பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு அறிவிப்பு. காட்சியில் 'வீடு' பற்றிய தொடர், இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. வெறும் கல்லும் மண்ணும் கலந்து கட்டிய உறைவிடம் என்பதையும் தாண்டி ஒரு வீட்டில் படிந்திருக்கும் வலி, வரலாறு, இனிய நிகழ்வுகள், துன்பியல் நினைவுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் கதை, கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - kaattchi@gmail.com

December 5, 2011

கருங்குழி சேரும் பேச்சொலி - ப்ரவின்துள்சி

ஆசிரியர் அறிமுகம்: ப்ரவின்துள்சி. மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் ஒரு கவிஞர், ஓவியர், கட்டுரையாளர், புகைப்படக் கலைஞர். கீற்று மற்றும் உயிர்மை போன்ற தளங்களில் இவரது கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.
 கருங்குழி சேரும் பேச்சொலி:
நாம் பேசத்தொடங்கியிருந்த நாட்களில்…

முதலில் கவிதைகள் பற்றி தான் பேசினோம்

அது ஒரு கோழியிறகின் மேல்

காற்றில் பயணம் செய்வதைப் போலிருந்தது !



பின் எழுத்தாளர்கள் பற்றி பேசினோம்…

அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை

மாறாக அவை அலுப்பைத் தருவதாகக் கூறினாய் !



பிறகு என்னைப் பற்றி பேசினோம்…

அவை ஒரு சாம்பல் நிற பூமியின்

புதினமென நம்பினாய் !



அதன்பின் உன்னைப் பற்றி பேசினோம்…

ஒரு சொட்டு பாதரசத்தை எனது உள்ளங்கையில்

பத்திரமாக கொண்டு சேர்த்தாய் !



தொடர்ந்து பிறரது காதல்களைப் பற்றி பேசினோம்…

பின், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , துரோகங்கள் பற்றிய

 பேச்சுகள் தவிற்க முடியாததாகின !



எதிர்பார்ப்பு, தனிமை, ஏக்கம் பற்றி பேசி முடிகையில்

மௌனம் நம் மத்தியில்

நாற்காலியிட்டு அமர்ந்துகொண்டது !



பின் நாம் உடல்களின் மொழிகளில் பேசினோம்…

அவை இதுவரை பிறக்காத ஒரு மொழியில்

வேறு குரல்களில் பேசப்பட்டது குறித்து பதற்றமடைந்தோம் !



பிறகு நாம் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை…

இதுவரை பேசியவை எல்லாம்

சட்டென ஒரு கருங்குழியில் சென்று மறைந்துவிட்டிருந்தது !



பின் நாட்களில்…

யாருடனாவது கவிதைகள் பற்றி பேச நேரிடுகையில்

நாம் முன்பு எப்போதையும்விட
மிகவும் கவனத்துடன் இருந்தோம் !
 -  ப்ரவின்துள்சி.

5 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமை
இன்று

அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?

ஆமையடி அமகேஷ் said...

வாழ்த்துக்கள் சார் அருமை

ஆமையடி அமகேஷ் said...

வாழ்த்துக்கள் சார் அருமை

Udhaya Kumar said...

ஒரு உரையாடல் , கோழி இறகின் மீது காற்று பயணிப்பதை போன்று லாவகமாக தொடர்கிறது . பின் கொஞ்சம் சறுக்களுக்கு பிறகு சாம்பல் நிற பூமியின் புதினமென , முடிச்சிகளோடு உருள்கிறது . உருண்டு வந்த முடிச்சி ஒரு சொட்டு பாதரசமென உள்ளங்கையில் வந்து சேர்கிறது . உள்ளங்கையில் வந்து சேர்ந்த பாதரச சொட்டு , அங்கேயே நில்லாமல் துரோகம் , நம்பிக்கையின்மை என அங்கும் இங்குமாக உருண்டு கொண்டே இருக்கிறது தனக்கே உரிய இயல்போடு . பின் அந்த பாதரச உருண்டை , அலுப்பின் காரணமாக "புரியாத உடல் மொழியில் " பேசி பதற்றமடைகிறது . இப்படி இப்படியாக நீண்டு வந்த உரையாடல் பின் ஒரு கருங்குழியில் போய் சேர்ந்துவிட்டது ! இப்படி ஒரு உரையாடல் கற்றுக்கொடுத்த கவனம் , பின் அவிழ்ந்த எல்லா கவிதை உரையாடல்களிலும் பிரதிபளித்தவண்ணம் இருந்தது ......


படித்து படித்து வழுக்கி விழுகிறேன் நான் ...... கவிதை மொழி காட்சி மொழியாய் விரிவடைகிற பரிணாமம் , எல்லா கவிதைகளிலும் நிகழ்வதில்லை . ஆனால் பிரவீன் உனதிந்த கவிதையில் அது நிகழ்ந்தது .

முன்னம் , உனது "புலன்களின் சாவி" என் கவனம் இழுத்தது . பின் வந்த "உதிர்காலத்தின் இலைகள் " இழுத்து செல்லப்பட்ட என் கவனத்தை அமரச்சொல்லி விசிறிவிட்டது . பின் நீண்ட காத்திருப்புக்கு பின் என் கவனம் மீண்டுமாக " கருங்குழி சேரும் பேச்சொலி" மூலம் பிரவீன் துளசியின் கவிதை வாசம் நுகர்கிறது ......


இந்த கவிதையை படிக்க துவங்கியபோதே , எனக்கு ஒன்று வந்து ஞாபகத்தில் சம்மணமிட்டு அமர்ந்தது . நாம் முதலில் பேசியது கவிதைகளை பற்றியது தான் என்பதும் , பின் கவிஞர்களை பற்றி பேசினோம் .... ஆனால் எனக்கு எப்போதும் உன்னுடனான உரையாடல் அலுப்பு தட்டியதில்லை .

"அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை
மாறாக அவை அலுப்பைத் தருவதாகக் கூறினாய் !" இந்த வரிகளை கடக்கும் போது முடிவுக்கு வந்தேன் இது நமக்கானது இல்லை என .... எனவே நமது பேச்சொலிகள் கருங்குழி சேராது என்கிற நம்பிக்கையோடு , இந்த கவிதையில் இருந்து என்னை உருவி வைத்துவிட்டு மீண்டுமொரு முறை இந்த கவிதை வாசிக்க தயாராகிறேன் , ....

கோழி இறகின் மீது காற்றை போல தொடங்கிய நேசத்திற்குரிய ஒருவருடனான உனதிந்த பேச்சொலிகள் கருங்குழி சேர்ந்தது என்பதோடு நிறுத்தி கொண்டாய் . ஆனால் உன் அன்பிற்குரியவருடனான கருங்குழி சேர்ந்த பேச்சொலிகள் , அங்கேயும் ஓயாமால் உரையாடிகொண்டிருக்க கூடும் , உங்கள் இருவரின் அனுமதி இன்றியும் , உங்கள் இருவரின் இருத்தல் இன்றியும் ...

கருங்குழி சேர்ந்த பேச்சொலிகள்
இந்த கவிதையை சுற்றி நிறைக்கிறது என் கரவொலிகள் ........!!!!

Praveen said...

அனைவருக்கும் நன்றி...நன்றி உதையா...

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com