பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 4, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் -9

தொல்காப்பியனின் பூனை

அந்தப் பூனை
அலைந்துகொண்டே இருக்கிறது
வெளியிலிருந்து உள் ;
உள்ளிருந்து உள் .
அதன் விழி அவிழல் ஞானம் ;
கண் அயர்தல் தியானம் .


அதற்கான உணவை 
புறநானூற்றிலிருந்து   தரலாம் .
கலிங்கத்துப்பரணி கடை திறந்து
பேய்களைப் புணர்ந்து தணியும் அது .
உங்களாலும் என்னாலும் தர முடியாத
நிலவூறிய மதுவை
அது கம்பனின் உண்டாட்டுப்படலத்திருந்து
பருகிக் கொள்ளும் .

சின்னக் குழந்தை
அழைப்பது போல
என்னைப் பார்த்து
அது ஒலி எழுப்புகிறது .
கடவுள் அழுவதை
அப்போது நிகழ்த்துகிறது
அதன் முக பாவம் .

அது பார்க்கிறது
உறைந்த புகைத்துளியாய்
நட்சத்திரங்களை .
நீர் நிலைகளில்
தனது மடியை .
சலனமற்று மிதக்கும்
இருளை .

அதன் ஒலி
எனது உறக்கத்தில் எதிரொலிக்கிறது  .
பிறகுபூனையின் ஒலி
எனது உறக்கமாக ஆகிப்போனது .
இப்படித்தான் எனது  
உறக்கத்திற்கு
தொல்காப்பியனின் பூனை என்று
பெயர் வந்தது .

- கார்த்திக் நேத்தா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com