வெளிச்சம்
ஒரு குரலைப் போல
என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறது .
எனக்கெதிரே
கிடக்கும்.
இலையின் மௌனம்
யாரின் சீற்றம் ? அல்லது
அதன் சரசரப்பு
எதன் மௌனம் ?
கண்ணாடி முன் நீளும்
பெருவெளியில்
நான் தான் யார் ?
மாதவிடாய் அந்தியை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சிரித்தபடி கடக்கிறான்
பழக்கமான பைத்தியக்காரன்
அவன் ஏன் என்னைப்பார்த்தால்
மட்டும் சிரிக்கிறான் ?
காயப்போட்ட காயம்
மீண்டும் உடுத்தத்தானே
மனமே ?
நதியாக இருந்த போது
வேண்டிய கரைகளை
காற்றான பிறகு தருவதேன் ?
நீரில் ஒளித்துவைத்த நீர் நான்
என்னைக் காண யாரைக் கெஞ்சுவாய்?
கிணற்றில் காயப்போட்ட நிலவை
வெறிக்கும் மீன் போல கடவுள்
என்னை வியப்பான் .
ஊற்றைப் போல
எளிமையாய் இருக்கும் என்னிடம்
வெளிச்சம் மட்டுமே
ஒரு குரலைப் போல
பேசிக்கொண்டிருக்க முடியும்
- கார்த்திக் நேத்தா
