பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

November 28, 2010

தவறிய நாட்கள் - இலக்கியா

கதாசிரியர் அறிமுகம்:   இலக்கியா என்கிற மலர்மன்னன். நான் ஒரு இலக்கியவாசகன்.  கல்கி தொடங்கி இன்றைய எழுத்தாளர்கள் வரை நல்ல கதைகளை வாசித்து வருகிறேன். MBA பட்டதாரி. புதியதலைமுறை பயிற்சி நிருபர். சினிமா மீது தணியாத தாகம் கொண்டவன். தமிழ்மொழியின் கடைபிள்ளையாகவாவது இருந்துவிடவேண்டும் என்பது எனது ஆசை. நல்ல இலக்கியங்கள் படைக்கவேண்டும் என்பது எனது இலக்கு.

தவறிய நாட்கள்:

இங்க யாருதான் நெலச்சு நிக்கப் போறாங்க. சாய்ந்தரம் ஆச்சின்னா சூரியன் ஓடி புடுது. விடிஞ்சா நிலா காணாத போயிடுது. அம்மா செய்து விட்டு போன காரியம் மட்டும் எப்படி நெலச்சி நிக்க போவுது. அவனிடம் நாலு நாளா சொல்லிக்கிட்டே இருந்தது, அவனது சிந்தனை. பசி மட்டும் அவனது வயிற்றுக்குள் நேரம் தவறாமல் தடுமாற வைத்தது.

 “போனவ எனக்கு சோத்துல விஷத்தை வச்சி கொடுத்துட்டு போயிருந்தா எந்த அவமானமும் இல்லாமல் செத்து போயிருப்பேன்”. ஆத்திரத்தில் எச்சிலோடு ஒட்டிக்கிட்டு வந்தது வார்த்தைகள். கேட்க யாருமில்லை அங்கு. செத்து போன அவனோட அப்பா போட்டாவில் இருந்தபடி சிரித்தான். இதெல்லாம் கம்மிடா என்பது போல் இருந்தது அந்த சிரிப்பு அவனுக்கு. எல்லா பொருட்களும் அவனது அடியில் ஒடிங்கி போய் கிடந்தது. ஊரில் இருக்கும் வாய் எல்லாம் தன் வீட்டு செவுத்துக்கு பக்கத்தில் பேசுவது போல் தோன்றியது. பகலும், இரவும் அவனுக்கு அந்த இடத்தில் தான் இருந்தது. “செத்தானா, இருக்கானா” என்று தெரிச்சிக்காத சொந்தபந்தங்கள். அவனோட அம்மா முப்பத்தஞ்சி வயசுல வேற ஒருத்தனோடு ஓடி போய்விட்டாள் என்ற செய்தியை நாலு நாளா வாசித்தபடி இருந்தது.

பாவம் அவள் என்ன செய்வாள் பதினஞ்சி வயசுல கல்யாணம் கட்டிக்கிட்டு, மறுவருசமே இவன பெத்துக்கிட்டாள். வேல வெட்டியில்லாத குடிகார புருஷனோடு அடியும், உதயும் வாங்கி குடிதனம் நடத்தினாள். போக,போக குடிச்சிட்டு புருஷன் எங்க கிடந்தாலும் அவ கவலபடுல. அதுவே அவளுக்கு சாதகமாகி போச்சி. பக்கத்துதெரு முருகேசன் கோனார வச்சிக்க. நிதானமா இருந்த ஒரு நாள் எல்லாமே தெளிஞ்சி போச்சி. அன்னக்கே தண்ணி வாரி காட்டு இலுப்ப மரத்துல தொங்கினான். உசுரு இல்லாமல் ஊஞ்சல் ஆடியது. அவளுக்கு சொட்டு கண்ணீரு வரல. ஊருக்குள் தண்ணி புடிக்கிற இடமெல்லாம் கண்ணு தண்ணீ ஏன் வரல என்று கவலப்பட்டார்கள். ஓத்த புள்ளய்ய புருசனுக்கு பெத்தாலும், தினமும் ராத்திரி முந்தனையை விரிக்கிறது முருசேக கோனாருக்குதான்.

