நான்கு அத்தைப் பெண்களும் நானும் - பன்னீர் செல்வம்
என் வாழ்க்கையில், மூன்று மாதத்திற்கு முன்பு வரை மொத்தமாக நான்கு அத்தை பெண்களை காதலித்துள்ளேன். என்னவோ தெரியவில்லை எனக்கும் என் அத்தை பெண்களுக்கும் அப்படியொரு உறவு. கஜினி முகமது இந்தியா மீது படையெடுத்த மாதிரி நானும் ஒவ்வொரு முறையும் படையெடுத்து படையெடுத்து தோல்வியில் தான் முடிந்தது.
அத்தை பெண்களில் முதல் மூன்று அத்தை பெண்களின் பெயர் தேவி யில் தான் முடியும். அதனால் முப்பெரும் தேவியர் என்று வைத்துக் கொள்ளலாம்.கடைசி அத்தை பெண் மட்டும் விதிவிலக்கு ஒரு நடிகையின் பெயர் அவளுக்கு. ஒரு நாள் அவளே வந்து,மாமா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,உங்களுக்காக காத்திருப்பேன் நீங்கள் சொன்ன மாதிரி கலர் கலராக சட்டையெல்லாம் போடமாட்டேன்,முகத்திற்கு சாயம் பூசமாட்டேன்,பூ வைத்துக் கொள்வேன்,தாவணி கட்டிக் கொள்வேன்,டிவியில் சீரியல் பார்க்கமாட்டேன் பாட்டு மட்டும்தான் பார்ப்பேன்.அதுவும் உங்களுக்கு பிடிச்ச இளையராஜா பாட்டு மட்டும்தான் பார்ப்பேன்,நீங்க ஊருக்கு வரும் போதல்லாம் சாயங்காலாம் உங்க வீட்டுக்கு முன் உள்ள பிளையார் கோவிலுக்கு வருவேன்.உங்ககளுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு கூடவே எதிர் வீட்டு கருப்பு சுந்தரியைம் அழைத்துக்கொண்டு வருவேன்.இப்படி வசனமெல்லாம் பேசிய அந்த மகா அழகி,மூன்று மாதத்திற்கு முன், போன் செய்து,மாமா எனக்கு வருகிற வியாழக்கிழமை நிச்சயதார்த்தம்,மாப்பிள்ளைக்கு சொந்தமாக கடை இருக்கிறது.அடுத்த இரண்டு மாதத்தில் கல்யாணம் என்று சொன்ன மறுகணமே முடிவு பண்ணிவிட்டேன்.இனிமேல் இந்த காதல்,அத்தை பெண்கள் வேளையொல்லாம் மூட்டைக்கட்டி வைத்து விட்டு சென்னைக்கு வந்த வேலையை ஒழுங்காக பார்ப்போம் என .இதில் அவளுக்கு அமைய போகிற கணவன் சொந்தமாக கடை வைத்துள்ளானாம்.நான் சினிமாவில் உதவி இயக்குனராம்,இப்படியாக பேசிக்கொண்டே போனாள்.நான் ரொம்ப மரியாதையாக ””ஏன் எல்லா அத்தை பெண்களும் ஒரே மாதியே இருக்கிங்க தயவு செய்து இனிமே போன் பண்ணாதே கடை மாப்பிள்ளயை கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்வாயாகா” வாழ்த்திவிட்டு போனை துண்டித்து விட்டேன். கடைசி அத்தை பெண்ணுடன் ஆன என் காதல் இப்படி முடிந்தது. பொதுவாகவே என் அத்தை பெண்களுக்கு பொறுமை கிடையாது.
நான் காதலித்த நான்கு அத்தை பெண்களில்,முதல் காதல், முதல் அத்தை பெண், ”அவள்” மட்டுமே என்னை அழ வைத்தவள்.நான் ஆறாவது படிக்கும் போது சென்னையிலிருந்து விடுமுறைக்கு எங்க ஊருக்கு வந்திருந்தாள்.ஊரில் நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்வேன்.”அவள் என் அத்தை பெண்’’ அவளைதான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறேன்””.அவளும் அந்த வயதில் என்னைப் பார்த்தால் கொஞ்சம் வெட்கபடுவாள். ஒரு நாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தோம்,திடிரென கால் சுடுகிறதென்று என் கால் மேல் அவள் காலை வைத்து என் தோள் பட்டையை பிடித்துக் கொண்டு வாசலில் இறக்கி விடு ரொம்ப சுடுகிறது என்றாள்.அன்று முதல் அவள் மேல் காதல்.அது காதல் கடிதம் வரை போய் விட்டது.அவளும் ஊருக்குபோய் விட்டாள்.
