பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 30, 2010

கோடிட்ட இடங்களை நிரப்புக - 7- சுமதி

சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,  முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.  

இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.

பகுதி 7 


செல்வியை அழைத்து, “மெட்ராஸுக்கு இந்த அக்கா புதுசு பார்த்து கூப்பிட்டுட்டு போங்க. ஆஸ்ட்டலைக் காட்டிவிட்டு விவரம் கேட்ட்தும் நீங்களே மறுபடியும் 

டிரெயினேத்தி விட்டுடுங்க” என்றார் சிவசுப்புசார்.

 “சார் நான் பார்த்துக்கிறேன்” என்றாள் செல்வி பொறுப்பாக. போகின்ற வழியில் மின்சார இரயிலில் பேசிக் கொண்டே வந்தாள் செல்வி. அவளுடைய அண்ணன் கூட அதே தாம்பரம் கல்லூரியில்தான் பொலிடிகல் சயின்ஸ் பி.ஜி பண்ணுகின்றானாம். அவனுக்கு எப்படியோ உள்ளேயே விடுதி கிடைத்துத் தங்கியிருப்பதாகவும் சொன்னாள்.

பல்லாவரம் இரயில் நிலையத்தில் இறங்கி, விடுதிக்குப் போக ஏறக்குறைய அரைக்கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. நடந்தபடி; விடுதியின் சாப்பாடு, கட்டில், தண்ணீர் வசதி இதர வசதிகள் குறித்து அத்தைதான் செல்வியிடம் கேட்டபடி இருந்தார்.

“எங்க வீட்லயும் என்னை மெட்ராசுக்கு அனுப்ப மாட்டேன்னுதான் சொன்னாங்க. அண்ணாதான் எப்படியோ கொண்டு வந்துட்டாங்க. மொத ஒரு மாசம் கஷ்டமா இருந்திச்சு அப்றம் எல்லாம் பழகிடுச்சு”

நடுநடுவே செல்விதான் அத்தைக்கு  தைரியம் சொல்லிக்கொண்டு வந்தாள். சென்னை நகரத்திற்குள் செல்லும் பிரதான பேருந்து சாலையைக் கடந்து செல்ல வேண்டும். விடுதி பெரிய வளாகம் ஒன்றிற்குள் இடப்பக்கமாய் ஒதுங்கி நின்றது. வலப்பக்கம் ஷேவியர் பள்ளி, நடுவில் ஒரு தேவாலயம். தேவாலத்திற்கு வெளியில் மாதாசிலை. வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாய் நுழைவாயில்கள் இருந்தன. விடுதிக்கட்டிடத்தில் ”பிரிட்ஜட்ஸ் வுமன்ஸ்” ஆஸ்ட்டல் என்ற பலகை ஆங்கிலத்தில் மாட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்றால் விடுதிக்கு என்று மேலும் இரண்டு கட்டிடங்கள் பின்பக்கமாக நின்றன. இரண்டு கட்டிடங்கள் மாணவிகள் தங்குவதற்கு என்றால் மற்ற ஒன்று அங்கிருந்த கன்னிகாஸ்திரிகளுக்கானது. நுழைவாயிலை ஒட்டி வரவேற்பறை, சில இருக்கைகள் (கிறித்துவ வாக்கியங்கள் சிலுவை தாங்கிய சுவர்கள்) இருந்தன. அதற்கு, அருகிலேயே பிரார்த்தனை கூடமும் இருந்தது. அது மாணவிகளுக்கு மட்டுமான விடுதியாக இல்லாமல் வேலைபார்க்கும் பெண்கள் தங்குவதற்கான விடுதியாகவும் இருந்தது. விடுதி காப்பாளரிடம் அறிமுகப்படுத்தப்படுவதற்காக சாந்தி அத்தையுடன் காத்திருந்தாள். அதற்குள்ளாக நான்கைந்து கன்னிகாஸ்திரிகள் எட்டிப்பார்த்துவிட்டு, இவர்கள் கேட்காமலேயே. ‘இப்ப வரும்’ என்று போனார்கள். பெரும்பாலும் மலையாளிகளாகவே இருந்தார்கள். மாணவிகள் வேலைபார்க்கும் பெண்களுடன் கலந்து தங்கவைக்கப்படுவார்கள். மாணவிகள் வெவ்வேறு கல்லூரிகளில் படிப்பவர்களாக இருந்தார்கள். வேலைக்குப் போகின்ற பெண்களின் எண்ணிக்கைதான் அதிகமாம். 15 வயதிலிருந்து 35 வயதுக்குள்ளாகவே இருப்பார்கள் என்றத் தகவல்களுடன் விடுதிக்கான விதிமுறைகளும் சாந்திக்கு அறிவுறுத்தப்பட்டன. பொழுது போக்கு என்றால் அவரவர் அறையில் ரேடியோ வைத்துக் கொள்ளலாம். அதுவும் அடுத்த அறையில் இருப்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல். தங்கியிருப்பவர்களென்று தனியாக டிவி ரூம் எதுவும் இல்லை என்ற சட்ட திட்டங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டன. சாந்தி விடுதியில் சேர வேண்டுமென்றால் உள்ளூரில் தெரிந்தவர் யாராவது வந்து கையெழுத்து போட வேண்டுமென்றார்கள். சாந்தி திகைத்தப்போது செல்விதான் ஞாபகப்படுத்தினாள்.

