பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

December 3, 2010

ஆனால் கண்ணகியின் முகசாயல் அவளுக்கு ... - மாரிசெல்வராஜ்

 அண்டா குண்டா அடகுவைத்து
 ஆத்தா தாலிய பேங்க்ல வைச்சு
 படிக்கத்தான் வந்தோமா
இல்ல போராட வந்தோமா”    


எப்படியோ ஒரு வாரமாக நடந்துகொண்டிருந்த கல்வி உதவித் தொகையை காலம் தாழ்த்தாமல் கொடுக்க வேண்டும் என்பதற்கான மாணவர்களின் போராட்டம் நேற்றுதான் முடிவுக்கு வந்தது. எப்போதும் போல ஒரு பெரிய மேஜையை கல்லூரியின் பிரதான வாசலில் போட்டு அதன் மீது ஏறி நின்று கல்லூரி முதல்வர் அறிவித்தார்.
   
  
“நாளை காலை அலுவலகத்தில் வந்து கல்வி உதவித்தொகைக்கான காசோலையை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இதுவரை நடந்து முடிந்த தேர்வுகளில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் மட்டும் தங்கள் அம்மாவையோ அப்பாவையோ நேரில் அழைத்து வந்து காசோலையை பெற்றுக்கொள்ள வேண்டும்
அறிவித்து முடிக்கும் முன் கல்லூரியின் இட்து பக்கம் உள்ள விளையாட்டு பிரிவிற்கான அறையின் கண்ணாடி ஜன்னல்கள் நான்கும் உடைந்து சிதறி விழுந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.


“உங்களின் நன்மைக்காகவும் உங்களின் வருங்காலத்தின் நன்மைக்காகவும் மட்டுமே இதை நான் செய்கிறேன்என்று மேலும் அவர் தன்னம்பிக்கையோடு பேசியபோது வரவேற்பறையில் முன்னாள் மாணவர்களின் நினைவாக தொங்கி கொண்டிருந்த டிங் டாங் நிலைக்கடிகாரம் “படார்என கீழே விழுந்து தனது உக்கிரமான எதிர்ப்பை பதிவு செய்தது.
எதிர்ப்பின் வலுவை பார்த்த முதல்வர் “சரி சரி நாளை எல்லோரும் காசோலை வாங்கிகொள்ளலாம்என்று அவர் தன் தோல்வியின் வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாய் கொட்டிய போது ஆர்ப்பரித்து அடங்கியது மாணவர் கூட்டம்.


ஹோட்டல் அக்கவுண்ட் ஆறாயிரம் ரூபாய், அறை வாடகை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய், பெட்டிக்கடை பாக்கி எண்ணூறு ரூபாய், அவ்வப்போது சினிமா பார்க்க போகவும் சிக்கலான நேரத்திலும், கடுப்பான நாட்களிலும் சரக்கு அடிப்பதற்கு அட்டெண்டர் பிச்சையா அண்ணனிடம் வாங்கிய கடன் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய், பஸ்ஸில் போகும் போது முன் சீட்டில் அமர்ந்திருந்த வகுப்பு தோழி லில்லியின் பர்சிலிருந்து எடுத்து ஒருநாள் செலவழித்தது இருநூறு ரூபாய், மொத்தம் பதினோறாயிரம் ரூபாய்.
கொடுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் நால்வருக்கான கூட்டுத்தொகை பதினாறாயிரம் ரூபாய், மொத்த கூட்டுக்கடன் பதினோறாயிரம் ரூபாய் போக மீதி கையில் இருக்கும் கூட்டு வைப்பு தொகை ஐந்தாயிரம் ரூபாய்.


