உங்கள் தாத்தாவை நீங்கள் கொலை செய்வீர்களா? ஆனால் நான் தான் என் தாத்தாவை கொலைசெய்தேன்.ஆம் ஒரு பூனைகுட்டி போல் எங்கள் வீட்டில் உலவி கொண்டிருந்த அவரை நான் தான் கொலை செய்தேன்.
பொதுவாக எல்லா தாத்தாக்களை போல என் தாத்தாவும் நல்லவர் என்று சொல்ல முடியாது அவர் ரொம்ப நல்லவர் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
என் தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.எனக்கு எப்போதும் அவர் பிடித்தமானவர்தான் ,பிடித்தமானவர்களை யாராவது கொலை செய்வார்களா என்று நீங்கள் கேட்டால் நான் செய்வேன், நான் எனக்கு பிடித்தமானவர்களை மட்டுமே கொலைசெய்து வந்துள்ளேன் வருகிறேன்.என்னால் எனக்கு பிடித்தமானவர்களை மட்டுமே கொலை செய்ய முடிகிறது.
நொண்டி பெருமாள்தான் என் தாத்தா நான் நொண்டிபெருமாள் பேரன்.ஆனால் என் தாத்தா நொண்டி இல்லை திருச்செந்தூர் வரை நடந்து சென்று வரக்கூடியவர் ஆனாலும் அவரை யாரும் பெருமாள் என்று சொல்வதில்லை நொண்டிபெருமாள் என்று தான் சொல்லுவார்கள்.அதன் காரணம் தெரிந்துகொள்ள எனக்கு எட்டு வருசம் ஆனது.ஒரு நாள் என் அம்மாவை விடாமள் அவள் பால் கறந்துகொண்டிருக்கும்போது மாட்டுக்கு கொசு தட்டிவிட்டுகொண்டே கேட்டு தெரிந்துகொண்டேன்.
தாத்தாதான் எங்கள் ஊர் அம்மன் கோவிலுக்கு பூசாரி.அம்மன் சிலை கழுவுவது பூஜை செய்வது அவர் வேலை,அம்மனை கழுவும்போது கைகளால் தொட்டு கழுவக்கூடாதாம் எதாவது துணியை கொண்டுதான் தொடவேண்டுமாம்.என் தாத்தா அவருடைய ஒரு சோம்பேறி தினத்தில் அம்மன் சிலையை கையால் தொட்டு தேய்த்து கழுவிவிட்டாராம்.அவ்வளவுதான் என் தாத்தாவின் பத்து விரல்களும் மடங்கிபோய்விட்டதாம் நிமிர்த்தவே முடியவில்லையாம்.அதன் பிறகு அடுத்தவருடத்தில் சாம்போரையன் ஐயரிடம் வட்டிக்கு கடன் வாங்கி சொந்த கொடை நடத்திய பின்னாடிதான் அவரின் விரல்கள் சரியானதாம்.அந்த நாளிலிருந்து எல்லாரும் தாத்தாவை நொண்டிபெருமாள் என்றுதான் கூப்பிடுகிறார்களாம்.அமமா சொல்லிமுடித்து “அவ்வளவு துடிப்புள்ள அம்மன் முத்தாரம்மன் “என்று கண்ணத்தில் போட்டுகொண்டபோது ஓடி சென்று அம்மன் கோவிலில் நான் ஏற்கனவே திருடியிருந்த மூன்று ருபாய்யை போட்டுவிட்டு ஒரு சில தோப்புகரணங்களும் போட்டுவிட்டு ஓடிவந்தேன்.
என் தாத்தாவுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது அதாவது அவருக்கு பள்ளிக்கூடம் டீச்சர் இதெல்லாம் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது, அதனாலதான் என் அப்பாவும் படிக்கல என் சித்தப்பாவும் படிக்கல எங்களயும் பள்ளிக்கூடம் அனுப்பறதுல அவருக்கு இஸ்டம் இல்லை என்றாலும் வயதாகிவிட்டதால் சபையில் அவர் பேச்சுக்கு மதிப்பில்லாமல் நாங்கள் பள்ளிக்கு அனுப்பபட்டோம்,எங்க பள்ளிகூடம் பக்கத்திலே இருக்கிறதால தாத்தா அடிக்கடி வந்து எதையாவது வாங்கிதருவார்,எதாவது காரணம் சொல்லி எங்களை பள்ளிகூடத்துல இருந்து நித்தமுடையார் சாஸ்தா கோவிலுக்கு எங்களை விளையாட கூட்டிக்கிட்டு போவார்.பாவம் யாராவது பார்த்துவிட்டு போய் எங்கள் வீட்ல சொல்லி கொடுத்துருவாங்க தாத்தாவை அப்பா, அம்மா , சித்தப்பா ,சித்தி எல்லாரும் திட்டுவாங்க ஆனால் தாத்தா எதையும் காது கொடுத்து கேட்காம எங்க சட்டைக்கு பட்டன் தைப்பாரு,நாங்க அவருக்கு வெத்தலை பாக்கு இடித்துகொண்டிருப்போம்.
