பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 3, 2010

சிவபாண்டியும் அவளை காதலித்தான் - மாரிசெல்வராஜ்

”ஏம்பா இவனெல்லாம் ஒரு ஆளு இவன்கிட்ட கேக்கிறதுக்குன்னு ஊர் கூடிருக்கு, காலக்கொடுமைடா” எப்போதும் போல கூட்டத்தின் மத்தியில் இருந்து அலுத்துக்கொண்டார் மூக்கையா.

“ஏம்பா அதுதான் மொத்த ஊரும் கூடிட்டுச்சுலா அவனை வந்து முன்னாடி நிக்க சொல்லி பேசி முடிங்க நேரம் வருதா போகுதா செவனேன்னு ஆலமரத்து அடியில வந்து கிடக்கிய” கொஞ்சம் சத்தமாய் கத்தினார் ராமையா.

“ஏன் எதுக்கு எம்புருசன் உங்க முன்னாடி வந்து நிக்கனும் அவனென்ன அடுத்தவன் பொண்டாட்டிய கைய புடிச்சு இழுத்தானா இல்ல எவ வீட்டு கறிசட்டியையும் களவாண்டானா உக்காந்தே பேசி முடிங்க” பட்டென்று சொன்னாள் விஜியலெட்சுமி சிவப்பாண்டியின் பொண்டாட்டி.

“இந்தா ஆம்ளங்க முன்னாடி பொம்பள நின்னு பேசிகிட்டு வெளங்கின மாதிரிதான் போம்மா அங்கிட்டு ஆம்பள முன்னாடி வந்து நின்னுகிட்டு வாயப் பாரு” சீறினார் பொத்தையன் தாத்தா.

“எதுக்கு போகனும் நான் எதுக்கு போகனும் பைத்தியகாரபய மரகதம் சிவபாண்டின்னு ஒரு கோட்டி புள்ளய பெத்து போட்டுட்டு போயிருக்கான் அவன ஏமாத்தி இடத்தை புடுங்கிகிடுவோம்னு பாக்கிறீங்களா” கொஞ்சமும் பயப்படாமல் பேசினாள் விஜியலெட்சுமி.

”இந்தா பாரும்மா வார்த்தையை அளந்து பேசு மொத்த ஊரும் கூடிருக்கு நீ என்னமோ கத்தி பேசுற….ஏலேய் சிவப்பாண்டி என்ன பொம்பளைய பேசவிட்டு கொலை இழுத்துவிடப்போறீயா பார்த்துகிட்டு நிக்கிற அவள ரெண்டு போடு போட்டு வீட்டுக்கு போக சொல்லு ஆமா” வேகமாய் பேசி முடித்தார் துரைச்சாமி.

“அடேய் அப்பா அவன என்னைக்கு நீங்க இந்த ஊர்ல பேச விட்டிருக்கிய இன்னைக்கு பேசறதுக்கு நான் தான் பேசுவேன் அது என் சொத்து எம் புருசன் சொத்து அந்த இடத்தை தரமுடியாது நீங்க வேணும்னா ரேசன் கடைய அந்த குளக்கரையில போய் கட்டிக்கோங்க இதுக்கு மேலையும் எதாவது பிரச்சனை பண்ணீங்கன்னா எனக்கு போலிஸ்க்கு போக தெரியும் அங்க போய் பாத்துக்கலாம் யாருக்கு இடம்னு” தூக்கிய முந்தானையோடு விஜி பேசி முடிக்க கூட்டம் சலசலத்தது சிலர் “கேட்டாப்பார் நாச்சா கேள்வி போய் சாவுங்கடா” என்று நக்கலடித்துகொண்டார்கள். மூக்கையாவும் துரைச்சாமியும் சிவபாண்டியை பார்த்து கோபமாய் கத்தினார்கள்.

சிவபாண்டி எதுவும் பேசாமல் விஜியலெட்சுமியையே பார்த்தபடி நின்றான். அவனுக்கு எதையும் அங்கு பேச வேண்டும் என்று தோன்றவில்லை. என்றைக்குத்தான் இந்த ஊர்காரர்களுக்கு முன்னாடி அவன் பேசியிருக்கிறான். ஆகையால் அவனுக்கு அந்த கூட்டத்தின் மீதும் ஊர்காரர்களின் பேச்சின் மீதும் கவனம் போகவில்லை. அவன் கவனம் முழுவதும் விஜியலெட்சுமி மீதுதான் இருந்தது. என்ன பேசினாள் எப்படி பேசினாள், அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் அழுகை வரும் போல இருந்தது அவனுக்கு. கடைசியாய் பொத்தையன் வீட்டு திருமண பந்தியில் முதல் ஆளாய் உட்காந்ததற்காய் இலையை புடிங்கி அவன் விரட்டபட்டபோது அழுதது. அது நடந்து நான்கு வருடம் ஆகிறது.

