பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 28, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் - 18 - யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் "அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர் கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்

பகுதி 18 

அஞ்சனாவின் நாட்கள் எப்போதும் போலவே கடந்து போய் கொண்டிருந்தது. டேமியன் திரும்ப மாஹேவிற்கு சென்ற பின், லூயிஸும் வேலையில் அமிழ்ந்திருந்தான். தனிமையில் முக்கால்வாசி நேரமும், எப்போதாவது அவர்களோடு தொலைப்பேசியில் பேசுவதில் பொழுதுகள் கழிந்தது அவளுக்கு. இரண்டு மூன்று நாளைக்கு ஒரு முறை பேசும் அம்மா, அக்கம்பக்கம் நடப்பவை என்று ஏதோ ஒரு கதை சொன்னார்கள். 

பக்கத்து வீட்டில் நடக்க இருக்கும் திருமணம், எதிர் தெருவில் நடந்த ஈமசடங்கு, கடையில் புதிதாய் பார்த்த புடவை நிறம், இப்படி தினத்திற்கு ஒன்று. என்ன தான் முயன்றாலும், தன் வாழ்க்கையின் ஒரு அங்கமாக, அம்மாவின் தினங்கள் ஒட்டாது திரிந்து தென்பட்டது அவளுக்கு. ``Loneliness brings the best and worst out of a person`` என்று படித்த அஞ்சனாவிற்கு, லா டிக் சம்பவத்திற்கு பிறகு, தனக்கு என்ன நேர்கிறது என்று புரிபடவே இல்லை. ஆனால் நாட்கள் கழிவது தேதி மாற்றி மருந்து சீட்டில் எழுதும் போது தான் உணர்ந்தாள். 

சிறு வயதில் இருந்து அஞ்சனா வெளியே தைரியசாலியாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் வெகுவாக பயந்தவள். எப்படி அழுகையை வெளியே காட்ட மாட்டாளோ, அது போல பயத்தையும் காட்டவே கூடாது என்று வெறியாக எண்ணினாள். வெளியே கடினமாக காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் எல்லாவற்றிற்கும் பயப்பட ஒரு வேளை சிறுவயதில் அவள் சென்ற பொருட்காட்சியாக மிக பெரிய காரணமாக இருக்கலாம். 

அஞ்சனாவிற்கு சென்னையில் நடக்கும் சுற்றுலா பொருட்காட்சி என்றால் மிக பிடிக்கும். அஞ்சனாவிற்கு ஆறு வயது இருக்கும் போது, கோடை விடுமுறைக்கு வந்த அத்தை குடும்பத்தினருடன், சென்னை சென்று, பொருட்காட்சியில் இருக்கும் எல்லா இடங்களும் சுற்றி பார்த்து, ஒவ்வொரு கடையாக படையெடுத்து, கைக்கொள்ளாது பெரிய அப்பளம் சாப்பிட்டுக் கொண்டே நடப்பது அவளுக்கு பிடித்தது. கால் மணலில் புதைய, அப்பாவின் கையை பிடித்து நடந்து கொண்டிருந்த போது, பளபள என்ற கடையில் மின்னிய எதையோ கிட்டே சென்று பார்க்கவேண்டி அப்பா கையை விட்டு சென்று, கொஞ்சம் நேரம் நின்று சுற்றி வந்த கலர் கலர் பஞ்சுமிட்டாயை கண்டு வாய் ஊறி, அப்பா வாசிக்கும் Harmonica Mouth organ போலவே கடையில் இருந்ததை, சுட்டிக்காட்ட திரும்பி பார்த்தால், யாரையுமே காணவில்லை அவள் அருகில். 
அந்த மங்கிய சாயங்கால வேளை, கண்ணை உறுத்தும் வண்ண விளக்குகள், ஒரே சமயத்தில் உரக்க பல திசைகளில் இருந்து கத்திக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்த ஒலிப்பெருக்கிகள், மூக்கில் வந்து மோதிய உணவு பண்டங்களின் வாசம், காலின் செறுப்புக்குள் சிக்கியிருந்த மணல் துகள், இடுப்புயரமே இருந்ததால், தான் இருப்பதே உணராது தன்னை தாண்டி நடந்த நூற்றுக் கணக்கான பேண்ட்களும் புடவைகளும் தாங்கிய கால்கள், அப்பாவோ வேறு யாரேனும் குடும்பத்தினரோ இருப்பார்களோ என்று ஒவ்வொரு முகமாக நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்ததும், கையில் அதுவரை ருசித்த அப்பளம் கீழே போட்டு விட்டு, கையில் பிசுபிசுவென ஒட்டிய எண்ணையோடு, பயந்து சுற்றி சுற்றி நடந்தது இன்னமும் அஞ்சனாவிற்கு நினைவில் உள்ளது. 

இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு பாட்டியிடம் சொல்லாது, பக்கத்து வீட்டு மஞ்சு அக்காவோடு, அருகில் இருந்த கோவிலில் நடந்த பாட்டு கச்சேரிக்கு போனதும், அரைமணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததும், பாட்டி பயங்கர கோபத்தில், தென்னந்துடைப்பக்குச்சிகள் நான்கைந்தை எடுத்து காலில் சுறீர் என்று அடித்தப்படி திட்டின விஷயம் நினைவுக்கு வந்து இன்னும் பயமுறுத்தியது, அந்த சமயம் அஞ்சனாவை. பாட்டிக்கு கூர்மையான மூக்கும், பெரிய விழிகளும் புருவமும், கொஞ்சம் மெல்லிய உதடுகளும் இருக்கும். கோபத்தில் கண்ணை உறுட்டினால், எல்லா பிள்ளைகளும் பயந்து போவார்கள். சொல்லாது வீட்டை விட்டு போனதற்கு, அஞ்சனாவை ஐந்து நிமிடம் விளாசிவிட்டு, ``இப்படி வீட்டில் இருந்து தெரியாமா, வெளியே எறங்கி போனா, எவன் வந்து பிடிப்பான் தெரியுமா. புள்ள புடிக்கிறவன் வந்து, கையை ஒடச்சி, கண்ணை நோண்டி, வேற ஊருக்கு கூட்டி போய் பிச்சை எடுக்க வச்சிருவான். இல்லைன்னா எங்கயாவது உன்னை வித்துருவான். யார் எப்படி நாசம் செய்வாங்களோ, தெரியாது! போவியா இனி வீட்டை விட்டு சொல்லாமா`` என்று இன்னும் இரண்டு சாத்து சாத்தினாள். ராத்திரி முழுக்க, அங்கங்கு கோடு கோடாய் வீங்கி எரிந்த கால்வலியால் தூங்காது முழித்திருந்த அஞ்சனாவிற்கு பாட்டி சொன்ன விஷயங்களின் அர்த்தம் கொஞ்சம் புரிந்தும் புரியாது போனாலும், மனதில் நன்கு பதிந்துப்போனது. 

இதை தொடர்ந்து பொருட்காட்சியில் தொலைந்து போனதும், தன்னை சர்வநிச்சயமாக யாரோ கை கால் உடைத்து பிச்சை எடுக்கத்தான் வைக்க போகிறார்கள். கண் தெரியாது, கிழிந்த துணியோடு, பசியோடு, எல்லோரிடமும் ``அம்மா! பசிக்குது.. அப்பா! பசிக்குது.. என்று தான் கேட்க போவதாக எண்ணிய சமயம் அழுகை வரத்தொடங்கியது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், கேவி கேவி அழுதபடி அவள் செல்ல, அங்கு இருந்த கருப்பாய், குண்டு தொப்பை வைத்து, பெரிய மீசை வைத்த ஒருவர் கட்டை குரலில், `` என்ன பாப்பா! தொலைஞ்சு போயிட்டியா. எங்கூட வா, நான் உங்க அப்பா அம்மா எங்கன்னு தேட சொல்லுறேன்`` என்றார். அவரை பார்க்கவே அஞ்சனாவிற்கு பயமாக இருந்தது. அவரோடு செல்வதா இல்லை தான் இப்படியே நிற்பதா என்று தெரியாது, இன்னும் பலமாக அழத்தொடங்கினாள். அந்த ஆள் பக்கம் வந்து அஞ்சனாவின் கையை பிடிக்க, அவள் அலறி அந்த இடத்தில் இருந்து ஓடத்தொடங்கினாள். எவ்வளவு தூரம் ஓடினாள், எங்கே ஒடினாள் என்று தெரியாது அழுதுகொண்டே ஓடியது இன்னும் கனவில் என்றாவது வரும்.

