பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

December 17, 2010

ஒரு ஓவியத்தின் கடைசி கண்ணீர் துளிகள் - இலக்கியா

கதாசிரியர் அறிமுகம்:   இலக்கியா என்கிற மலர்மன்னன். நான் ஒரு இலக்கியவாசகன்.  கல்கி தொடங்கி இன்றைய எழுத்தாளர்கள் வரை நல்ல கதைகளை வாசித்து வருகிறேன். MBA பட்டதாரி. புதியதலைமுறை பயிற்சி நிருபர். சினிமா மீது தணியாத தாகம் கொண்டவன். தமிழ்மொழியின் கடைபிள்ளையாகவாவது இருந்துவிடவேண்டும் என்பது எனது ஆசை. நல்ல இலக்கியங்கள் படைக்கவேண்டும் என்பது எனது இலக்கு.


ஒரு ஓவியத்தின் கடைசி கண்ணீர் துளிகள்
மனது தேடியதை கண்கள் பார்த்து விட்டதால் தன்னை மறந்து அமர்ந்து இருந்தாள். மேகங்களுக்கிடையே மறைந்து மறைந்து அந்த மாலை வேளையில் அவளின் முதுகை பார்ப்பதற்கு தடுமாறியது சூரியன். தன் வீட்டு மெத்தையிலிருந்து தினம் ரசிக்கும் மாலை நேரத்து பெசன்ட்நகர் பீச் இன்று விடுமுறை வாங்கிக் கொண்டது. கடல் அலைகள் குதூகலத்தோடு கரை நோக்கி வரும் போதெல்லாம் பழித்து காட்டுவதாக எண்ணிக் கொண்டாள். தன்னை விட்டுவிட்டு எதையோ அவள் சுமந்து இருப்பதால் கோபத்தோடு அங்கும், இங்கும் நடந்தபடி இருந்தது நான்கு கால் ஜீலி. 
வாகனங்கள் விட்டுச் சென்ற சத்தங்களை அவள் காதுகள் பத்திரமாக தெளிவாக வாங்கிக் கொண்டன. அவள் கண்கள் காதலிக்க தூண்டும், தேகம் பார்ப்பவர்களின் தேகங்களை இளைக்க வைக்கும், கடல் காற்றில் அலைந்த கூந்தலில் ஆயிரம் கதைகள் ஒளிந்து இருக்கலாம். ஆனால் இரண்டு மணி நேரமாய் அவள் விரும்பி ஒளிந்து கொண்டது கையிலிருக்கும் சிவப்பு நிற வெல்வட் துணியால் போர்த்தப்பட்டு இருந்த ஆல்பத்தில் தான். புதினெட்டு நாளா எங்கு, எங்கோ தேடி அலைந்து இன்று தான் தாத்தாவின் அறையிலிருந்து ஆல்பத்தை கண்டெடுத்தாள். அவள் தேடியது இந்த ஆல்பத்தை அல்ல. அறுபதுகளில் வாழ்ந்த மாடல்களின் போட்டோவை. ஓவிய காதலரான தன் தாத்தாவிடம் இருக்கும் என்று அவள் யோசிக்க இத்தனை நாட்கள் ஆகி விட்டது. தாத்தாவுக்கு தெரியாமல் எடுத்துவிட்டோம் என்ற பயமும் அவளை குளிர்காற்றோடு சேர்ந்து சூழ்ந்து கொண்டது.
மீண்டும் ஆல்பத்தை திறந்தாள். அவளின் கண்கள் பல கண்களை கடன் வாங்கி கொண்டு பார்ப்பது போல் அதில் இந்த போட்டோவை பார்த்தாள்.
எவ்வளவு அழகு இது எப்படி தாத்தாவிடம் அவள் உதடுகள் முணுமுணுத்தன. ஒரு பெண் நிர்வாணமாய் நிற்கும் அந்த போட்டோ. அதை கூச்சமின்றி இந்த காலத்து பெண் பார்ப்பது ஒன்றும் கலாச்சார குற்றமாக இருக்க போவதில்லை. அதுவும் அவள் ஓவிய கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி.
