பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 28, 2012

காற்றில் கரைந்த எங்கள் கிருஷ்ணா

          15. 4.2012 அன்று லயலோ கல்லூரியில் நடைபெற்ற எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்ஸியின் நினைவேந்தலில் அவரது அக்கா எழுத்தாளர் வி. உஷா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து....

  


             மாசற்ற அன்பைச் சுரக்கும் இதயத்தை சுமந்துகொண்டு, நம்முடைய கிருஷ்ணாவிற்காக இங்கே வந்திருக்கும் அனைத்து இளகிய உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

கிருஷ்ணா ! அருமைத் தம்பி, கிருஷ்ணா ! 

             மலர்ந்தும் மலராத பாதி மலராக அவனும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக நானும் வாழ்ந்து தீர்த்த நாற்பத்தைந்து ஆண்டு கால சகோதர வாழ்க்கையை நான்கைந்து நிமிடங்களில் சொல்லிவிட முடியுமா?

             அறிவு வசப்பட்டு வாழும் வாழ்க்கைக்கும், உணர்வு மயமாகிற வாழ்க்கைக்கும் இடையே நிகழ்கிற ரசாயனத்தில் தான் இன்பத்தின் ஊற்று இருக்கிறது என்று நம்பி வாழ்ந்தவன் கிருஷ்ணா.

             அது புதிய பள்ளி. தமிழ் மீடியம். அவன் அரை வகுப்பு நான் மூன்றாம் வகுப்பு. முதல் நாள் பள்ளிக்கு போகிறோம். அரை வகுப்பிற்கெல்லாம் அரை நாள் தான் பள்ளிக்கூடம் மிக நீண்ட கல்யாண மண்டபம் போன்ற இடத்தில் வரிசையாக வகுப்புகள் படுதாவோ ஓலை மறைப்போ சுவரோ கிடையாது எவரும் எவரையும் பார்க்கலாம். நானும் சிறுமிதான் என் பார்வை முழுக்க அரை கிளாஸில் இருக்கும் தம்பியின் மீது தான். அவனும் திரும்பி திரும்பி என்னையே பார்த்துக்கொண்டிருந்தான் பன்னிரெண்டரை மணிக்கு பள்ளிக்கூட மணி அடித்ததும் முதல் ஆளாக நான் பாய்ந்தோடி என் தம்பியின் கரம் பிடித்து அழைத்து வந்து என்னருகில் அமர்த்திக்கொண்டேன். ஒரே பெரிய டப்பாவில் எங்கள் இருவருக்குமான உணவை அனுப்பியிருந்தாள் அம்மா. அவனுக்காக பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்டிருந்த கேரட் பொரியலும் அதில் இருந்தது. பொறுமையாக ஊட்டி முடித்து அவன் சாப்பிட்டதும் என் மனம் நிறைந்ததே , இதோ நேற்றுதான் நிகழ்ந்ததை போல இருக்கிறது. மாலை என் பள்ளி முடிந்தது அவன் கையை விடாமல் பற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். முதல் நாள் அனுபவம் பற்றி வாயே திறக்கவில்லை அவன். அப்பா ஏழு மணிக்கு வந்தார் அலுவலகம் விட்டு நால்வரும் வட்டமிட்டு அமர்ந்தோம் பள்ளியைப்பற்றி அவன் சொன்னான். எப்படி தெரியுமா? கிட்டத்தட்ட பதினெட்டு இருபது நர்சரி ரைம்கள், பாடல்கள் ! அசந்து போனோம் ! எப்படி சாத்தியம் இவ்வளவு நினைவாற்றல், எங்கிருந்து பெற்றான் இப்பேர்ப்பட்ட ஞாபகசக்தியை என்று திகைத்தோம் ! பரவசத்தில் திக்கு முக்காடினோம் ! 