வெகு தூரம் ஓடி, சுற்றி சுற்றி பார்த்து, அழுதுக்கொண்டு அஞ்சனா நின்ற இடத்தில் தன்னை சுற்றி ஒரு கூட்டம் கூடி, அவளை எல்லோரும் பல்வேறு கேள்விகள் கேட்கவே, ஒன்றிற்கும் பதில் சொல்லத்தோன்றாது அதிர்ந்து நின்றாள். ஏனோ சுற்றி நின்ற கூட்டம் முழுக்க ஆண்கள் மட்டுமே தான் இருந்தார்கள். நன்கு இருட்டிவிட்டது, இனி தன் குடும்பத்தை எப்போதும் பார்க்க முடியாது என்று தோன்றி, ஒரு வார்த்தையும் சொல்லாது தேம்பி தேம்பி அழுத நேரம், எங்கிருந்தோ ஒரு கை வந்து அஞ்சனாவை அப்படியே தூக்கி கட்டிப்பிடிக்க, அப்பா. அப்பாவின் வாசம், அந்த நொடி, அந்த அரவணைப்பு, அந்த பாதுகாப்பான உணர்வு அஞ்சனாவால் மறக்கவே முடியாது போனது. அப்பாவின் கழுத்தை கட்டிப்பிடித்து நடுங்கியபடி இன்னும் பலமாக அழுத அவளை, ``நான் இருக்கேண்டா. அழாதே! என்று சொல்லி முதுகை தடவியபடி நடந்தது, இப்போதும் கேட்க தோன்றும். மீண்டும் எல்லோரையும் பார்க்கும் போது, ஆளுக்கொரு பக்கமாக அலறி அடித்து தன்னை தேடிக்கொண்டு இருந்தார்கள் என்று தெரிந்து அத்தனை சந்தோஷப்பட்டாள்.

அன்று எப்படி கூட்டம் பயமுறுத்தியதோ, இன்றைகளில் தனிமை பயமுறுத்துகிறது அவளை. மிராண்டா கேட்டுக்கொண்டே இருப்பாள் தினம் வீட்டிற்கு செல்லும் முன், `` டாக்டர்! இன்று என்ன செய்ய போகிறீர்கள். எப்படி தான் தனியாக இருக்கிறீர்களோ! என்னை தனியாக இருக்க சொன்னால், எனக்கு பைத்தியமே பிடித்துவிடும்.`` என்று. நிஜம் தான். எத்தனை பெரிய கேள்வி, இன்று என்ன செய்வது என்பது. ‘Solitary confinement’ என்று குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பார்களாம். அஞ்சனா முதன்முதலில் அதை பற்றி கேள்வி பட்டப்போது, தனியாக இருப்பதில் என்ன பெரிய பிரச்சனை என்று எண்ணியிருந்தாள். ஆனால் மனநல மருத்துவத்துறை சார்ந்த புத்தகத்தில், ஒரு மனிதனை தனிமை எப்படி மாற்றுகிறது என்று படித்தப்பின் தான் புரிந்துக் கொண்டாள். 