“இருபது வயசு ஆம்பள புள்ளய்ய வுட்டுபுட்டு, ஆம்பள சுகம் தேடி ஓடி போனாள”;. அப்படி தான் பேசி சிரித்தது. ஓடி போனவள் மகனின் பசியையும் எடுத்துக்கிட்டு போனாள். சாப்பிட மனசு வரல பசித்த போது சோறாக்கி தர யாரும் இல்லை. ஆவன் வீட்டில் வாழாத வாழ்க்கையே கண்ணீராய் முட்டிக்கிட்டு வந்தது. மண்ணா போன மனுச வாழ்க்கையை ஏன் குடுத்தான் கடவுள். கடவுளை திட்டியபடி யாரும் இல்லாத வீட்டில் அன்பாக, ஆறுதல் சொல்ல யாராது வருவார்களா தேடியது சிவந்து போன அவனது கண்கள். அவன் வீட்டிற்குள் இப்படி ஒரு நாளும் உட்காந்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை.

ஒம்போது வயசில சுண்டல் விக்க விடியக்கால டிரெயினுக்கு போன நாள் தான் எப்போதும் பால்ய நினைவாக அவனது மனதில் காட்சியாக வரும். பால்காரன் வந்ததும் எழுந்துடுவாள் அவனோட அம்மாகாரி. சுல்தான் கடையில வாங்கின கொண்ட கடலையை அவிச்சி, தண்ணீயை இறுத்து விடுவாள். இரும்பு கரண்டியில நாலு ஸ்பூனூ கல்லண்ணெய்ய ஊத்தி விடுவாள். மேல்ல அனல்ல காட்டி வெளியே எடுத்து காஞ்ச மொளக்காவை துண்டு, துண்டா கிள்ளி போடுவாள். அதுல சூடு தாங்காமல் குரல் கொடுத்தபடியே வெடித்து சிதறும் கடுகின் அழகை ரசிப்பாள். கருவேப்பிலையை மணக்க விடுவாள். தாளிச்ச எண்ணய்ய, சுண்டலோடு உறவாட விட்டு, தூக்கு வாளியை போட்டு மூடி, புள்ளய்ய எழுப்பி தினமும் டிரெயினுக்கு அனுப்புவாள். “மிச்சம் வெக்காம வித்துபுட்டு வாடா முத்து”. என்று சிரித்த முகத்தோடு சொல்லும் அம்மா முகம் அவனுக்கு மீண்டும், மீண்டும் காட்சியாய் வந்த வண்ணம் இருந்தது. ஒம்போது வயசிலிருந்து சம்பாதிக்கிறான். பதினஞ்சி ரூபா வித்த சுண்டல் இப்ப நாப்பது ரூபா விக்குது.

விருத்தாசலத்திலிருந்து திருச்சி போற அஞ்சர வண்டி மாத்தூர் வரும்போது அனேக நாட்கள் தகதகவென சிவந்தபடியே சூரியன் வானத்தில் அடைக்கலம் கொள்ள ஆரம்பிக்கும் காட்சியை பார்த்தபடி டிரெயின் ஏறுவான். தூக்கு வாளியோடு. அதில் சுண்டலும் இருக்கும். வேர்கடலையும் இருக்கும். புட்டாணியும் இருக்கும். மாத்தூரிலிருந்து பதினெட்டாவது ரயில்வே ஸ்டேசன் தான் திருச்சி ஜங்சன். படிக்க தெரியாத அவனுக்கு ஒவ்வொரு ஸ்டேசனும் கணக்கு. பதினொன்னாவது ஸ்டேசன் லால்குடி வந்ததும் இறங்குடுவான். திருச்சியிலிருந்து விழுப்புரம் போகும் டிரெயின்ல மீண்டும் திரும்புவான். வீட்டுக்கு வர ஒம்போது, பத்து ஆகும். சாந்தியம்மா கடையில இட்லியோ, தோசையோ தின்னுபுட்டு வீட்டுக்கு போய் சில்லரையும், பணமும் ஆக அம்மா மடியில் கொட்டுவான். “முத்து உங்கப்பன போல இல்லாம பெரிய ஆளா வருவடா” என சிரிப்புடன் தன்னை அணைத்து பேசும் அம்மாவின் அணைப்பிற்கு ஏங்கியது உடல். மறுநொடியே “ ச்சீ… ச்சீ ”. “அவளை அம்மா என்று கூட சொல்லக் கூடாது. இப்படி நான் இருப்பதற்கு அவள் தான் காரணம்” உணர்த்தியது அனுபவங்கள். அவனுடைய கண்ணீரில் கடைசி சொட்டு வரை துன்பங்கள் நிறைந்த நாட்களை ஞாபகப்படுத்தியது. இருட்டறையில் தன்னை ஒளித்துக் கொண்டது போல் நடந்து முடிந்த நிகழ்வுகளை ஒளித்து வைக்க இடமில்லையே என்று வருந்தினான்.

