பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 6, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை - 6 - லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.



எனக்காகப் பார்த்த முதல் மாப்பிள்ளை வெடிகுண்டு வழக்கில் சிக்கிக் கைதானவர் என்பதை நினைத்தபோது முதலில் சிரிப்பு வந்தாலும், பிறகு அவர் மீது இரக்கமும் பரிதாபமும் ஏற்பட்டது. என்ன இருந்தாலும் அவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக அரசாங்கத்தை எதிர்த்தவர்தானே. அரசாங்கத்தை எதிர்ப்பதுதான், கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைத் தகுதி என நான் புரிந்துகொண்டேன். தாய் நாவலில் வரும் கம்யூனிஸ்டுகள் எல்லாரும் அரசாங்கத்தைத்தானே எதிர்த்தார்கள். 

சில நாட்கள் கழித்து, மீண்டும் ஜெயபால் என்னைச் சந்தித்து ’உனக்காக தோழர்கள் காத்திருக்கிறார்கள். உடனே என்னோடு வா’ என்றார். நான் அவர் சைக்கிளில் உட்கார்ந்துகொண்டு அவருடைய காய்கறிக் கடைக்குப் போனேன். அங்கே, சில தோழர்கள் கடைக்குள்ளே உட்கார்ந்திருந்தனர். டேவிட், மன்னர்மன்னன் ஆகியோரை எனக்கு ஏற்கெனவே தெரியும். புலவர் அரங்கராசன் என்றொருவர், மீசையை முறுக்கியபடி இருந்தார். அவர் புதியவர். நான் கடை வாசலில் நின்றேன். உள்ளே இருந்தவர்களைப் பார்த்து ஜெயபால், ’லெட்சுமி வந்துடுச்சி’ என்றார். உள்ளே இருந்தவர்கள் என்னைப் பார்த்தார்கள். பிறகு தமக்குள் பேசிக் கொண்டனர். மன்னர் மன்னன் மட்டும் மீசையை உதட்டால் கவ்வி இழுத்தும், கடித்தும் ஏதேதோ சேட்டைகள் செய்தபடி இருந்தார். அவர் தீவிர சிந்தனையில் இருந்தால் இவ்வாறு செய்வார் என்பதைப் பின்னாட்களில் தெரிந்துகொண்டேன்.  புலவர் அரங்கராசனைப் பார்க்கும்போது பொன்னியின் செல்வன் பழுவேட்டரையர் போல் இருந்தது. 

எனக்குக் கால் வலித்தது. உள்ளே என்னால் போகவும் இயலாது. கடை அவ்வளவு சின்னது. வெளியே நிற்கவும் முடியவில்லை. அரங்கராசன மட்டும் தேவையில்லாமல் சிரித்து கொண்டே இருந்தார். மன்னர் மன்னனோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். டேவிட், ஏதோ பேசிவிட்டு வெளியே சென்றுவிட்டார். ஜெயபாலும் மற்றவர்களும் சன்னமான குரலில் பேசிக்கொண்டனர். நான் எரிச்சலடைந்து அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

மறுநாள், ஜெயபால் கம்பெனிக்கு வந்தார். ’என்ன லெட்சுமி...நேத்து ரொம்பக் கடுப்பாயிட்டியா?’ என்றார். நான் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்றேன். ஆனால், உண்மையில் எனக்குக் கோபம் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி, நெருக்கடி நிலை வேறு. ஏதாவது ரகசியம் இருக்கலாம். அதை அவர்கள் பேசிக் கொண்டிருந்திருக்கலாம். நான் அதைப் போய் தவறாக எடுத்துக்கொண்டால், சரியாகுமா என்று எனக்குள் நானே நினைத்துக்கொண்டேன்.
ஆனால், ஜெயபால் சொன்ன விசயமே வேறு.

‘லெட்சுமி...உன்னைப் பொண்ணு பார்த்தாச்சு...மாப்பிள்ளை தேடறதா சொன்னவருக்கே உன்னைப் புடிச்சுப் போச்சு...அவரே கட்டிக்கிறேங்கறாரு’
என்றார். 