``When I’m by myself for too long, I start to question my own understanding of reality – of who I am and what the world is really like `` என்று கைதியாக வெகு நாள் சிறையில் இருந்தவர்கள் பலர் சொன்னதாக புத்தகங்கள் சொன்னது. அஞ்சனாவின் உலகம் பயத்தால் சுருங்கிவிட்டது. சாயங்கால வேளைகளில் எப்போதும் போய் அமரும் கடற்கரையோரம் நிறைய நேரம் பேசாது அமர்ந்தது, சமயங்களில் மனதை லேசாக்கவாவது உதவியது. ஒரு சாயந்திரம் சென்று மீன்களுக்கு ரொட்டி பிய்த்து போட்டுக் கொண்டிருந்தபோது, ஜெப்பின் கார் வந்து அஞ்சனாவின் அருகே நின்றது. இன்னும் இருட்டாகாததால் அவள் பயப்படாது, அதே சமயம் அவன் பக்கம் திரும்பாது அமர்ந்திருந்தாள். ஜெப் கார் விட்டு இறங்கி, அவளுக்கு அடுத்ததாக வந்து அமர்ந்தான். அஞ்சனா ஒன்றுமே பேசாது உள்ளுக்குள் லேசாக குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள். ஜெப்பும் பேசாது அவளை அடுத்து அமர்ந்திருந்தான் சிறிது நேரம், மீன்களை பார்த்தப்படி. அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்த அஞ்சனா, அந்த இடத்தில் இருந்து எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வெகு தூரம் நடந்தபின், திரும்பி பார்த்தால், ஜெப் அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை. அவள் நடப்பதை பார்த்தப்படியே இருந்தான். வீடு வந்து சேர்ந்த பின்னும் நெஞ்சு படபடப்பை அடக்க முடியவில்லை. வீட்டிற்குள் சுற்றி சுற்றி நடந்தாள். எல்லா கதவுகளின் தாழ்ப்பாளையும், சரியாக பூட்டியிருக்கிறதா என்று பார்த்தாள். அதன்பின் கடற்கரைக்கு போவதையும் நிறுத்திவிட்டாள்.

அந்த வார இறுதியில், அங்கு இருந்த ஒரு தமிழ் குடும்பத்தில் திருமணம் என்று சொல்லி வந்து பத்திரிக்கை வைத்து அழைத்திருந்தார்கள். திருமணம் மாஹேவில் இருந்த முருகன் கோவிலில் முடித்து, சாயந்திரம் reception அங்கு இருந்த பெர்ஜயா (Berjaya) ஐந்து நட்சத்திர  ஹோட்டலில் நடைப்பெறப்போவதாகவும், இவளை கூட்டிச்செல்ல கார் அனுப்பவதாக சொல்லி, ஏழு மணிக்கு தயாராக இருக்க சொன்னார்கள். அந்த குடும்பத்தின் பெரியவர் சேதுபதி படையாட்சி ஐயா, மிகவும் நல்ல மனிதர். கடுமையான உழைப்பாளி, நேர்மையான மனிதர். இரண்டு மகன்கள் அவருக்கு. பெரியவர் கட்டிய கடையில் எல்லோரும் வேலை செய்து கொண்டே, வேறு வேறு இடங்களில் கடைகள் கட்டி, இப்போது பெரிய அளவில் வர்த்தகம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது முதல் மகனுக்கு தான் திருமணம். 

