பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 21, 2010

கோடிட்ட இடங்களை நிரப்புக -10- சுமதி

சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,  முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.  

இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.

பகுதி 10

சாந்தியின் அறைக்கு பக்கத்து அறையில் நிர்மலா அக்கா இருக்கிறாள். சேத்துப்பட்டு தபால்துறை அலுவலகத்தில் வேலை. சின்ன வயதிலேயே அம்மா அப்பா இறந்து போய் விட்டார்கள். அவர்க்கு இருந்த ஒரே அண்ணாவிற்கும் அவருக்கும் பதினைந்து வயது வித்தியாசம்.

நிர்மலாவிற்கு பி.காம் ஃபைனல் இயர் எக்ஸாம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகியிருந்தது. அண்ணி வந்த பிறகு ஐந்து வருடத்துக்கு மேல் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. இருபைத்தந்து வயதில் வேலை கிடைத்திருக்கிறது. எந்த போராட்டமின்றி சந்தோசமாக வெளியே வந்து பத்து வருடங்கள் கடந்து விட்டன. ஹாஸ்ட்டல் தான் புகுந்த வீடாக ஆகிவிட்டது நிர்மலாவிற்கு. அக்காவை வைத்துக்கொண்டு அந்த விடுதியில் எந்தப் பிரச்சனையும் வரவில்லை என்பதால் எவ்வுளவு நாட்கள் வேண்டுமானாலும் விடுதியில் தங்கி கொள்ளலாம் என்று வார்டன் சொல்லிவிட்டார்.

போனவருடம் தான் அண்ணனுக்கு ஏற்பட்ட சாலை விபத்தொன்றில் வலதுகை போய்விட்டதாம். வாலைக்கு போக முடியாத சூழலில் இரண்டு குழந்தைகளுடன் அண்ணியும் அண்ணனும் கஷ்ட்டப்படுவது தெரிந்திருக்கிறது.

குழந்தைகளை பார்க்க வேண்டி மாதத்துக்கு ஒருமுறை திருவல்லிக்கேணியில் இருந்த அந்த வீட்டிற்கு போய் வந்த நிர்மலாக்கா, அண்ணனுக்கு ஏற்பட்ட விபத்திற்கு பிறகு வாரம் ஒருமுறை போய் வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை அலுவலுகத்தில் இருந்தபடியே கிளம்பிப் போனாள், திங்கக்கிழமை காலையில் வீட்டிலிருந்து நேராக அலுவலகம் வந்துவிடுவார்.
நிர்மலாக்கா ஒரு தடவை கூட சாந்தியை தன்னுடைய பூர்வீக வீட்டிற்கு அழைத்ததுமில்லை. சாந்தி ஒரு முறையேனும் போக விருப்பம் கொண்டதுமில்லை. ஓய்வு நேரங்களில் பொழுது போவதற்கு பேசக்கூடிய சமயங்களில் கூட இறந்து போன தன் அம்மா, அப்பாவை பற்றியோ, கொடுமைக்கார அண்ணியைப் பற்றியோ பேசாத அடக்கமும், பெருந்தன்மையும் இருந்தது.

35 வயதாகியும் தனக்கு கல்யாணம் ஆகாததற்காய் துளியும் அவர் வருத்தப்பட்டதாக தெரியவில்லை. கல்யாணத்தை முடிப்பதற்குத் தன் அண்ணனோ உறவினர்களோ யாரும் முன் வரவில்லை. உறவினர்கள் எல்லாம் திருவண்ணாமலையில் இருந்தார்கள். அம்மா அப்பா காலத்திற்கு பிறகு அந்த ஊருக்கு போனதில்லையாம். எக்காரணம் கொண்டும் உறவினர்களுடனான உறவும் காற்றில் ஆடும். நூலாம்படையாய் ஆடி, எப்பொழுதும் சிதைந்தது என்பது தெரியாமலேயே சிதைந்திருக்கிறது.