எங்க தாத்தா எனக்கு வைத்திருந்த செல்லப்பெயர் “திருட்டு கருப்பன்”ஆமாம் என்னோட தாத்தா எனக்கு எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் நான் அவருக்கு தெரியாமலும் அவரோட வேட்டி முந்திய அவுத்து காசு திருடி சில நேரம் அவ்ருக்கும் ஐஸ் வாங்கி கொடுப்பேன்,அவரும் ஐஸ் முடிந்தபிறகு ‘டேய் திருட்டு கருப்பா இது என்னோட முந்தி காசுதான”என்று செல்லமாய் கொட்டுவார்.ஆனால் நான் சில நேரம் எங்க வீட்ல புதைத்து வைத்திருக்கிற உண்டியல்களை உடைக்க அவரோட சாப்பாட்டு வெங்கல குண்டாவை எடுத்துபோட்டு உண்டியலை உடைப்பேன் அது மட்டும் அவருக்கு புடிக்காது இடத்து கையாலே அடிப்பார்,ஏனென்றால் அந்த வெங்கல குண்டான் எங்க பாட்டிஅவருக்கு வாங்கி கொடுத்ததாம்.
எங்க தாத்தாவுக்கு எந்த கதையும் தெரியாது அதனால எங்களுக்கு எங்க ஊர்ல அவர் காலத்துல நடந்த கதை எங்க சித்தப்பா திருடிய கதை,அப்பா அடி வாங்கிய கதை, பட்டறை பாட்டி கிணற்றுக்குள் விழுந்த கதை,சுப்பு தாத்தா பேய்யை கட்டி பிடித்த கதை,வடைமலையானை மாடு விரட்டிய கதை,தலையாட்டி பாட்டியை பூனை கடித்த கதை,பூலான்பேத்தி ஆத்துல போன கதை இப்படி எங்க ஊர்ல நடந்த எல்லத்தையும் எல்லா நேரத்திலேயும் சொல்லுவார், நாங்க கேட்டுட்டுப் போய் எங்க பள்ளிகூடத்துல சொல்லுவோம்.
எல்லா ராத்திரியை போலத்தான் அன்றைக்கும் “எங்க ஊருக்கு டீவி ஆண்டனா வந்த கதையை”சொல்லிட்டு படுத்தாரு எதுக்குனு தெரியல தாத்தாவுக்கு மறுநாள் காலையில எந்திரிக்கும்போது உடம்பு சரியில்லாமல் போய்டுச்சு,எல்லாரும் வந்து பார்த்துட்டு பார்த்துட்டு போறங்க நான் அப்போது ஒன்பதாம் வகுப்புக்கு வந்திருந்தேன்,என்னை எங்க அப்பா ஸ்ரீவைகுண்டத்துல போய் தாத்தாவுக்கு ஆரெட்டு மாவு,கேப்ப மாவு ,அப்புறம் வயித்துபோக்கு மாத்திரை எல்லாம் வாங்கி வரசொன்னார்.நான் கிளம்பும்போது தாத்தா பட்டறை பாட்டிக்கூட கொஞ்சம் சிரித்துதான் பேசிகொண்டிருந்தார்.
அப்பல்லாம் எனக்கு ஸ்ரீவைகுண்டத்துக்கு வர்றது என்பது பெரும் கணவு,எப்பவாவுது அப்பாக்கூடத்தான் வரமுடியும் தனியா அனுப்பமாட்டாங்க,ஸ்ரீவைகுண்டத்துலதான் ஜவஹர் தியேட்டர் இருக்கு அதுதான் என்னோட வெறி பிடித்த சாத்தான்.அதுல அப்பாக்கூட,அம்மாக்கூடத்தான் படம் பார்த்திருக்கிறேன் தனியா பார்த்ததில்லை.அன்றைக்கு நான் தனியா வந்தது எனக்கு சொர்கத்துகே தனியா வந்திருகிறதா இருந்தது.நான் ஆரெட்டு மாவு ,கேப்ப மாவு,மாத்திரை எல்லாம் வாங்கிய பின் தான் எனக்கு அந்த போஸ்டர் கண்ணில் பட்டது.
“இன்றுமுதல் ஸ்ரீவை ஜவஹரில் ராஜ்கிரன் நடிக்கும் பாசமுள்ள பாண்டியரே’என்னால் அதை பார்த்துவிட்டு ஒரு அடி நகரமுடியவில்லை கால்கள் தானாகவே தியேட்டரில் நின்றது.அதுவொரு மதியகாட்சி வாங்கிய பொருட்களுடன் தியேட்டருக்குள் போனதும் தாத்தா,அப்பா ,வீடு எல்லாம் மறந்துபோனது,குறி சொல்லும் மீனாவும்,சுளூக்கு எடுக்கும் ராஜ்கிரனும் என்னை மயக்கி மாலை ஆறு மணி வரை தியேட்டருக்குள்ளேயே வைத்துவிட்டார்கள்.
