கனவில் பயந்து அலறியதையும் பரமேஸ்வரியின் காலை பிடித்து “சாமி என்னை காப்பாத்து சாமி என்னை எப்படியாவது காப்பாத்து” என கத்தியதை என்னிடம் சொன்னதற்கும் ஒருநாள் சண்டை. பெரும்பாலும் அவர்களின் சண்டைகள் இருவரும் விரும்பும்படியான காமத்திலே முடிவதாக ஒருநாள் முத்துராஜ் முகசவரம் செய்து கொண்டிருக்கும்போது சிரித்துக்கொண்டே பரமேஸ்வரி என்னிடம் சொல்லியிருக்கிறாள். அவள் சொன்னதும் அந்த சின்ன கத்தியோடு அந்த சின்ன வீட்டில் பிடிக்கவே முடியாத மாதிரி முத்துராஜ் விரட்டியிருக்கிறான். இப்பொது நான் சரியாக சொல்லவேண்டும் என்றால் நான் முத்துராஜாய் முழுவதுமாய் மாறி எனக்கான பரமேஸ்வரியை தேடத் தொடங்கியிருந்தேன்.
அப்படி நான் எனக்கான பரமேஸ்வரியை தேடி திருநெல்வேலி வீதிகளில் அலைந்த ஒரு மதியவேளையில் ஒரு நகர பேருந்தில் தான் பார்த்தேன் அவளை. பரமேஸ்வரிக்கு எப்போதும் பிடிக்கும் சிகப்புகலர் புடவையைதான் அவளும் கட்டியிருந்தாள். ஆமாம் அவளைப்போலவே ஒரு ஒத்தை ரோசா சொருகி என்னை குழப்பினாள் . என்னால் நம்பவேமுடியவில்லை கொஞ்சம் உத்துப்பார்த்தால் அது பரமேஸ்வரி மாதிரி தெரியவில்லை என்ன கொடுமை அது பரமேஸ்வரியே தான். ஆனால் அருகில் இருப்பது யார் என்று எனக்கு தெரியவில்லை அவனை இதுக்குமுன் நான் பார்த்ததேயில்லை. அவன் முத்துராஜைவிட வசீகரமாய் இருந்தான். அவளின் உறவுக்காரனாய் இருக்கலாம். இந்த பேருந்து பயணத்தில் என்னை பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவாள். ஆம் அவளோடு இதுவரை நான் பேருந்தில் பயணித்ததேயில்லை. அவளிடம் நான் போய் பேசினாள் ரொம்ப சந்தோசப்படுவாள் என்று நான் எழும்போது எதேச்சையாக அவர்கள் இருவரும் சந்தோசமாய் பேசியபடி என்னை பார்த்திருக்க கூடாது. ஆனால் பார்த்தார்கள். என்னை பார்த்ததும் அவன் வேகமாய் இருக்கையில் இருந்து எழுந்துகொண்டான். அவள் என்னை பார்த்து சிரிக்கவில்லை. தெரிந்தவன் என்பதுபோல் கூட காட்டிக்கொள்ளவில்லை. பேருந்து போய்கொண்டிருக்கும் போதே அவன் அவசர அவசரமாய் அவளிடம் ஏதோ பேசிவிட்டு கீழே விழுந்து விடுபவனைப்போல இறங்கிப்போனான். அவள் என் முகத்தை திரும்பி பார்க்காமலே வேர்க்க விறுவிறுக்க அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிபோனாள். மறையும் வரை அவள் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.
என்ன நடந்தது?. நடந்தது நிஜமா இல்லை கனவா என்று நான் யோசிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கண்டிப்பாய் அவன் அவள் உறவுக்காரன் இல்லை அதேபோல் அவள் பரமேஸ்வரி இல்லை பரமேஸ்வரியாய் இருந்தால் எப்படி என்னை பார்த்து சிரிக்காமல் பேசாமல் இருக்க முடியும். யார் இவர்கள் ஏன் என்னை பார்த்து பயப்படவேண்டும். என்னை ஏன் இப்படி அவர்கள் பாடாய்படுத்தி சித்ரவதை செய்ய வேண்டும் . கடவுளே கண்டிப்பாய் அது பரமேஸ்வரியாக இருக்க கூடாது. அப்படியே இருந்தாலும் என்னை அவள் சரியாக கவனிக்காமல் சென்றிருக்க வேண்டும்.
எந்த ஒரு குழந்தையின் சிரிப்பையும், எந்த ஒரு அழகான பெண்னையும் ரசிக்க முடியாதவனாய் அதனை நம்பகூட முடியாதவனாய் முதன்முறையாய் வந்து இறங்கினேன். தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. மெதுவாய் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்த மனிதனின் சிரிப்பு என்னை பாடாய்படுத்தியது. அவன் முகம் என்னைவிட்டு மறையாமல் இருக்கும்போதே எங்கிருந்தோ சைக்கிளில் வந்த முத்துராஜ் என்னை பார்த்து சிரித்தபடி ”டேய் அதுக்குள்ளே இன்னைக்கு வந்திட்டயா சரி சைக்கிளில் ஏறு போவோம்” என்று சொன்னபோது எனக்கு என்னவோ போலிருந்தது. முத்துராஜின் முகத்தையே பார்க்க பிடிக்கவில்லை. அவன் முகம் பார்க்காமல் என் முகத்தை மறைத்து போலி சிரிப்பையும் சிரித்து பின்னால் ஏறி உட்கார்ந்தேன்.