வயசு ஏற, ஏற எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், ஸ்பெஷல் டிரெயின் யாபாரம் செய்ய ஆரம்பிச்சான். சீசனுக்கு தகுந்த மாதுரி அவன் விக்கும் திண்பண்டங்கள் மாறும். ஆனால் கூவி விக்கும் குரல் மாறாது. அந்த குரல் தான் அனேக பேருக்கு முத்து வரான் என்று ஞாபகப்படுத்தும். நைட்டு யாபாரம் முடிஞ்ச்சிட்டு வந்தவுடனே தூங்கி விடுவான். அவனோட அம்மாகாரி முருகேச கோனாரோடு அவரோட பம்பு செட்டுல தூங்கி விடுவாள். இது அவனுக்கு கொஞ்ச நாளாக்கி முன்னத்தான் தெரியும்.

முத்து சோளம் சீசன் வந்தால் கொல்லகாரங்கிட்ட ஒரு கதிரு அம்பது, அறுபது பைசாவுக்கு விலைபேசி, நூறு, நூத்தம்பது வாங்கி டிரெயின்ல அஞ்சி ரூபா வரைக்கும் விப்பான். வெள்ளரி பிஞ்சும் அப்படியே. பதினாலு வயசுல அவன் ஒரு நாளைக்கி நானூறு, ஐநூறு ரூபா சம்பாதிக்க ஆரம்பிச்சான். வரம்பில்லாம வந்த காசு அவனோடு வயசுல விளையாட ஆரம்பித்தது. கேட்பாரற்று வாழ தொடங்க துணிச்சலை கொடுத்தது. முப்பது வயசு பொம்பளையையும் ஓர கண்ணால பார்க்க வச்சது. வார்த்தைகளில் ஆபாசம் அரங்கேறியது. குரலில் ஏற்றதாழ்வு  வெளிப்படையாக தெரிந்தது. திருச்சியிலிருந்து சென்னை வழி வந்து போகும் அனைத்து டிரெயின் பெட்டிகளுகம் அவனுக்கு காசு கொடுக்கும் உறவாகத்தான்  தெரிந்தது. டெரெயின் வரும் நேரங்கள் அவன் மண்டைக்குள் மணியடித்து சொல்லிக் கொண்டே இருக்கும். வீட்டுக்கு போகணும் என்ற எண்ணம் தப்பி தவறி கூட பகல் நேரத்தில் வந்துவிடாது. முகத்துல பரு முளைக்கும் முன்னே மீசை முளைக்க ஆரம்பித்து விட்டது. பகல் முழுவதும் ஏதாவது ஒரு டெரெயின்ல எதையாவது கூவி வித்துக்கிட்டே இருப்பான்.
மாசம், மாசம் மூணு கேசு. ஒரு கேசுக்கு ஐநூறு ரூபா. தண்டமா மாசம் ஆயிரத்தி ஐநூறு ரூபா கொடுக்கணும் டிடியாருக்கு.


“என்ன சார்! வயிறு பெருசா போய்க்கிட்ட இருக்கு. எங்ககிட்ட வாங்குற காச நீயே தீங்கிறியா” என்று எப்போதும் அந்த டிடியாரை பார்த்து கேட்பான். அவர் முறைத்து விட்டு காசு வாங்குவதில் குறியாக இருப்பார்.


அவனோட அம்மாகாரியும், முருகேச கோனாரும் நாம வாழாத வாழ்க்கை இருக்க கூடாது என்று சொல்லும் அளவுக்கு வாழ்ந்தார்கள் சுத்திலும் இருக்கும் கரும்பு காடுகளில், பகலும், இரவும் அவர்களுக்கு படுக்கையாக மாறி போனது. கிராமத்தில் யாரும் வெட்டி நாட்டாமை செய்ய ஆள் இல்லாததால் பல வருடங்கள் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து வாழ்ந்தார்கள்.