பொதுவான இந்த ஐந்தாயிரத்தை என்ன பண்ணலாம் என்பதே இப்போது உள்ள பிரச்சனை.
“மாப்ள பேசாம ஊட்டி கொடைக்கானல்னு ஒரு டூர் அடிச்சிட்டு வரலாமா ?
“ம்ம் பேசாம ஆளுக்கொரு பேண்ட சர்ட் எடுத்துடுவோம்
“போடா வெண்ண யாருக்கு வேணும் பேண்ட சர்ட். அப்படியே நயகரா போறோம் அப்படி என்ன தான் அங்க இருக்கு இவனுங்க இப்படி பீத்திக்கிறானுங்கன்னு நாமளும் குடிச்சிப் பாக்கிறோம். என்ன ?“
“அதெல்லாம் ஒரு மயிறும் வேண்டாம் சிலிண்டரும் அடுப்பும் வாங்கி வைக்கலாம் தேவைப்படும் போது சமைச்சிகிடலாம் “
இதுதான் அவர்கள் நால்வரும் வெளியே சொன்ன வெவ்வேறான யோசனைகள் ஆனால் நால்வருக்குமே பொதுவான, செய்தே தீர வேண்டிய ஒரு யோசனை உள்ளே உருகி கொண்டிருந்தது
“கண்ணகியிடம் பேசிபார்க்கலாம்என்பதுதான் நிறைந்து வழிந்த அந்த யோசனை.

கண்ணகியை அவர்களுக்கு மூன்று வருடங்களாகவே தெரியும். முதலில் அவளை சமாதானபுரம் ரவுண்டானாவில் தான் பார்த்தார்கள் பட்டுப்புடவையில் ஸ்ட்ரா இல்லாமல் பெப்சி குடித்துக்கொண்டிருந்தாள். அதன்பின் பாளை பஸ் ஸ்டாண்டில் பார்த்தார்கள். சுடிதாரில் டீ குடித்துக்கொண்டிருந்தாள். அதன்பிறகுதான் அவளை அடிக்கடி இவர்கள் கல்லூரிக்கு செல்லும் V.M சத்திரம் பஸ் ஸ்டாப்பில் பார்த்தார்கள். புடவையிலோ சுடிதாரிலோ நிற்பாள். அவளை ஏற்றிப்போகும் வாகனம் ஆட்டோவாகவோ, டாக்ஸியாகவோ அல்லது நவீன காராகவோதான் இருக்கும் சில நேரங்களில் கொஞ்சமும் பயமில்லாமால் சிரித்தபடி போலிஸ் ஜீப்களிலும் ஏறி போயிருக்கிறாள்.
நான்கு பேரில் யார் கண்ணில் எங்கு அவள் தென்பட்டாலும் உடனே எல்லாரையும் அழைத்து காண்பிக்க வேண்டும் என்பதே அவர்கள் கொண்ட நட்பின் ஒப்பந்தம். ஏனெனில் கண்ணகியின் பெயரை சொன்னால் மட்டுமே அவர்களுடைய மதுபாட்டில்களின் மூடிகள் பொங்கி வழிந்து திறக்கும் என்றாலும் இதுவரை அவளை அருகில் போய் பார்த்ததோ நேரில் பேசியதோ இல்லை, ஆனால் போனில் பேசியிருக்கிறார்கள்; பேசி வருகிறார்கள்.