ஜீலிக்கு என்னவோ தெரியவில்லை அலைவதை விட்டு அவளின் கால் அருகில் முன்னாடி இரண்டு காலையும், பின்னாடி இரண்டு காலையும் நீட்டி போட்டு படுத்துக் கொண்டது. நடுவில் வால் மட்டும் விசிறிக் கொண்டு இருந்தது. நாக்கிலிருந்து எச்சில் மெத்தையை கருமையாக்கியது. அந்த ஆல்பத்தில் இருந்தது மூணு போட்டோ தான். மூன்றிலும் இந்த காலத்து பெண்களிடம் பார்க்க முடியாத போலித்தனமில்லாத வெட்கம், கூச்சம் நிறைவாய் இருந்தது. போட்டோவில் இருந்த பெண்ணின் முகத்தில் அத்தனை கொஞ்சல். கால்களில் அத்தனை நெருக்கம். உதடுகள் சிரித்தது. கண்கள் கூச்சத்தோடு பேசியது. அதையும் தாண்டி யாருக்கோ விரும்பி நிற்பது போல் தோன்றியது அவளுக்கு. முழு நிர்வாணமாய் நிற்கும் அந்த பெண்ணிடம் அவள் மீண்டும், மீண்டும் தன்னையறியாமல் பார்க்க விரும்பியது முகத்தில் இருக்கும் நுண்ணிய உணர்வுகளைதான்; வழித்து எடுக்கப்பட்ட இடுப்பை பார்த்தபோது தன் இடுப்பை விரல்களால் அளந்து பார்த்தாள். அவள் தலை 'இல்லை,இல்லை' என ஆட்டியது. ஆல்பத்தை மூடினாள்.
'தன் மனைவியின் மீது எழுபது வயதிலும் காதலை காட்டி வரும் தாத்தா எப்படி, எதற்காக இப்படியொரு போட்டோவை மறைத்து வைத்துள்ளார்' பெண் குணம் வேலை செய்தது.
"எது எப்படியோ நான் நினைத்த மாதிரி சாதிக்க போகிறேன்". ஜீலியை பார்த்து சொன்னாள். ஜீலிக்கு புரிந்து இருக்கும் போல. உடனே எழுந்து, இரண்டு காலால் நின்றபடி அவளுடைய கைகளை பிடிக்க முயற்சி செய்தது.
'மசியா…' கீழிருந்து குரல் கேட்டதும்
"ஜீலி வா போவலாம், அம்மா கூப்பிடராங்க", என்று அவள் நகர்வதற்குள் படிகட்டுகளில் தாவி இறங்கியது.
என்னடி கையில ஆல்பம் மாதுரி இருக்கு
ஒண்ணுமில்லம்மா பழைய பிரண்ட்ஸ் போட்டோஸ்
சரி, சரி டெய்லியும் ஈவ்னிங் ஆச்சின்னா இது ஒரு வேலை.
"அதான் வந்துட்டன்ல இன்னும் சர்ச்சுக்கு கிளம்பலியா கர்த்தர் கோவிச்சுகுவாறு மம்மி" குத்தலாக.
"உனக்கு என்னக்கி தான் நல்ல புத்திய ஆண்டவர் கொடுப்பாரோ." வார்த்தையில் தன் பெண்ணை பற்றிய கவலையை தெளிவாக காட்டினாள்.
"நான் கிளம்பிட்டேன். அப்புறமா பாட்டிக்கு காப்பி போட்டு கொடு" என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள்.
"மம்மி …. நான் எத்தனையோ முறை சொல்லிட்டேன் பாட்டிக்கு நான் எதுவும் எடுத்துக்கிட்டு போய் கொடுக்க மாட்டன். அப்பறம் ஏன் திரும்ப, திரும்ப என்னை தொந்தரவு செய்யிரீங்க". கோபமாய், அடுக்கடுக்காய் பேசினாள் மசியா.
