தூய இருதய தொடக்கப்பள்ளியைத் தஞ்சாவூரில் எல்லாரும் அறிவர். நான் ஐந்தாம் வகுப்பு வரை அங்கு படித்தேன். இதனால் அந்தப் பள்ளியின் தரம் குறித்து நீங்கள் ஐயுற வேண்டாம். என்னை விட உருப்படியான பலர் அங்கு படித்திருக்கிறார்கள். ஆகவே அது நல்ல பள்ளியே.
என் மகன் அங்குதான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். நானும் என் மனைவியும் சென்னையில் நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பணமே வாழ்க்கைகுச் சுமையாக மாறியதை உணர்ந்த நாட்களில், ஊருக்கே திரும்பி விடுவது என முடிவு செய்தோம். எங்கள் நண்பர்கள், ’தஞ்சாவூர்ல நல்ல ஸ்கூல் இருக்குமா?’ எனக் கேட்டார்கள். அந்தக் கேள்வி எங்களுக்கு ஆச்சர்யமூட்டியது. நல்ல பள்ளிகள் எல்லாமே சென்னையில் மட்டும்தான் இருக்கின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். சென்னை நல்ல ஊரே கிடையாது என்பது எங்கள் எண்ணம். ஒருவிதத்தில் அது எங்கள் அனுபவமும் கூட. நல்ல ஊரில்தானே நல்ல பள்ளிகளும் இருக்கும்! ஆகவே எங்கள் ஊரில் நல்ல பள்ளிகள் இருக்கும் என்ற எங்கள் நம்பிக்கை எங்களைத் தாங்கிப் பிடித்தது.
மகன் நிகரன் 5 வயதை அடைந்த பின், அவனை அதே தூய இருதய தொடக்கப் பள்ளியில் சேர்த்தோம். ஆண்டுக் கட்டணம் 800 ரூபாய். இதில் ஒரு சோடி சீருடைகளும் சில புத்தகங்களும் தந்துவிடுகிறார்கள். தவிர, பள்ளியில் சேர்ப்பதற்காக உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள், பெரு வணிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட எவர் தயவும் தேவையில்லை. நள்ளிரவு 1 மணிக்கு கையில் பிளாஸ்க்குடன் வரிசையில் நிற்கத் தேவையில்லை. அவ்வாறு நிற்கும்போது ஏற்படும் அவமானத்தை மறைக்க, ‘சார்...இன்னிக்கு நாம கஸ்டப்பட்டாலும் குழந்தைக பியூச்சர் பிரைட்டா இருக்கும் சார்’ என முந்தியும் பிந்தியும் நிற்பவர்களிடம் வழியத் தேவையில்லை.
மகனைக் கூட்டிக் கொண்டு போனால் அனுமதிச் சீட்டுடன் திரும்பலாம். தமிழ்வழிப் பள்ளி. இதே பள்ளியில் ஆங்கில வழியும் உண்டு. அங்கே மேற்கண்ட சுயமரியாதைக் குறைபாடுகள் நடப்பதுண்டு. ஆனாலும், சென்னையை விஞ்சும் அளவு இல்லை. இந்த விசயத்தில் சென்னைவாசிகளின் தன்மானக் குறைவை எவராலும் வெல்ல இயலாது.
இப்படியாகச் சேர்க்கப்பட்ட எங்கள் மகன், இப்போது அரையாண்டு எழுதுகிறான். த....மி...ழ..ர் கண்ணோ...ட்...டம், தி...ன....ம....ணி என எழுத்துக் கூட்டிப் படிக்கிறான். கடைப் பெயர்ப் பலகைகளைப் படிக்கிறான். விரல்களால் கணக்குப் போடுகிறான். அவ்வப்போது ஓவியங்கள் வரைகிறான். நிறைய படங்கள் பார்க்கிறான். அவன் வகுப்புத் தோழர்களும் இப்படி ஏதோ செய்கிறார்கள்.
கடந்த வாரம் அவன் வகுப்பு ஆசிரியை எங்கள் வீட்டுக்குத் திடீரென்று வந்தார். சில நிமிடங்கள் மரியாதை நிமித்தம் நீடித்த உரையாடலுக்குப் பின்னர், தான் வந்த நோக்கத்தை வெளியிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் சேரும் மாணவ்ர்கள் எண்ணிக்கைக் குறைந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் சில ஆண்டுகளில் பள்ளி மூடப்பட்டு விடும் என்றும் வருந்தினார். ஆகவே, நிகரன் வீட்டுக்குப் பக்கத்தில் சிறுவர்கள் இருந்தால் அவர்களைப் பள்ளியில் சேர்க்கப் பேசுவதற்காகவே தம்மை நிர்வாகம் அனுப்பியதாக்க் கூறினார்.
எங்கள் அண்டை வீட்டார், எங்களை மிகுந்த வேதனையுடன் பார்க்கிறார்கள். போயும் போயும் தமிழ் மீடியத்தில் படிக்க வைக்கிறீர்களே என்று அவர்கள் வருந்தாத நாள் இல்லை. ஆண்டுக் கட்டணம் 800 ரூபாய்தான் என்றதுமே அவர்கள் எங்கள் வீட்டில் கை நனைப்பதே இழுக்கு எனக் கருதும் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் பள்ளிக்கு ஆள் சேர்க்க முடியுமா?
