பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 23, 2010

அஞசல் தலை - 2 - அன்பிற்கினிய வண்ணதாசன் சாருக்கு - சாம்ராஜ்


அன்பிற்கினிய வண்ணதாசன் சாருக்கு,

”ஒரே நேரத்தில் இங்கு இருக்கவும், இல்லாமல் போகவும் விழையும் மனது.” உங்களுடைய சின்னு முதல் சின்னு வரை முன்னுரை ஞாபகம் வருகிறது.

நானும் ஒரே நேரத்தில் மதுரையில் இல்லாமல் இருக்கவும் விழைகிறேன்.



எனக்கு மதுரை

தெருவில் இறங்கினால் சித்தாயி பேரனா என்று சொந்தங்கள் கேட்க்கும் பொழுது

வடக்கு வெளி வீதியிலோ செல்லத்தம்மன் கோயில் படித்துறையிலோ, அண்ணாநகர் திருப்பத்திலோ யாரேனும் எதிர்பட்டு சிரிக்கும் பொழுது

பழைய புத்தகக் கடை பாலு சினேகமாய் புன்னகைக்கும் பொழுது

தாரளமாக பாரதி புத்தக நிலைய துரை பாண்டியன் கடன் தரும் பொழுது

அவ்வப்பொழுது இலக்கியக் கூட்டமோ, ஒரு வெளிநாட்டுப் படமோ அதனூடக தேனீரோ உரையாடலோ இருக்கும் பொழுது

அய்யா தொ.பரமசிவம் நேதாஜி சாலையில் திடீரென எதிர்வரும் பொழுது

ஏகாந்தமாய் வண்டி ஓட்டிச் செல்ல நத்தம் சாலை வாய்த்திருக்கும் பொழுது

டவுண் ஹால் ரோடு கணேஷ் மெஸ்ஸில் 35 ரூபாய்க்கு தாரளமாய் இரண்டு பேர் சாப்பிடும் பொழுது

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையேனும் புத்தகம் வாங்கவோ கொடுக்கவோ நண்பர்கள் வரும்பொழுது

குடித்து விட்டு ’சத்தாய்க்கும்’ தண்டபாணி மாமாக்களின் அலம்பலின் பொழுது

இரவு பண்ணிரண்டு மணிக்கு நானும் நிஷாவும் தல்லாகுளம் வீதிகளில் எந்தப் பயமும் இல்லாமல் நடக்கும் பொழுது

கந்தசாமி முதலியார் இட்லிக் கடையும், அதில் ஊற்றப்படும் பத்து வகை சட்னியும் இருக்கும் பொழுது

விடியற்காலை கண்ணில் படுவதாய் பெருமாள் கோவில் கோபுரம் தென்படும் பொழுது

அம்மாவுடன், அப்பாவுடன் கழிகின்ற ஞாயிற்றுக் கிழமை பொழுதுகளின் பொழுது

அரிதாக நல்ல நண்பர்களுடன் மதுவருந்தும் பொழுது

”சாம் அண்ணே…..” என்று தம்பி ரவிக்களின் பிரிய அழைப்புகள் இருக்கும் பொழுது

கேரளத்திலிருந்து கப்பை கிழங்கை மஞ்சள் பையில் எடுத்துக் கொண்டு தன் சோகங்களை பகிர்ந்து கொள்ளும் ஆற்றிங்கல் முத்து மணி வரும் பொழுது

மருத்துவர் செளந்தர்ராஜன் உதவியோடு யாருக்கேனும் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடியும் பொழுது

நிஷாவுடன் அமர்ந்திருக்கும் மொட்டை மாடி பெளர்ணமி இரவுகளின் பொழுது

இன்னும் குழாய்களில் தண்ணீர் நிற்காமல் வரும் பொழுது

தாங்குகின்ற அளவில் குளிருகின்ற இந்த பனிகாலங்கள் இருக்கும் பொழுது

கிளைட்டனின் திடீர் விஜயங்களின் பொழுது

ஜெயபாஸ்கரனின் ’நடராஜன் பித்தளை பாத்திரக் கடை’யிலிருந்து திடீரென்று வரும் உங்கள் தொலைபேசி அழைப்புகளின் பொழுது

ஆர்த்தி ஹோட்டலில் நாஞ்சில் நாடன் வந்து தங்கும் பொழுது

எஸ்.ராமகிருஷ்ணனின் திடீர் வருகையின் பொழுது

சந்தியாக்கள் எதிர்பாரா விதமாக எங்கேனும் எதிர்படும் பொழுது

என இத்தனைஇத்தனையாய் இருக்கும் போதும் ஏனிந்த மதுரையை விட்டுப் போக வேண்டுமென்று தோன்றுகிறது சார்……
அந்தப் பக்கம் எனக்குக் காத்திருப்பது என்ன……. இன்னும் மனிதர்களா, இன்னும் அனுபவங்களா………

உங்கள் வரியில் சொல்லவேண்டுமெனில்
”யுகங்கள் தாண்டியும் 
தீதான் தெய்வம்
நீர்தான் வாழ்வு”

அன்புடன்
சாம்ராஜ்

28/11/04
(ஹைதராபாத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும் மாலை)




தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com