பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 4, 2010

அஞ்சல்தலை - 5 - வண்ணதாசன் சாருக்கு-சாம்ராஜ்

அன்பு மிக்க வண்ணதாசன் சாருக்கு,

மதியத்திற்கு மேல் விடுப்பு எடுத்து வீடு திரும்பி விட்டேன்.
உடல் களைப்பு என்பது ஒருபுறம். அதைத் தாண்டி பிரபாவும், ஆனந்தியும் தான் என்னை வீடு திரும்பச் சொன்னார்கள்.

’கற்றது தமிழ்’ எனக்குள் மறுகிக் கொண்டிருக்கிற நிறைய உணர்வுகளை மறுபடியும் ஆதுரத்தோடு மீட்டுகிறது. மிகுந்த அறவுணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது.

இன்னும் நேர்மையாக………
இன்னும் உண்மையாக…………
இன்னும் பிரியமானவனாக இருந்திருக்கலாம் என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

அந்தப் புல்வெளியில் நீங்களும் நானும் போனதில்லையா……. அத்தனை அடர்த்தியாய் நமது தெருக்களில் புற்கள் இல்லை என்பதில் நமக்கு புகார் ஒன்றுமில்லை தானே.

அந்த மராட்டிய மலைச் சாலை நிச்சயமாய் உங்களுக்கும் எனக்கும் உண்டு. உங்களுக்கு அது திருநெல்வேலியிலோ, அம்பாசமுத்திரத்திலோ, எனக்கு அது வாடிப்பட்டியிலும், டி.ஆர்.ஓ. காலனி சாலையிலும், பெத்தானியபுரம் மேட்டுத் தெருவுமாக இருக்கிறது.

நாம் எத்தனை முறை இறந்து போகப் பிராயத்தனப்பட்டிருக்கிறோம். கற்பனையில் ஓராயிரம் முறை மரித்திருக்க மாட்டோமா?அந்த் மேற்கு மாம்பலம் இரவுச் சந்துகள் நீங்கள் அறியாததா நான் அறியததா……? 

அவமானத்திற்கு மட்டும் என்ன பஞ்சம். ஒவ்வொரு தினமும் மூன்று முறை குளிப்பது வெறும் புற அழுக்குக்கு மட்டுமா? ஏதோவொரு வகையில் அது கண்ணீரோடு செய்துகொண்ட உடன்பாடு.

பிரபாகரனின் முடி சிலுப்பி விட்டது. அதற்குத்தான் அத்தனை அடி அவன் வாழ்வில்.. நாம்தான் அதிகமாக முடியே வைத்துக் கொள்வதில்லையே.

தாமிரபரணி படுகொலை இரவு உங்களுக்கும் எனக்கும் என்னவாக இருந்தது. “உள்புறம் வழியும் துளிகளாக” இருந்தது.

இந்த ஊர் வாழ முடியாததாய் இருக்கிறது. உங்களையும் என்னையும், நம்மைப் போன்றவர்களையும் சேர்த்துப் பிசைந்தால் அதுதான் பிரபாகரன். நாம்தானே பிரபாகரன். ராமே பிரபாகரன் தான். ராம் நிச்சயமாய் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும். இல்லையெனில் இத்தனைத் துல்லியமாய் அடியை, வலியை, அவமானத்தை, வேதனையை பதிய முடியாது.
இப்படித்தான் இருக்கிறது சென்னை.

புதுப்பேட்டை ’தனுஷ்கள்’ குவாலிஸில் வலம்வர அவர்களுக்காக சற்றே காத்திருந்து போகிறார் கபாலீஸ்வரர். தன் தேவியோடு…….

சஞ்சய் சுப்பிரமணியம் புக்பாயிண்ட்டில் பாட,  எதிரே தர்கா. வாசலில் இன்னும் புதுமைப்பித்தனின் “மாசானத்தின் சந்ததிகள்’ பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சதுர அடி 3000 போகும் பிளாட்டின் சோபாவில் காற்றில் படபடக்கிறார் நமது கேர் ஆப் பிளாட்பாரம் ரேகா மேடம் ஆனந்த விகடனில்.

எதிர்வீட்டில் கழிப்பறைக்குப் போயிருப்பவரின் உபாதைகளை சப்த வடிவில் கேட்டுக் கொண்டே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது திருவல்லிக்கேணி ஒண்டுகுடித்தன வாழ்வு.

குப்பைகள் காற்றில் அலைபாய அதனோடுதான் நாம் ’கலாஷேத்ரா’ போக முடியும்.

50 காருக்கு ஒரு பஸ் வீதம்தான் உங்களுக்கு பேருந்து நிறுத்ததில் பேருந்துகள் வரும்.

மிகவும் செழிப்பான, சிவப்பான நவ நாகரீக நங்கைகள் நம்மைக் கடந்து போக நாம் ’வாலிப வயோதிக அன்பர்க:ளைப்’ போல் நிற்க வேண்டும். அவர்கள் பார்வையில் நாமும் நமக்குப் பக்கத்தில் நிற்கும் பசு மாடும் வேறு வேறல்ல.

ஏர் பஸ்ஸில் ஒய்யாரமாய் மனிதர்கள் வீற்றிருக்க……. கோயம்பேட்டில் அரசுப் பேருந்துக்கு யுத்தம் போல் ஓடுகின்றார்கள் தென் தமிழக மக்கள். .
செளகார்பேட்டை குஜராத்திகள் தசரா கோலாட்டம் முடிந்து பின்னிரவு வெளியே வரும்பொழுது  வால்டெக்ஸ் ரோட்டிலேயே 50 வருஷமாய் வாழும் முனுசாமிகளும் வேணிகளும் உறங்கியிருப்பார்கள். இவர்களின் வாசனைத் தெளிப்புகள் அவர்களின் உறக்கக் கனவுகளில் மணமூட்டியிருக்கலாம்.

நிச்சயமாய் சென்னை வாழத் தகுதியான ஊர் இல்லை. இத்தனையும் பார்த்து விட்டு எப்படி வீடு வந்து, டி வி பார்த்து……… அதற்கு  நமது ஊர் தேவலை..

ரவிக்குமார் ஒருமுறை எழுதினார். சென்னை எனக்கு வெளிநாடு போல் இருக்கிறது என. நமக்கு இந்நகரம். அந்நிய தேசம்தான்

ராத்திரி பிரட்-பட்டர்-ஜாமின் கூடுதல் சிவப்பிற்கு சர்வதேசச் சேனல்களின் ஈராக்கிய குண்டு வெடிப்புகளில் சிதறிய ரத்தத்தை தொட்டுக் கொண்டு சாப்பிடும் வாழ்வு, நல்லவேளை நமக்கில்லை.
ஏற்கனவே நமக்கு நிறைய இல்லை.
அதனோடு இதுவும் இல்லை.

மிகுந்த அன்புடன்,
சாம்ராஜ்.
2007. அக்டோபர் ஏழு.


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com