சனிக்கிழமை ஆறு மணிக்கு அஞ்சனா கிளம்ப தயாராகி கொண்டிருந்தாள். அவள் எடுத்து வந்திருந்தது ஒரே ஒரு புடவை தான். சிகப்பு புடவையில் சிறிய சமிக்கி வைத்து தைத்திருந்த அழகான சேலையும் அதற்கு தோதான வேலைப்பாடுகள் செய்த ப்ளவுஸ், காதில் ஜிமிக்கி, கைகளில் வளையல், அணிந்து பொட்டு வைத்து பார்த்த போது, அழகாக தெரிந்தாள். வெளியே கார் ஒன்று வந்து நிற்கும் சப்தம் கேட்டு, இன்னொரு முறை கண்ணாடியில் முகம் சரிப்பார்த்துவிட்டு, செருப்பு அணியும் போது, கதவு தட்டும் ஓசை கேட்டது. கைப்பையை எடுத்துக்கொண்டு, கதவை சென்று திறந்தாள் அஞ்சனா. வெளியே, ஐயாவின் இரண்டாவது மகன் ப்ரதீபன் நின்றிருந்தான்.

அவனுக்கு ஹலோ சொல்லிவிட்டு, கதவை தாழிட்டு, திரும்பினாள் அஞ்சனா. ஜெனிஸ் வெளியே நாற்காலி போட்டு அமர்ந்து டீ அருந்திக்கொண்டிருந்தாள். புருவம் உயர அஞ்சனாவையும், ப்ரதீபனையும் மேலும் கீழும் பார்த்த ஜெனிஸிற்கு, பான் ஸ்வாய் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். புடவை லேசாக தூக்கிப்பிடித்தப்படி, காரின் அருகே வந்து பின் ஸீட்டில் அமர, ப்ரதீபன் திறந்த கதவிற்கு நன்றி சொல்லிவிட்டு, ஏறி அமர்ந்து பார்த்தால், கார் ஓட்டி வந்தது ஜெப். ப்ரதீபனும் ஏறி முன்சீட்டில் அமர, ஜெப் அஞ்சனாவை பார்த்து, பான் ஸ்வாய் என்றான். இவளும் பதில் சொல்லிவிட்டு, ஒன்றும் பேசாது இருந்தாள். கார் கிளம்பி, கோட் டோர் ( Cote d’or ) நோக்கி சென்றது. ப்ரதீபன் திரும்பி, `` புடவையில் பார்க்க வித்தியாசமாக இருக்கீங்க. அழகாக இருக்கீங்க `` என்றான். இவள் நன்றி சொல்லிவிட்டு, ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவளுக்கு, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது புரியவில்லை. 

ப்ரதீபன் பிறப்பால் தமிழன் என்றாலும், பிறந்தது முதல் இந்தியாவிற்கு அனேகமாக விடுமுறைக்கு தான் போய் வந்திருப்பான். மற்றப்படி, வளர்ப்பு முறையால் இவன் ஒரு முழு சேய்ஷல்வா தான். இங்கிலாந்து, அமெரிக்கா இங்கெல்லாம் பிறந்து வளர்ந்த இந்தியர்களை ``கோகோ நட்`` (Coconut) என்று தான் அழைப்பார்கள். அதாவது வெளிப்புறத்திற்கு இந்தியர் போல இருந்தாலும், மனதால் வேற்றுநாட்டவர் என்பது தான் அதற்கு அர்த்தம். அந்த வகையில் ப்ரதீபனும் ஒரு கோகோ நட் தான். 

இருவரும் பேசும் ஆங்கிலம் கூட ஜமைக்கன் ( Jamaican ) தோரணையில் தான் பேசினார்கள், எல்லா வார்த்தைகளின் முடிவிலும் `` யா மான் ( ya man ) என்றபடி. ஜமைக்கர்கள் ஆங்கிலம் வெகு கொச்சையாக இருக்கும். அவர்கள் உபயோகிக்கும் சிலேடையும், பல வார்த்தைகளும் புரியாது. இருவரும் பேசிக்கொண்டே வந்தாலும், அடிக்கடி ஜெப்பின் பார்வை இவளை கண்ணாடி வழியே பார்ப்பது தெரிந்தது. ஒருவழியாக பெர்ஜயா வந்து சேர்ந்ததும், மொத்த இடமும் பல வகை கார்களால் நிரம்பியிருந்தது. ப்ராலினில் இருந்த எல்லா தமிழர்களும் கூடியிருந்தார்கள், அத்தோடு பெரும்புள்ளிகள் எல்லோரும் பெரியவரை மதித்து வந்திருந்தார்கள். தமிழ் குடும்பங்கள் அத்தனை இருக்கிறது என்று அன்று தான் தெரிந்தது அவளுக்கு. முக்கால்வாசி பெண்கள் பட்டு புடவையில், கிலோ கணக்கில் நகை அணிந்தும், சிரிப்பு கொஞ்சம் தொலைந்தும் காணப்பட்டார்கள்.

