ஆவணப்பட இயக்குநர், தமிழ்தேசிய ஆர்வலர், இயற்கைவேளாண்மை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய இராசராசச் சோழர் தமிழிய ஆய்வு என்ற குறுநூல் காட்சியில் தொடராக வருகிறது -காட்சி
அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.
பகுதி 8:
பெண்களின் நிலை:
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.
வ.எண் | வகைகள் | கி.பி 10 | கி.பி.11 | கி.பி 14 | கி.பி 15 | |
1 | கொடை அளிக்கும் பெண்கள் | 145 பெண்கள் | 69 பெண்கள் | 2 பெண்கள் | 3 பெண்கள் | |
2 | சொந்தச் சொத்து உடையவர்கள் | 146 பெண்கள் | 70 பெண்கள் | 16 பெண்கள் | 8 பெண்கள் | |
3 | நிலம் உடையவர்கள் | 46 பெண்கள் | 23 பெண்கள் | 4 பெண்கள் | 3 பெண்கள் | |
(மேலது நூல்)
மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?
இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?
லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.
’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.
கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய திராவிட ஆட்சியில் வாழும் நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.
விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.
கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே!
இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். அவர்களிலும் இராசேந்திரச் சோழருக்குப் பிந்தைய சோழர் குடும்பத்தில் தெலுங்கர் கலப்பு மிகுந்தது. ஆகவே, பிராமணச் சார்பு உருவானது.
இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார். இதுவே அவர் ஆட்சிக் காலம் குறித்த வரலாற்று நோக்கு!
~*~*~முற்றும்~*~*~
இந்நூலைப்பற்றிய கருத்துகளை kaattchi@gmail.comக்கு அனுப்பிவைக்கலாம்.