கல்யாணம் ஆகாததற்கு மற்றொரு காரணம் உருவ அமைப்பாகவும் இருந்தது. நிறம் மாநிறம். நல்ல உயரம். 5 3/4 அடி. ஒல்லியான தேகம். முன்பக்கத்தில் மேற்பக்க பற்கள் நான்கு, உதட்டை தாண்டி நின்ற தெற்றுப்பற்கள். இந்த கடவுள் மனசையும் உருவத்தையும் ஒரே மதிரி படைப்பதே இல்லை போலும்.
மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் மூக்கும், கண் இருக்க வேண்டிய இடத்தில் கண்ணும் இருந்ததே தவிற வர்ணிக்கும் படி கூர்தீட்டப்பட்டது போன்றோ, செதுக்கப்பட்டது போன்றோ எதுவும் அமைந்திருக்கவில்லை. பிரம்மன் படைப்புத் தொழில் செய்திருந்த போது கை ஓய்ந்த நேரத்திலே நிர்மலாக்காவை படைத்திருக்க வேண்டும். அக்காவுக்கு, ஹாஸ்டலில் இருப்பவர்கள், ஆஃபீஸில் இருப்பவர்கள் தான் உறவினர்கள். எந்தக்குறையும் மனதிலின்றி படு தைரியமாக எல்லா விசேச வீடுகளுக்கும் போய் வந்தாள்.  

மறுநாள் இரண்டு பெரிய விடைத்தாள் கட்டுகளைக் கொடுத்து, வினாத்தாள் ஒன்றையும் கொடுத்து அதற்குரிய விடைகளையும் சொல்லிக்கொடுத்தார் புளோரா.

“இது எல்லாமே உங்க கிளாஸ்குரிய பர்ஸ்ட் டெஸ்ட் பேப்பர்தான். திருத்தாம இருக்கு. இது பர்ஸ்ட் இயர், இது செகண்ட் இயர். அடுத்த வாரத்துக்குள்ள திருத்தி மார்க் எண்ட்ரி பண்ணிட்டா நல்லது” என்றவரிடம், குறைந்த அளவு கூடுதல் அளவாக எவ்வளவு மதிப்பெண்கள் போடவேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அன்று விடுதிக்குத் திரும்பும்போது அவளுடைய தோல் பை கணத்திருந்தது.

அன்று வாரத்தின் முதல்நாள் மற்ற இருவருக்கும் முன்பாவே சாந்தி போய் சேர்ந்துவிட்டாள். அடுத்த புளோரா வந்தார். சாந்தி எழுந்து நின்று வணக்கம் சொல்லியபோது, முகத்தை நிமிர்த்தி நேருக்கு நேராகப் பார்க்காமல், காதில் வாங்கிக் கொள்ளாதவராய் கைப்பையை வைத்துவிட்டு வெளியே போய்விட்டார். “வீட்டில் ஏதாவது பிரச்சனை இருந்திருக்கும். அந்த நினைப்பில் நான் சொன்னது கேட்டிருக்காது” தன்னைத்தானே சமாதனப்படுத்திக் கொண்டாள்.

முதலாம் வருட மாணவிகளின் வகுப்பிற்குப் போவதற்குமுன் ஏதாவது சந்தேகம் கேட்பது போல் நாமே முதலில் பேசிப் பார்க்கலாம் என்று நினைத்து மறந்து போய் வேறு ஒன்றைக் கேட்டாள் “புளோரா மேம், பர்ஸ்ட் இயர் நேம் லிஸ்ட் உங்ககிட்ட இருந்தா கொஞ்சம் கொடுங்களேன்” என்றாள். முகத்தைக் கூட நிமிர்த்தாமல் “எனக்குத் தெரியாது” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னார். அதற்குப்பிறகு அன்று முழுவதும் தமிழ்த்துறையில் வைத்து அவரைப் பார்க்கவே முடியாமல் போய்விட்டது சாந்திக்கு.

மறுநாள் அவளுக்கு முன்பாக பாலின் வந்திருந்தார். சாந்தி உள்ளே வந்து பையை வைப்பதற்கு உள்ளாகவே “தாம்பரம் காலேஜ் வில்சன் சாரைத் தெரியுமா? அவரும் ஜெரால்டு சாரும் புளோரா வீட்டுக்குப் போயிருக்காங்க. இந்துப் பொண்ணுக்கு, அதான் உங்களுக்கு வேலை கொடுக்க கூடாதுன்னு பிரின்சிபால்கிட்ட சொல்ல சொல்லியிருக்காங்க. உங்க சீனியர் பொண்ணு ஒருத்தி ஜெமிலான்னு பேராமே. வில்சன்சார்கிட்ட எம்ஃபில் தீஸிஸ் பண்ணியிருக்காங்களாம். உங்களை அனுப்பிட்டு அவளுக்கு  வேலை போட்டு கொடுக்க சொல்லியிருக்காங்க. புளோரா வீட்டுக்காரார் ரொம்ப நல்லவர். குடிகாரன் பேச்சை நம்பி நீ எதுவும் பிரின்சிபால்கிட்ட போய் போட்டு வைக்காதேன்னு சொல்லியிருக்காரு. புளோரா சுத்த மோசம். பிரின்சிபால்கிட்டபோய் நேத்து போட்டு கொடுத்துட்டாங்க. அதுக்கு அவங்க சொல்லியிருக்காங்களாம். ஒரு வருசம் வச்சிருந்து பார்ப்போம். ஒழுங்கா இருந்தா இருக்கட்டும். இல்லாட்டி அனுப்பி வச்சிடலாம்னு.”