அந்த அண்டை வீட்டாரும் என் பிற நண்பர்களும் தம் பிள்ளைகளின் கல்விக்காக ஆண்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் இந்தக் கட்டணத்துக்காக அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. அவர்கள் வங்கிக் கணக்கு தொடங்குவதே கடன் வாங்கத்தான். விருந்தினர் வந்தால், கறி மீனுக்குச் செலவாகுமே என்று பாதி நேரங்களில் ’ஐயையோ...அவனுக்கு எக்ஸாம் வருதே...இந்த நேரத்துலயா நீங்க கிளம்பணும்...’ என்று வாய் கூசாமல் பேசித்தான் சேமிக்கின்றனர். ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னும் பள்ளிக்குச் சென்று ’என்ன மிஸ்...இந்த தடவையும் மார்க்ஸ் குறைஞ்சிருச்சு...?’ எனக் கேட்பதும் அதற்காகக் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்குள்ளாகி மாத்திரைகள் விழுங்குவதும் அவர்கள் பண்பாடு.
ஆனால், வெளியில் காட்டுவது, ’என் சன்...லிட்டில் ஸ்காலர்ஸ்ல எல்.கே.ஜி பண்றாப்ல...’ என்ற பந்தாவைத்தான்.
இதைப் பற்றி நண்பர்க்ளிடம் பேசும்போது, ’இது காம்படிடிவ் வேல்டு மச்சி...இப்ப கஸ்டப்பட்டாதான் நாளைக்கு நல்லா இருக்கலாம்’ என்பார்கள். ‘இப்ப இவ்ளோ கஸ்டப்பட்டுட்டு....நாளைக்கு நீ இருப்பியா மச்சி?’ என நான் கேட்பேன். அது அவர்களுக்கு விதண்டாவாதமாகத் தோன்றும்.
முப்பது வயதில் அந்த நண்பர்களுக்குச் சர்க்கரை வியாதி, 10 வயதில் அவர்களின் பிள்ளைகளுக்குப் பார்வைக் குறைபாடு, உடல் பருமன், தூக்கமின்மை, சிலருக்குச் சர்க்கரை, முரட்டு குணம், மந்த புத்தி என பல்வேறு சிக்கல்கள்.
சரி...அவை எல்லாம்...பணக்காரத்தனத்தின் அடையாளங்கள்!
என் கவலை என்னைப் போன்ற எளியவர்கள் குறித்தது.
இதே நிலையில் பொதுப் பள்ளிகளைப் புறக்கணித்தால், இப்போது பிறக்கும் எளியோர் குழந்தைகளுக்குப் படிக்கப் பள்ளிக் கூடமே இருக்காதே என்பதுதான். தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அதி வேகமாகப் பெருகுகின்றன. பொதுப் பள்ளிகளின் வகுப்பறைகள் அதனினும் வேகமாக மூடப்பட்டு வருகின்றன.
ஒரு பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 1000 என்றால், ஆசிரியர்கள் 25 பேர். அடுத்த ஆண்டு மாணவர் 800 எனில், ஆசிரியர் 20. மாணவர் 400 எனில், ஆசிரியர் 10.
இந்த விகித்தில் ஆசிரியர்கள் வேலை இழந்து வருகின்றனர், வகுப்புகள் மூடப்பட்டு வருகின்றன. பிள்ளைகளை எதிர்கால வாழ்க்கைக்கான முதலீடாகப் பார்க்கும் புத்திசாலிகள் பெருகிவிட்டனர்.
இவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சில வங்கிகளிலும் கம்பெனிகளிலும் அடமானம் வைத்திருக்கின்றனர். பிள்ளைகளின் வாழ்வைப் பள்ளி நிர்வாகிகளின் பொறுப்பில் விட்டு விட்டனர். இவற்றின் விளைவால், பிள்ளைகளின் உடல் நலம் பீடியாட்ரிசீயன்க்ளிடமும் பெற்றோர் உடல் நலம், பல்வேறு சர்ஜன்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆக, இவர்கள் வாழ்க்கையை இவர்கள் வாழ்வதில்லை. பல்வேறு முதலாளிகளும் நிபுணர்களும் வாழ்கிறார்கள்!
இவர்களால், எளியோர் பலரின் வேலை பறிபோய்க் கொண்டுள்ளது. எளியோர் குழந்தைகளின் கல்வி உரிமை கரைந்து கொண்டுள்ளது. காலப்போக்கில், சாமானியர் குழந்தைகள் பள்ளியை நினைத்தும் பார்க்கவியலாத சூழல் உருவாக இருக்கிறது.
அப்போது இவர்களுக்குத் தம் பிள்ளைகளைக் கல்லூரிகளில் சேர்க்கக் கடன் கிடைக்காமல் திண்டாடும் சூழலும் ஏற்படும். ஏனெனில், கல்லுரிகளை இவர்களுக்கு முந்தைய தலைமுறை புத்திசாலிகள் ஏற்கெனவே முதலீடாக மாற்றி விட்டனர்.
அப்போது ஏழை பணக்காரன் வேறுபாடு என்பது,
பள்ளிக்காகக் கடன் வாங்குவோர், கல்லூரிக்காக்க் கடன் வாங்குவோர் என்ற அளவில் இருக்கும்.
வாழ்க்கை வட்டம்தானே!
