கூழாங்கல்லின் தனிமை
எனக்கு வேண்டும் .
நதிகளின் பெரும் அமைதியின்மை
நிறைந்த தனிமை அது .
குழந்தைகளின்
கனவுகளில் தொலைந்து கொண்டேயிருக்கும்
தாங்கவொண்ணா மகிழ்வு நிறைந்தது
அத்தனிமை .
எண்ணிய எண்ணியாங்கு
செய்ய விடாதது .
ஒலிகளின் சவப்பெட்டியாக
கிடக்கும் மாமனநிலையில்
அமிழ்ந்து போக பெரிதும் விரும்புகிறேன் .
பயணத்தின் போது
முட்டிக் கொண்டு வரும் மூத்திரம் ,
ஒரு கணமேனும் நம்மை நாம் மட்டும் வசிக்கும்
உலகில் வீசி எறியுமே ;
அந்தத் தனிமை எல்லாப் போதும் வாயித்தால் ,
கல்லின் தனிமை அஃதே .
பாலிதீன் பைகளில்
கூழங்கல்லை அடைத்துக் கொண்டு போகும்
உங்களை வெறுக்கிறேன் .
மலைகளின் பாட்டனை கொல்லும்
வன்கொடுமை அது .
கடலை ,
கடற்கரைக்கு சென்று கற்றுக் கொள்ளும்
உங்களுக்கு ,
கடத்தி வரப்படும்
கூழாங்கல்லின் கேவல் புரியாது .
நீரின் மரித்த கண்களை,
கூழாங்கல்லாய் அலமாரியில் வைத்து
அழகு பார்க்கிறீர்கள்.
எல்லோராலும்
அகதியான கூழாங்கல்லே ....
உனது தனிமை தான் எத்தனை
துயர் நிறைந்தது .
