பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 9, 2010

சூதானம் - சாம்ராஜ்






அம்மா தான் கண்ணனை தட்டி எழுப்பினாள். பதறிப் போய் எழுந்தான். ஒன்றும் புரியவில்லை. கண்களில் பீழை அப்பியிருந்தது. மெதுவாய்த் திறந்தான். “மணி ஏழரை ஆயிருச்சு. இன்னும் தூங்கிக் கிட்டே இரு.” சமீபத்தில் ரேங்க் கார்டு எதுவும் கொடுக்கலையே…….. அப்புறம் ஏன் கத்துகிறாள். கைலியை முழங்காலுக்கு கீழே இறக்கி விட்டு ”என்னம்மா……..” என்றான் எரிச்சலுடன். அம்மா முகம் அவன் எதிர்பார்த்தது போல கோபமாய் இல்லை. அவள் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று அவனைக் கஷ்டப்படுத்தியது. “டேய்……. ராஜீ நேத்து ராத்திரியிலிருந்து பித்து பிடிச்சவ மாதிரி இருக்களாம். என்னனு பார்த்துட்டு வாடா……”


கண்ணன் சடக்கென எழுந்து உட்கார்ந்தான். என்னாச்சு ராஜீ அக்காவிற்கு…….. நேத்து டீயூசன் கிளாஸில நல்லாத்தானே இருந்தாள். இன்னைக்கு ’மெளன கீதங்கள்’ கதை சொல்றேன்னு சொல்லியிருந்தாளே…… கண்ணன் முகத்தைக் கூட கழுவாமல் தெருவில் இறங்கி ஓடினான்.

அவன் வீட்டிலிருந்து மூன்று தெரு தள்ளி ராஜீ என்ற ராஜேஸ்வரி அக்கா வீடு இருந்தது. தண்ணீர் பிடிக்க தெரு அலைந்து கொண்டிருந்த்து. “நல்ல தண்ணி” வரும் நாள் போல். எங்கு பார்த்தாலும் பித்தளைக் குடங்களும், சில்வர் குடங்களும், சண்டைகளுமாய் இருக்க, அவர்களை விலக்கிக் கொண்டு ஒடினான் கண்ணன்.

கைம்பொண்டாட்டி வளர்த்த பிள்ளை உறுதியாய் கெட்டுப் போகுமென்று உறுதியாய் நம்புபவள் கண்ணனின் அம்மா. ஒற்றைப் பிள்ளை வேறு. கண்ணனுக்கு தெருவில் விளையாடவோ, பையன்களோடு சேர்ந்து கம்மாய்க்கு போகவோ, ஊமச்சிகுளம், காதக்கிணறு கேணிகளில் குளிக்கவோ எப்பொழுதும் தடை. தெருவென்பது அவனுக்கு சன்னல் காட்சிதான். மற்ற பையன்கள் ஓடி விளையாடுவதை சவலைப் பிள்ளை போல் பார்த்துக் கொண்டிருப்பான். தெருவில் இருக்கும் பெண் பிள்ளைகள் தான் அவன் தோழிகள்.

எட்டாவது பத்தாவதோடு படிப்பை நிறுத்தியவர்கள், சிலோன் ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்பவர்கள், திருச்சி விவித பாரதி இளைய பாரதத்தில் இரண்டே திரைப் பாடலுக்காக காதைத் தீட்டி வைத்திருப்பவர்கள், ’ஒரு தலை ராகம்’ சங்கரை ஒருதலையாய்க் காதலிப்பவர்கள், கல்யாணத்திற்குக் காத்திருப்பவர்கள் என அவன் தோழிகளின் பட்டியல் நீளும்.

அவர்கள் வீட்டில் ரேடியோ இருந்தது. சுவிட்சைப் போட்டால் பத்து வீட்டு மரகத அத்தை கண்களைப் போல முணுக்முணுக்கென்று விளக்கெரியும். ரேடியோ கேட்க பெரிய கூட்டம் வரும். கண்ணன் எட்டாவது படித்தாலும் எதாவது பெண்பிள்ளை குடிக்கத் தண்ணீர் கேட்கும் போது மோந்து கொடுக்க கண்ணன் போனால் அம்மாவின் குரல் பட்டாசாலையிலிருந்து அடுப்படி வரை கூடவே காவலுக்கு வரும்.

அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருந்தார்கள் ராஜீ அக்கா குடும்பம். பெரிய குடும்பம். ராஜீக்கு முன்னால் ஒரு அக்கா, ஒரு உருப்படாத அண்ணன் இரண்டு தங்கைகள், ஒரு ரஜினி ரசிக தம்பி. ராஜீயின் அப்பர ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார். ராஜீ அக்காவின் மீது சொல்லொண்ணாத ஈர்ப்பு உண்டு கண்ணனுக்கு. ஸ்ரீதேவியெல்லாம் அக்காவின் கால் தூசுக்கு பெற மாட்டாள் என நினைப்பான்.

ராஜீ அக்கா பி.யூ.சிக்கு மேல் படிக்கவில்லை. அக்காவோடு நடந்தால் தெருவே அவர்களைப் பார்க்கும். சமயங்களில் அவன் தனியாக வரும்போது போஸ்ட் கம்பத்திற்குக் கீழ் நிற்கும் வாலிபப் பையன்கள் அவனிடம் ஏதேதோ கேட்பார்கள். அவன் ஒன்றும் சொல்லாமல் ஓடி விடுவான். அவனுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து பக்கத்து வீட்டில்தான் இருந்தார்கள். ராஜீ அக்கா குடும்பம் தீடிரென கந்தாயி ஆச்சி வாடகையைக் கூட்டிய போது கட்டாதென கம்மாத் தெருவிற்கு மாறிப் போனார்கள். இவன் அம்மாவிற்கு ராஜீயுடனான சேக்காளித்தனம் பிடிக்காது. எதாவது புறுபுறுத்தபடி இருப்பாள்.

ராஜீ அக்கா அவனுக்கு ஞாபகமாய்த் தின்பண்டங்களை ஒளித்து வைத்துக் கொடுப்பாள். எல்லா இடத்திற்கும் அவனைக் கூட்டிக் கொண்டு போவாள். வாலிபப் பசங்க ஏதாவது கேலி செய்தால் தைரியமாக திருப்பி முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்வாள். கோரிப்பாளையம் 36 கடை தாண்டி ஒருவன் இவர்கள் பின்னாலேயே வர அமெரிக்கன் காலேஜ் வாசலில் நின்று செருப்பைச் சுழற்றிக் காண்பித்தாள். கண்மாய்க்குள் இருக்கும் ரெட்டைக் கிணறுக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு தண்ணீர் எடுக்க தனியாகப் போவாள்.

இவனுக்கு எல்லா சினிமா கதைகளையும் சொல்வாள். அப்படியே சினிமா பார்ப்பது போல் இருக்கும். (சினிமா பார்ப்பவர்கள் உருப்பட மாட்டார்கள் என்று உறுதியாக நம்புபவள் இவன் அம்மா). இவன் அம்மாவிடம் சண்டை போட்டு இவனை ’கர்ணன்’ படத்திற்குக் கூட்டிப் போனாள். இவன் பாதியிலேயே தூங்கிப் போக, தூக்கிக் கொண்டு வந்தாள். கண்ணன் ஒரு நாள் கேட்டான் “ அக்கா நா உன்ன கல்யாணம் செஞ்சுக்கிடட்டுமா……..” ”எதுக்குடா…….” என சிரித்தபடி கேட்டாள். ”உங்கூடவே இருக்கலாம்ல……….” ”போடா கிறுக்கா…..” என இவன் தலையைக் கலைத்தாள். வீடு மாறிய பின்னும் சாயங்காலம் அங்கு படிக்கப் போய் விடுவான்.

