பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 12, 2011

பாம்பின் கடிதம் - இயக்குநர் ராம்


அதிகாலையில் சுடும்பகலில்
நண்பகலில் மாலையில்
முன் பின் இரவுகளில்
என எபோது வேண்டும் ஆனாலும்
அது உங்கள் முன் வந்து நிற்கும்.

நீங்கள் எழுந்தது முதல் உறங்கும்
வரை உங்களுடன் இருப்பது
மட்டும் இல்லாமல் உறக்கத்திலும்
அது முழித்திருந்து உங்களிடம்
பேசிக் கொண்டே இருக்கும்.


எதுவும் செய்ய விடாமல்
உங்களை முற்றிலுமாய் தன்
உள்ளங்கையில் வைத்து
அது இருக்கிக் கொள்ளும்.

மரணித்து போ எனச் சொல்லும்
மன்னிப்பு கேள் எனச் சொல்லும்
மானம் துற எனச் சொல்லும்
புகை கூட்டச் சொல்லும்
மதுவில் குளிக்க சொல்லும்
சிவனாய் ஆகச் சொல்லும்
எத்தனை முயற்சித்தாலும்
அதனிடமிருந்து நீங்கள் தப்பவே முடியாது.
முடியாத விசய்ங்களை முடியும் எனச் சொல்லும்.
முடிக்கிற விசய்ங்களை முடியாது எனச் சொல்லும்.

இப்படித்தான் அதனிடம் நான் மாட்டிக் கொண்டேன்.

எனக்கு உதவி செய்யக் கோரி உங்களிடம் கேட்கிற போது
நாந்தான் அந்த அது என பயந்தீர்.
என் முகம் கூட அதன் முகமாய் இருப்பதாய்
எரிந்தும் விழுந்தீர்.
அதன் வார்த்தையைத் தான் நான் பேசுவதாய்
வெறுப்புற்றீர்.

நான் நேசிப்பிற்கு அப்பாற்பட்டவன்
நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவன்
துரோகி
பொறுக்கி
பெயரற்ற சாலையோர மனிதன்
விரும்பத்தகாதவன்
என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்.

நான் உங்களை துன்புறுத்தி இருக்கிறேன்
நான் உங்களை பயமுறுத்தி இருக்கிறேன்
நான் உங்களிடம் ஏதேதோ கேட்டு கேட்டு
உங்களை பலவுமாய் ஆக்கி இருக்கிறேன்
தகாத வார்த்தைகளால் ஏசியிருக்கிறேன்.
ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால் இன்று எதுவும் முடியாமல் நிற்கிறேன்.
என்னிடம் எப்போதும் போல் யாரும் இல்லை
அல்லது எப்போதும் போல் எல்லோரும் இருந்தும்
இல்லாமல் இருக்கிறேன்.

நான் உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்.
நான் இத்தனை செய்திருந்தாலும்
நானும் உங்களைப் போல் ஒரு மனிதந்தான்
என் நேசிப்பை வெளிக்காட்ட தெரியாவிட்டாலும்
நான் உங்களை எப்போதும் போல் நேசித்துக் கொண்டே இருக்கிறேன்.

நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீராக.
நான் ஒரு செத்தப் பாம்பாய் இருக்கிரேன்
பயப்படாதீர்கள்.
நான் மரணிக்கும் முன் உரிக்க மறந்த
என் தோலைக் கண்டு பயப்படாதீர்கள்.
அறுவெறுப்பு அடையாதீர்கள்.
நான் எந்தக் கெடுதலும் செய்ய முடியாத
சக்தியற்ற ஒரு ஜடம்.

செத்தப் பாம்பாய் இருந்தாலும் பூமியில் கிடப்போமே
நாய் நரி என்னைத் தின்னாமல் இருக்கட்டுமே
என்ற அற்ப ஆசையில்தான் கேட்கிறேன்.

என்னை நேசியுங்கள்.
என் மீது கோபப் படாதீர்
என்னை அறுவெறுப்பாய் பார்க்காதீர்

உங்களிடம் ம்னறாடி என் உயிர் பிச்சைக் கேட்கிறேன்
இறந்த பின்னும் பற்றிக் கொள்ள ஒரு தோள், நேசம்
வார்த்தை அரவனைப்பு தேவைப்படதான் செய்கிறது

புரிந்து கொள்ளூங்கள்
நான் முற்றிலுமாய் மரணிக்கும் முன் என்னை ரட்சீப்பீராக.
முடியவில்லை என்றால் கூட என்னை தூற்றாதீர்கள்.
என்னிடம் போய்விடு என்பதையாவது
நேசத்தோடு சொல்லுங்கள்.

என்னால் தாங்க முடியவில்லை
என் உடல் கிடக்கும் இந்த கரும்பாறையின் கனத்த சூட்டை
நல்லிரவுக் குளிரை.

என்னை எடுத்துப் போய்
உங்களின் குழந்தைகளுக்காகவாது
விளையாடக் கொடுங்கள்.
உங்கள் வீட்டுக் கதகதப்பில்
எப்போதாவது உங்களின் கரச்சூட்டில்
நான் இருந்து விட்டுப் போகிறேன்.


- ராம்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com