அவள் அப்பா ஒரு நாள், ”பெண் வயதிற்கு வந்து விட்டாள்” என்ற செய்தியுடன் வந்தார்.எங்க அப்பா தான் தாய் மாமன். முறை செய்யும்படி சொல்லிவிட்டு போய் விட்டார்.எனக்கு ரொம்ப ஆர்வ மிகுதி, எப்படியும் என்னையும் அழைத்து போவார்கள் என்று கனவு கண்டுக்கொண்டிருந்தேன். பார்த்து மூணு வருஷம் ஆயிற்று,வயதுக்கு வேறு வந்து விட்டாள்.ஆனால் என்னை மட்டும் விட்டு சென்றார்கள்.
இரண்டு மாதம் கழித்து காதல் கடிதம் எழுதினேன்.இன்லாண்ட் கவர் வாங்கி ஒரு பக்கம்,”நீ வெள்ளைப் புறா”, நான் “வேட்டைப் புறா’’ மறுபக்கம் இளையராஜா வின் காதல் பாடல் புத்தகத்திலிருந்து பாடல் வரிகளை சுட்டு எழுதி இப்படிக்கு மாமன் மகன் ’’செல்வம்’’. கடிதம் போய் சேர்ந்து விட்டது.ஆனால் பதில் ஒன்றும் வரவில்லை.அத்தை வீட்டிலும் மாமன் மகன் தான் என்று விட்டு விட்டார்கள் போல. என்னுடைய பள்ளிப் படிப்பு முடிந்து எங்கள் வீட்டில் என்னை ஏலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.இவன் காலேஜ் போகட்டும்,இஞ்சினியர் ஆகட்டும்மென்று. ஆனால், நானோ சென்னையில் ஒரு பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு வேலைக்கு விண்ணப்பம் போட்டிருந்தேன்.அந்த கம்பெனியிலிருந்து வேலைக்கு அழைத்தனர். மனசுக்குள் ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் அத்தை மகள்,மிக மகிழ்ச்சியாக இருந்தேன்.
அவளை திரும்பவும் சென்னையில் அவள் வீட்டில் பார்க்கிறேன்.முன்பு பார்த்ததை விட இப்போது அழகும்,அமைதியும் கூடியிருந்தது.என் அத்தை,அவளிடம்,செல்வத்திற்க்கு ’’டீ’’ போட்டுக் கொடு என்றதும்,அவளும் வேகமாக டீ போட்டுக் கொடுத்தாள்.’’டீ’’ கொடுக்கும் போது ஒரு பார்வை பார்த்தாள்.அது என்றைக்கும் மறக்காது.