சிரிப்பு எத்தனை அழகான விஷயம் வாழ்க்கையில். அங்கு இருந்த பெண்கள் எல்லோரும் ஏனோ அஞ்சனாவை பார்த்ததும், முகத்திற்கு முன் பெயருக்கு சிரித்துவிட்டு, பின்னர் அவளை தனியே விட்டு விட்டு அவரவர்கள் தெரிந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்திலும், சேதுபதி ஐயா அஞ்சனாவிடம் வந்து குசலம் விசாரித்து விட்டு, பக்கத்தில் இருந்த ஒருவரிடம், அவளை நன்கு உபசரிக்கும்படி சொல்லி போனார். கையில் ஜூஸ் கோப்பை ஒன்றை திணித்துவிட்டு, அவரும் சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் அங்கு இருந்த கும்பலை பார்த்தப்படி, அவர்கள் பேசுவதை கேட்டப்படி நின்றவளுக்கு அதற்கு மேல் மூச்சடைப்பது போல இருந்ததால், கடலை நோக்கி நடக்க தொடங்கினாள். 

பெர்ஜயா ஹோட்டல் கிட்டத்தட்ட 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. மிக அழகான சிறு குடில்கள் கடலை அடுத்தும், இந்தியன், க்ரியோல், இத்தாலியன், சைனீஸ் என்று வித்தியாசமான உணவகங்களும்,மூன்று பெரிய நீச்சல் குளங்களும், பொழுது போக்கு அம்சமான கேஸினோ, டிஸ்கோ க்ளப், டென்னிஸ் மற்றும் பாஸ்கட் பால் அரங்கம் இப்படி பல இருந்தது. இப்போது திருமண விருந்து கடற்கரையை ஒட்டியிருந்த பெரிய அரங்கில் நிகழ, சிறிய பந்தல்கள் அமைத்து, நடுவே நடனம் ஆடும் அரங்கும் அமைத்திருந்தார்கள். அங்கங்கே பெரிய தீப்பந்தமும், அலங்கார விளக்குகளும் வைத்து, கையில் தட்டுகள் தாங்கிய சர்வர்கள் சுற்றி சுற்றி நடந்த வண்ணம் இருந்தார்கள். அந்த கூட்டத்தில். கடலை நோக்கி இவள் வந்ததை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. 

அன்றும் முழு நிலா கடலை ஒட்டியபடி தகதகத்தது. கடலின் ஓரம் காலை நனைத்தப்படி, செறுப்பை ஒரு கையில் பிடித்தப்படி, இன்னொரு கையில் புடவையை லேசாக தூக்கி பிடித்தப்படியும் நடக்க தொடங்கினாள் அஞ்சனா. மனம் ஏனோ வலித்தது. பல வேலைகளில் அவளையே கேட்டுக்கொண்டாள், எது தான் தன்னை முழுமையாக சந்தோஷப்படுத்தும் என்று. தனக்கு என்ன தேவை என்று தெரிந்தவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள் தான். ஒன்றும் புலப்படாது, நாட்களை கடத்துவது இப்போதெல்லாம் முடியாத காரியம் போல தென்பட்டது. கூட்டமும், வெளிச்சமும், ஓசையும் நன்கு தாண்டி வந்தபின், நிலவை பார்த்தப்படி, மணலில் அமர்ந்தாள். அங்கு இருந்த பெண்கள் கூட்டத்தின் பேச்சுகளை அவள் கேட்க நேர்ந்தப்பின் தான் அங்கிருந்து போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றி நகர்ந்து வந்தாள்.

