மணிகண்டனும் சாந்தியும் இந்த ஊருக்கு வந்து இன்னும் ஒரு வாரத்துல சரியா மூனு வருஷம் ஆகப்போகுது. ஊருக்குள்ள முதன்முதலில் அவர்கள் வந்த அந்த நாளை மொத்த ஊருமே மறந்திருந்தாலும் கண்டிப்பா மணிகண்டனும் சாந்தியும் அந்த நாளை எப்பவும் மறக்க மாட்டார்கள். ஒரு வாரம் விடாம கொட்டித்தீர்த்த பேய் மழை ஓய்ந்து ஓடி ஒளிந்த ஒருநாள் அது. குறுக்குத்துறை முருகன் கோவில் கோபுரம் முக்கி பெருக்கெடுத்து ஓடிய தாமிரபரணி வெள்ளம் வடிய தொடங்கிய ஒரு நாள் அது. நாளு நாளா கழிவோட கழிவா கெடைக்குள்ள கிடந்த ஆடு மாடுகள் சந்தோசமாய் மேச்சலுக்கு கிளம்பிய ஒரு நாள் அது. பள்ளிகூடத்து பிள்ளைங்க அடியோடு வெறுத்த பள்ளிக்கூடத்துக்கு பெரும் விருப்பத்தோடு கலர் ஆடைகளுடன் பள்ளிக்கு கிளம்பிய ஒரு நாள் அது.
ஊரின் மேற்கு திசையிலிருந்து பொட்டைக்குளம் சம்புக்காட்டு ஒத்தயடி பாதை வழியாகத்தான் முதன்முதலில் மணிகண்டனும் சாந்தியும் இந்த ஊருக்குள் வந்தார்கள். சாந்தி கையில் ஒரு மூன்று மாத ஆண் குழந்தையையும் மணிகண்டன் நிறைய துணிகள் அமுக்கப்பட்ட ஒரு பழைய பையையும் வைத்திருந்தான். இரண்டு நாள் பசி மயக்கத்திலும் வெகு தூரம் ஓடி வந்த களைப்பிலும் அழுது அழுது வீங்கிய கண்களோடும் எடுத்து முடியாத கூந்தலோடும் இருந்தாலும் சாந்தி அதே கொள்ளை அழகோடுதான் இருந்தாள். எந்த திசையில் எந்த ஊரில் இருக்கிறோம் என்கிற பயமும் படபடப்பும் மணிகண்டனின் கண்களில் பார்த்து சாந்தியும் அந்த ஆண் குழந்தையும் கொஞ்சம் மிரண்டு போய் தான் இருந்தார்கள்.
குட்டிப்பரும்பின் மீது உள்ள ஒத்தரூபாய் பிள்ளையார் தான் அவர்களுக்கு இந்த ஊரை காட்டிக்கொடுத்தது. அடைமழை கழுவிய அந்த பெயர் தெரியாத ஊரின் அழகை நம்பி அவர்கள் ஊருக்குள் நடந்தார்கள். அந்த ஊரின் விவசாய சங்கத்தின் முன் தாமிரபரணி வெள்ள சேதங்களையும் மழையின் அட்டகாசங்களையும் பற்றி வியப்பாய் பேசிகொண்டு இருந்த ஊர் பெரியவர்கள் அவர்களை விசாரிக்கும் முன்னே அவர்கள் காலில் விழுந்து மணிகண்டனும் சாந்தியும் அந்த மூன்று மாத குழந்தையும் அழுது கதறியதும் ஊர் கூடிவிட்டது.
“ஐயா எங்களுக்கு கோவில்பட்டி பக்கத்துல நாங்க ரெண்டுபேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டது ஊருக்கு பிடிக்கல எங்கள வாழ விடாம விரட்டுறாங்க ஊர் தெரியாம திசை தெரியாம ஓடி வந்து நிக்கிறோம்யா”, மணிகண்டனுக்கும் சாந்திக்கும் தாரை தாரயாய் வழிந்த கண்ணீர் அவர்களின் உள்ளங்காலுக்கு அடியில் உள்ள மண்ணில் தேங்கியது. அந்த அடை மழையின் ஈரம் மண்ணில் மட்டுமல்ல அந்த ஊர் மனிதர்களிடமும் காயாமல் இருந்ததால் அவர்களுக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டது. பெயர் வைக்காத அந்த மூன்று மாத குழந்தைக்கு ஊரின் குலசாமியான பாண்டியராஜாவின் பெயரையும் அன்றுதான் ஊர் பெரியவர்கள் சூட்டினார்கள்.