எரிச்சலையும் கோபத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அசடு வழிய கேட்டாள் “உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரிய வந்தது மேம்?” என்றாள் சாந்தி, “புளோரா நேத்து என்கிட்ட சொன்னாங்க. நான் உங்ககிட்ட சொன்னது அவங்களுக்குத் தெரிய வேணாம். நீங்க உஷாரா இருந்துக்கோங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன்” என்றார்.
                               
சாந்தி எம்ஃபில் வகுப்பில் சேர்ந்த புதிதில், ஏதோ விசயமாக நாச்சிமுத்து சார் துறைக்கு அழைத்திருந்தார். செல்வியின் அண்ணன் குரு வந்து வகுப்பிலிருந்து அவளை அழைத்துக் கொண்டு போனான். தூரத்தில் தமிழ்த்துறையைச் சார்ந்த பேராசியர் வில்சன் வருவது தெரிந்தது. குரு சொல்லிக்கொண்டே வந்தான். “எதிரே வர்ற ஆளுக்கும் நமக்கும் ஆகாது. நான் விஸ் பண்ணுனாலும் பதிலுக்கு பண்ணமாட்டாரு பாருங்க”  அருகாமையில் (எதிரே) வந்துவிட்ட வில்சன் சாரை இரண்டு பேருமே விஸ் பண்ணினார்கள். சாந்திக்கு மட்டும் தலையாட்டிவிட்டு குருவை சட்டையே செய்யாமல் கடந்து போனார்.

“ஏன் குரு அவர்கிட்ட என்ன பிரச்சனை?”

“வந்த புதுசுல (நாச்சிமுத்து) சாரைப் பார்க்க டிபார்ட்மெண்டுக்கு முன்னாடி காத்துகிட்டு இருந்தப்போ, போஸ்ட் ஆபிஸுக்குப் போகச் சொன்னாரு வில்சன். HOD யை பார்க்க வந்திருக்கேன்னு சொன்னேன். பொலிடிகல் சயின்ஸ் பண்ணுனா பெரிய ஆளான்னு கேட்கிறப்பவே, நாச்சிமுத்து சார் வந்துட்டாரு. அவர்வரவும் ‘சார் உங்களைப் பார்க்க வந்திருக்காரு’ன்னு என்னைக் காட்டி சொல்லிவிட்டு, நீ போப்பா வேற யாரையாவது அனுப்பி வச்சிடுறேன்னு சொன்னவர், அதுக்கப்புறம் என்னை எத்தனை பேருக்கு நடுவுல வச்சி பார்த்தாலும் அடையாளம் கண்டுபிடிக்க ஆரம்பிச்சிட்டாரு பாருங்க. வேறொண்ணும் இல்ல அவர் சொன்ன நேரத்துல போஸ்ட் ஆபிஸ்க்குப் போகாததுதான் காரணம்”

கல்லூரி முடிந்ததும் சாந்தியையும் செல்வியையும் ரயிலில் ஏற்றிவிடுவதற்காக நிலையத்திற்கு வருவான் குரு. அப்பொழுதெல்லாம் கல்லூரியைப்பற்றியும் தமிழ்த்துறையைப்பற்றியும் அதிகமான விசயங்களைச் சொன்னான். குரு பொலிடிகல் சயின்ஸ் படிப்பதோ என்னவோ, உள்ளே நடக்கும் அரசியலை எல்லாம் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான்.

ஒருநாள் முழுவதும் வில்சன் சாரைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். அந்த அளவுக்கு அவரைப்பற்றி சொல்ல, நிறைய்ய விசயங்கள் இருந்ததென்னவோ உண்மையாகத்தான் இருக்க வேண்டுமென போகப்போக சாந்திக்குத் தெரிய வந்தது.