‘பொண்ணு பார்த்தாச்சா? எப்ப?’

’நேத்துதான்...காய்கறிக் கடையில’

என்று மிகுந்த பெருமிதத்துடன் சொன்னார். நேற்று அதுதான் நடந்திருக்கிறது.
டேவிட்தான் எனக்கு மாப்பிள்ளை தேடும் பொறுப்பாளர் என்றும், இப்போது அவருக்கே என்னைப் பிடித்துவிட்டது என்றும் ஜெயபால் விளக்கினார்.

எனக்கோ தோழர் டேவிட்டைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. மேலும் திருமணத்தை இப்படி எல்லாம் முடிவு செய்யலாமா என்பதிலும் எனக்குக் குழப்பம் இருந்தது. பெண் பார்ப்பது, வரவு செலவு பேசுவது, பொருத்தம் பார்ப்பது என பெரியவர்கள் செய்ய வேண்டிய பல சம்பிரதாயங்களை தோழர்கள் செய்கிறார்கள். இவர்கள் பார்க்கும் பொருத்தமோ வித்தியாசமாக இருக்கிறது.
’லெட்சுமி...நீயும் கட்சியில் ஈடுபாடா இருக்கே...தோழர் டேவிட்டும் தீவிரமான தோழர்...இந்தப் பொருத்தம் போதாதா?’ என்றார் ஜெயபால்.

திருமணம் செய்துகொண்டால்தான், எனது தங்குமிடச் சிக்கல் தீரும், எனக்கென்று ஒரு உறவு உருவாகும் என்று திருமகளும் கிறிஸ்டி அக்காவும் எடுத்துக் கூறினார்கள். 

மறுநாள், தோழர் டேவிட்டும் மன்னர் மன்னனும் வந்தார்கள். மன்னர் மன்னன் வழக்கம்போல் மீசையைக் கடித்தபடி தனியே நிற்க, டேவிட் என்னிடம் பேசினார். என்னைப் பற்றி விசாரித்தார். அவரைப் பற்றிக் கூறினார்.
பிறகு, அவரது திருமண விருப்பத்தை ஒரு கவிதையாக எழுதி என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார்.

நான் தனிமையில் அந்தக் கவிதையைப் படித்தேன். அந்தக் கவிதைக்கு ’மணம்’ என்று தலைப்பு இடப்பட்டிருந்தது.

சத்திய தரிசனத்திற்கான நமது
தத்துவப் பயணத்தில்
சுத்தியலும் அரிவாளும்போல் – நாம்
ஜோடி சேர்ந்து விட்டோம்!

சொர்க்கத்தில் நமது திருமணம்
நிச்சயிக்கப்படவில்லை – அது
வர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு
வாழ்வுக்கான போரிலே வேர்விட்டது!

வேலிகட்டி உரிமை சொல்லும்
வெள்ளாமை நிலங்களைப் போல்
தாலிகட்டும் கொத்தடிமைத்தனம்
வேண்டாம் நம் மணத்தில்!
மொட்டு மலர்ந்து மகரந்தம்
மோதிச் சிதறுகின்ற
இரட்டை மலர்களைப்போல்
மணம் வீசிக் கனியட்டும்

துப்பாக்கியின் இரண்டு குழல்களைப் போல்
தோழியும் தோழனுமாய்
எப்போதும் செயல்புரிவோம்
இந்தியாவைச் சிவக்க வைப்போம்!

கட்சியில் ஆள் சேர்க்க எழுதப்பட்ட கவிதையா? காதல் கவிதையா என்ற குழப்பம் எனக்கு வந்தது. உங்களுக்கும் அந்தக் குழப்பம் வந்திருக்கலாம். ஆனால், இது காதல் கவிதைதான். தோழர் டேவிட்டின் காதல் அப்படிப்பட்டது தான்!

- லெட்சுமி அம்மா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com