பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 2, 2010

கோடிட்ட இடங்களை நிரப்புக - 3 - சுமதி


சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,  முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன்கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.  

இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. 

இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.  

பகுதி 3

பெல்ஹாமிலிருந்து மஹாராஷ்ட்ரா மாநிலம் தொடங்கிவிடுவதாக சித்தப்பா சொன்னார். பெல்ஹாம் தாண்டியதும் மண் மலைகள் வரத் தொடங்கின. கரிசல் மண்ணையும் செம்மண்ணையும் கலந்து வைத்தது போன்றதொரு மண் தெரிந்தது. பெரியதாக நதி ஒன்றும் தென்படவில்லை. பெரிய பெரிய ஓடைகள் மேல் அமைந்திருந்த பாலங்களில் மேல் பேருந்து கடந்து சென்றது. தான் கண் அசந்த நேரம் பார்த்து ஒரு வேலை ஏதேனும் நதி ஒன்று கடந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

கிராமங்கள், மண் மலைகள், சர்க்கரை ஆலைகள், தோட்டங்களைத் தாண்டிக் கொண்டே சென்றது பேருந்து. ஓரிரு சிமெண்ட் வைத்துக் கட்டிய வீடுகளைத் தவிர மற்றவை ஓட்டு வீடுகளாகவே இருந்தன. பேருந்துக்குள் பார்த்தாள். ஆண் பெண் பேதமின்றி கிடைத்த இடத்தில் எல்லாம் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார்கள். சிலர் நின்று கொண்டே வந்தார்கள். பெண்களின் சேலைக்கட்டுமாணம், வயல்களில் இறங்கும் ஆண்களின் தார்ப்பாய்ச்சி கட்டுவது போல் இருந்தது. தாத்தாவும் பேத்தியும் குசும்பாய் சிரித்துக்கொண்டார்கள். ’கடிங்லாஜ்’ வந்து சேர்ந்ததும், அப்பா ஊருக்கு போக பேருந்து தயாராக இருந்தது. மஹாஹான் என்பதை மாஹாம் என்று அழைத்தார்கள். 

ஒருவருடத்திற்குப் பிறகு தன் அம்மாவை பார்க்கப் போகும் சந்தோஷத்தைவிட புதிய மனிதர்கள், புதிய இடங்கள், பழக்க வழக்கங்கள் இவற்றைப் பார்த்த சந்தோஷம் அவளை திக்குமுக்காட வைத்தது. பேருந்து நிலையத்திற்கு போகும் பாதையில் சந்தை நடந்தது. திங்கட்கிழமை சந்தை நடக்கும்போது வண்டி புறவழிப்பாதையில் இறக்கிவிட்டு விடுமாம். மழை மீது ஏறி இறங்கியதும் வண்டியை நிறுத்திவிட்டார்கள். சந்தை  வழியாக நடத்திக்கொண்டு போனார் சித்தப்பா. நகரமும் கிராமமும் அல்லாது பெரியதொரு கிராமம். அது எல்லா வசதிகளுடன் கூடியதாக இருந்தது. மேற்குப்பக்கமாக வீடும் கடையும் சேர்ந்திருந்தது. வலப்பக்கம் பார்த்த வீடு. தெற்கே கொள்ளைப்புரம் இருந்தது. கிழக்கே அடுத்தடுத்த வீடுகள். மேற்கே வீட்டை ஒட்டி சிறிய சாலை இருந்தது. அதை ஒட்டி வயலும் தூரத்தில் அடுக்கடுக்காய் பசுமைப் போர்த்திய மலைகளும் தெரிந்தன. 

