”டே அந்த ஈரலுக்கு தன்னி ஏத்திட்டு சீக்கிரம் வாடா, ஞாயித்துக்கிழமை கடை”
என முருகன் அண்ணன் அதட்டவும் அவசர அவசரமாக தண்ணி ஏத்திட்டு நெல்பேட்டை ஆட்டுத்தொட்டிய விட்டு வெளிய வந்தேன். மணி அதிகாலை நாலு நாலரை இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை கலைகட்டுவதற்கு எங்களை போன்ற இறைச்சிக்கடைக்காரர்களும் ஒரு காரணமாக இருந்தோம்.
அவருடைய டி வி எஸ் 50 இல் பெட்ரோல் டேங்க் இடுக்கில் ஒரு வாளியில் நாலு ஆடும் என் மடியில் 3 ஆட்டையும் உரித்து வைத்துக்கொண்டு கிளம்பினோம். 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டு கிளம்பும் போது
“டீ குடிக்கிறயாடானு” கேட்டார்.
”நேரம் இருந்தா குடிச்சுட்டு போகலாம் அண்ணே” என சொல்லவும் கீழ் பாலத்துல ஒரு கடையில அவர் சொக்கலால் பீடியும் டீயும் வாங்கி கொண்டு எனக்கு அப்பமும் சேர்த்து வாங்கி குடுத்தார். அந்த இருளும் பகலும் அல்லாதபொழுதில் வந்து கொண்டி இருந்த போது நீ கடைய திறந்து வச்சுட்டு இரு நான் கண்மாயிக்கு போயிட்டு வந்துரேன்னு சொல்லி என்னகடையில் இறக்கி விட்டு சென்றார்.
என முருகன் அண்ணன் அதட்டவும் அவசர அவசரமாக தண்ணி ஏத்திட்டு நெல்பேட்டை ஆட்டுத்தொட்டிய விட்டு வெளிய வந்தேன். மணி அதிகாலை நாலு நாலரை இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை கலைகட்டுவதற்கு எங்களை போன்ற இறைச்சிக்கடைக்காரர்களும் ஒரு காரணமாக இருந்தோம்.
அவருடைய டி வி எஸ் 50 இல் பெட்ரோல் டேங்க் இடுக்கில் ஒரு வாளியில் நாலு ஆடும் என் மடியில் 3 ஆட்டையும் உரித்து வைத்துக்கொண்டு கிளம்பினோம். 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டு கிளம்பும் போது
“டீ குடிக்கிறயாடானு” கேட்டார்.
”நேரம் இருந்தா குடிச்சுட்டு போகலாம் அண்ணே” என சொல்லவும் கீழ் பாலத்துல ஒரு கடையில அவர் சொக்கலால் பீடியும் டீயும் வாங்கி கொண்டு எனக்கு அப்பமும் சேர்த்து வாங்கி குடுத்தார். அந்த இருளும் பகலும் அல்லாதபொழுதில் வந்து கொண்டி இருந்த போது நீ கடைய திறந்து வச்சுட்டு இரு நான் கண்மாயிக்கு போயிட்டு வந்துரேன்னு சொல்லி என்னகடையில் இறக்கி விட்டு சென்றார்.
ஆறாவது படித்துக்கொண்டிருந்த சமயங்களில் என் வயது பையன்கள் எல்லோரும் சனி ஞாயிறு விடுமுறைகளில் வேலைக்கு போவது வழக்கம். என் தெருவில் 8 வது படித்து கொண்டிருந்த குமார் தையல் கடைக்கு காஜா வைக்கும் வேலைக்கு போய்க்கொண்டிருந்தான். எனக்கோ பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்குற கறிக்கடைய பார்க்கும்போதெல்லாம் ஒரு இனம் புரியாத ஆசை. எலும்பும் கறியுமா இருக்குற ஆட்டை தனித்தனியாய் பிரிக்கும் கலை என்னை ஈர்த்தது. பள்ளியில் நடந்த அறிவியியல் கண்காட்சிக்கு ஆட்டு நுரை ஈரலை வாங்கி கொண்டு போய் விளக்கி காட்டியதால் இரண்டாம் பரிசு கிடைத்தது. அன்றிலிருந்து எனக்கு கறிக்கடை மீது பிடிப்பு வந்த்தது.
