கவிஞர் அறிமுகம்: பிறப்பிடம் திண்டுக்கல். பிழைப்பிற்காக வசிப்பது சென்னைப்பட்டினம். தமிழிலும், ஆங்கிலத்திலும் கதை கவிதைகள் இயற்றுவதில் பெருவிருப்பம். நவீன ஓவியங்கள் தீட்டுவதிலும் ஆர்வமுண்டு.
வடிகட்டிய மனிதர்கள்:
நதிநீர் திருடிக்கொண்ட
பிம்ப நிலவில்
கால்பதித்து நிற்கிறாய்
உன் தலைதொட்டுச் சென்றன மேகங்கள்...
நீ கைகுவித்து அருந்திய நீரில்
நட்சத்திரக்கூட்டாய்
உன்னை நிறைத்துக்கொண்டிருந்தது விண்வெளி...
எச்சில் பட்டுச் சிதறிய
நீர்துளிகளோடு
களவி புரிந்தது காற்று...
நின் நிழல் தொட்டு சூடுதணித்தது பூமி
நகஇடுக்கின் அழுக்குகளில்
வயிறு நிறைத்துகொண்டிருந்தன மீன்கள்...
நீயோ
ஏதும் ரசிக்காமல்
சகமனிதன் மிதித்த
பூட்ஸ் காயங்களில்
சீழ் வடித்துக்கொண்டிருந்தாய்...
- மரியபூபாளன்
January 11, 2011
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com

