பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

November 3, 2010

கோடிட்ட இடங்களை நிரப்புக-12- சுமதி


சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,  முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். 

இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.

பகுதி 12

லட்சுமி சித்தி கடையை பார்த்துக்கொள்வாள். தாத்தாவோ மாமாவோ ஸ்ரீவில்லிபுத்தூர்க்குப் போய் சரக்கு வாங்கி கொண்டு வந்து போடுவார்கள். மிதிவண்டியின் பின்புறம் அரிசி மூட்டையும், இருபக்கமும் தொங்கவிடப்பட்ட பாதி பழுத்த வாழைத்தார்களும் மூச்சிவிட்டு நிற்கும். முன் பக்கத்தில் இரண்டு பக்கங்களில் தொங்கவிடப்பட்ட பைகளில் காய்கறியும் காப்பித்தூள், சர்க்கரை, மிட்டாய் அயிட்டங்களும் இருக்கும்.
ஆட்கள் காட்டுக்கு போய் வீதியே வெறிச்சோடி இருந்தாலும் சித்தி கடையை பூட்டியதில்லை. ஒன்றிரண்டு வயதான கட்டைகள் மெதுவாக நடந்து வந்து பொடியோ புகையிலையோ வாங்கி கொண்டு போவார்கள்.
சித்திக்கு காலை சாப்பாடு மத்தியான சாப்பாடு எல்லாமே பதினோர் மணிக்குத்தான். சாந்தியை உட்காரவைத்துவிட்டு லட்சுமி சித்தி உள்ளே போய் சாப்பிடுவாள். ஒரே அறையை, மரப்பலகைகளால் வைத்து தடுத்திருந்தார்கள். லட்சுமி சித்தி உள்ளே போனதும் பாச்சாக்கள் மூலைக்கொன்றாக ஓடி ஒளியும், நடுவில் யாராவது சாமான் கேட்டு வந்துவிட்டால், சாப்பிட்டுக்கொண்டே விலையை சொல்லி சாமான் இருக்கும் இட்த்தை சொல்லுவாள். சாந்தி எடுத்துக்கொடுப்பாள். சாமான்வாங்கியவர்கள் கொடுக்கும் சில்லறையோ ரூபாய் தாள்களையோ மரப்பெட்டியில் போடும்போது சாந்தி பெரிய மனுஷியாட்டம் நடந்து கொள்வாள். வானொலிப்பெட்டி இயங்கியபடியே இருக்கும். மெல்லிய சத்த்த்தில் சிலொன் நிலையத்திலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும். அதிகமான கூட்டம் வந்துவிட்டாள் அதை நிறுத்திவிடுவாள் சித்தி.

சித்திக்கென்று சின்னதூக்கு ஒன்று இருந்த்து. காப்பியென்றாலும் சாதமென்றாலும் அதில் தான் கொண்டுபோய் கொடுப்பாள்.பானுச்சித்தியின் மகன் தம்பி வளர்கிற வரை சித்திக்கு சாப்பாடு கொண்டு போவது சாந்திக்கு வேலையாக இருந்த்து. அவன் வளர்ந்த பிறகு கடைக்கு போகும் வேலைகளை பங்கிட்டுக்கொண்டான்.

வீட்டிற்கு தேவையான சாமான்களை மொத்தமாக தரமாட்டாள் லட்சுமி சித்தி அன்றாடம் தேவையான சாமான்களை சாந்தியிடம்தான் கொடுத்தனுப்புவாள். பானுசித்தி, வீட்டிலிருந்து சிகரெட் அட்டையில் தேவையான சாமான்களின் பட்டியலை எழுதி கையில் கொடுப்பாள். அதற்கு முன் பானுச்சித்தி சொல்லி அனுப்பும் சாமான்களைப் பாதி மறந்துவிடும் சாந்தி, திரும்பியும் கடைக்கு போவாள். அதனால்தான் சிகரெட் அட்டையில் எழுதி கொடுக்கும் பழக்கத்தை பானுச்சித்தி ஏற்படுத்திக்கொண்டாள்.