இதைவிட இன்னொரு காரணம் சொல்லனும்னா மத்த வேலைக்கு போனா காலையில இருந்து நைட்டு வரைக்கும் வேலை இருக்கும். ஆனால் கறிக்கடையில காலையில போயிட்டு மதியானத்தோட கடை முடிஞ்சுரும்.
வேலை இருக்காது. ஆகையால் படிப்புக்கும் பிரச்சனை இருக்காது என இங்கே வேலை கேட்டு போனேன். அப்போது தான் இந்த முருகன் அண்ணன் கல்லுல கத்தி தீட்டிக்கிட்டு இருந்தார்.
”அண்ணே வேலைக்கு சேர்த்துக்கோங்க? என கேட்ட போது
”டே படிக்கிற பையன் பேனா புடிக்கிற வயசுல கத்தி புடிச்சா ஒழுங்கா எழுத்து வராதுடா” என்று கூறினார்.
தீபாவளி,பொங்கல்னு எந்த விழாக்களுக்கும் லீவு கிடையாது. எப்பையாவது யாராது பெரிய தலைவர்கள் செத்துப்போயிட்டா, தேர்தல் பிரச்னை சமயத்துல தான் லீவு கிடைக்கும். அதுவும் இல்லைனா ஆளுங்கட்சி காரன் பந்த் நடத்துனா மட்டும் தான் கடைக்கு லீவு” என எனக்கு புரியாத விஷயங்களை சொல்லி அனுப்பி விட்டார். அது சரி, சாப்பிடுற பொருளுக்கு எப்படி லீவு குடுக்க முடியும். 365 நாளும் சாப்பிட்டு தானே ஆகனும்.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து சென்றேன். அண்ணே கறி வெட்டல, வேற வேலை எல்லாம் பன்றேனு சொல்லவும், சரி அப்படின்னா நான் முதலாளிக்கிட்ட கேக்குறேன். ரெண்டு நாள்ள வரச்சொன்னார்.
எனக்கான வேலை காலையில கடையை கூட்டி தண்ணி எடுத்து வைக்கனும்... சம்பளம் பத்து ரூபாய் என வேலைக்கு சேர்க்கப்பட்டு குடல் அலசுவது தோலுக்கு உப்பு வைப்பது என படிப்படியாக முன்னேறி ரெண்டு வருஷத்துல தோல் உரிப்பதை தவிர எல்லாத்தையும் கற்றுக்கொடுத்தார். கறிக்கடையில் அவ்வளவு சீக்கிறம் யாரையும் ஆடு உரிக்க விட மாட்டார்கள்...ஏனெனில் கத்தி யில் மாத்தி எங்கையாவது தோலில் ஓட்டை விழுந்தால் தோல் விலைக்கு போகாது என்பதால் ....
கறிக்கடையில் முருகன் அண்ணேன் தான் கிட்டத்தட்ட முதலாளி போல. அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. ரொம்ப நேர்மையானவரும் கூட. தினசரி 3 ஆடும், சனி ஞாயிறுகளில் 20 ஆடுகள் வரை ஒத்தையாக உரித்து சமாளிக்கும் திறமையுண்டு . அதையும் மீறி கல்யாணம் காது குத்துகளுக்கு மொத்தக்கறி குடுக்கும் பட்சத்தில் அவர் நண்பர்கள் இருவரை நெல்பேட்டையில் இருந்து வரச்சொல்லுவார். எப்போதும் ஏசியன் பெயிண்ட் பனியனை எத்தனையோ ஆட்டு ரத்தக்கரையோடும், காதில் ஒரு பீடியையும் சொருகியவாறு தான் கடையில் இருப்பார். சில நேரங்களில் அவர் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கி வரச் சொல்லுவார். அவர் சைக்கிளில் செல்வேன்.