ஹலோ
ஹலோ
நீங்க ஹலோ சொல்றது எனக்கும் நான் ஹலோ சொல்றது உங்களுக்கும் நல்லாவே கேட்குதுன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். சொல்லுங்க
ம்ம் உங்க பேர்
அது உனக்கெதுக்கு. ஆமா நீ யார் என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது
அது அது
சும்மா சொல்லு நான் என்ன போலிசுக்கா போகமுடியும்
அது பாளை பஸ் ஸ்டாண்ட் கக்கூஸ் இந்த நம்பர் எழுதியிருந்துச்சு அதுதான் போன் பண்ணினேன்
“மண்ணா போற பய இந்த வே வேற பார்க்கிறானா அவன் இருக்கட்டும்
“உங்க பேர் என்னன்னுதான் சொல்லுங்களேன்
“ஏன் என் பேர்ல எதும் பத்திரம் கித்திரம் எழுத போறியா என்ன....ஆமா இப்படி மீன் முள்ள விழுங்கினவ சுடு சோற சாப்பிட்ட மாதிரி கொள கொளன்னு பேசுறிய நீ என்ன காலேஜ்ல படிக்கிறியா ?
“ஆமா
“ம்ம்ம் அப்படி வாங்கடா .....சரி அதவிடு பொண்டாட்டிய கண்ணகியா நினைக்கிற யோக்கியனுங்க என்ன மாதவிம்பானுங்க. பொண்டாட்டிய மாதவியா நினைச்சுகிட்டு என்கிட்ட வர்ற அயோக்கியனுங்க என்னை கண்ணகிம்பானுங்க இந்த இரண்டுல எனக்கு கண்ணகிதான் பிடிச்சிருக்கு. ஆமா என் பேர் கண்ணகி
“சரி எவ்வளவு ?”
“நீ மட்டுமா ?”
“இல்ல நாங்க நாலு பேர் ப்ரண்ட்ஸ்
“ஆளுக்கு ஆயிரம் ரூபாய் நாலாயிரம் ஆகும்
“எங்க வரணும் ?
V.M சத்திரம் பஸ் ஸடாப்பிற்கு வந்து கூட்டிட்டு போ. ரூமுக்குதான ?”
“ம்ம்ம்ம்ம்

அந்த நாளுக்கு பிறகுதான் அவள் பெயர் கண்ணகி என அவர்களுக்கு தெரியும். அன்று பேசிய பணமில்லாமல் மறைந்திருந்து அவள் இவர்களுக்காய் காத்திருந்துவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி போனதை பார்த்தாலும் பணமில்லாமல் தினமும் ஆள் மாற்றி ஆள்மாற்றி அவளுடன் பேசுவார்கள். அவளும் பேசுவாள். இடம் சொல்லுவார்கள் மறைந்திருந்து அவள் இவர்களுக்காய் காத்திருப்பதையும் கடைசியில் வேறு யாருடனோ போவதையும் மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள்.

இப்போது எதையும் பேசாமால் யோசிக்காமல் நால்வரும் சிரித்துக்கொண்டார்கள். பெட்டிக்கடை காயின் பூத்திலிருந்து கண்ணகியின் நம்பருக்கு அவர்கள் டயல் செய்தபோதே சுந்தரும் கணேஷும் மெடிக்கலுக்கு போய்விட்டார்கள்.
“மாப்ள போன் ஆஃப்ல இருக்கு என்ன பண்ண
“எங்கேயாவது போயிருப்பாளோ
“தெரியல ஆனா வி.எம் சத்திரத்தில போய் விசாரிச்சா எப்படியும் பிடிச்சிடலாம். என்னைக்கு வேணும்னாலும் வீட்டுக்குக்கூட வாங்கன்னு தான சொன்னா. நேரா போய் வீட்டையே கண்டுபிடிச்சிடலாம் என்ன

வி.எம் சத்திரம் கோனார் தெருவுக்குள் தான் முதலில் கதிரும் ரமேஷும் நடந்தார்கள். “மாப்ள பெரிய ஆளுங்ககிட்ட விசாரிக்காத தப்பா நினைப்பானுங்க சின்ன குழந்தைகள்கிட்ட மட்டுமே கேளு என்னஅதன்படி கதிரும் தெருவில் தனியாய் நிற்கும் சின்ன குழந்தைகளிடமும் ஆங்காங்கே விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளிடமும் “இங்க கண்ணகி அக்கா வீடு எங்கப்பா இருக்குஎன்று கேட்டான். அப்படியே ஸ்ரீனிவாசாநகர் முக்குக்கு வந்து திரும்பி மறுபடியும் என்.ஜி.ஓ காலனிக்குள் நுழைந்தார்கள். நல்ல வெயிலில் அவர்களின் காமம் வியர்வையாய் வழிந்துகொண்டிருந்த்து. கண்ணகியை தேடி அலைந்துகொண்டிருக்கும் போதே கண்ணகியை பார்த்ததும் அவளிடம் எப்படி பேச வேண்டும் என்ற ஒத்திகை இருவருக்குள்ளும் நடந்துகொண்டிருந்தது. தூத்துக்குடி மெயின்ரோட்டை கடந்து டால்மியா நகருக்குள் அவர்கள் நுழையும் போது மணி பனிரெண்டு ஆகியிருக்கலாம் சூரியன் எல்லாவற்றையும் ஈவு இரக்கமின்றி அகோரமாய் புசித்துக்கொண்டிருந்தான்.