இப்போது மணிகண்டனுக்கும் சாந்திக்கும் அந்த ஊரில் உள்ள எல்லா தெருக்களும் பாதைகளும் ஓடைகளும் எலி பொந்துகளும் கூட அத்துப்படி. ஊரில் உள்ள யாரும் அவர்களை பெயர் சொல்லி அழைப்பது இல்லை உறவுமுறைகள் சொல்லித்தான் அழைக்கிறார்கள். ஊர் நாட்டாமை கூட சாந்தியை வாய் நிறைய மருமகளே என்றுதான் அழைப்பார். சாந்தியையும் மணிகண்டனையும் பிடிக்காத ஆள் அந்த ஊரில் இல்லையென்றே சொல்லலாம். சாந்தியை குளிக்கபோவதுக்கும் கோவிலுக்கு போவதுக்கும் அழைத்துச்செல்ல ஊர் பெண்கள் போட்டிப்போட்டால் எந்த வேலைக்காய் இருந்தாலும் மணிகண்டனை அழைத்து செல்ல ஆண்கள் போட்டிப்போட்டார்கள். கடைசியாய் நடந்த இரண்டு பொங்கல் விளையாட்டு விழாவிலும் சோடா பாட்டிலில் தண்ணீர் நிறைத்தலில் சாந்தியும் ஓட்டப்பந்தயத்தில் மணிகண்டனும் தான் முதல் பரிசு.அந்த ஊரில் சில வயதுக்கு வந்த ஆண்கள் மணிகண்டனை பார்த்தும் சில பருவ பெண்கள் சாந்தியை பார்த்தும் பொறாமை கூட பட்டார்கள். இரண்டாவது குழந்தைக்கு கூட மொத்த ஊருமே வந்து சீனி தண்ணீர் ஊத்திவிட்டுப் போனது.
இப்போது மணிகண்டனுக்கு அந்த ஊரில் உள்ள எல்லா வேலையும் தெரியும் வாழைக்காய் சுமக்க லோடு அடிக்க வாழை மண்பட்டம் வெட்ட கான் தோண்ட வாழைக்கன் அடிக்க இது போதாதென்று கரண்டி பிடிக்கத்தெரிந்த அரைக்கொத்தனார் ஆகவும் ஆகியிருந்தான் மணிகண்டன்.
அன்று மணிகண்டனுக்கு கிளாக்குளத்தில் இடிந்து விழுந்த சுடலைமாடன் சாமி கோவில் மதில் சுவர்களை பூசும் வேலை. இரவு வேலை முடிந்து பதினோறு மணிக்கு பொட்டைக்குளம் பனங்காடு வழியாக வந்துகொண்டிருந்த போது எல்லாரும் திருடி குடித்த பனங்கள்ளை குடித்து பழக்கமில்லாத மணிகண்டனும் குடித்து பார்த்தான். அப்புறம் ரசித்து குடித்தான். அப்புறம் குடித்து விழுந்தான். அப்புறம் அப்படியே விழுந்து கிடந்தான் விடியும் வரை.
காலையில் வீட்டுக்குள் மணிகண்டன் நுழையும் போது ஒரு போர்வையால் தன் இரு குழந்தைகளையும் மூடி அதன் பக்கத்தில் தலைவிரி கோலமாய் படுத்திருந்த சாந்தி வேக வேகமாய் எழுந்து வாசற்கதவை பின் பக்க ஜன்னல்களை மற்றும் முன் வாசற்கதவுகளையும் அடைத்தாள். அவள் வாசற்கதவை அடைக்கும் போது முன்னாடி உள்ள டீக்கடையில் நின்ற சில வாலிபர்கள் பேசிகொண்டார்கள்,
“ரொம்ப குடுத்துவைச்சவண்டா மணிகண்டன் பொண்டாட்டினு அமைஞ்சா இப்படி அமையனும் ஆம்பள வந்ததும் கதவ சாத்தி கட்டிபுடிக்கிற பொண்டாட்டி இப்ப எவ நம்ம ஊர்ல இருக்கா”
மணிகண்டன் மேல் பக்க சுவரில் அடைக்காமல் இருந்த ஒரு ஜன்னலை அவனே போய் அடைத்தான். அடைக்குபோது பார்த்த பக்கத்துவீட்டு ஜானகி அக்கா மணிகண்டனை பார்த்து ”என்ன இன்னைக்கு காலைலேவா” என்று சிரித்த வெட்கம் கொண்ட சிரிப்பு மணிகண்டனை கொதவளையை நெரிப்பது போல் இருந்தது. அலங்கோலமாய் கிடந்த தன் தலைமயிறை ஆத்திரத்தோடு எடுத்து முடிந்தாள் சாந்தி
