கவிஞர் அறிமுகம்: பிறப்பிடம் திண்டுக்கல். பிழைப்பிற்காக வசிப்பது சென்னைப்பட்டினம். தமிழிலும், ஆங்கிலத்திலும் கதை கவிதைகள் இயற்றுவதில் பெருவிருப்பம். நவீன ஓவியங்கள் தீட்டுவதிலும் ஆர்வமுண்டு.
மேதாவி:
வானம் சிவந்த
ஒரு சாயங்காலப் பொழுது
மின்மினிகள் விளக்கேற்றிய
அந்த குகைப்பாதையின் முனையில்
வெளிச்சத்தை எட்டிப்பார்த்தது
ஒரு பேருந்து...
உள்ளே நான்...
உள்ளங்கையில்
ஒரு கவிதைப் புத்தகம்...
ஒவ்வொரு பக்கங்களின் புரட்டலும்
சக பயணிகளுக்கு
என் மேதாவித்தனத்தின் பிரகடனம்
புத்தகத்தின்
தலைப்பைத் திருட
சில தலைச் சாய்வுகள்;
புத்தகத்தையும்,
என் வயதையும்
கணக்கு போடும்
சில ஆராய்ச்சிவாதிகள்;
பக்கங்களின் முகப்பு வரிகளை
மேயும் சில 'குறுகுறு' பார்வைகள்;
அதன் மத்தியிலென் பெருமை, புன்னகை
அனைத்திலும் பிரகடனமானது
என் மேதாவித்தனம்.
பாதை வளைவுகளில்
என் தோளுராய்வில் சக பயணியாய்
ஒரு சிறுமி
ஒல்லியாய், கறுப்பாய்,
ஒழுகல் மூக்காய்...
நான் மகான் அல்லவே !
ஆகையால்
தைரியமாய் அறுவறுத்துக்கொண்டேன்.
சாரல் சிரித்த
சன்னல் வழி
தலை எட்டிப் பார்த்தாள்
வனாந்திரம் அவளிடம் கதை பேசியது
கதைகேட்கும் நேரம் எனக்கில்லை
தள்ளி நகர்ந்தேன்
கவிதையின் பக்கங்கள் புரட்டியபடி
புரியாத கவிதைகளை
விட்டுவிடுவது
என் ரசிப்புரிமை
நேரம் நகர்ந்தது...
அவள் ரசிப்பில்
சிலிர்த்திருந்தது கானகம்
அருகே...
கவிதைகள் மீது
எச்சில் ஒழுக
ஆழ்ந்த தூக்கத்தில் நான்
கனவில்...
புரியாத கவிதைகளை
விளக்கிக்கொண்டிருந்தாள்
அந்த மூக்கொழுகிச் சிறுமி
- மரியபூபாளன்
January 2, 2011
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com