“சூரிய ஒளிக்கதிரை பார்க்க முடியவில்லை என்றாலும், வெளிச்சத்தை உணராமல் இருக்க முடியாது”. அவர்கள் கதையை மக்கள் பேச தொடங்கினார்கள்.


பதினெட்டு வயசுல டியூ கட்டி ஹீரோ ஹோண்டா ஸ்பெலண்டரில் போகும் பசங்களின் நட்பு அவன் கூப்பிடாமலேயே வந்தபடி இருந்தது. ஜீன்ஸ், டீசர்ட் என்று அவனது உடையலங்காரம், பார்ப்பதற்கு மெத்தப் படித்த தோற்றம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது அவனிடம். ட்ரெயின்ல பசங்களுக்கு எல்லா மாற்றமும் அவன் மூலம் தான் அறிமுகமாக தொடங்கியது. செல்போன்  ஐபாட், மெமரி கார்டு எல்லாத்தையும் அவனிடம் அறிந்து கொள்ள துடித்த காலேஜ் பசங்கள் உண்டு.

கதவு திறக்கப்படும் ஓசை கேட்டதும் இருட்டை கவ்வி பிடித்தபடியே உள்ளே பரவ ஆரம்பித்தது வெளிச்சம். பழைய சிந்தனையிலிருந்து விடுபட்டபோது. கொடியில் தொங்கும் எல்லா பேண்ட் சர்ட்டுகளும் அவனை பரிகாசம் செய்வது போல் எண்ணிக் கொண்டான். தண்டல் கொடுத்தவன் வந்து நின்றான்.

‘வாங்க பாஸ் எப்படி இருக்கீங்க’

‘நல்லா இருக்கேன் முத்து’

‘ஏது இம்புட்டு தூரம்’

கேட்க மனசு கஷ்டமாதான் இருக்கு பிள்ளைகளுக்கு காது குத்தி வச்சிருக்கேன். நீ தர வேண்டிய பாக்கி தந்தால் நல்லா இருக்கும்.’

“பாய் இந்த இரண்டு காலும் நல்லா இருந்தா ஆறு மாசத்துக்கு முந்தியே உங்க தண்டல முடிச்சி இருப்பேன்". படுத்தபடியே பேசியவனின் காலை பார்த்தபடி அருகில் உட்கார்;ந்தார் பாய். லுங்கியில் மறைந்து இருந்த கால் வெளியே தெரிந்தது. முட்டிக்கு கீழே இரண்டு காலும் பாதம் இல்லாமல் இருந்தது. பார்ப்பதற்கு அருவருப்பாய் இருந்தது பாய்க்கு.

‘பாய் வெளிய நிக்கிற என்னோட வண்டியை எடுத்துக்கிட்டு போங்க இருபதாயிரத்துக்கு தாராளமா விக்கலாம்’ என்றான் முத்து.

‘சரி முத்து! எல்லாம் கேள்வி பட்டேன். மனசு தாங்குல. எங்கிட்ட தண்டல வாங்கி இதுவரை சரியா கொடுத்தது நீ மட்டும் தான்’ என்று சொல்லியபடியே கையை நீட்டினார். வண்டி சாவியை எடுத்து கொடுத்தான். கொஞ்ச நேரம் கழித்து வண்டி போகும் சத்தம் கேட்டது. ஊனமான காலை பார்த்தபடியே இருந்தவன் மேலே இருந்த விட்டத்தை பார்க்க தொடங்கினான்.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சிவப்பு, சிவப்பா மக்கள் போக ஆரம்பித்த நாட்களில் நைட்டுல ஸ்பெஷல் டெரெயினுக்கு டீ விக்க போனான். ஒரு டீ கேன்ல அம்பது டீ கணக்கு, ஒரு டீக்கு 1 ரூபா கமிஷன். ஆனா முத்து வெளியில போய் 150 மில்லி கப்புக்கு பதிலாக 100 மில்லி கப்பு வாங்கிக்குவான். அவனது கணக்கில் எக்ஸ்ட்ரா பதினஞ்சி டீ சேரும் நைட்டுக்குள்ள மூணு கேனு, நாலு கேனு விப்பான். எப்படியும் ‘சக்தி’ ஆசிர்வாதத்தால் நாளைக்கு ஆயிரம் ரூபாய் குறையாமல் சம்பாதிப்பான்.