எப்படியும் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவையாவது கடைக்கு போய்விட்டு வருவாள் சாந்தி. அவசரமாக போய்வரும்படி அவளை பானுச்சித்தி அனுப்பும் போதெல்லாம் அவள் மறுத்திருக்கிறாள். அப்போதெல்லாம் பானுச்சித்தி அவள் நாடியை பிடித்துக்கொண்டு  “பானம்மா கடைக்கு போயிட்டேன்னா தம்பி அழுவான்ல, நீ போயிட்டு வாடா குட்டிமா. தம்பி இப்பத்தானே தவழ்ந்துகிட்டு இருக்கான். அவன் நடக்க ஆரம்பிச்சதும் உன் கையை பிடிச்சிகிட்டு அவனும் கடைக்கு வருவான்ல, இந்த ஒரே ஒரு தடவை மட்டும் போடா “ அதற்குமேல் அவளைப் பேசவிடாமல் கையிலிருக்கும் மஞ்சள் பையை வாங்கிகொண்டு சாந்தி ஓடுவாள்.தம்பி வளர்ந்துவந்து கைப்பிடித்துக்கொண்டு போகுமிடமெல்லாம் கூட வருவான் என்ற நினைப்பு குதூகலத்துடன் அவளை எல்லா வேலைகளையும் செய்யும்படி தூண்டியது.
சாந்தி கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்திற்கு பிறகுதான் மாலை நேரக்கல்லூரியின் வகுப்புகள், தொடக்கப்பட்டன. தினமும் மாலை 2.30 மணியிலிருந்து 3.30 வரைக்கும் அவளுக்கான வகுப்பு இருந்த்து. மற்ற மொழிகளாக ஹிந்தியும் பிரெஞ்சும் இருந்தன. ஹிந்திக்குச் சித்ரலேகாவும், பிரெஞ்சுக்கு ஏஞ்சலினும் இருந்தார்கள். இருவரும் முழுநேரக் கல்லூரியில் வேலை பார்ப்பவர்கள். ஹிந்தி பிரெஞ்சு ஆள் எடுக்க நேரம் கிடக்காத்தால் அவர்களையே எடுத்துக் கொண்டார்கள்.
ரீட்டா, ஜூலி, சாந்தி மூன்று பேர் மட்டும்தான் புதிதாக சேர்ந்தவர்கள். பியூலா போன வருடமே முழுநேரக் கல்லூரியில் வேலை பார்த்திருக்கிறார்.மாலை நேரக் கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னால் கல்லூரியை சுற்று காண்பிப்பதற்காக எல்லாரையும் பியூலா அழைத்துக்கொண்டு போனார்.

கிழக்குப் பக்கம் முதல்வர் அலுவலகம் இருந்த அதே கட்டிட்த்தின் மேற்கே அலுவலக நிர்வாகியின் அறை இருந்த்து. நடுவில் இருந்த ஓய்வெடுக்கும் அறையில் மேல் நோக்கிச் சென்ற மரப்படிகளின் வழியே போனபோது பயன்படுத்தப்படாத பல வகுப்பறைகள் இருந்தன. அதைக்காட்டி “பி.பி.ஏ, பி.காமுக்கு பெர்மண்ண்டா கிளாஸ் ஒதுக்குற வரைக்கும் இங்கதான் எடுக்க சொல்லுவாங்க “ என்றார் பியூலா. ஜன்னலை ஒட்டிய பகுதிகளிலும் கருந்தரைகளிலும் புறா எச்சங்களுடன் சில பழுத்த இலைகளும் ஒதுங்கி கிடந்தன. பயன்படுத்தியும் சுத்தப்படுத்தியும் ஆண்டுகள் சிலவாவது ஆகியிருக்க வேண்டும். கட்டிட்த்தின் முன்பு நின்ற மிகப்பெரிய தூண்கள் முதல் மாடியையும் தாண்டி கூரையுடன் நின்றன. தூண்களுக்கும் கூரைக்கும் நடுவில் இருந்த பகுதிகளில்தான் புறாக்கள் நின்றிருந்தன. பக்கூம் பக்கூம் என்ற அவை எழுப்பிய சத்தங்கள் வயதை அதிகபடுத்திக் காட்டியது. மேல் மாடியின் கிழக்கு மூலையில் முதல்வர் அறைக்கு, மேல் பதிவாளர் அறை இருந்த்து. பார்த்துவிட்டு கால்களால் மரப்படிகளில் சத்தம் ஏற்படும்படி நடந்து வந்த போதுதான்.

“இந்த பில்டிங் இராபர்ட் கிளைவ் இருந்த வீடு “ என்றார் பியூலா. மறக்காமல் வீட்டிற்கு கடிதம் எழுதும்போது குட்டீஸ்களுக்கு இதை தெரியபடுத்த வேண்டுமென்று சாந்தி நினைத்துக்கொண்டாள்.

தொடரும்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com