அவர் வீட்டுல அம்மாவும் அவர் தங்கச்சி கவிதாவும் தான். கவிதா அக்கா மீனாட்சி ஸ்கூல் ல படிச்சுக்கிட்டு இருந்துச்சு அப்படியே கவிதா அக்காவிடம் சொல்லி எனக்காக அவள் பள்ளிகூடத்தில் இருந்து பழய புத்தகங்களை வாங்கி தருமாரு கேட்டு வாங்கி கொள்வேன். கவிதா அக்காவுக்கு மாப்பிள்ளை தேடிப்போறேன்ண்டு வெளிஊர் போயிருவார். அப்பெல்லாம் எனக்கு லீவு கொடுத்துருவாரு. நான் கவிதா அக்காவோட போய் ஏதாவது வேலை செஞ்சுட்டு இருப்பேன். எனக்கு இப்படி ஒரு அக்கா இல்லையேன்னு நிறைய தடவை வருத்தப்பட்டிருக்கிறேன். சாப்பாடு வாங்க போகும் போது எனக்கு பெரிய சைக்கிள் ஓட்டத்தெரியாது. அண்ணே என சொன்னால் என்னைக்கு தான் கத்துக்கிறது போயிட்டு வா என நம்பிக்கை ஊட்டுவார்.
நான் பெரிய சைக்கிளை குரங்கு பெடல் போட்டு கத்துக்கொண்டதுக்கு காரணம் கவிதா அக்கா. ஷா தியேட்டருக்கு பின்னால் இருக்கும் அவர் வீட்டுக்கு கீழ் பாலம் வழியாகத்தான் போய் வருவேன். செல்லூரிலிருந்து போய் வர கையிலே 1 ரூபாயும் குடுத்துவிடுவார். அக்காவும் எனக்கு தினமும் கமர்கட்டு, தேன் மிட்டாய் ஏதாவது கொடுக்கும். சில சமயத்துல எங்கப்பா அம்மாவ கூட நான் மறந்திருக்கேன்.
தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணாம முருகன் அண்ணன் கல்யாணம் பண்ணமுடியாதுன்றதனால, அவருக்கு பொண்ணு பார்க்காம இருந்தாங்க. அதன் காரணமாகவோ என்னவோ அவருக்கு சின்னதாக ஒரு ஏக்கம் இருந்துச்சு.அதனை பெரும்பாலும் அவர் நண்பர்கள் பலசரக்கு கடை ஷாஜகான் பாய் கிட்டேயும் ஓட்டல் மாஸ்டர் ரத்தினத்துக்கிடேயும் பேசும்போதும் வெளிப்படும்...
டே பாய் “உன் கடைக்கு எல்லாம் பிள்ளைங்க அதிகமா வருவாளுகள்ள.. நீ வேற நல்லா கலரா இருக்க, கருவேப்பிலை ஓசியா குடுத்தே மடக்கிருவயே. பயங்கரமான அளுதாண்டா நீயு., நமக்குத்தான் எதுவும் வாய்க்க மாட்டேங்குது.
டி.வி.எஸ் பிள்ளைகள் தான் பார்க்க மாட்டேதுன்னா காக்கைபாடினியார்ல படிக்கிறவளுக கூட பார்க்க மாற்றாளுக. இவ்வளவு ஏன் நாளைக்கு சாகப்போற கிழவி கூட கடைய தாண்டும் போது மூக்கைபொத்திக்கிட்டு போகுது” என சொல்ல
“ டே இப்படி ரத்தக்கவுச்சியோட இருந்தா எவ பார்ப்பா” என பாய் சொல்ல...
”டே என்னடா ரத்தம், நாங்களும் டாக்டருக்கு சமமானவங்க தெரியும்ல மூளைல இருந்து குறுக்கெலும்பு வரைக்கும் பிரிச்சுகிட்டு இருக்கோம்டி. என வாக்குவாதம் தொடர்ந்தது.
அப்போது பலசரக்கு கடைக்காரர்.“ டே பெரியாஸ்பத்திரியில பின்னாடி பிணவறையில போஸ்ட்மார்டம் பன்றவனுங்களும் தான் நாலா மூணா அறுக்குறாங்க அதுக்காக அவங்க டாக்டராயிருவாங்கலா..?
கனவு காணாம போயி கொஞ்சம் புத்தியையும் தீட்டு” என சொல்லி முடித்தது தான் தாமதம் முருகன் அண்ணன் படாரென அரைக்கிலோ படிக்கல்லை எடுது வீச கொஞ்சம் இடைவெளியில் தப்பினார்..
”கத்தி ரத்தம்னு திரியுற பய உனக்கும் மிருக புத்தி தாண்டா வரும் உனக்கெல்லாம் வாக்கப்படுறவ யானை மலை உச்சில இருந்து குதிச்சுரலாம்” என விருட்டென கிளம்பிவிட்டர்...