சரியாக ஐந்தரை மணிக்கு படம் விட்டது, வானம் சிறிது கருக்க தொடங்கியிருந்தது,எனக்கு தாத்தா ஞாபகமும் வந்து பயம் கவ்வ பஸ் ஏறி எங்க ஊர் ப்ஸ்டாண்டில் இறங்கி வேகமாய் நடந்து வீட்டுக்கு அருகில் வந்தது கொஞ்சம் பம்மி பம்மி மெதுவாய் வந்தேன் எங்க வீட்ல நிறைய ஆட்கள் கூடியிருந்தார்கள் எனக்கு அழுகை சத்தமும் தெளிவாய் கேட்டது ,என் அம்மாவின் அழுகை சத்தம் கேட்டதும் எனக்கு பக்கென்றிருந்தது,மெதுவாய் மாட்டு தொழுகை வழியாய் பம்மி,பம்மி வந்தேன் என் அப்பாவும்,என் சித்தப்பாவும் கதறி அழுவதை பார்த்ததும் எனக்கு புரிந்துவிட்டது நம் தாத்தா இறந்துவிட்டாரென,,
எனக்கு உடம்பு ஆட தொடங்கிவிட்டது நாம் மருந்து வாங்கி வர நேரம் ஆனதால்தான் தாத்தா இறந்திருக்கிறார் இப்போது இந்த மருந்தோடு நாம அங்க போன அவ்வளவுதான் அப்பா அடிக்கமாட்டார் ஆனால் சித்தப்பா கொன்றுவிடுவார் என்று தாத்தாவுக்கு வாங்கிய மருந்துகளோடு யாருக்கும் தெரியாமல் தெற்கு வாய்க்கால் ரயில்வே பாலத்திற்கு ஓடிவந்து உள்ளே உக்காந்து கொண்டேன்.
அந்த ஆறரை கடைசி ரயிலும் என் தலைக்கு மேலாக கடந்துபோனது ,நல்ல இருட்ட தொடங்கியது ரயில்வே பாலத்திற்கு அருகில் உள்ள ஆச்சிமுத்தா கோவில் ஆலமரம் போட்ட சத்ததில் ஓடிவந்தேன் ஊருக்குள்ள இங்க நடு வீட்ல தாத்தாவை பிணமாய் படுக்க வைத்திவிட்டு என்னை காணவில்லை என்று ஊரோடு தேடிகொண்டிருந்தார்கள்,நான் யாருக்கும் தெரியாமல் சிமெண்டுகொளத்துல உட்காந்திருந்ததை என் சித்தப்பா பார்த்த்கொண்டார் என் கைகளில் உள்ள மாத்திரைகளை கோபமாய் வாங்கிகொண்டு என் சட்டை பைக்குள் கையைவிட்டு துளாவியபோது சிக்கிகொண்டது ஜவஹர் தியேட்டர் டிக்கட்,அவ்வளவுதான் தூக்கி தூக்கி போட்டு மிதித்தார் அந்த நேரத்திலும் எனக்கு மீனாவும்,அவளுடைய அந்த குறி சத்தமும்தான் ஞாபகத்துக்கு வந்தது .
என் சித்தப்பாவுக்கு கை வலித்திருக்க வேண்டும் இல்லை என் மீது கொஞ்சம் அவருக்கு பாசம் இருக்க வேண்டும் .அடிப்பதை நிறுத்திவிட்டு கலைந்த உடை ,தலை எல்லாம் சரி செய்து வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போனார் ,வீட்டில் எல்லாரும் தாத்தாவை விட்டுவிட்டு என்னை கட்டிபிடித்து கொண்டு அழுதார்கள்,என் சித்தப்பா என்னை வ்ழி தெரியாமல் பஸ்ஸில் தூங்கி கால்வாய்க்கு போய்விட்டதாக எல்லாரிடமும் சொல்லிகொண்டிருந்தார்,என் அம்மாவும் அப்பாவும் என்னை பிடித்து கதறி அழுதார்கள் ,நான் என் அம்மாவின் மார்பில் தலையை சாய்த்தவாரே கொஞ்சம் அழுதுகொண்டே நைசாக என் தாத்தாவை பார்த்தேன் ,ஆனால் தாத்தா மட்டும் என்னை பார்க்கவேயில்லை சந்தன கண்களோடு மேல்னோக்கியே பார்த்துகொண்டிருந்தார்........
-மாரிசெல்வராஜ்-