நானும் கம்பெனியில் சேர்ந்து வேலைக்கு போய்க்கொண்டிருந்தேன்.அவள் யோசனைப்படி அண்ணாமலை பல்கலைகழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் பட்ட படிப்பு சேர்ந்தேன்.ஒவ்வொரு ஞாயிறும் அவள் வீட்டுக்கு போய் விடுவேன். என்னுடைய பிறந்த நாளுக்கு அது வரையில் யாரும் எனக்கு வாழ்த்து அட்டை கொடுத்தது கிடையாது.அவள் முதல் முறையாக வாழ்த்து அட்டை கொடுத்தாள். அவளுக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள்.மூவரும் ஒரு நாள் பேசிக்கொண்டுருக்கும்பொழுது ,இடையில்’ அவள் தங்கை, அக்காவை திருமணம் செய்துகொள்ளபோவது நீங்கள்தானே என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.ஒரு வருடம் நன்றாக போனது.ஒரு நாள் அவள் தன் பெரியம்மா பெண் திருமணத்திற்க்கு போய்விட்டாள்.எனக்கு பெரிய அத்தை அவர்கள்.இவள் அம்மா எனக்கு மூன்றாவது அத்தை.அவள் திருமணத்திற்க்கு போய் வந்தபிறகு சரியாக பேசுவது இல்லை.அடுத்த ஒரு வருடத்தில் பெரிய இடைவெளி விழுந்தது.பொறுக்க முடியாமல் ஒரு நாள் நானே அவளிடம் பேசினேன்.அவளோ,நாம இப்படி பழகவேண்டாம்,அண்ணன் தங்கையாக பழகலாம் என்று சொல்லிவிட்டாள்.எனக்கு ஒன்றும் புரியவில்லை. விசாரித்து பார்த்தால்,கல்யாணத்திற்கு போன இடத்தில் ஒரு பையன் பழக்கமாம். அவள் வீட்டிலிருந்து என் அறைக்கு வரும் வரை அழுதுக்கொண்டே வந்ததேன்.அன்று இரவு முழுவதும் அழுதுக்கொண்டிருந்தேன்.அவளுக்கும் அவள் காதலனுடன் திருமணமாகிவிட்டது.
முதல் தேவியின் காதல் கதை முடிந்துவிட்டது. இரண்டாவது தேவிக்கு வருவோம்.இவள் வேறு யாருமில்லை,முதல் தேவியின் தங்கை தான். முதல் தேவியின் காதல் தெரிந்தும் அத்தை வீட்டிற்க்கு போய் வந்துக்கொண்டிருந்தேன். என் அத்தை எங்களுக்குள் ஏதோ பிரச்சினை என்று நினைத்துக் கொள்வார்கள். முதல் தேவியுடன் பேசுவதை விட இரண்டாவது தேவியுடன் தான் அதிகமாக பேசுவது. நிறைய ஆறுதல் கூறுவாள்.
அக்கா கொடுத்த கடிதத்தை கிழிச்சு போட்டு விடுங்கள் என்றாள்.தாடியை எடுங்கள்,மீசை வச்சா உங்களுக்கு நன்றாக இருக்கும் என்றாள். ஆகா, அத்தை பெண்கள் நம்மை விட மாட்டர்கள் போல என்று நினைத்துக்கொண்டேன் . இரண்டாம் தேவி என்னை காதலிக்க ஆரம்பித்தாள்.என்னுடைய புத்தகங்களை வாங்கி என் பெயரை எழுதுவாள்.என் நோட்டு புத்தகத்தில் அவள் அக்கா பெயரை ஒரு பக்கம் முழுவதும் எழுதி வைத்திருந்தேன்.அவள் அந்த பக்கத்தை கிழித்து எரித்து விட்டாள். ஒரு நாள் என்னுடைய பிரெளன் கலர் சட்டையை அயன் பண்ணிக் கொடுத்தாள். அடுத்து அவள் சொன்னது தான் எனக்கு வருத்தமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது.அவள் அக்காவின் காதலை நாங்கள் இருவரும் சேர்ந்துதான் சேர்த்து வைக்க வேண்டும் என்று சொன்னாள்.
இதற்கிடையில் முதல் தேவியின் காதல் கதை வீட்டுக்கு தெரிந்து பெரிய பிரச்சினையாகி விட்டது.எனக்கும் அத்தைக்கும் கொஞ்சம் மனஸ்தாபம்.நான்,ஊருக்கு போய்விட்டேன்.ஊருக்கு போய் இரண்டு மாதத்தில், முதல் தேவியும்,முதல் தேவியின் தங்கை,இரண்டாம் தேவியும், வீட்டை விட்டு சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார்கள் என்ற செய்தி எனக்கு வந்ததும், எனக்கு ஒன்றும் புரியவில்லை.முதல் தேவியின் பதிவு திருமணம் சரி,இரண்டாம் தேவியின் பதிவு திருமணம் எப்படி சாத்தியம்.நான் இங்கு தான் இருக்கிறேன், விசாரித்து பார்த்தால்.’இரண்டாம் தேவிக்கு கல்லுரியில், ’’பாடம்’’ எடுக்க வந்தவரிடம் காதல் என்று தெரிந்துக்கொண்டேன்.என் நண்பன் அசோக்கிடம் சிரித்துக் கொண்டே அழுதேன்.