அந்த சூழலில் கண்மாயிக்கு போயிட்டு வந்ததும், அன்னைக்கு காலையில ஒரு பொண்ணு கடைக்கு வந்துச்சு.
“அரைக்கிலோ கறி போடுங்க பொடியா வெட்டி குடுங்க..”
வெட்டி முடித்ததும்.. 60ரூபாய் குடுன்னு சொல்ல அந்த பொண்ணு முழிக்க ஆரம்பித்தாள். கையில 30ரூபாய் தான் இருக்கு வந்து குடுக்குறேன்னு சொல்லவும் அண்ணன் மனம் இறங்கி சம்மதிக்க வீட்டுக்கு போயிட்டு கொஞ்ச நேரத்துலயே அந்த பொண்ணு திரும்ப வந்தது.
“ஆட்டுக்கறி இல்ல கோழிக்கறி வாங்கி வரசொன்னாங்க” என சொல்ல அவ்வளவு கூட்டத்தில் கடுப்பாகி போனார். இனிமேலாவது ஒழுங்கா கேட்டுட்டு வாம்மா என சொல்லி , கொஞ்சம் கடுப்போடிருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அனுப்பி வைத்தார். அன்னைக்கு மதியானம் கட்டையை சுத்தம் செய்து கொண்டிருந்தவர் என்னிடம்..
”காலையில கறிய திருப்பி குடுத்துச்சுல்ல ஒரு புள்ள யாருடா அது புதுசா இருக்கு”னு என்னிடம் கேட்டார்.
”தெரியல அண்ணே, ..திருவிழாவுக்கு யாரு வீட்டுக்காச்சும் வந்துருக்கும்” என சொல்ல,
” நல்லா உரிச்ச பிராய்லர் கோழி மாதிரி இருக்காள்ள என்றார்.
இன்னொரு மதிய நேரத்தில் அதே பெண் திரும்பவும் கடைக்கு வந்தாள். இந்த முறை அண்ணன் முதல்வன் அர்ஜுனைவிட அதிகமாகவே கேள்விகேட்டார்..
”என்ன மா வேணும் இந்த தடவ கறி வாங்கிட்டு போயிட்டு அடுப்புக்கறிக்கு பதிலாதான் மாத்தி வாங்கிட்டேன்னு சொல்லமாட்டயே..? ஏரியாவுக்கு புதுசா?. உன்ன பார்த்ததே இல்லயே” என கேட்க
”ஆமா இங்க தான் புதுசா குடி வந்திருருக்கோம் ,இதெல்லாம் தெரிஞ்சு என்ன பன்ன போறிங்க ?”
”என்னமா வீட்டுல பொண்ணா கேட்க போறேன்...இவ்வளவு வாய் பேசுற என்ன கறி கேட்டுவரமா, விவரம் இல்லாம இருக்க” என அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு அந்த பெண் கடையை தாண்டிபோகும்போதெல்லாம் இவரைப்பார்த்து சிரிப்பதும் இவர் கடையை முடித்ததும் நேரே டெய்லர் கடை தெருப்பக்கம் போவதும் வாடிக்கையானது.
ஒருநாள் அந்த பெண் கறி வாங்க வந்த போது, இவரு பயங்கர நக்கலாக
”நெஞ்சுல போடவா? தொடையில போட வா? என கேட்க
“வாய இழுத்து வச்சு தைச்சுருவேன்” என அந்த பொண்ணு மிரட்ட
அண்ணன் கொஞ்சம் பயந்து, இல்ல எந்த கறி வேணும் நெஞ்சு கறியா இல்ல தொடை கறியா?என சமாளித்தார்..
”ஏன் இப்படி ஆடிக்கு ஒரு தடவ அம்மாவாசைக்கு ஒரு தடவ கடைக்கு வர்ற எங்க வீட்டுக்கு வந்துரு தினமும் கறிச்சோறு தான் என காதல் வலை வீச ஆரம்பித்தார்”. எப்படியோ இருவருக்குள்ளும் காதல் ஆரம்பித்தது.
அதிலிருந்து காந்தி பிறந்த நாள். திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம் என அவர்கள் பிறக்கும்போது முருகன் அண்னன் அதிகமாகவே சந்தோசப் படுவார். அந்த நாட்களில் எங்கும் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்பதால்
கடை விடுமுறை தினங்களில் தன் காதலை வளர்த்துக்கொண்டிருந்தார்...
