பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 11, 2010

ஞானி என்கிற மகாநடிகருக்கு - சாம்ராஜ்

குறிப்பு : இந்த கடிதம் இலங்கையில் IIFA விழா நடத்தக்கூடாது என்று போராடுகின்ற தமிழமைப்புகளை பற்றி ஞானி, 9-6-2010 குமுதத்தில் ஓ பக்கங்களில் சீரழிவு-2 என்ற பெயரில் இழிவு படுத்தி எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை.

என் முன்னாள் நண்பர் ஞானிக்கு…..

நான் மதுரை சாம்ராஜ், என்னை நினைவிருக்கிறதா? 15 வருடங்களுக்கு முன் உங்கள் எழுத்துக்கு தீவிர வாசகன் நான். ஜூனியர் போஸ்ட்டில் உங்கள் கட்டுரைகளுக்கும் பந்த் என்கிற பொது விடுமுறை போன்ற ஜூனியர் விகடன் கட்டுரைகளுக்கும் பெரிதாய் அன்றைக்கு என்னை ஈர்த்தன. தினமணி கதிரில் மனிதன் பதில்கள், குட்டி சங்கரன் பெயரிலான கட்டுரைகள் உத்வேகமூட்டின.


98 வாக்கில் உங்களுக்கு கடிதம் எழுதி, நீங்கள் பதில் எழுதி, 99 வாக்கில் உங்கள் பழைய திருவான்மியூர் வீட்டில் சந்தித்தேன். அதன்பிறகு எப்பொழுதாவது தொலைபேசி உரையாடல்கள், புத்தக கண்காட்சி சந்திப்புகள், ’தவிப்பு’ தொடர் என தொடர்ந்தது. மறுபடி நிங்கள் ’தீம்தரிகிட’ தொடங்கிய போது மதுரையில் அதற்கான முதல் வாசகர் வட்டக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். உங்கள் பிறந்த நாள் ஜனவரி 4 ல் எப்பொழுதாவது வாழ்த்து கூட சொல்வதுண்டு. சமீப வருடங்களில் நான் உங்களோடு தொடர்பு கொள்வது கிடையாது. சரியாகச் சொன்னால் உங்கள் மீது வெறுப்புதான். பல்வேறு பிரச்சினைகளில் நீங்கள் முன் வைக்கும் கருத்துகளில் மாற்றுக் கருத்து உருவானதாலும், குறிப்பாக ஈழப் பிரச்சினை பற்றிய உங்கள் நிலைப்பாடுகளும்தான் வெறுப்பிற்கான காரணம். 
              
பேசாத உங்களிடம் பேச வேண்டிய கட்டாயத்தை 9-6-2010 குமுதத்தில் ஓ பக்கங்களில் நீங்கள் எழுதியிருக்கும் சீரழிவு-2 என்ற கட்டுரை ஏற்படுத்தியிருக்கிறது.
          
பல வருடங்களுக்கு முன் மதுரை ஆர்த்தி ஹோட்டலில் உங்கள் ’தவிப்பு’ நாவலை முன் வைத்து ஒரு விவாதம் நமக்குள் நடந்தது. ’தவிப்பு’ நாவல் எழுதுவதற்கான சமூக தேவையென்ன என்பதே என் கேள்வி. தமிழ் நாட்டில் இல்லாத ஆயுதம் தாங்கிய தமிழ்ப்போராளிக் குழுக்களை உருவாக்கி அவர்கள் மத்திய மந்திரியைக் கடத்தும் அளவிற்கு பலம் பெற்றவர்களாகவும்,  ஈழத்து போராளிக் குழுக்களோடு அவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சித்தரித்து, உள்ளூர் முதலாளிகள் இவர்களின் புரவலர்கள் எனவும் காண்பித்து, அவர்கள் சீரழிந்து சிதைந்து. போகின்றார்கள் என நாவலை முடித்திருப்பீர்கள்.
          
எனது எளிய கேள்வி…… எங்கேயிருக்கிறது இப்படியான ஆயுதம் தாங்கிய போரளிக்குழு தமிழ்நாட்டில். 20 ஆண்டுகால தமிழ்தேசிய குழுக்களின் ஆதரவாளனாகச் சொல்கிறேன். தமிழ்தேசிய இயக்கங்களுக்கும், ஆயுதங்களுக்கும் சம்பந்தமே இல்லை. தியாகு நக்சல்பாரி இயக்கம் சார்பாகவே  ஆயுதம் தரித்திருந்தார். ஏன் அப்படி எழுதினீர்கள் என்று கேட்டேன். உங்களிடம் பதில் இல்லை.

இப்பொழுது புரிகிறது. நீங்கள் யூகமாக அப்படிச் சொல்ல விரும்பினீர்கள். இந்த தமிழ்தேசியக் குழுக்கள் ”வளர்ச்சியடைந்தால்” இப்படித்தான் ஆவார்களென. அன்றைக்கே உங்கள் யூகம் அப்படித்தான் இருந்திருக்கிறது. நீங்கள் யூகங்களாக முன் வைத்த 12 ஆண்டுகளுக்கு பின்பும் தமிழ்தேசியர்கள் அப்படி ஆகவில்லை. இன்றைக்கும் ”வாசலில் நின்றுதான் கோசமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” ஒருவேளை அன்றைக்கு உங்களை ஈழம் பற்றி நாவல் எழுதச் சொல்லியிருந்தால் முள்ளி வாய்க்காலை எல்லாம் முன்பே சொல்லியிருப்பீர்கள்.
          