முழு மூக்கில் பொடி வைத்துவிடப்பட்ட ஓணானாய் அவர்களின் காமம் பைத்தியம் பிடித்து கண்ணகியை தேடிக்கொண்டிருந்தது. இன்னும் சரியாகச் சொன்னால் வாலை நறுக்கி விடப்பட்ட ஆண் பன்றியைப் போல அது கத்தி கூப்பாடிட்டபடி கண்ணகியைத் தேடி அலைந்தது.

“மாப்ள இனி வேலைக்காவாது. பேசாம அந்த டீ கடையில கேட்டுருவோம். தப்பா நினைச்சாலும் நினைக்கட்டும் நமக்கென்ன மயிறு
அண்ணே இங்க இங்க கண்ணகி அக்கா வீடு எங்கன இருக்கு தெரியுமா ?
“என்ன பேர் சொன்ன கண்ணகியா அப்படி யாரும் தெரியலயப்பா. சரி என்ன பன்றாங்க அவங்க ?
சரி இரண்டு டீ போடுங்க, என்றபடி அவர்களின் இச்சை செய்வதறியாது அந்த தென்னங்கீற்று பந்தலில் கொஞ்ச நேரம் இளைப்பாறியது.
என்ன தம்பி என்ன பேர் சொன்னீங்க ?”, என்ற அந்த உருவம் மெலிந்திருந்தது, பசியோடு இருந்தது, பார்க்க அழுக்காகவும் பாவமாகவும் இருந்தது.
“கண்ணகிண்ணா கண்ணகி
“கொஞ்சம் அங்க தள்ளி போய் பேசலாமா ?”, மறுபடியும் வெயிலுக்குள் வந்து எரிய தொடங்கியது அவர்களின் காமம்.
“என்ன பொண்ணு கிண்ணு வேனுமா ?
“அதெல்லாம் இல்லண்ணே
“சும்மா சொல்லுங்க பார்க்க பைத்தியக்காரன் மாதிரி இருக்கான்னு பயப்படாதீங்க
“ஆமாண்ணே
“எவ்வளவுக்கு வேணும்
“இல்ல கண்ணகி அக்கா தான் வேணும்
என்ன கண்ணகியா. ம்ம்...ம் இந்த பேரு அவளுக்கு பொருந்தத்தான் செய்யும். கண்ணகியின் முவசாயல் வனஜாவுக்கு உண்டுதான். ஆனா அவ கிடைக்க மாட்டா வேற யார் வேணும் உங்களுக்கு
“இல்ல அவங்க தான் வேணும்
“டேய் தேவிடியா பசங்களா அவா கிடக்க மாட்டான்னு எத்தனை தடவை சொல்ல உங்களுக்கு “, திடீரென வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு தொண்டை கனைக்க அவர் கத்தியதும் ஆடிப்போய்விட்டார்கள் இருவரும்.
“அண்ணே ப்ளீஸ் கத்தாதீங்க நாங்க தெரியாம கேட்டுட்டோம் ப்ளீஸ். கத்தாதீங்க ப்ளீஸ். நாங்க போறோம் டேய் வாடா“, அவமானமாகவும் பதட்டமாகவும் இருவரும் வேகமாய் கிளம்ப,
“டேய் தேவிடியா பசங்களா என் வனஜாவை கொன்னுட்டு எங்கடா போறீங்க ? அவ எவன் கூட படுத்தாலும் அவ கண்ணகிடா. எங்கடா என் கண்ணகி ? எங்கடா என் வனஜா ?

