பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 20, 2010

கோடிட்ட இடங்களை நிரப்புக 1 - சுமதி









சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச் சார்ந்தவர்முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,  முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர்தற்போது கோவையில்  கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.  இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு, கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன், வார்த்தை, வடக்கு வாசல்அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன

இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்று தொடராய் இடம் பெற்றுள்ளன.
அதை தொடர்ந்து  கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.  

பகுதி 1



பெற்றோர்களும் மாணவிகளும் கல்லூரி முதல்வர் அறைக்கு முன்னால் காத்து நின்றார்கள். மாணவிகள் சேர்க்கை நடந்து கொண்டிருந்தது. வயதான பணியாள் ஒருவர் அடிக்கடி அந்த அறைக்குள் போவதும் வருவதுமாக இருந்தார். அவள் அந்த இடத்திற்கு வந்து ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. “காத்துக்கிடக்கும் கூட்டமெல்லாம் பார்த்துவிட்டு வந்த பிறகுதான் நான் போய்ப் முதல்வரைப் பார்க்க வேண்டும் போல” என்று நினைத்துக் கொண்டாள்.





எதற்கும் பணியாளிடம், தான் வந்த விசயத்தைச் சொல்லிப் பார்க்கலாம், என்று நினைத்தாள். அடுத்த முறை மரக்கதவுகளைத் திறந்து அவர் வெளிவந்த போது “தாம்பரம் காலேஜ்ல இருந்து வந்திருக்கேன். தமிழ்த்துறைத்தலைவர் அனுப்பியிருக்காங்க. பிரின்சிபாலைப் பார்க்கணும்” என்று சொன்னாள். உள்ளே சென்று கேட்டுவந்து சொல்வதாகப் போனவர், உடனே திரும்பி வந்து “உள்ளே கூப்பிடறாங்க” என்றார்.

கதவுகளைத் திறந்து கொண்டு வணக்கம் தெரிவித்துவிட்டு “தாம்பரம் காலேஜிலிருந்து வர்றேன் மேம். நாச்சிமுத்து சார் உங்களைப் பார்க்கச் சொன்னாங்க”  கையிலிருந்த கடிதத்தை முதல்வரிடம் தந்தாள்.
கடிதத்தை வாங்கி பார்த்து படித்துவிட்டு மெல்லிய சிரிப்போடு நிமிர்ந்தவர் “இப்ப அட்மிஷன்ல பிஸியா இருக்கேன், ஒரு அரைமணி நேரமோ, இல்ல ஒரு மணி நேரமோ கழிச்சு கூப்பிடுறேன். வெயிட் பண்ண முடியுமா?” என்றார்.

“வெயிட் பண்றேன் மேம்” என்று சொல்லிவிட்டு அந்த அறையை ஒட்டி வெளியிலிருந்து வருபவர்களுக்காகப் போடப்பட்ட நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தாள், வெளியே நல்ல வெயில். வியர்வையைத் துடைத்தபடி, வருகிறவர்களையும் போகிறவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அரைமணி நேரம் ஓடிவிட்டது. நாவறண்டு கொண்டே வந்தது. காலையில் நேரமிருந்தும் சாப்பிட பிடிக்காமல் வயிற்றைக் காலியாக வைத்துக்கொண்டு வந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது. ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி நடக்க இருந்தாலோ, முக்கியமான ஒருவரைச் சந்திக்க இருந்தாலோ, இவளுக்கு முதல் நாளே பரபரப்பு தொற்றிக்கொள்ளும். தூக்கமும் சாப்பாடும் சரியிருக்காது. அடுத்த நாள் நடக்கப் போவதை விதவிதமாக யோசிப்பாள்.

எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளிருந்து அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் லேசான பசிமயக்கமும் உருண்டோடியது. கோப்புகளை எடுத்து படிப்புச் சான்றிதழ்கள் எல்லாம் வரிசையாக இருக்கின்றனவா என்று மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொண்டாள். எத்தனை முறை, படித்த கல்லூரிகளின் பெயர்களையும், மதிப்பெண் பட்டியல்களையும், அவைகள் தாங்கி நிற்கும் முத்திரைகளையும் திரும்பவும் பார்ப்பது! கண்களை வெளிப்புறமாக திருப்பி வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். அவள் உட்கார்ந்த இடத்திலிருந்தே, தான் நடந்து வந்தப் பாதையையும் நுழைவாயிலையும் அவளால் பார்க்க முடிந்தது. நுழைவாயிலைத் கடந்ததும் விருந்தினர்கள் தங்குவதற்கான கட்டிடம் இருந்தது. அடுத்த கட்டிடம், கலையரங்கம் என்ற பலகையை மாட்டி நின்றது. 

