பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 27, 2010

’உன் கை அளவாய் நான் ஆகக் கடவதாக,’ மகளே- இயக்குநர் ராம்.

1.
”அப்பா நான் சின்னக் குழந்தையா இருக்கும்
போது உன் மேல படுத்துத்தான் தூங்குவேன்னு
அம்மா சொன்னா, உனக்கு வலிச்சிருக்கும்ல,
சாரிப்பா”,என்று பெரிய மனுசியானதைக்
கருதிக் கொள்கிற என் 7 வயது மகள்
சொன்னாள் நேற்றிரவுக் கைப்பேசியில்.
அவளிடம் நான் சொல்லாதது

உன் பொம்மை உன் ஒரு புறத்திலும்
நான் உன் மறுபுறத்திலும்
உன் வாசத்தை நுகர்ந்த வாறே
உறங்கும் பேர் உறக்கத்திற்காக
என் உறக்கங்களை மிச்சப்படுத்திக்
கொண்டிருக்கிறேன் என் மகளே.




நேற்றிரவு அவள் கைப்பேசியை வைத்ததும் பிடித்த சிகரெட்டின் போது விரிந்த பழைய புகை

2.

எல்லாரும் சிகரெட்டை விடு விடு
என்று சொல்லித் தோர்த்தார்கள்
என்னிடம்,நான் சிகரெட்டிடம்
தோற்றதைப் போல்.

“நீ சொன்னா அப்பா கேப்பாங்க
நீ சொல்லு,” என்று மகளிடம்
வீட்டார் அனைவரும் சொன்னபோது
என்னை பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தாள்
ஒரு வார்த்தையும் சொல்லாமல்.

மாலை நானும் அவளும் தனியாய்
நடந்த போது ரகசியம் போல் சொன்னாள்
“அப்பா, சிகரெட் பிடிச்சா, போலிஸ்
பிடிப்பாங்களாம்,தாத்தா சொன்னாங்க
அதனால் நீ ரோட்லலாம் சிகரெட் பிடிக்காத என்ன?”

3.
”ஹாஸ்பிட்டலுக்கு வந்தா
உனக்கும் காச்சல் வரும்
உனக்கும் ஊசி போடுவார்கள்”
என்று சொல்லியும் மிரட்டியும்
அழுது அடம் பிடித்து
என்னோடு மருத்துவமனை வந்தே
தீர்வேன் என உடன் வந்தாள்
என் நல்ல காய்ச்சலின் போது.

நோயாளிகளின் வரிசையில்
காத்திருந்தோம்.
”எனக்கு எப்பப்பா முதல்
ஊசி போட்டங்கா”
”நீ பிறந்த மறுநாள், அப்பல்லாம்
நீ என் இந்தக் கைளவுதான்,
நாந்தான் தூக்கிட்டுப் போனென்”
”அத்துணுண்டாவா”சிரித்தாள்.
”அழுதேனா?”
”கொஞ்சம் அழுத”

”நீயும் என் கை அளவு இருந்தா
நானும் தூக்கிட்டு போவேன் பா”
என மீண்டும் சிரித்தாள்.

4.
என் மகளுடன் ஆன வெவ்வேறு
கைப்பேசி உரையாடல்கள்:

அ.
அவள்: அப்பா டோனிக்கு மேத்ஸ் நல்ல வருதுப்பா
நான்: அவனுக்கு எப்படி புபூ
அவள்: அவனுக்கும் மூளை இருக்குலப்பா

ஆ.
அவள்: அப்பா என் பிறந்தநாளைக்கு புது டிரெஸ்
போடனும்னு ஆசை
நான்: அதான் எடுத்தாச்சுலடா ஸ்ரீ
அவள்: அது தெரியும்பா, நீ புது டிரெஸ் போடனும்னு ஆசை..

இ.
அவள்: அப்பா, காத்தடிக்க தேவையில்லாத
சைக்கிளா வாங்கி கொடுப்பா
நான்: ஏன் புபூ?
அவள்: தாத்தாவும் அம்மாவும் காத்தடிச்சு
தரமாட்டேங்கறங்கப்பா,
10 நாளா சைக்கிள் அப்படியே கிடக்கு
நான்: ஆனா அப்படி சைக்கிள் இல்லையே...என்ன பன்ன?
அவள்: ஒன்னு அப்படி சைக்கிள் வாங்கித்தா,
இல்லேனா நீ இங்க என்கூட வந்து இரு

5.
ஒவ்வொரு மாலையும் உலகின் புதிய விசயங்களை
தான் கண்டுபிடித்ததாய் கொண்டு வரும்
என் மகளிடம் சொல்வதற்கு புதிய அதிசயங்கள் இல்லாத நான்
அவள் பாடம் குறித்த கேள்விகளைக் கேட்டு சதா அவளை இம்சிக்கிறேன்.பள்ளிப்பாடங்கள் இல்லா
அவள் உலகத்தின் நுழைவாயில் தெரியாமல்

6. அடம்
வெயில் அடித்தாலும் வேர்க்காத
கோவையின் பகல் அது.
அப்ப மகளுக்கு நாலு வயசு.
நானும் அவளும் பூளைமேட்டில்
பஸ்ஸீக்காக நின்றிருந்தோம்.
ஆட்டோக்கள் அழைத்தவாறு இருந்தன.

”அப்பா ஆட்டோக் கூட
நம்ம வீட்டுக்குப் போகும் பா” என்றாள்.

நாங்கள் பஸ்ஸில் தான் போனோம்.

வெயில் அடிக்காவிட்டாலும் வேர்க்கிற
சென்னையின் பகல் இது
இப்ப அவளுக்கு ஏழு வயசு

”ஏபிடி பஸ் இப்பவும் சென்னைக்குதான்
போகுதாம் பா” என்றாள் கைப்பேசியில்.

அவள் இல்லாமல் ஏபிடி பஸ் வந்துதான்
போகிறது தினமும் சென்னைக்கு.

ராம்.











தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com