இருவரையும் மறித்துக்கொண்டு அவர் போட்ட சத்தம் எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டதால் கோபம் தாங்காமல் கதிர் அவரை சங்கை பிடித்து நெரித்து
“டேய் கத்துனா கொன்னுடுவேன். லூசு பயலே வழிய விடுடா யார்டா கொன்னா ?”, என்று பல்லை கடித்ததும், அந்த பாவமாய் போனவன் அவர்கள் இருவரின் கால்களிலும் விழுந்து கெஞ்சி அழ ஆரம்பித்துவிட்டான்.

“ஐயோ தம்பி நீங்க இல்லப்பா. அந்த காக்கிசட்டை போட்ட தேவிடியா பயலுவ எப்பவும் வந்து பணம் தான் வாங்கிட்டு போவானுங்க. ஆனா போன வாரம் யாரோ புது ஆபிசர் வந்திருக்கார் நீயே வான்னு கூட்டிட்டு போனானுங்க. நாய்ங்க என் வனஜாவை என்ன பண்ணுனாவளோ தெரியல. மூணு நாளா திரும்பல. அவனுங்க கிட்ட போய் கேட்டப்போ ஒன்னுமே தெரியாத மாதிரி, ‘பொண்ண்டாட்டிய வைச்சு விபச்சாரம் பண்ணிகிட்டு இருக்கிற மாமா பய இங்க வந்து கேக்குறியான்னு மிதிக்கிறானுங்க, எல்லா இடமும் தேடி மூணாவது நாள் கல்வெட்டான் குழியில இருந்து அம்மணமா அழுகிபோய் மேல வந்து கிடந்தா என் வனஜா. என் கண்ணகி”, என்று ரோட்டில் அழுது புரண்ட அவரை நடு ரோட்டிலே போட்டுவிட்டு டீ கடையில் நின்று வேடிக்கை பார்த்த ஜனங்களோடு ஜனங்களாக இவர்கள் வந்து நின்று நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

“நீ ஒன்னும் பயப்படாத அடுத்த வருசம் உன் கூட விளையாட, சிரிக்க, பேச உனக்கு ஒரு பிள்ளை கண்டிப்பா பெத்து தர்றேன்னு சொன்ன என் கண்ணகிய எதுக்குடா கொன்னீங்க ? எதுக்கு கொன்னீங்க ?”, என்று வேகமாய் எழுந்து ரோட்டோரம் கிடந்த கற்களை அள்ளி எறியத் தொடங்கினார். அந்த கற்கள் எல்லார் மீதும் பராபட்சமின்றி விழுந்தது.

எப்படி வந்தார்கள், எப்போது வந்தாகள் என்று தெரியாது. ஆனால் இருவரும் இப்போது  மதுகடைக்குள் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசிகொள்ளவில்லை ஏன் முகத்தைக் கூட பார்த்துக்கொள்ள தயங்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நன்றாக குடித்தார்கள். குடித்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது யாரோ இருவர் வனஜாவின் கணவனை அடித்து அதட்டி மிரட்டி கடைக்குள் கூட்டிவந்து ஒரு மேஜையில் அமரவைத்து ஊத்திகொடுத்தார்கள். அவன் கையெடுத்து கும்பிட்டதை எதிர்த்த மேஜையில் இருந்து கண் சிவக்கத் தொடங்கிய போதையில் பார்த்த கதிர் ரமேஷைப் பார்த்து சொன்னான்

“மாப்ள பேசாம இழுத்துப் பிடிச்சு அறுத்து, ரோட்ல வீசிட்டு போயிடுவோமாடா ?”, ரமேஷின் கண்களும் நன்றாக சிவந்திருந்தது


மாரிசெல்வராஜ்.


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com