சங்கரன் சாரின் மனைவியும், சீனிவாசன் சாரின் மனைவியும், இன்னும் சில பெண்களும் பேசியது அவளுக்கு சிரிப்பு வந்தது, அந்த இருட்டில். அந்த கூட்டத்தில் ஒருத்தி கேட்டாள், ``நீங்க உங்க ஜாதில தானே கல்யாணம் செஞ்சுக்குவீங்க? இல்லை யாராவது இந்த ஊர்லயே பார்த்து கட்டிக்குவீங்களா? பொதுவா நீங்க எல்லாம் ஜாதி பாக்க மாட்டீங்க இல்ல? இங்க கூட ரெண்டு குடும்பம் இருக்கு, அந்த வீட்டு புள்ளங்க எல்லாம் சேய்ஷல்வா ஆளுங்க கட்டிக்கிடுச்சுங்க! என்று சொல்லிவிட்டு நமட்டு சிரிப்பு சிரித்ததும், அதற்குள் ஜிஜேயும் இன்னும் வயதான ஆட்களும் அஞ்சனாவை சுற்றி நலம் விசாரிக்க, பெண்களுக்கு இன்னும் பேச நிறைய விஷயம் கிடைத்தது போல ஆனது. இவர்கள் எல்லாரிடம் இருந்தும் ஒதுங்கி, நிலவொளியில் மணலில் அமர்ந்தது ஆசுவாசமாக இருந்தது.

அருகில் ஏதோ சப்தம் கேட்க, திரும்பி பார்த்தாள் அஞ்சனா. ஜெப் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஏனோ அவனை பார்த்தாலே, இவளுக்கு உள்ளுக்குள் அவன் கண்களும், லா டிக்கில் கட்டிப்பிடித்ததும், நினைவிற்கு வந்து அத்தனை பயம் கிளம்பியது. உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து கல்யாண மேடை தெரிந்ததால், ஏதாவது சம்பவத்தால், கட்டாயம் எல்லோருக்கும் தெரிய வரும் என்ற நம்பிக்கையில், மெல்ல எழ முயற்சி செய்தாள். ஜெப் அருகில் வந்து நின்று, அவள் வழியை மறித்தார் போல நின்றான். அஞ்சனா, `` நான் போக வேண்டும், வழி விடுங்கள்! `` என்று சொல்லி நடக்க முயன்றாள். ஜெப் உணர்ச்சியே இல்லாத குரலில், ‘’அஞ்சனா, I understand that you don’t want anything to do with me. But can i talk? ‘’ என்றான். 

நிற்கவேண்டுமா இல்லை உட்கார்ந்து பேச போகிறோமா அல்லது அங்கு இருந்து கிளம்பி போகப்போகிறோமா என்று தெரியாது, குழம்பி நின்றாள் அஞ்சனா. ஜெப் அமர்வோமா என்று கேட்டதற்கு, சிறிது நேரம் யோசித்து பின் அவன் பக்கம் அமர்ந்தாள். ஜெப் கொஞ்சம் நேரம் ஏதுவும் பேசவில்லை. ஜெப் திடீரென, ‘’ Do you know, Anjana? Hurt people, hurt people ‘’ என்றான். இது வரை இப்படி ஒரு வார்த்தையை கேட்டதில்லை, அவள். அவனுடைய நடத்தைக்கு மற்றவர்கள் மேல் பழிப்போட போகிறானா, அப்படியே ஆனாலும் இவளிடம் பேசி என்ன ஆகப்போகிறது என்று புரியவில்லை. 