முந்திரிப்பழம், முந்திரிக்கொட்டை, நாவல் பழக்கூடைகள், காய்கறிகள், கொத்தமல்லிக்கட்டுகள், மீன்கள், பருப்புவகைகள், வளையல் கடைகள் அடங்கிய சாலையை கண்கள் விரிய விரிய பார்த்தவாறு கடந்துவந்தாள். உள்ளே நுழைந்ததும் திரைச்சீலைகள் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். தன் கிராமத்து வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்தாள். அப்பா வாசலிலேயே ஈரலுக்காக காத்திருந்தார். வீட்டில் அசைவம் எடுக்கும்போதெல்லாம் அந்தந்த உருப்படியின் இருதயம் மிக மென்மையாக இருக்கும் சமைத்தவுடன், குழந்தைகளுக்கு தருவார்கள் அதன் மென்மையும் ருசியும் மற்ற பாகங்களை விட அலாதியானது. அசைவ பிரியரான சாந்தியின் அப்பா தன் மகளை ”ஈரல்” என்றே அழைத்தார். 

மற்றொரு திரைச்சீலைக்குப் பின்னால், மற்றொரு அறையில் அம்மா நின்று கொண்டிருந்தாள். அவள் கழுத்தைச் சுற்றி அவளுடைய முந்தானை போர்த்தி இருந்தது. மகளை ஆசையுடன் வரவேற்றாள். சமயலறைக்கு அழைத்துச் சென்றாள். தாத்தா பைகளை  மகளுக்கு உதவியாக சமையலறைக்கே எடுத்து வந்துவிட்டார். சித்தப்பா முன்பக்கத்தில் இருந்த கடையிலேயே அப்பாவுடன் பேசிக்கொண்டு  உட்கார்ந்துவிட்டார். கண்ணாடி டம்ளர்கள், பீங்கான் தட்டுகள், பூப்போட்ட விதவிதமான கப் அண்ட் சாசர்களை தொட்டுப் பார்த்தவள், முன்னைக்காட்டிலும் பளீரென்ற சிரிப்புடன் சற்று சதைப்பிடிப்புடன் வயது குறைந்தது போல் இருந்த தன் அம்மாவை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டாள் சாந்தி.

மாஹாமில், ஆரம்பத்தில் வைத்திருந்த வட்டிக்கடையை மாற்றி துணிக்கடையாக வைத்திருந்தார் அவளுடைய அப்பா. துணிகளை எடுத்துக்கொண்டு வாராவாரம் பணம் கட்டுவார்கள். கடையும் வீடும் சேர்ந்தே இருந்தது. அம்மா அங்கு போகின்ற நாளிலும், ஊருக்கு திரும்புகிற நாளில் மட்டும்தான் வெளியே வருவாளே தவிர மற்ற நாட்களில் எல்லாம் வீட்டுக்குள்ளே இருக்கவேண்டியதுதான். அதற்காக அவள் வருத்தப்பட்டது இல்லை. ஜன்னல் வழியாக மராட்டிய மனிதர்களையும் அவர்களது பேச்சையும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

சுற்றிப் பார்க்கும்படி முக்கியமான ஊர்களோ இடங்களோ புகழ் பெற்ற கோவில்களோ அந்த ஊரைச்சுற்றி இல்லை என்பது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் அழைத்துக் கொண்டு போவதற்கு ஆள் இல்லாததும்தான். பதினாழு வருடமாக அங்கேயே இருக்கிற அம்மாவும் தங்கைகளும் கூட இந்த ஊரைச் சுற்றிப் பார்த்ததில்லை என்ற தகவலை கேட்டதும்தான் சமாதானம் அடைந்தாள் சாந்தி. 

அந்த ஊரைச் சுற்றி பெரிய ஆறு ஒன்று போவதாக சொல்வார்கள். சாந்தி அதையும் பார்த்ததில்லை. அவள் ஒவ்வொருமுறையும் விடுமுறைக்கு போகும்போதெல்லாம் அந்த ஊரில் வசந்த காலம் தொடங்கி விடும். கெலாப்பழம், நாவல் பழம், மாம்பழம் என கூடைகூடையாக பெண்கள் விற்க கொண்டுவருவார்கள். விதவிதமான மீன்களை உயிருடன் பிடித்துக் கொண்டு வருவார்கள். வாடிக்கையாக விற்பவர்கள் பின் வாசலுக்கு வெளியே காத்திருப்பார்கள். அப்போதுதான் அம்மாவுடன் வெளியே வந்து உலகத்தை பார்ப்பாள் சாந்தி. 