இரண்டு தேவியின் காதல் கதை முடிந்தது. ’’மூன்றாம் தேவி,’’இவள் கொஞ்சம் வித்தியாசமானவள். வெளிப்படையானவள். ஒரு விஷயம் பிடிக்கும்,பிடிக்காதென்று முகத்திற்கு நேராக சொல்லி விடுவாள்.எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர். எங்க அப்பாவோட இன்னோரு தங்கையின் பெண். இங்கிலிஸ் மீடியம் படித்துக் கொண்டிருந்தாள்.முதல் தேவியும்,இரண்டாம் தேவியும் கூட இங்கிலிஸ் மீடியம் தான்.நான் ஊரில் இருந்தபொழுது இவள் பழக்கம். என்னிடம் நன்றாக பேசுவாள்.ஆங்கிலத்தையும் தமிழயும் கலந்து போசுவாள்.நீங்க,சென்னையில் என்ன வேளை பார்க்கிறிங்க?என்ன சம்பளம்?பதினோறாவது படித்துக் கொண்டு இவ்வுளவு கேள்வி கேட்பாள்.அதை விட முக்கியமாக ஒரு கேள்வி கேட்டாள்? முதல் தேவியும்,இரண்டாம் தேவியும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார்களாமே,அப்படியா?என்பாள்.அவள் பேசுவது எனக்கும் கொஞ்சம் ஆறுதலாகதான் இருந்தது.ஒரு மாதம் தான் ஊரில் இருந்தேன்.திடிரென, ஒரு நாள்.ஒரு துண்டு பேப்பரில்,என் பெயருடன் “I love you’ என்று துண்டு காதல் கடிதத்தை கொடுத்து விட்டு சென்று விட்டாள்.என்ன செய்வதுறியாமல் திகைத்து நின்றேன். ‘’அத்தை பெண்களுக்கு வேற வேலை இல்லை என்று நினைத்து கொண்டு,என் நண்பன் அசோக்கிடம் சொன்னோன். ‘’டேய், அவள் இப்பதான் பதினோறாவது படிக்கிறா,சின்ன பொண்ணு ஏதாவது புத்திமதி சொல்லி அனுப்புடா என்றான்.ஒரு நாள், அவளை தனியாக கூப்பிட்டு, ‘’இங்க பாரும்மா தேவி, நீ இப்ப தான் பதினோறாவது படிக்கிற,காலேஜ் படிக்கும் போது சொல்லு,அப்போதும் நீ இப்படியேயிருந்தால் பார்க்கலாம்’’” என்று அவளை அனுப்பி விட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன்.பெயர் தெரியாத ஒரு சினிமா கம்பெனியில் சேர்ந்தேன்.அதுவும் மூன்று மாதத்தில் காணாமல் போனது. கிடைத்த வேலைகள் செய்துக் கொண்டு உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன்.
திரும்பவும்,ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை. இந்த முறை,’’மூன்றாம் தேவி’’ கல்லுரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.அவளை பார்க்க சென்றேன். பார்த்தேன்.நன்றாகதான் பேசினாள்.உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றாள் நானும் ஆர்வமாக என்ன என்றேன் நான் கொடுத்த லட்டரை மறந்துடுங்க என்று சொல்லி விட்டு போய்விட்டாள்.
அதன் பிறகு, பெண்களும் சந்தோசங்களும் அற்றுப்போக தீவீரமாக உதவி இயக்குனர் ஆக அலைந்து திரிந்தேன். இன்றைக்கு திரும்பி பார்க்கையில் என் அத்தை பெண்களின் புறக்கணிப்பின் நியாயம் புரிகிறது. இந்த ஐந்து வருட என் தகிப்பான ஓட்டத்தை நிச்சயமாய் அவர்களால் பின் தொடர்ந்திருக்க முடியாது
ஆனாலும்...................................................................................
பன்னீர்செல்வம்
இவ்வனுபவம் இவரின் முதல் எழுத்து - காட்சி
