பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 8, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் - 13

பூர்ணிமம்
 
நெடுஞ்சாலை மரத்தடியில்
த்யானத்திலிருந்தான் புத்தன் .
அரச இலை அவன் மேல் 
உதிர்ந்தது .
விழிக்கவில்லை .
காற்று ,
புழுதி வாரி வீசியது  .
அவன் விழிக்கவில்லை .
மழைத்துளிகள் வீழ்ந்தன .
அப்படியே இருந்தான் .
குறுக்காக காகமொன்று
கடந்தது .
ஓடுடைய கூழாங்கல்லாய்
உறைந்து போயிருந்தது அவன் கண்கள் .
யசோதரா இறந்து விட்டதாக சொல்லப்பட்டது .
மனம் நோக்கி வேர்விட்டிருந்தது அவனது பிரக்ஞை .
 
தலைமை சீடன் ,
பெண்ணொருத்தியோடு ஓடி விட்டதாக
கூறப்பட்டது .
அசைவற்று இருந்தான் .
மண்ணை கிளறியபடி
மூச்சு விட்டு போய்க்கொண்டிருந்தன
கோடி கோடி எறும்புகள் .
சவமாய்  ஜீவித்திருந்தான் .
நீ ஞானம் அடைந்து விட்டாய் என
ஒரு பொய் சொல்லப்பட்டது .
மெல்ல கண் திறந்தான் .
எதிரில் சிறு குழந்தை
சிரித்துக் கொண்டிருந்தது .
வெகு நாட்களுக்குப் பிறகு
ஆழ்ந்து அழுதான் .
தன் துறவை ,
மண்பொம்மையாக மாற்றி
குழந்தைக்குத் தந்தான் .
சிறிது நேரம் விளையாடிவிட்டு
தூக்கிப் போட்டு விட்டது குழந்தை .
தூக்குச்சட்டி எடுத்துக் கொண்டு
வயல் வேலைக்கு  போய்க்கொண்டிருந்தான்
புத்தன் .
 
 
- கார்த்திக் நேத்தா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com