அப்படி தான் ஒரு நாள் அரியலூரில் விக்கும்போது ட்ரெயின் கிளம்பி விட்டது. ட்ரெயின்ல இருந்து கீழே இறங்கும் போது தவறி விழுந்தான். சுற்றிலும் உள்ளவர்கள் ‘முத்து, முத்து’ என அலறியபடி கூப்பிட்டார்கள். ட்ரெயின் போன பிறகு முதலில் கீழே இறங்கியவன் தண்டவாளத்தில் மயங்கி விழுந்தான். இரண்டு பாதங்களும் தனியாக ஒன்னுக்கு பின்னால ஒன்னு கிடந்தது. முத்து அழுதது எங்கும் கோரமாக எதிரொளித்தது. பக்கத்துல ஆஸ்பத்திரி இருந்ததால் உயிர் பிழைத்தான்.

“ஓயாமல் தன் மீது அலைந்தவனை பழி வாங்கியது ரயில் சக்கரங்கள்”. வீட்டுக்குள் ஒரே இடத்தில் படுத்த போதுதான் அம்மாவின் காதல் கதைகள் காதுகளுக்கு தானாக வந்தது. “கேடு கெட்டவளை எட்டி உதைக்க கால் கூட இல்லையே” என்று ஆறுமாசமா மனசுக்குள் புழுங்கி போனான். அவளை எந்த பணிவிடையும் செய்ய விடவில்லை.

‘எங்கயாவது போய் செத்து தொலைய வேண்டியது தானே’. “எதுக்கு இந்த மானங்கெட்ட கறியை வச்சிக்கிட்டு உயிர் வாழற” என்று அவன் கேட்ட மறுநாளே அவள் முருகேச கோனரோடு ஓடி போனாள். அவளுக்கு எது தேவையென்று தெரிந்து இருந்தது. தேவையை தேடி போவது தானே புத்திசாலி தனம். அவள் தவறு செய்தாக ஒரு நாளும் எண்ணிக் கொண்டதில்லை.
எதையோ நினைத்து தூங்கி போனான். விடியலை பார்த்தபடி ரயில்வே ஸ்டேசனில் ஆறுமாசம் கழித்து உட்கார்ந்து இருந்தான். தன்னை துன்புறுத்தி, அலைகழித்துக் கொண்டிருந்த மனப்போராட்டங்களை எல்லாம் மீறி, அவற்றை தாண்டிக் கொண்டு தான் நினைத்தவாறு செய்தால் மட்டுமே பல நாட்கள் கழித்து இன்று சோறு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு ரயில் ஏறினான். பரவசத்தோடு அங்கும், இங்கும் பார்த்தான். விதியின் கரங்களில் தன்னை ஒப்படைத்து விட்டான். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போல் தன் வாழ்வு இருப்பதாக எண்ணி கொண்டு இரண்டு கையையும் நீட்டினான். கையில் விழுந்தது. இரண்டு ரூபாய் காசு. காசில் அன்னை தெரசா சிரித்தபடியே அவனை ஏற்றுக் கொள்வதாக பார்த்தார்.

திடுக்கிட்டு எழுந்தான். உடல் வேர்வை துளிகளால் ஈரமாகி போய் இருந்தது. “ராஜா மாதிரி போய் பழகிய டெரெயின்ல பிச்சை எடுப்பதா”. சிரித்தபடி மூச்சை இழுத்து பிடித்தான். கண்களில் உள்ள கோடுகள் சிவப்பு நிறத்தில் தெரிந்தன. எப்ப உயிர் போனது என்று அவனுக்கும் தெரியாது. அவனை பெற்றவளுக்கும் தெரியாது. அனாதை பிணமாய் வீட்டிற்குள் கிடந்து, நாத்தம் வெளியே பரவிய போது தான் ஊர் சேர்ந்து சுடுகாட்டில் சேர்த்தது அவனது உயிரற்ற உடலை. அவனது ஆத்மா ரயிலோடு உறவாடுவதாக பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள் டிரெயின் வியாபாரிகள்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com