"தெரியாம சொல்லிட்டேன். நீ உன் வேலையை பாரு. நான் வந்து கொடுத்துக்கிறேன்" என்று நகர்ந்தபோது எப்போது தான் அவள் பாட்டியை புரிந்துக் கொள்ள போகிறாளோ என்ற கவலையோடு அவள் பாட்டி அறையை நோக்கி பார்த்தாள்.
"மம்மி நேஷனல் டிராயிங் காம்பிடிஷனுக்கு படம் வரைய போறன். இனிமே நீங்க யாரும் என்னை தொந்தரவு செய்ய கூடாது".
"இப்ப உன்னோட தயவுலதானே எல்லா வீட்டு வேலையும் நடக்குது. அடிபோடி, உன்னோட ரூம் பக்கமே நாங்க யாரும் வர மாட்டோம். நீயாச்சி, உன் படமாச்சி" கிளம்பிவிட்டாள்.
ஆல்பத்தோடு தன் அறைக்கு சென்று கதவை சாத்தினாள் பல நாட்கள் பொறுத்துப் பார்த்து ஜீலி அவள் அறை முன்பே தன் படுக்கையை போட்டுக் கொண்டது. தினம் அறை கதவை பார்த்து ஜீலி குலைக்கும்போது சூரியன் மேற்கு வானத்தில் இருக்கும். காலண்டர் பேப்பர் குப்பை தொட்டியில் இடம் பிடித்த அளவிற்கு மசியாவின் சிந்தனையில் இடம் பிடிக்க முடியவில்லை. அவள் சாப்பிடும் நேரம் அவளுக்கு தெளிவாக தெரியாதபோது ஜீலியை பற்றிய கவலையும் இல்லை. புத்து நாட்கள் கிழிந்து போனது மசியா வீட்டு காலண்டரில். மிக தெளிவாய், சிரித்த முகத்தோடு, பற்களின் வரிசையை காட்டியபடி "மம்மிஇன்னக்கி டிராயிங் காம்பிடிஷன் அப்படியே ஓவிய கண்காட்சியும்" நீங்க எல்லாரும் வந்துடுங்க என சொல்லிவிட்டு வரைந்த ஓவியத்தோடு அடையார் டிப்போ நோக்கி பறந்தது அவளின் சிமெண்ட் கலர் ஸ்கூட்டி.
"என்னங்க நான் எக்மோர் வந்து பல மாசமாச்சி" சொல்லியபடி காரிலிருந்து இறங்கியபோது தன் மகள் ஓடி வருவதை பார்த்தாள்.
"ஹாய் டாட் நீங்க வரமாட்டிங்கன்னு நினைச்சேன்";  எதுவும் சொல்லாமல் தன் மகளின் தோள்களை தட்டி கொடுத்தபடி நடந்தார் மசியாவின் அப்பா.
அம்மா மகளும் எதையோ தீவிரமாக கையை ஆட்டியபடி பேசி வந்தார்கள். மசியாவின் நண்பர்கள் அம்மாகாரியை சூழ்ந்து கொண்டார்கள்.
ஏற்கனவே ஓவிய கல்லூரிக்கு வந்து இருந்தாலும் இவ்வளவு ஓவியங்களை பார்த்தது இல்லை மசியாவின் அப்பா.  காலேஜ் பின்புறம் டிரெயின் போகும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தூங்குமூஞ்சி மரங்கள் நல்ல நிழலை தந்தபடி அசைந்து ஆடியது அதன் கிளைகள்.
திரும்பும் இடமெல்லாம் ஓவியங்கள். தெளிவாய் தெரியும் மனித உருவங்கள். இயற்கை காட்சிகள், புரியாத கோடுகள் நிறைந்த மாடர்ன் ஓவியங்கள் என ஒவ்வொரு ஓவியத்தின் முன்பும் யாரோ ஒருவர் நின்று இருந்தார்கள்.