மெல்ல அவன் சொன்னான், `` நான் என்னுடைய 5வது வயதில் இருந்து சிகரெட்டும், ஏழாவது வயதில் இருந்து ஹஷீஷ் குடிக்கிறேன். என்ன தவறுகள் இருக்கோ அது அத்தனையும் செய்திருக்கேன், கொலையை தவிர. என்னோட வாழ்க்கை உங்களை போல எல்லாம் இல்லை. என்னுடைய குழந்தை பருவம் வெறும் மூன்று வயது வரை தான். அதற்கு மேல் நடந்தது எல்லாம் எனக்கு இதுவரை நரகம் போல தான் `` என்றவன், ``இதெல்லாம் உன்கிட்ட ஏன் சொல்லுறேன்னு எனக்கு தெரியலை. ஆனா சொல்லணும் போல இருக்கு. அஞ்சனா! நீ குழந்தையா இருக்கும்போது யாராவது உன்னிடம் பாலியல் ரீதியா தவறா நடந்திருக்காங்களா? `` என்று கேட்டதற்கு, அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அஞ்சனா. 

ஜெப் சிறிது நேரம் எதுவும் பேசாது இருந்து, பின்னர், `` உடலுறவுன்னா என்ன செய்வாங்கன்னு எனக்கு மூன்று நாலு வயதில இருந்தே தெரியும். என் அப்பா எனக்கு யாருன்னே தெரியாது. அம்மாவுக்கு நிறைய ஆண் நண்பர்கள். அம்மா பலரோடு படுத்து இருக்கறதை நான் சின்ன வயதிலே இருந்து பார்த்து இருக்கேன். என்னை என்னோட அம்மாவோட காதலன், போதைல அது போல தவறா நடக்க முயற்சி செய்தப்போ, எனக்கு வயது நாலு இருக்கும். I felt so dirty inside. அது போல சம்பவத்திற்கு பிறகு, எனக்கு முழிச்சு இருக்கவே பிடிக்கலை, அறுவெறுப்பா இருந்தது. என்னை நினைச்சா, எனக்கு நடந்ததெல்லாம் நினைச்சா! அம்மா சுருட்டி வச்சிருந்த போதை சிகரெட்டை குடிச்ச போது, அதுல வலி குறைஞ்சாப்புல இருந்தது. அதுக்கு அப்புறம் கோபம் மட்டும் தான் இருக்கு மனசு முழுக்க. தைரியமா தான் இருக்கேன். இப்போ நான் குடிக்கலைன்னா, கஞ்சா பிடிக்கலைன்னா, திரும்ப பழைய நினைவு எல்லாம் வருது. அப்ப செத்து போயிரலாம் போல இருக்கு. எல்லாரையும் கொல்லலாம் போல இருக்கு. Anjana! Hurt people hurt people.`` என்றான் திரும்பவும்.

இருட்டில் குரல் குழைந்து, உடல் லேசாக உதறியபடி பேசிய அவனுடைய கண்கள் நீரால் பளபளத்தது. அஞ்சனா முதன்முதல் அவனை வெறுக்காமல் நிமிர்ந்து பார்த்தாள். அவன் கையை லேசாக தொட்டு, ‘’ I’m sorry you had to go through all those tough times, Jeff ‘’ என்றாள். ஜெப் அவளை பார்க்க, அஞ்சனாவின் கண்ணிலும் நீர் கோர்த்திருந்தது. `` நம் வாழ்க்கையின் தொகுப்பு, நாம் எடுக்கும் முடிவுகள் தான். உனக்கு நேர்ந்ததை நினைச்சு, நான் வருத்தப்படுறேன். ஆனா உனக்கு நேர்ந்ததே, நீ மற்றவர்களுக்கும் தரே. You are making your history repeat in others. அதனால, உன்னை நினைச்சு பரிதாபப்பட்டாலும், நீ செய்யும் காரியங்களை என்னால ஏத்துக்க முடியாது. But its your life and your choices’’ என்று சொல்லி எழுந்து நடந்தாள், கூட்டத்தை நோக்கி அஞ்சனா.

- யமுனா ராகவன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com