இப்போது எப்படி அழாமல் இருக்க முடியும் அவனால். எப்படி இருந்தான் இந்த ஊரில் எப்படி நடத்தினார்கள் இந்த ஊர்காரர்கள். எல்லா வீட்டிலும் கூலி இல்லாமல் அரிசி மூட்டை சுமப்பான். கோவில் சமையல் பாத்திரங்களை கழுவி போட சொல்லுவார்கள், எழுத்துகூட்டி படிக்க தெரியாத இவனைத்தான் வாசகசாலையை கூட்டி பெருக்க சொல்வார்கள். விசேச வீடுகளில் காய்கறி வாங்க மட்டும் கூட்டி செல்வார்கள். கிடங்கிற்குள் காதலிக்கும் காதலர்களுக்கும் காவல் இருக்க சொல்லுவார்கள். சொறி புடிச்ச நாய்கள் செத்து போனால் தூக்கி போவ சொல்லுவார்கள். கால்வாய்க்கு சென்று சாரயம் வாங்கி வர சொல்லுவார்கள் சில நேரம் வலுகட்டாயமாய் குடிக்க வைப்பார்கள் குடித்து மயங்கி யாரும் கேட்பாரற்று அதே இடத்தில் ரெண்டு நாள் கிடப்பான். எதுவும் பேசமாட்டான் என்றாவது எதாவது பேசினால் “டேய் அப்பன் மரகதம் கிறுக்கு மவன் சிவபாண்டிக்கும் புடிச்சிட்டு போல எதோ உளரிக்கிட்டு அலையிறான்” என்பார்கள். பின் எப்படி பேசுவான்.

இன்னும் விஜியலெட்சுமி பேசி முடித்தபாடில்லை சரிக்கு சமமாக பேசினாள். அவளுடன் பேச சிலர் பயந்தார்கள். சிலர் அவள் பேசும்போது தானாய் ஆடும் அங்கங்களை ரசித்தார்கள். சிலர் ஆத்திரமுற்றார்கள்.

அவளையே பார்த்துகொண்டே இருந்தான் சிவபாண்டி. அவள் காதுக்கு கீழே கம்மல் முடியும் இடத்தில் ஒரு மச்சம் இருப்பதை இன்று தான் அவன் பாக்கிறான். அது அவளுக்கு அழகாய் இருப்பதாய் தோன்றியது அவனுக்கு. திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது இப்போதுதான் அவள் முகத்தை இப்படி பாக்கிறான் சிவபாண்டி. அழகாய்தான் இருக்கிறாள் விஜியலெட்சுமி.

இதே ஆலமரத்தில் தான் அவன் திருமணம் இரண்டு வருடங்களுக்கு முன்னாடி ஒரு நள்ளிரவில் இதே கூட்டத்தின் முன்னாடி நடந்தது. அன்றும் அவன் இப்படி தான் எதுவும் பேசாமல் நின்றான்.

அன்று இரவு 9 மணிக்கு எப்போதும் போல எல்லாரையும் போல மூக்கையாத்தான் விஜியலெட்சுமி வீட்டுக்கு அவனை போக சொன்னார்.

“ஏலேய் சிவப்பாண்டி அந்த புளியமரத்து வீட்டுக்காரிக்கிட்ட நான் பத்து மணிக்கு வருவேன்னு போய் சொல்லிடு என்னா வேற எவனாவது வந்திட போறான்” என்று அனுப்பிவைத்தார். அவனும் போனான். அவனுக்கு பின்னாடியே மூக்கையாவும் வந்தார் என்பது அவனுக்கு தெரியாது. விஜியலெட்சுமி வீட்டுக்குள் அவன் நுழைந்ததும் மூக்கையா கதவை பின்னால் நின்று அடைக்க அவள் கத்தினாள். “ஐயோ ஐயோ டேய் விடுடா தேவிடியா பயல ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க” பல இரவு கத்தாதவள் இன்று கத்தியது அவனுக்கு அதிர்ச்சித்தான் ஊர் விழித்துகொண்டது. மூக்கையா தலைமையில் ஆலமரத்தில் கூடியது.

“சரி பா அவனும் எத்தின நாள் தான் அடக்கிக்கிட்டு அலைவான் அதுதான் புகுந்துட்டான் போல” என்றார்கள். “ஆமா அவளும் எத்தின நாள் தான் ஆம்பள துணை இல்லாம கஸ்டப்படுவா” என்றும் சொன்னார்கள். “ஆமாப்பா அவளும் ஒத்தை அவனும் ஒத்தை கட்டிவைச்சிருங்கபா என்றும் சொன்னார்கள். “என்னம்மா இவனையே கட்டிக்கிடுதீயா “என்று அவளிடம் கேட்டபோது சின்னதாய் சிரித்து சரி என்றாள். “என்னள லூசுப்பயள கட்டிக்கிறீயா அவள” என்று இவனிடம் கேட்டார்கள். பதில் சொல்லாமல் நின்றான். “அவன்கிட்ட என்ன பேச்சு லூசு பயகிட்ட கட்டுடா தாயோலி” என்றார்கள் கட்டினான். இதோ அடுத்த ஏழாவது மாதத்தில் ஊர் சிரிக்க பலரின் ஜாடையோடு அழுதபடி பிறந்து முந்தாணையை பிடித்தபடி நிற்கிறது சிவபாண்டியின் ஆண் வாரிசு.

“கடைசிலே என்னாமா சொல்ற”

“அந்த இடம் எங்க இடம் எங்க சின்ன மாமன் பூமி அதெல்லாம் தர முடியாது”

“ஊரு நல்லதுக்குத்தானே ஊரை பகைச்சா என்ன நடக்கும் தெரியுமா”

“என்ன நடக்கும் பாக்கலாம் என் புருசன் கக்கத்து மயிறை எந்த சூர புலி வந்து புடுங்கிறான்னு நானும் பாக்கேன் எல்லா பயலோட யோக்கியதையும் எனக்கு தெரியும் நீங்க வாங்க” என்று வேகமாய் சிவபாண்டியின் கையை இழுத்தபடி கூட்டத்தைவிட்டு அவள் வெளியேறிய போது சிவபாண்டி அவளை பார்த்தான். அவ்வளவு அழகாய் இருந்தாள் அவள். சிவபாண்டியும் அவளை காதலித்தான்.

- மாரிசெல்வராஜ்

ஓவியம் - சீனிவாசன்









தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com