அதிகாலையிலேயே வசூலுக்காக அப்பா பக்கத்தூர்களுக்கு பஜாஜில் கிளம்பில் விடுவார். கஜரகாவ், நேசரி என நாலைந்து ஊர்களைச் சுற்றிவிட்டு எட்டு மணியளவில் ஏதேனும் ஒரு கடையில் ’மிசாலை’(மிசால்- சிறிய உணவகங்களில் காலையில் மட்டுமே கிடைக்கும் கார உணவுவகை. பட்டாணியை வேகவைத்து, வேகவைத்த தண்ணீரில் மிச்சர், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழையைச் சேர்த்து, கரம் மசாலாத்தூள் தூவி கொதிக்க வைத்திருப்பார்கள். சில சாதாரண உணவகங்களில் முதல் நாள் இரவில் மீந்து போன உணவுகளையும் இதில் சேர்த்து விடுவதுண்டு.) சாப்பிட்டு பெரிய டம்ளரில் தேநீரை குடித்துவிட்டு மறுபடியும் வசூலைத் தொடர்வார். வீட்டுக்கு வந்து சேர பதினொன்னரை ஆகிவிடும். 

அம்மா மதிய சாப்பாட்டை செய்திருப்பாள். போய்விட்டு வந்தவுடன் கணக்கு எழுதுவாள். கணக்கு எழுதி முடித்துவிட்டு சாப்பிடுவாள். குட்டியாய் ஒரு தூக்கம் போட்டு தேநீர்குடித்துவிட்டு மாலை ஆறு மணிக்கு உள்ளூர் வசூலுக்கு கிளம்பிவிடுவார். போனால் திரும்ப இரவு பத்துமணி ஆகிவிடும்.    

உள்ளூர் வெளியூர் வசூல்களை தினசரி அவர் செய்தாக வேண்டும் என்பார். ஒரு நாளும் தப்பாது. அவளை அழைத்துக் கொண்டு போக அப்பா வராததற்கு காரணம், போய்வர ஒரு வாரம் பேருந்து பயணத்தில் அமைந்துவிட்டால் வசூல் பாழாகிவிடும் என்பதால்தான். அதனால்தான் கல்லூரியில் சேர்வதற்குக் கூட அம்மாவுடன் அவள் தாமதமாகக் கிளம்பி வந்தாள். தாத்தாவின் கடிதம் வந்து சேர ஒரு வார காலம் ஆனதென்றால் முடிவெடுக்க ஒருவாரகாலமென்று  தேர்வு முடிவு வந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஊருக்குக் கிளம்பி வர முடிந்தது அவளால்.

மஹாராஷ்டிராவிலிருந்து வந்த மறுநாள் இளங்கலை வகுப்பிலாவது சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுப்பார்க்கலாம் என்று சிவகாசி கல்லூரிக்கு அம்மாதான் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போனாள். மாணவிகள் சேர்க்கை நடந்து கொண்டிருந்த அறைக்கு வெளியே சாந்தி நின்றுவிட்டாள். அம்மாதான் உள்ளே போய் சேர்க்கைக்கு வந்த மாணவிகளைப் பார்த்து, விவரம் கேட்டறிந்து அட்மிசன் போடுகிறவர்களிடம் போய் நின்று கொண்டாள்.

 “கிராமத்திலிருந்து வர்றோம். எங்கக் குடும்பத்துல காலேஜ் வரைக்கும் யாரும் படிச்சதில்ல. இவள எப்படியாவது படிக்க வைக்கணும்னு ஒரு ஆசை. இவளும் நல்லா படிப்பாங்க. தயவு செஞ்சி இவளைச் சேர்த்துக்கணும்” 

- சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com