ராஜீ அக்கா வீட்டில் எல்லோரும் ஒரு விதமாய் உட்கார்ந்திருந்தார்கள். ராஜீ அக்காவின் பார்வை அடுப்படி ஜன்னல் வழி தெரியும் வேப்பமரத்தின் நுனியில் இருந்தது. ராஜீயின் அம்மா இவனைப் பார்த்ததும் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள். “ கண்ணா ஒன்னும் பேச மாட்டேங்கிறாடா……. நீயாவது கேளுடா……” எதிரே போய் உட்கார்ந்தான். பார்வை வேப்பமர நுனியில் இருந்து கீழே இறங்கவில்லை. இவன் எதிரே இருப்பதற்கான எந்த சலனமும் இல்லை. ராஜீயின் அண்ணனைக் காணவில்லை. தம்பி சுவரில் ஒட்டியிருக்கும் ரஜினிகாந்தின் தாளை சுரண்டிக் கொண்டிருந்தான். அப்பா வேலைக்குப் போய் விட்டார் போல. தங்கைகள் முற்றத்துக் கல்லில் கையை இங்கும் அங்கும் இழுத்தவாறு உட்கார்ந்திருந்தார்கள். ராஜீயின் அம்மா யாரிடமோ பேசுவது காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தான். ராஜீயின் சித்தி. “ நேத்து ராத்திரி ரெட்டை கிணறுக்கு தண்ணி எடுக்கப் போனவ….. ரெம்ப நேரமா காணோம். இந்தத் திருவாளத்தான் காசியும் எங்க போனானு தெரியல ……. நேத்து காலைல போனவன் இன்னும் வரல……….. இவ அப்பாவும் நானும் தேடிப் போனா டீக்கடைக்காரன் தோட்டம் இருக்குல அங்கணக்குல்ல மயங்கிக் கிடக்கிறா. தாவணிப் பாவாடையெல்லாம் கலைஞ்சு கிடக்கு……. கைகாலெல்லாம் காயம் வேற…. …………………………….  பார்த்துட்டேன். பயப்படற மாதிரி நடந்திரல…… ஆனா அப்ப இருந்து ஒரு வார்த்த கூட பேச மாட்டேங்கிறா…… ஒரு பொட்டு ராத்திரி தூங்கல. இப்படியே உட்கார்ந்திருக்கா………..”. அவள் அம்மா பக்கத்தில் வந்து “ ராஜீ எந்திரிடீ…… குளிடி…..” அம்மாவை இதற்கு முன் பார்த்ததேயில்லை என்பது போல் பார்த்தாள். கண்ணன் வெகு நேரம் உட்கார்ந்திருந்தான். பார்வை வேப்பமர நுனியிலேயே இருந்தது. அவள் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான். மிகவும் குளிர்ச்சியாய் இருந்தது அவள் கரம்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அம்மா என்னடா ஆச்சு என்றாள். இவன் பதில் சொல்லாமல் பின் பக்கம் தோட்டத்திற்குப் போனான். தோட்டம் அமைதியாய் இருந்தது. துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்தான். ஒரு மைனா தன் உருவத்தை விட கனத்த குரலில் கூவிக் கொண்டு பறந்தது. நிலம் நகர்வது போல் இருந்தது. கல்லில் அப்படியே சாய்ந்து படுத்தான். கல் குளிர்ந்திருந்தது. ராஜீ அக்காவின் கைகள் ஞாபகத்திற்கு வந்தன. “என்னடா ஆச்சு கண்ணா…………. அம்மாவின் சன்னமான குரல் பக்கத்தில் கேட்டது. இவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அழுகை வந்தது. அம்மா ரெம்ப வருடத்திற்குப் பிறகு அணைத்துக் கொண்டாள்.

ராஜீ அக்கா சரியாகவேயில்லை. அந்த ராத்திரியோடு அவள் வாழ்வு நின்றிருந்தது. தன்னுடைய வேலைகளைத் தானே பார்த்துக் கொள்வாள். யாரிடமும் எதுவும் பேச மாட்டாள். தங்கைகளுக்குத் திருமணமாகி அண்ணனுக்கும் ஆகி எல்லோரும் ஒரு நாடக அரங்கம் பொல அந்த் வீட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்க, உறைந்த காலமாய் அங்கேயே இருந்தாள்.

கண்ணனின் குரல் உடையத் தொடங்கியிருந்தது. வேர்வையின் மணம் வேறு விதமாய் இருந்தது. குளிக்கும் போது முதுகு தேய்ப்பதை நிறுத்தியிருந்தாள் அம்மா. அவனது உள்ளாடைகளை அவனையே துவைக்கச் சொன்னாள். அக்காவைப் போய் அடிக்கடி பார்ப்பான். பேசாமல் மணிக்கணக்கில் அவள் முன் உட்கார்ந்திருப்பான் எப்பொழுதாவது ”நல்ல படிக்கிறயா……… ஒழுக்கமா இரு” என்பாள். கண்ணன் கண்ணீரை அடக்கியபடி தலையாட்டுவான்.