             அதே போல அப்பாவின் மிகப்பெரிய சைக்கிளை, தனியாக எடுத்துக்கொண்டு போய் முதல் நாளே குரங்கு பெடல் போட்டான். அதற்கு அடுத்த நாளே பேலன்ஸ் தவறாமல் சீராக ஓட்டிய சுயம்பு  அவன். ஆறாம் வகுப்பிலேயே கிரிக்கெட் டீம் அமைத்தான். அதன் சீரிய கேப்டனாக ஆடித்தீர்த்தவன், சேமித்த காசை வைத்து கிடார் வாங்கினான். ’பனி விழும் மலர்வனத்’திலிருந்து ’தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்’ என்று வாசித்து லயித்தான். மின்சாரம் நிற்கிற மாலை இரவு பொழுதுகளில் வாசித்தப்படியே அவன் பாடிய ’தீர்த்த கரையினிலே’,’ கண் போன போக்கிலே கால் போகலாமா’, ’அதோ அந்த பறவை போல’வையோ எங்கள் நெஞ்சங்களால் மறக்க இயலுமா? திடீரென்று ஒருநாள் டீன் ஏஜ்களின் இறுதிபடி என்று நினைக்கிறேன் கத்தை காகிதங்களை நீட்டினான் வைரப்பாம்புகள் என்று பெயரிட்டிருந்தது. ’என்னப்பா இது’ என்றேன். ’முதல் நாவல் மூன்றே நாட்களில் முடித்துவிட்டேன் படித்துவிட்டு சொல்’ என்றான். முப்பது நிமிடங்களில் வாசித்து முடித்தேன் திகைத்தேன். அவ்வளவு அருமையான மர்ம நாவல்! சுஜாதா, அகதா, என்று திரில்லர்களுக்காக கொண்டாடப்பட்ட காலம் அது. என் வீட்டிலும் ஒரு பரப்பரப்பான படைப்பாளி உருவாகிக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தேன் ! உவகை கொண்டேன் ! அதற்கு பின் அவன் உருவாக்கிய திரைக்கதைகள் அனைத்தையும்  என்னை தேடி வந்து காட்சி காட்சியாக விவரிப்பானே! கிருஷ்ணா! என்னருமை கிருஷ்ணா!
           
              நம்மிடையே வாக்குவாதங்கள் இருக்கும் சின்ன சிறு கோபங்கள் வந்து போகும் மவுனங்கள் வந்து மறையும் ஆனால் உலகத்தின் பெரும் சந்தடிகளுக்கு இடையிலும் வாழ்வின் வசீகர இலையாக இந்த பாசமும் நேசமும் என்றென்ன்றும் மின்னிக்கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையை நாம் இழக்கவே இல்லை கிருஷ்ணா! மகன் தான் உலகம் என்று நம்பிய அம்மா உலகம் தான் மகன் என்று வாழ்ந்த அப்பா என்று உன்னை சுற்றி அன்பு வட்டம்தானே போடப்பட்டிருந்தது?
          
              இறுதி நாட்களில் மருத்துவமனையில் அவன் கையை பற்றிக்கொண்டு ’எல்லாம் சரியாகிவிடும் எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லும்போது நம்பிக்கையுடன் தலையாட்டி புன்னகைப்பானே, அந்த முகத்தை எப்படி மறப்பேன்? காலன் அவன் காலருகே வந்து சிரித்த அந்த கொடுமையான நாளின் காலையில் மருத்துவமனையில் சுவாசத்திணறல் இருந்த போதும் நம்பிக்கையை விடவில்லையே என் தம்பி! புன்னைகையைத்தானே நம்பி பற்றியிருந்தான்?

              சிறுவயதில் பாலநாகம்மா படம் பார்த்துவிட்டு நான் பயந்து போய் தூக்கத்தில் பேய் பேய் என்று அலறிய போது தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது போல என் கைபற்றி ’பயப்படாதே உஷா அதெல்லாம் வெறும் நடிப்பு உண்மையில்லை’ என்றானே, அதே போல யாராவது இப்போது பயப்படாதே உஷா ’கிருஷ்ணா போய்விடவில்லை எல்லாம் வெறும் கனவு’ என்று சொல்லமாட்டார்களா? ஆயிரம் சமாதானங்கள், ஆயிரம் ஆறுதல்கள் என்று தேடி வந்தாலும் சகோதரா, உன் சாவை மன்னிக்கவே முடியாது.


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com