ஓவியங்களை ரசிக்கும் மனிதர்களிடம் உங்களின் பெண் என்னவென கேட்டாள். பதில் தாமதமாகத்தான் வரும் போல் இருந்தது. கண்கள் விரிய நின்றார்கள். தலை சாய்த்து பார்த்தார்கள். குழந்தைகளுக்கு விளக்கி சொன்னார்கள். ஒரு ஓவியத்தின் முன்பு ஆண்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அனைத்து ஆண்களையும் நிற்க வைத்து வேடிக்கை காட்டியது மசியாவின் நிர்வாண பெண்ணின் ஓவியம். அங்கு சூழ்ந்திருந்த எந்த ஆணாலும் முகத்திற்கு கீழே பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இந்த காலத்து பெண்கள் மறந்து போன தமிழ் கலாசாரத்தின் குறியீடுகள் கோடுகளாய் மின்னியது. நிறைய ஆண்கள் அந்த உருவத்திற்கு கற்பனையில் பட்டு புடவையெல்லாம் கட்டி பார்த்தார்கள். சுடிதார் போட்டு பார்த்தார்கள். ஜீன்ஸ் டீசர்ட் போட்டு பார்த்தார்கள். அத்தனையிலும் அம்சமாய் அமர்ந்து கொண்டது அந்த ஓவியம். கூட்டத்தை விலக்கி விட்டு பார்த்த மசியாவின் அப்பா தலை குனிந்தபடி நின்றார். அந்த ஓவியத்தின் ரசிகர்களின் வார்த்தைகளை மட்டும் தான் அவரால் கேட்க முடிந்தது. அதை பார்க்க முடியவில்லை அவரால். மசியாவின் அம்மாகாரி தன் மகளின் ஓவியத்தை பார்த்தவுடன் கண்கள் நிறம் மாறி போனது.
பளார், பளார் மசியாவின் கன்னங்களில் எழுதியது அவளின் அம்மாவின் கைகள். மேற்கொண்டு எதுவும் பேசாமல் காரை நோக்கி ஓடினாள் மசியாவின் அம்மா. அவளின் அழுகை குரல் பின்னால் ஓடியது. மசியா அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். இவ்வளவு அழகான ஓவியத்தை வரைந்த மசியாவை ஏன் அடிக்க வேண்டும் என பேசிக் கொண்டார்கள். ஏன் தன் அம்மா அடித்தாள் என புரியாமல் நடக்க ஆரம்பித்தாள்.
தாமதமாய் வந்த மசியாவின் தாத்தா பேத்தியின் ஓவியத்தை பார்த்ததும் உண்மையில் உறைந்து போய் விட்டார். அந்த ஓவியத்திற்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே போனதும் அதை விலைக்கு வாங்கி கொண்டு கிளம்பினார். வீடு வரும் வரை அவருக்கு நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. தன் பேத்தி இவ்வளவு திறமைசாலியா என்ற ஆச்சரியக் கேள்வியும் போனஸாக இருந்தது.
வீட்டில் தாத்தா நுழையும் போது மௌனமாய் ஒவ்வொரு சோபாவிலும் அமர்ந்து இருந்தவர்களை நோக்கி "மார்கரேட்என் பேத்தி எவ்வளவு திறமைசாலி பார்த்தியா?" என கேட்டபடி ஓவியத்தை காட்டிய போது தன் அப்பாவின் ஆர்வத்தை சந்தோஷத்தை பார்த்து குழப்பத்தோடு.
"அப்பா ஓவியத்தில் இருப்பது யாருன்னு நல்லா கேளுங்க" என சொல்லிவிட்டு தன் கணவனை பார்த்தாள். தலைகுனிந்து அமர்ந்து இருந்தான். மசியா எதுவும் புரியாமல் விடை தேடி உட்கார்ந்து இருந்தாள்.