மரங்களுக்கு நடுவேதான் கட்டிடங்கள் நின்றன. விதவிதமான மரங்கள் குறைந்தது அவைகளின் வயது ஐம்பதைத் தாண்டியிருக்க வேண்டும். அவற்றின் மேல் அடர்த்தியாக காட்டுக்கொடிகள் பின்னிப் படர்ந்திருந்தன.
சிறு நெல்லியின் வாசம் இன்னும் என்னன்னவோ பச்சிலைகளின் வாசம் எல்லாம் கலந்து அந்த அறைக்குள் வியாபித்திருந்தது. பாதையை ஒட்டிய இருபுறமும் இருந்த பூச்செடிகளும், அப்பொழுதுதான் தண்ணீர் விட்டிருப்பார்கள் போல. செடியை சுற்றிலும் இருந்த மண்ணில் ஈரம் காயாமல், இலைகளில் நீர்த்திவலைகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு நின்றன. அவளிருந்த கட்டிடம் எல்லா வசதிகளுடன் கூடிய பழைய கட்டிடமாக இருந்தது. பெரிய பெரிய தூண்களை முன்னே வைத்துக் கொண்டு நின்றது. மேற்கூரையின் விளிம்பில் வேலைப்பாடுகளுடன் கூடிய மரவளைவுகள், உன்னிப்பாகப் பார்த்து இரசிக்கத் தெரிந்தவர்களை எப்படியும் ஒரு வினாடியாவது நிற்க வைத்துவிடும்.

கீழ்தளமே உயரமாக அமைக்கப்பட்டிருந்தது. பதினோர் படிகளைக் கடந்த பிறகுதான் சமதளம் தெரிந்தது. படிகளின் ஓரங்களில் நின்ற செவ்வக வடிவத்தொட்டிகளில் பராமரிக்கப்பட்ட கத்தரிக்கப்பட்ட பூச்செடிகள் நின்றன. கட்டிடத்திற்கு முன்னால் மிகப் பெரிய அளவில் வட்டவடிவமாக அமைக்கப்பட்டு வெட்டி விடப்பட்ட புல்தரையின் நடுவே, ஒரே ஒரு ரோஜாச் செடி பூவில்லாமல் நின்றது. அவள் அந்த இடத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகியிருந்தபோது, உணவு இடைவேளைக்கான நீண்ட மணி ஒலித்தது. அலுவலகப் பணியாள் வந்து “அம்மா லஞ்சுக்கு போயிருக்காங்க. இனி ரெண்டு மணிக்குத்தான் பார்க்க முடியும்” என்றார். முதல்வர் அறைக்கு இரண்டு வழிகள் இருப்பது அப்போதுதான் தெரிய வந்தது, அவள் காத்திருந்த அறை வழியாக முதல்வர் வெளியேறவில்லை. மற்றொரு வழியாக வெளியேறியிருக்க வேண்டும்.

கல்லூரியில் சேர்வதற்காக அப்பா அம்மாவுடன் வந்திருந்த மாணவிகள் இருந்த பக்கம் அமைதியாக இருந்தது. சில மாணவிகள் பள்ளித் தோழிகளோடு வந்திருந்தார்கள். அவர்கள் நின்றப் பக்கம் சிரிப்பும் சத்தமுமாக இருந்தது. சாந்தியைப் போன்றே முதல்வரைப் பார்ப்பதற்காக அவர்களும் காத்து கிடந்தார்கள். இளங்கலையில் சேர்வதற்காக போய் முதன்முதலாகக் கல்லூரியில் காத்திருந்த நிகழ்ச்சி அவளின் நினைவுக்கு வந்தது.

மாணவிகள் சேர்க்கை முடிகின்ற சமயத்தில் வந்ததால் ஸ்டாண்டர்டு ஃபையர் வொர்க்ஸ் ராஜரத்தினம் கல்லூரியில் அவளுக்கு அறிவியல் வகுப்புகளில் இடமில்லையென்று சொல்லியிருந்தார்கள். சிவகாசியின் சுற்றுவட்டாரத்தில் அதுதான் நல்ல கல்லூரியாகவும் பெண்களுக்கான ஒரே கல்லூரியாகவும் இருந்தது. மாணவிகள் சேர்க்கை சீக்கிரம் நடந்து முடிந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அறுபது சதவீத மதிப்பெண்கள் இருந்தும் இளங்கலையில் சேர்வதற்குக் கூட அவளால் முடியவில்லை.

படிக்கும்போதே அடுத்து என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்ததில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை கடிதம் மூலமாக தாத்தா தெரிவித்தபோது மஹாராஸ்டிராவில் அம்மா, அப்பா தங்கைகளுடன் இருந்தாள். மதிப்பெண்களைத் தெரிந்து கொண்டு கல்லூரியிலோ ஆசிரியர் பயிற்சிப்பள்ளியிலோ சேர்த்துவிட்டு வரும்படி அம்மாவுடன் அவளை அனுப்பி வைத்தார் அப்பா.

ஒவ்வொரு வருட விடுமுறையும் மஹாராஷ்ட்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இருந்த மாகாம் கிராமத்தில்தான் கழித்து வந்தாள்.

- சுமதிராமசுப்ரமணியம்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com