இவருடைய கவிதைகள் காட்சியில் தொடராய் வெளிவருகின்றன.
இவரின் ஏனையக் கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.
1
மன மைதுனமே
ஞானமடி பைந்தொடீ .
தன்மை கரைந்து
முன்னிலை தேங்கிவிடும் விஷயமடி .
குழந்தை பொரிக்கும்
எச்சில் முட்டைக்குள்
நிகழ்ந்தடங்கும் பேரியக்கம் .
தன் குஞ்சியை நோண்டும்
குழந்தையின் அக்கண சூன்யம்
நீர் அதிர விழும் ஒளியின் சூட்சுமம்
அது காண் தோழி .
தத்வமஸி அப்ரமேயம் .
2
முதல் முறையாய்
தான் மூத்திரம் விடுவதை
பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை
பார்த்துக்கொண்டிருக்கும் நான்
கடவுளாகி நிமிர்கிறேன் அம்மா .
3
வரைந்த கோலத்தின் நடுவே
பூ வைக்க வேண்டி ,
பறிக்க போய் வந்த இடைவேளையில்
சுடச்சுட மலம் கழித்து போயிருக்கிறது
நாய் .
இருக்கட்டுமே ,
காய்ந்து வாடி விடப்போகும்
அந்தப்பூவும் .
4
நாசமாய்ப் போக
பாம்பும் ஏவாளும்
அந்தத் தோட்டத்தில்
ஒரு பூ கூடவா
இருந்திருக்காது
ஆதாம் பறிக்க ?
5
பாட்டி வடை சுட்டக் கதை
வேண்டாம் அம்மா
என் ஈழத்தோழி எதிரியை
சுட்ட கதை சொல் .
- கார்த்திக் நேத்தா