"தெரியும் என் மனைவி, உன்னோட அம்மா" என தாத்தா சொல்லியவுடன் மசியா எழுந்து நின்றாள். விடை தெரிந்த பின்பு எப்படி இது சாத்தியம் என்கிற உண்மையை தேடி மசியாவின் கண்கள் ஆர்வத்தோடு அலை மோதியது. "அப்ப நான் மன்னடியில் போட்டா கடை வச்சிருந்தேன்.  என்னிடம் அப்போ நவீன கேமரா எல்லாம் இருந்தது.  எப்போதும் போல் ஒரு நாள் என் மனைவியிடம் எப்போதாவது உன் முழு அழகை பார்த்து இருக்கிறாயா என்று கேட்டபோது, அவள் பார்த்த பார்வை இன்னும் என்னிடம் அழியாமல் இருக்கும் அவள் நினைவுளில் ஒன்று. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சம்மதித்தாள்.  கொடுத்த வாக்கு படி போட்டோவை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டேன். என் மனைவியின் உரிமையை அவளிடமே நான் கொடுத்தேன்.  அறுபது வயதில் நீ இந்த போட்டாவை பார் ஆச்சர்யப்படுவாய் என அப்போது சொன்னேன். ஆனால் என் மனைவியின் வெட்கத்திற்கு எத்தனை ரசிகர்கள். எல்லாம் என் பேத்தியால".
"தாத்தா இது என் பாட்டியா, நம்ப முடியவில்லையே" என நிறைய கேள்விகளுக்கு பதில் ஒரு கேள்வியாக கேட்டாள்.
"நீ பொறந்த ஆறு மாசத்துல சமயல்கட்டுல நடந்த விபத்துல உன் பாட்டிக்கு தீக்காயம் பட்டு முகம் விகாரமாய் மாறிபோச்சி.  அவ உன்ன ஆசையோடு தூக்கினாலே பயங்கரமாய் பயந்து கத்துவ.  அவளுக்கும் தன் முகம் இப்படி ஆயி போச்சின்னே வருத்தம் ஏற்பட துவங்கியதும், அவ சம்பந்தப்பட்ட எல்லா போட்டோவையும் என்னோட ரூமில் பத்திரமாய் கழட்டி வைத்துவிட்டேன். அதிலிருந்து எடுத்துதான் நீ என் மனைவியை படம் வரஞ்சி இருக்க" என சொல்லியவுடன் பாட்டி இருக்கும் அறையை நோக்கி ஓடினாள்.  எல்லாவற்றையும் கேட்டபடி நின்ற பாட்டியை கட்டி பிடித்து காயம்பட்டு கருத்து போன முகத்தில் மாறி மாறி முத்தமிட்டடாள்.  முதல்முதலாக தன் பாட்டியை பார்த்தாள்.  முதுமை அவளிடம் முழுமையாக தெரிந்தது.  தன் பாட்டியா இந்த காலத்து வாலிபர்களையும் ரசிக்க வைக்கிறாள் என்ற கேள்வியுடன் தன் பாட்டியை அணைத்துக்  கொண்டாள்.
இருபது வருடம் ஏங்கிய உணர்வு, ஸ்பரிசம் எல்லையில்லாமல் கிடைக்கறதே என்ற ஆனந்தம்.  அவள் கண்கள் நீராய் மாற தொடங்கியது.  மூன்று தலைமுறை மாற்றங்களில் மாறாமல் இருப்பது இந்த நுண்ணிய உணர்வுதான்.  அருகிலிருக்கும் தன் பேத்தி வரைந்த ஓவியத்தை பார்த்தபடி இரவு முழுவதும் தனிமையில் இருந்தாள்.  காலையில் வீடெங்கும் எதிரொளித்து மசியாவின் அழுகை சத்தம்.  சந்தோஷமாய் ஓவியத்திற்கு உயிர் கொடுத்துவிட்டு, இறந்து போயி இருந்தாள் பாட்டி. ஓவியம் சிரித்தபடி இருந்தது அழியாமல்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com