கண்ணன் கல்லூரி படிப்பிற்காக வெளியூர் வந்திருந்தான். அம்மா கடிதத்தில் ஊரின் நல்லது கெட்டதுகளைச் சொல்வாள். இடையில் ஒரு செமஸ்டர் லீவிற்கு வந்திருந்தபோது அக்காவை வந்து பார்த்தான். முகத்தில் கருமை கூடியிருந்தது. அக்காவுக்கு திடீரென ரெம்ப வயதாகிவிட்டது போலவும், அவள் பழைய ராஜீ அக்காவே இல்லையென்றும் தோன்றியது. அம்மா ஒரு கடிதத்தில் ராஜீ அக்காவை யாருக்கோ ரெண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டதாக எழுதியிருந்தாள். மற்றொரு கடிதத்தில் அவளுக்கு குறை பிரசவத்தில் குழந்தை செத்துப் பிறந்ததாகவும் எழுதியிருந்தாள்.

ஊரிலிருந்தபடி வேலைக்கு விண்ணப்பிக்கவும், நேர்முகத் தேர்விற்குப் போய்வருவதுமாய் இருந்தான் கண்ணன். வெளியூரில் தங்கிப் படித்தது உள்ளூர் நண்பர்களின் வரத்தைக் குறைத்திருந்தது. அம்மா கண்காணிப்புகளை குறைத்திருந்தாள். பின் பக்கத் தோட்டமும், புத்தக வாசிப்புமாய் போனது அவன் பொழுதுகள். அக்காவைப் பார்த்துவிட்டு துவைக்கும் கல்லில் வந்து படுத்திருந்த அந்த காலை ஞாபகத்திற்கு வரும். ராஜீ அக்கா திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை குடியிருப்பில் இருப்பதாய் அம்மா சொன்னாள்.

கடைத்தெருவில் ராஜீ அக்காவின் தம்பியைப் பார்த்தபோது அக்கா வந்திருப்பதாய்ச் சொன்னான். கம்மாத் தெருவிலிருந்து வடக்குத் தெருவிற்கு மாறியிருந்தார்கள். ரெம்ப நாளைக்குப் பிறகு அக்காவைப் பார்க்கப் போகிறான். அக்கா ஏதாவது பேசுவாளா……. வீட்டுக் கதவு வெறுமனே சாத்தியிருந்தது. கதவைத் தட்ட கையை வைக்க அது திறந்து கொண்டது. சும்மா சாத்தியிருப்பார்கள் போல. ரெண்டாம் நிலைக் கட்டில் இவனுக்கு முதுகு காட்டி உட்கார்ந்திருந்தாள் ராஜீ அக்கா.  இவன் நின்றிருந்தது தெரியவில்லை. இவன் ”அக்கா……” என்று கூப்பிட எத்தனிக்க. ஒரு எட்டு வயது பெண் குழந்தை இவனைத் தள்ளிக் கொண்டு ”அப்பாயி இல்லையா…….” என்று கேட்டபடி உள்ளே ஒடியது. உள்ளே ஒடிய குழந்தையிடம் ராஜீ அக்காவின் சாயல் இருந்தது. கண்ணன் வாசலிலிருந்து சற்று ஒதுங்கியது போல் நின்றான். இவன் இருக்கும் இடத்திலிருந்து அக்காவைப் பாதி உருவத்தில் பார்க்க முடிந்தது. அவளால் இவனைப் பார்க்க முடியாது. ”அத்தை……..அப்பாயி இல்லையா……. அப்பாயி இல்லையா……..” என கேட்டுக் கொண்டே போக ”இல்ல என்ன வேணும்” .எனறாள் ராஜீ. ”அப்பா……… அப்பாயிய கூட்டிட்டு வரச் சொன்னாங்க………”  ஒருகணம் அவளை உற்றுப் பார்த்த ராஜீ அக்கா அவளைப் பக்கத்தில் இழுத்து “உன் அப்பாட்ட சூதானமா இரு” என்றாள். அந்தக் குழந்தை அவளிடமிருந்து திமிறிக்கொண்டு ஒடியது. கண்ணன் உள்ளே போவதா வேணாமா எனத் தெரியாமல் நின்றான்.
                                                            - சாம்ராஜ்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com