“எங்க போனாலும் பாலிடிக்ஸ் இருக்கத்தான் செய்யும். என்ன? மத்த டிபார்ட்மெண்டல இருக்கிறதவிட தமிழ் டிபார்ட்மெண்ட்ல கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். இங்க நாகர்கோவில் கிறிஸ்டியன்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்துக்குவாங்க. மெட்ராஸ் கிறிஸ்டினையும் மத்த ஊர்ல இருந்து வர்ற கிறிஸ்டினையும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டங்க. ஒதுக்கப்பட்ட கிறித்தவர்களும் இந்துக்களும் சேர்ந்து ஒரே கட்சியா இருப்பாங்க. தமிழ் டிபார்ட்மெண்டல மொத்தம் பதினோர் பேருக்கா, அதுல நாலுபேர் நாகர்கோவில் கிறிஸ்டியன். இருக்கிற ஒரே ஒரு லேடி. எதுலையும் மூக்கை நுழைக்க மாட்டாங்க மத்த ஆறு பேர்ல நாலுபேர் இந்து ரெண்டுபேர் மெட்ராஸ் கிறிஸ்டியன். வில்சனும் நாகர்கோயில்தான். என்.சி.சி ன்னு பாதிநாள் கிளாஸ்க்கு வரமாட்டாரு. அப்படியே கிளாஸ்க்கு வந்தாலும் நாவலின் கருவை முட்டையின் கருவோடு ஒப்பிட்டு நடத்துற சராசரிதான். செல்விகிட்ட கேட்டுப்பாருங்க தெரியும். அவரோட ஆய்வு மாணவர்கள்ல யாராவது இளிச்சவாயனா இருந்தா பின்பக்கமா போய் அவர் வீட்டு டாய்லெட்ட கழுவச் சொல்வாரு. டட்லி ஆஸ்டலுக்கு மேலதான் அவருக்கு வீடு கொடுத்துருக்காங்க இல்லாட்டி காசு கொடுக்காம காய்கறி வாங்கிவரச் சொல்வாரு. பெண்களைப் பார்த்தா விடுவாரு ஜொள்ளு. அதுல காலேஜே நனைஞ்சிடும்னா பாருங்களேன். பெர்ஸ்சனல் லைப்லயும் இந்த ஆள் கிறுக்கந்தான் சிகப்புத்தோல் மேல் எப்பவும் ஆசை. இவருக்கு கிடைத்த ஒய்ப் மாநிறம் ஆனாலும், கதவை வெளிப்பக்கமா பூட்டி சாவியைப் பையில 
போட்டுத்தான் கிளாஸுக்கு வருவாரு.

தமிழ்ல செமினாரு நடந்தா மத்த டிபார்ட்மெண்ட் பசங்க எல்லாம் இண்ட்ரஸ்ட்டா கலந்துக்குவோம். அவருக்குப் பிடிக்காது. அதுவும் கேள்வி கேட்கிற பசங்களைப் பார்த்தா சுத்தமாக பிடிக்காது. என்னையும், எப்பவும் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிற என் பிரண்ட் வெங்கடேசனையும் பார்த்தா அவருக்கு என்னதான் தோணுமோ? எங்களையே பார்த்துகிட்டிருப்பாரு. 

நான் கேள்விபட்ட வரைக்கும் பொதுவா நாச்சிமுத்துசார் பிரைட்டான ஸ்டூடண்ட்ஸையும் பொண்ணுகளையும் கைடு பண்றதுக்கு வில்சனை போட மாட்டாரு. யாராவது வில்சன்கிட்ட விருப்பப்பட்டு போய் சேர்ந்தாதான் உண்டு. உங்களுக்கு அவரை கைடா போட மாட்டாங்க. அப்படி ஒரு வேளை போட்டாங்கன்னா வேண்டாம்னு சொல்லிடுங்க.”

சாந்திக்கு வகுப்பு எடுக்க வில்சன் வரவில்லை. ஆனால் அவள் வகுப்பில் இருந்த மாணவனுக்கு நெறியாளராக (கைடு) இருந்தார். குருவோடு சாந்தி வருவதையும் போவதையும் அடிக்கடி பார்த்திருக்கிறார். குருவோடு சாந்தியைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் சாந்தியிடம் பேச மாட்டார்.
ஒருநாள் இடம் மாற்றுச் சான்றிதழ் வாங்கும் விசயமாக துறைக்குப் போயிருந்தாள் சாந்தி. நாச்சிமுத்து, துறைத்தலைவர்களுக்கான கூட்டத்தில் இருந்தார். துறையில் பேராசிரியர் வில்சன் மட்டும்தான் இருந்தார். மற்றவர்கள் வகுப்பு எடுக்கப் போயிருந்தார்கள். சாந்தி கேட்டுவிட்டுத் திரும்பும்போது வில்சன்சார்.