அவனிடம் கேட்கலாமா?. ஒருவேளை கேட்டு அது உண்மையிலே பரமேஸ்வரியாய் இருந்தால் என்ன பன்னுவது, சரி ஒருவேளை பரமேஸ்வரி எங்கும் போகாமல் இன்று வீட்டில் இருந்தால் எவ்வளவு சந்தோசம் நிம்மதி நமக்கு சரி கேட்டுவிடுவோம். என்று மெதுவாய் கேட்டேன். "பரமேஸ்வரி அக்கா இன்னைக்கு எங்க அண்ண போயிருக்கா?" என் தலையில் இடியை தூக்கி போடும் ஒரு பதிலை அவன் சந்தோசமாய் சொன்னான் “அவளும் இன்னைக்கு திருநெல்வேலிக்குத் தான் போயிருக்கால”என்று. கொஞ்சம் கூட தாமதிக்காமல் கேட்டேன் ”எதுக்கு” என்று. அவனோ பாவமாய் பதில் சொன்னான். “ரெண்டு நாளாவே வயிறு வலிக்குனு சொன்னா அதுதான் ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரில காண்பிச்சுட்டு வான்னு அனுப்பினேன்” என்று சொல்லிமுடிப்பதற்குள் சண்டாளன் நான் அதை கேட்டுவிட்டேன் “யார் கூட” என்று. அதன்பின் அவன் கேட்ட ”யார்கூட பார்த்த” என்ற கேள்வியும் அதன் தொனியும் என்னை பயம்கொள்ள செய்தது. நான் எவ்வளவோ மறுத்தும் அவன் சரியாக கேட்டான். “அவன் முகத்துல சின்ன தழும்பு இருந்துச்சா , அவன் முடி சுருள் சுருளா இருந்திச்சா….அவனின் வலதுகையில் ஒரு விரல் மொட்டையாக இருந்ததா……இப்படி அவன் எல்லா கேள்விகளுக்கும் நான் “ஆமா” என்ற பதிலை அமைதியாய் சொல்ல அவன் என்னை என் வீட்டில் இறக்கிவிட்டு வேகமாய் போனான். போகும்போது அவன் என்னை திரும்பி பார்க்காதது எனக்கு அழுகை வந்திடும் போல இருந்தது.
அன்று இரவு என்னால் அவர்கள் வீட்டிற்கு போக முடியவில்லை. என் அம்மா கூட நான் எங்கும் போகாமல் இருப்பதை நினைத்து ஆச்சர்யபட்டாள். எனக்கு ரொம்பநாள் கழித்து அவள் அருகில் இருந்து உணவு பறிமாறினாள். எந்த சந்தோசமும் இல்லாமலே படுக்கையில் கிடந்தேன். மறுபடியும் அந்த சுருள் முடிகாரனும் அந்த பரமேஸ்வரியும் என்னை வதைக்க எப்படியோ தூங்கிப்போனேன்.
காலையில் அம்மா அக்கா எல்லோருடைய கூச்சலோடும் கத்தலோடும் எழுந்தேன். மொத்த ஊருமே அழுது கூச்சலிட்டு கூடி கிடந்தது. முத்துராஜ் பரமேஸ்வரி வீட்டுக்கு முன்னால். பதறி அடித்துக்கொண்டு ஓடினேன். வீட்டின் படுக்கையறையில் அதே சிகப்பு புடவையோடு படுத்திருந்த பரமேஸ்வரிக்கு பக்கத்தில் கொஞ்சமும் குறையாத காதலோடும் கடைசி நேரத்தில் பகிர நினைத்த சந்தோசத்தோடும் அப்படியே இருவரும் மல்லாந்து படுத்துகிடந்தார்கள் உயிரை மட்டும் விட்டுவிட்டு.
ஐயோ! குழந்தை இல்லாததுக்கு போய் இப்படி பண்ணிட்டீங்களா? சண்டாள எம் மக்களா என்று கதறி அழுத ஒரு பாட்டியை கொஞ்சம் விலக்கிவிட்டு தைரியமாகவே பார்த்தேன். என்னை பார்க்க விருப்பமில்லாதவள் போல பரமேஸ்வரி மட்டும் முகத்தை கொஞ்சம் திருப்பிகொண்டு கிடந்தாள். அவர்களின் தலைமாட்டில் பாலீத்தின் பையில் அந்த அல்வாவில் கலந்த விஷம் இன்னமும் மிச்சம் இருந்தது.
- மாரி செல்வராஜ்