“சிவசுப்பரமணியம் சாரைக் கூப்பிட்டுக்கலாம்கா”

விடுதிக்கு வந்து சேருகின்ற நாளில் கையெழுத்திடுவதற்கு, தெரிந்தவருடன் சாந்தி வருவாள் என்று காப்பாளரிடம் செல்வி சொல்லியதோடு, விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்வதற்கும் உதவினாள்.

ஊருக்குத் திரும்பும்போது அத்தை புலம்பிக் கொண்டே வந்தார்.

“அந்தப் புள்ளைய பாத்தியா உன்னைவிட எவ்வளவு சின்னதா இருக்கு ஆனாலும் என்ன வெடிப்பா இருக்கு! டிரெயின் ஏறி ஒத்தையா வருது போகுது. எல்லார்கிட்டயும் எப்படி பேசி சமாளிக்குது. நீயும்தான் இருக்கியே? நாலுபேர்கிட்ட பேசத் தெரியுதா? எங்க போனாலும் திகைச்சி திகைச்சி நிக்கிறே. என்னதான் பண்ணப்போறியோ?”

அத்தை செல்வியைப் பாராட்டியதெல்லாம் சரிதான். அவளோடு தன்னை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கிறாள் என்றுதான் சாந்திக்குப் புரியவில்லை. அத்தைக்குத் தன்மேல் உள்ள அதிகப்படியான பிரியம்தான் இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். அத்தையின் புலம்பலுக்குப் பதில் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

“போகப்போக எனக்கும் பழகிப்போகும் அத்தே” என்றாள்.

விடுதி பார்க்க மின்சார இரயிலில் மதிய நேரத்தில் வந்ததால், அத்தைக்கு மின்சார இரயிலின் துரிதம், பெண்கள் பெட்டியில் கூட்ட நெரிசல் அதற்கே உரிய அழுக்கெல்லாம் தெரியாமலேயே போய்விட்டது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான் மின்சார இரயிலின் காலை நேரத்தில், கடற்கரை-தாம்பரம் இரயிலில் அத்தையை ஏறவிட்டிருந்தால், சென்னையில் தன் மருமகள் படிப்பதற்கு, தம்பியிடம் அனுமதி வாங்கித் தந்திருக்கவே மாட்டாள்.
தாம்பரம் கல்லூரிக்குப் போகின்ற காலைப்பொழுதுகள் சாந்திக்கு மிகக் கடுமையானதாகவே இருந்தன. சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து கிளம்பி வரும் மின்சார இரயிலின் பெண்கள் பெட்டிகளில் அதிகமாய் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு வண்டியிலும் முதல், நடுவில், கடைசியில் என மூன்றுப் பெட்டிகள் பெண்களுக்குரியதாக இருந்தன. பெண்கள் பெட்டிக்கு அருகிலேயே முதல் வகுப்பு இருந்தது. அந்த நேரத்தில் அதிலும் கூட்டம் இருக்கத்தான் செய்தது. பெண்களுக்கான பெட்டியில் கால்வைத்து நிற்பதற்கோ, இடம் கிடைப்பதற்கோ பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஆண்கள் பெட்டியின் கூட்ட நெரிசலைப் பற்றி வர்ணிக்கவே முடியாது. நகரப் பேருந்துகளில் தொங்கிப் போவதைப்போல் போவார்கள். யார் யாருக்கோ மகனாக, அப்பாவாக, அண்ணனாக, தம்பியான, நண்பனாக, காதலனாக, மாணவனாக இருக்கும் அவர்கள் பத்திரமாய் போய் வீடு சேரவேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொள்வாள் சாந்தி.

