இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. காட்சியில் இவரது கவிதைகள் தொடராக வரயிருக்கிறது.
குறுந்தாடி குத்துகிறதென
முத்தமிட தடுக்க
முகச்சவரம் செய்து வந்தாய்..
இடங்களில் ரத்தம் கசிய
முத்தமிட்டேன்
கண்ணீருடன்
உன் காயங்களில் ...
பின்னும்
அழுது கொண்டே இருந்தேன்
சிறுகத்தியிலேற்பட்ட
காயத்திற்கு
முத்தத்தாலான
காயமே மேலென...
இரவுகளில்
வரும் சிறு மரணத்தின் போது
என் குணமறிந்து
நடக்கத் தவறுமுன் நேசம்
வித்திடுகிறது
மீளா பெருந்துயருக்கான
பாதையொன்றை..
உன்னை
வெறுப்பதாக
சொல்லுமென்
சொற்களில் நிழலாய்
நகர்வது
உன் மீதான அதீத விருப்பமே..
- இவள்பாரதி
