கவிஞர் அறிமுகம்: ரசிகன் எனும் புனைப்பெயரில் எண்ணங்களையும் / மறக்க நினைக்கும் நினைவுகளையும் பதிவு செய்து வரும் நான் துரை (எ) சதிஷ். கவிதை என்று சொல்லிக்கொள்ளுமளவில் வார்த்தைகளை கோர்க்க / கற்க முயற்சித்து வருகிறேன்! பிறந்து வளர்ந்தது பாண்டிச்சேரி... மேலாண்மை படிப்பிற்காக தற்போது லண்டனில்! கிறுக்கியவைகளில் சில கீற்று , திண்ணை , உயிரோசை , வார்ப்பு , நிலாச்சாரல் , விகடன் போன்ற இணைய இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன! வேறொன்றும் பெரிதாய் இல்லை என்னை சொல்ல... ஒரு சராசரி ரசிகன் எனலாம்.. போதுமானது!
கிள்ளி விடு தூது:
கிள்ளி விடு தூது:
கிட்டத்தட்ட
பக்கம் வந்து அமர்ந்திருந்தாள்!
நெடு நேர காத்திருப்பில்
கோவம் எனக்கென்பது
அவள் யூகமாக இருக்கக்கூடும்!
நானும் காட்டிக்கொள்வதாயில்லை
என் அதிகபட்ச விருப்பம்
என்ன என்பதை...
மெல்ல இசைந்து வரும் குரலில்
காதலை கிடைந்து ஊற்றும்
தந்திரங்கள்
மிக விறுவிறுப்பானவை எனக்கு!
முகத் தோரணையிலேயே
விருப்பங்கள் தெரிவிக்க
அதன் ரகசியங்கள்
புரிந்துகொள்வது அவளுக்கு அத்துப்படி!
வெட்கி எழுந்து
மெல்ல எதிர் நின்று
என் கன்னங்களை அள்ளி..
காது திருகி...
செல்லமாய் ஒரு குட்டு வைத்தோடிவிடுவாள்
நாளைய காத்திருப்புக்கு!
- ரசிகன்.