பெண்கள் பெட்டியில் பயணிகள் ஏறுகின்ற வழியில் இல்லாமல் இன்னொரு வழியில் கொஞ்சம் இடைவெளிவிட்டு கூட்டம் நின்றிருந்தால் அங்கே கூடையில் மீன்வைத்து மீன்கூடைக்காரிகள் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு கையில் வைத்து முடிந்த, ஒரு பக்கக் கொண்டை, வெத்தலை வாய், துணிவைத்து மூடிய கூடையைப் போலவே சமயத்தில் நாற்றமெடுத்துப்போன அவர்களின் வாய்வார்த்தைகளுடன் பயணிக்க வேண்டியிருக்கும். இறங்க வேண்டிய நிலையம், கூடைக்காரிகளுக்கு எதிர் பக்கமாக வந்துவிட்டால் மற்றவர்கள் விரைவாக ஒதுங்கி வழிவிட்டாக வேண்டும். அப்படி வழி விட வில்லையென்றால் கூடைகளாலும் தங்கள் வாய் வார்த்தைகளாலும் இடித்தவாறே இறங்கிவிடுவார்கள் அப்பெண்கள். தனக்கு வழிவிடாத மகராசிகளை, கூடையை இறக்கிவைத்துவிட்டு, இரயில் வண்டி, கிளம்பிப் போனபிறகும் திட்டி தீர்த்துவிட்டு, கூடையைத் தலையில் எடுத்துவைத்து விற்கப்போன மீன்கூடைக்காரிகள் சிலபேரை சாந்தி பார்த்திருக்கிறாள்.

இப்படித்தான் ஒரு மழைக்கால காலையொன்றில், கல்லூரிக்குப் பயணம் செய்தபோது, மீன்காரி ஒருத்தியின் கூடையில் இருந்த கையகல நண்டுகளில் ஒன்று, கல்லூரி மாணவியின் துப்பட்டாவைப் பிடித்து ஏறிவிட்டது அந்தப் பெண்ணின் தோழியாகத்தான் இருக்க வேண்டும், அதை அவள் இறங்குவதற்கு முன்னதாகவே பார்த்து தட்டிவிட்டாள். நண்டேறீய துப்பட்டா பெண்ணிற்கும் தட்டிவிட்டவளுக்கும் அருவருப்பாய் இருந்தது. மேம்பாலத்தில் ஏறி நடந்து போய் இறங்கிய நடந்து கல்லூரி வாசல் வரும்வரை மீன் வாசம் அவர்களுக்கு குமட்டலைத் தந்து கொண்டிருந்தது. அநேகமாக அவர்கள் சென்னை வாசிகளாக இல்லாமல் தன்னைப்போலவே தமிழகத்தின் வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்களாக இருக்கக் கூடும் என்று யூகித்துக் கொண்டாள்.

இரயில் பயணத்தைவிட, பேருந்து பயணம் இன்னும் கடினமானதாக இருக்குமென ’சாத்தூர்’ சொல்லிவிட்டதால், ரயில் பயணமே உகந்ததென்று ஆறுமாதத்திற்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுத்து வைத்துக்கொண்டாள் சாந்தி, அவளது புகைப்படம் மற்றும் கல்லூரியின் முகவரி பொதிந்த அந்தப் பயணச்சீட்டு, எப்பொழுதும் அவளது கைப்பையிலேயே இருந்தது.
அழுக்கு, பிச்சைக்காரர்கள், இடைவெளிவிட்ட வெண்ணிறக் கம்பிகள் வைத்துக் கட்டப்பட்ட பயணிகள் கடப்பதற்கான மேம்பாலங்கள், இரு பக்கமும் வண்டித் தடங்கள் எனவும், சிற்றுண்டிச் சாலைகளுடன் நடுவே நின்ற இரயில் நிலையங்கள் (என்பன தாம்பரத்திலிருந்து கடற்கரை நிலையம் வரை பொதுவாக இருந்தது) சென்னைக்கு வந்தப் புதிதில் எல்லா இரயில் நிலையங்களும் ஒரே மாதியாகத் தெரிந்தன சாந்திக்கு.