“என்ன துரை நேத்து வீட்டுக்கு வரல காட்டு சோறு சாப்பிட ஆரம்பிச்சாச்சு போல”
“கிறுக்கச்சி மாதிரி பேசாத ராத்திரி முழுதும் வேலை இருந்துச்சு”
“ஆமா உன்கூட குப்பை கொட்டுன கந்தசாமி அண்ணன மட்டும் ராத்திரியே விட்டுடாங்களாக்கும் உன் வண்டவாளத்தை எல்லாம் அவர் சொல்லிட்டார்”
“என்ன சொன்னான் அந்த கிழட்டு பையன் ஆமாடி நேத்து நான் கள்ள குடிச்சிட்டு காட்லதான் மல்லாக்க படுத்துகிடந்தேன் இப்ப அதுக்கு என்ன”
“அப்படியே எந்த சக்களத்தி வீட்டுக்காவது போவேண்டியது தான இங்க ஏன் வந்த”
“நான் ஏண்டி போகனும் நீ வேணும்னா போ அப்ப்டித்தான என் கூட ஓடி வந்த”
“நல்லா கேட்டல்லா எப்ப எப்பன்னு இப்ப கேட்டல்லா ஏன் கேக்கமாட்ட உன்ன நம்பி வந்தேன்லா நீ கேப்ப”
“ஆமா பெரிசா நம்பி வந்துட்டா காதலிச்சவன் ஒரு மாசம் ஊர்ல இல்லாம போய்ட்டான் அம்மா சொன்னா ஆத்தா சொன்னான்னு ஒரு கிழட்டு பயல கல்யாணம் முடிச்சுட்டு அவன்கூட வெக்கமே இல்லாம படுத்து எந்திரிச்சு என்கிட்ட வந்து கண்ண கசக்கிக்கிட்டு நின்னயே அது மறந்து போச்சா”
“ஆமாடா நான் ஒரு கிழட்டு பய பொண்டாட்டி தான் காதலிச்சவள கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ண துப்பில்லாம ஊரை விட்டு ஓடி ஒளிஞ்சுட்டு கிழட்டு பையன் பொண்டாட்டிக்கிட்ட கிழவன் தூங்கினதுக்கு அப்புறம் நாய் மாதிரி சுவர் ஏறி வந்து படுத்துருண்டய த்தூ……அப்ப என்ன மயித்துக்கு வந்த”
“அதுக்குத்தான் அனுபவிக்கிறேனே ஊரை விட்டு உறவை விட்டு அடுத்தவன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய்ட்டான்ங்கிற பேரோட எவனும் தெரியாத ஊர்ல நடைபிணமாய் திரியிறனே அது போதாதா”
“த்தூ நீ ஒரு மனுசனா………ஒன்னுமே தெரியாத அந்த அப்பாவி கிழவனை சோத்துல விஷம் வைச்சு கொல்ல சொன்னீயே அதையும் பாதகத்தி நான் செஞ்சேன் பார் எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்”
“ஆமா நான் சொல்லித்தான் நீ கொண்ண நான் சொல்லாட்டாலும் அவனே செத்து போயிருப்பான் இல்ல நீ கொன்னுருப்ப சண்டாளி”
“பாவி இப்படி இரக்கமில்லாம பேசுறீய புருசன் செத்த வீட்டுக்குள்ள உன் புள்ளய வைத்துக்குள்ள இருந்து ஒத்த ஆளா முக்கி இழுத்து ஈனி போட்டுட்டு அரிவாள்மனையாள என் தொப்புள அறுத்து ஜன்னல் வழியா எறிஞ்சு சாவாம உனக்குன்னு வாசல பார்த்து காத்து கிடந்தேன் பார் நான் உனக்கு சண்டாளி தாண்டா த்தூ ஈவ் இரக்கங்கெட்ட பயல த்தூ” என்று சாந்தி எதையோ தேட பொறுமை இழந்தவனாய் மணிகண்டன் கதவை திறந்து மறுபடி சாத்திவிட்டு எப்பவும் போல என்றைக்கும் போல வேகமாய் வெளியேறினான்.
டீக்கடையில் நின்றவர்கள் இப்போதும் மணிகண்டனை பார்த்து ஏதோ சொல்லி வெட்கமாய் சிரித்தார்கள் மணிகண்டனும் சிரித்தான் ஆனால் மணிகண்டன் மூக்குக்குள் ஒரு பெரிய கிழட்டுப்பாம்பு நெளிந்து கொண்டிருந்தது.
- மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜின் ஏனைய படைப்புகளுக்கு இங்கே சொடுக்கவும்.