ஒரு நாள் நானாகவே ஆட்டை அறுத்து தோலை உரிக்க பழகிக்கொண்டிருந்தேன்..அப்போது தான் அந்த பெண் கடைக்கு வந்து
”எங்கடா முருகன் ?னு கேட்க “அண்ணன் டீக்கடைக்கு போயிருக்குனு” சொன்னேன்.
”போயி கூட்டிட்டு வா நான் வந்துருக்கேன்னு சொல்லு என சொல்ல வேகமா கூட்டி வந்தேன்”,. இருவரும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்,கடை பின்வாசலில்.
”இந்தாரு சித்ரா, உன் அண்ணனோ அப்பனோ ஏதாவது உடைசல குடுக்கனும்னு நினைச்சாங்க, ஆட்ட அறுக்குற மாதிரி அறுத்து ஊருக்கு சோறாக்கி போட்டுருவேன்னு சொல்லு” என்ற போது தான் அவள் பெயர் சித்ரா என்று தெரிந்தது..
தீபாவளிக்கு நாள் முழுதும் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். தீபாவளி அன்று விடிய விடிய வேலை பார்த்த அசதியில் அன்று மதியம் கடையிலேயே படுத்துக்கொண்டேன். ராசு அண்ணன் (முருகா அண்ணன் பக்கத்து வீட்டுக்காரர்) வேகமாக சைக்கிளில் வந்து
”டே முருகா உங்க அம்மா உன்ன விரசா வரச்சொல்லுச்சு ரொம்ப அவசரம்னு” சொல்ல கடையை பூட்டாமல் சாத்தி வைத்த படி அவர் வண்டி எடுக்க நான் அவரை இறக்கி விட்டு வருவதற்காக அவர் கூட சென்றிருந்தேன்..
அவர் வீட்டை அடைந்தது தான் தாமதம் அவரது அம்மா ஓ வென ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டது.
”முருகா ஓவியமா வளர்த்தயே உன் தொங்கச்சி ..நேத்து புது மண்டபத்துல எவன் கூடயோ போயி லாக்கடி கிளிப்னு வாங்கிட்டு இருந்துக்கா..நம்ம பக்கத்து வீட்டு மகமாயி பார்த்துட்டு வந்து என்கிட்ட சொன்னப்போ
ஈரக்கொலயே ஆடிப்போச்சு டா,,, அவ காலை ஒடைச்சுபோடுடா..இந்தா அவ நோட்டுல இருந்து இந்த லெட்டர எடுத்து வச்சுருக்கேன்..படிக்க அனுப்பாத அனுப்பாதனு சொன்னனே கேட்கலயே டா ”
என அலற ஆவேசமாய் உள்ளே நுழைந்த அண்ணன் கவிதா அக்காவை பளாரென அறைய நான் அதற்கு மேல் வேடிக்கை பார்க்காமல் கிளம்பி வந்து விட்டேன்..
மறு நாள் நான் கடைக்கு போக அங்கே முருகன் அண்ணனுக்கு பதிலாக வேறொருவர் ஆடு உறித்துக்கொண்டிருந்தார்.
”என்ன அண்ணே, முருகா அண்ணன் வரலயா என கேட்க இல்ல தம்பி அவன் தங்கச்சி சமைக்கும் போது அடுப்பு வெடிச்சு செத்துப்போச்சாம். சீக்கிறம் கடைய முடிச்சுருங்க எல்லோரும் கேதத்துக்கு போகனும்னு” சொல்லிட்டு போயிட்டார். வீட்டு வாசலுக்கு சென்ற போது சாவு வீட்டுக்கென்ற தன்மையே இல்லாமல் இருந்தது. போலீஸ் வந்து கேட்ட போது பட்டாசு வெடிக்கும் போது தவறுதலா வீட்டுக்குள்ல விழுந்து இப்படி ஆயிடுச்சு என்றனர்.
வீட்டிற்கு திரும்பும் போது சித்ரா அக்கா துணி எடுத்துட்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு சென்றாள். கெளரவக் கொலைகளில் சித்ரா தான் அடுத்தது என்று எனக்கு அப்போது தெரியாது.
-புஹாரி ராஜா