“ஏய் இங்க வா?” என்றார்.

‘அதென்ன மரியாதையில்லாமல் தன்னைக் கூப்பிடுகிறார்’ என்று கோபம் வந்தது வெளிக்காட்டாமல் “கூப்பிட்டிங்களா?” என்று வந்தாள்.

“உனக்கு எந்த ஊரு?”

“சிவகாசிப் பக்கம்”

“மம்சாபுரம் தெரியுமா?”

“பக்கத்து ஊர்தான் சார்”

”மம்சாபுரத்துல தெரிஞ்சவங்க இருக்காங்க”

“அதனால இப்ப என்ன?” என்று நினைத்துக் கொண்டாள்

“ஊருக்குப் போறப்போ என்கிட்ட சொல்லு ஒரு விசயம் சொல்லி அனுப்புறேன்”

“சரிங்க சார்” திரும்ப இருந்தவளை நிறுத்தி

“அப்புறம் உங்க ஊருக்குப் பக்கத்துலதானே ஸ்ரீவில்லிபுத்தூர். பால்கோவாவுக்கு ரொம்ப பேமசாச்சே”

“ஆமா சார்”

டிபார்ட்மெண்டிற்கு வெளியே இருந்தபடி எல்லாவற்றிற்கும் பதில் சொன்னாள். குரு வில்சனை வில்லனாகவே உருவகித்துக் காட்டியிருந்தான். அந்த பயம் இருந்தது. வில்சன் சார் சம்பந்தமில்லாமல் மம்சாபுரம், பால்கோவா என்று பேசிய பிறகு குரு சொன்னதெல்லாம் உண்மையோ என்று நினைக்கத் தோன்றியது.

மாலையில் விடுதிக்கு வந்தவுடன் சாந்தி எல்லா விசயத்தையும் சொல்லி நிர்மலா அக்காவிடம் அழுதபோது, நிதானமாகக் கேட்டுவிட்டு சொன்னார்.
“உங்க பிரின்சிபால் அப்படியெல்லாம் யார் சொன்னாலும் கேட்குற ஆளா தெரியல. ஒரு வருசம் வச்சிப் பார்க்கலாம்னு சொல்லியிருக்காங்கதானே! ஒரு வருசத்துக்குள்ள என்ன வேணும்னாலும் நடக்கலாம் சாந்தி. நீயே கூட அவங்களுக்குப் பிடிச்ச பொண்ணா ஆயிடலாம் யாருக்குத் தெரியும்! அமைதியா இரு. யார் எது சொன்னாலும் சொல்லிட்டுப் போகட்டும் உன்னைப் பத்தியே எத்தனை நாளைக்குத்தான் பேசிட்டு இருப்பாங்க. அவங்களுக்கும் வேற வேலை இருக்காதா?”

தலை குனிந்திருந்தவளிடம் “ஏய்... இங்க பாரு. இதுக்கெல்லாம் போய் வேலையை ரிசைன் பண்ண போறேன்னு சொல்லாதே, சிட்டியில இருக்கிற நல்ல காலேஜ்ல இதுவும் ஒண்ணு. இவ்வளவு பெரிய காலேஜ்ல கிடைச்சிருக்கிறது பெரிய விசயம். எத்தனையோ பேரு பி எச்டி முடிச்சிட்டு சும்மா இருக்காங்க. எம்ஃபில் முடிச்ச உடனேயே உனக்குக் கிடைச்சிருக்கு கிடைச்சதை சரியாப் பயன்படுத்திக்கோ.”

சாப்பிட்டுவிட்டுத் திரும்பும்போது நீண்ட நேரம் யோசித்துப் பார்த்துட்டு தீர்க்கமாக சொன்னார். “அப்பறம் அந்த பாலினைப்பத்தி எனக்கு டவுட்டாவே இருக்கு. புளோராவுக்கும் உனக்கும் உறவு ஏற்படாம உன்னைத்தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறாங்கன்னு தோணுது. ஏன் புளோராகிட்ட நீ நெருங்கி பழகக் கூடாது. நீ இந்துன்னு தானே தெரியும். உன்னைப் பத்தி முழுசா ஒன்னும் தெரியாதே பேசிப்பாரு”

ரணத்திற்குத் தடவிய மருந்தின் குளிர்ச்சியிருந்தது ஒரு போர்க் களத்திற்குத் தயாராகும் போர்வீரனின் மனநிலையில் இருந்தாள் சாந்தி. 

- சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com