தாம்பரம் கல்லூரியில் பகல் இரண்டுமணி வரைதான் அவளுக்கு வகுப்புகள் நடக்கும் என்பதால் முடித்து விட்டு வந்து விடுதி திரும்புவதற்கு, அவள் எந்தப் பெட்டியில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் . எல்லாம் காலியாகவே இருக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மின்சார இரயில்கள் வந்து சேர்வதும் கிளம்பிப் போவதுமாக இருந்தன. இருந்தும் காலை மாலை நேரப் பொழுதுகளும், நிரம்பி வழியும் கூட்டமும் சென்னைக்கு சகஜமாய் இருந்தது.
                                  
சாந்தி நுழைந்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் மூன்று வகுப்பறைகள்தான் மொத்தமே இருந்தன. மேலே செல்வதற்கு இரு பக்கங்களிலும் எதிரெதிர் திசையில் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாசலுக்கருகே இருந்த வகுப்பறையைக் கடந்து சென்றபோது மற்ற இரு அறைகளும் எதிரெதிரே இருந்தன. அந்த இரண்டுக்கும் நடுவே ஒடுக்கமான ஒரு அறையின் மேல் தமிழ்த்துறை என்று எழுதப்பட்டிருந்தது.

உள்ளே இருட்டோடு இருட்டாக யாரோ உட்கார்ந்திருந்தது போல தெரிந்தது. சாந்தி தயங்கியபடி

“மேம், பிரின்சிபால் அனுப்பிவச்சாங்க. புளோரா, பாலின் மேம் இருந்தா பார்க்கச் சொல்லி..” என்றவாறு நுழைந்தாள்.

உள்ளே நிழலாய் இருந்தவர்
“வாங்க வாங்க நீங்கதான் சாந்தியா? உட்காருங்க உட்காருங்க. புளோரா மேம் போன் பண்ண ஆபிஸ் ரூமுக்குப் போயிருக்காங்க. இப்ப வந்துருவாங்க அவங்களுக்குத்தான் டைம் டேபிள் தெரியும்” என்று சொல்லியதோடு அடுத்து வந்த நிமிடத்திற்குள்ளாக அவளது பிறந்த தேதியைத் தவிர மற்ற எல்லா விசயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

“நான் வந்ததும் நீங்கதான் சாந்தியான்னு கேட்டீங்களே? என் பேர் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள்.

”நீங்க வரப்போற விசயத்தை நேத்துதான் பிரின்ஸிபல் கூப்பிட்டு சொன்னாங்க”

“உங்க பேர்” என்று சாந்திக்கு அவளையும் அறியாமல் வாய் வந்து திறந்து விட்டது.

பேச்சின் நடுவே இருட்டான அறை மேலும் இருட்டாவதுபோல் தோன்றியது திரும்பிப் பார்த்தபோது, சிரித்துக்கொண்டே உள்ளே வந்தவரிடம் பாலின்,

“புளோரா, இவங்கதான் புதுசா ஜாய்ன் பண்ணியிருக்காங்க பிரின்ஸிபால் டைம்டேபிள் கொடுக்க சொல்லியிருக்காங்க.”

புளோரா நேர அட்டவணையைக் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் மூன்றாவது மணிநேரம் இரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பு என்றாள். பாடம் எடுக்கவேண்டிய செய்யுள் பகுதி அடங்கிய புத்தகத்தை அலமாராவிலிருந்து எடுத்துக் கொடுத்தார். தயார் செய்தவற்குத் தேவையான விளக்க உரையுடன் கூடிய புத்தகங்களைத் தந்துவிட்டு “எம்ஃபில் எங்க முடிச்சீங்க?” என்று கேட்டார்.

சாந்தி “தாம்பரம் கல்லூரி” என்றதும்

“அப்ப ஜெரால்டு சாரைத் தெரியுமா?” என்று கேட்டார்

“தெரியும் மேம்” 

“அவரு எங்க ஊருக்குப் பக்கத்து ஊரு. எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போவாரு”  என்றார்.

“ஓ... சரிங்க மேம். அப்ப நான் கிளம்புறேன். நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என்ற சாந்தியிடம் “வாங்க சாந்தி” என்றார் புளோரா. பாலினிடம் கிளம்புவதைப்பற்றி சொல்லியபோது , சாந்தியைக் கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்தபடி, “மறக்காம பிரிப்பர் பண்ணிட்டு வந்திடுங்க” வலப்பக்கமா இருந்த வகுப்பறையைக் காட்டி “இங்கதான் கிளாஸ் எடுக்கணும்” என்றார் பாலின்.

- சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com