இரண்டு தேசிய இனங்கள் இணக்கமாக வாழ முடியாத போது அவர்கள் பிரிந்து போவதே உலக வழமை. வரலாற்றில் எத்தனை உதாரணங்கள் உண்டு இதற்கு. இத்தனை படுகொலைகளுக்கு பின்பும், இன அழிப்புகளுக்கு பின்பும் “தமிழர்கள் சிங்களவர்கள் இடையே மன ஒருமைப் பாட்டுக்கான முயற்சிகளில் ஈடுபடலாம்” என்கிறீர்களே ஞானி….. உங்களுக்கு ’உண்மையிலேயே’ உண்மை தெரியாதா…. அல்லது நடிக்கிறீர்களா….?நீங்கள் நாடகக்காரர் வேறு. உங்களிடம் அப்படித்தானே கேட்க முடியும்.

உங்கள் அன்னையை, சகோதரியை, மனைவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, உங்கள் சகோதரனை, தந்தையை, குழந்தையை கொடூரமாக அரை நூற்றாண்டாகக் கொல்பவர்களோடு நீங்கள் இணக்கமாக இருப்பீர்களா….? அது எப்படி ஞானி நீங்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (மார்க்சிஸ்ட்) ஒரே…… குரலிலேயே…… பேசுகிறீர்கள். இதற்குப் பதில் தேடிப் போனால் உங்கள் மொழியில் ”நான் ஜாதியைச் சொல்லித் திட்டியவன் ஆவேன்.”

”இன்றைய தேவை அரசியல் ரீதியாக இந்திய அரசு உள்ளிட்ட உலக அரசுகள் இலங்கை அரசு தமிழர்களுக்கான உரிமைகளை சட்டப்படி நிறைவேற்றுவதற்கான வற்புறுத்தலை செய்வதுதான்.”(குமதம் ஓ பக்கத்தில் உங்களின் அபாரமான கண்டுபிடிப்பில் ஒன்று)  சரி ஒரு வாதத்திற்கு இதை வைத்துக் கொள்வோம். ஈழத்தமிழர்களுக்கு 30 ஆண்டுகால சாத்வீக போராட்ட வரலாறு உண்டு. தனி ஈழத்தை ஆதரித்து தந்தை செல்வாவின் 77ம் ஆண்டு தேர்தல் வெற்றி அதன் உச்சம். அதன் பின்பே ஆயுதம் ஏந்தினார்கள் ஈழத்தமிழர்கள்.
         
இலங்கையில் “அமைதி நிலவுகிறது” என்பதை நிரூபிக்கும் ஒரு வழிமுறையாக ராஜபக்‌ஷே இந்த திரைப்பட விழாவை நடத்துகிறார். ”இந்த நிகழ்வு கூடாது, இது அவர்களுக்குத் துணை போகக் கூடியது” என்று இங்கிருக்கும் கலைஞர்களிடமும், தொழில்நுட்பக் கலைஞர்களிடமும் கோருகிறார்கள் உங்கள் வார்த்தைகளில் “வாசலில் நின்று கோஷமிடுபவர்கள்” வேறு என்னதான் செய்யலாம் ஞானி. ஆயுதப் போராட்டம் தவறு. சரி அப்படியே வைத்துக் கொள்வோம். சாத்வீகமாய் ஆர்ப்பாட்டம், கோரிக்கைகள் என்று போராடுகிறார்கள். அதுவும் கூடாதா…….  பேசாமல் பரிக்‌ஷா நாடகம் பார்க்க வந்துவிடலாமா……அல்லது ’ஒற்றை ரீல் புரட்சி’ தொடங்கிடுவோமா…..?

இப்படி போராடிய சேவ் தமிழ் இயக்கமும் மே-17 இயக்கமும் விசிலடிச்சான் குஞ்சுகளில்லை. சேவ் தமிழ் மென்பொருள் துறையில் பணிபுரியும் தமிழ் உணர்வாளர்களைக் கொண்டது. மே-17 பல்வேறுபட்ட அறிவுத் துறையினரைக் கொண்டது. மாறாக நீங்கள் சொல்வது போல கலை இலக்கியவாதி போர்வையில் இருக்கும் அரசியல்வாதிகள் அல்ல.

உங்கள் பிரச்சினையே மொத்தம் மொத்தமாய் எல்லாவற்றையும் பார்ப்பது. சினிமா துறையிலிருந்து அப்படி குரல் வந்தால் மொத்த துறையும் அப்படி பேசுவாதாகக் கருதிக் கொள்வது. சினிமா துறையில் அப்படி ஈழ ஆதரவு அலை சுழன்று அடிக்கவில்லை. அதில் சிலர் பேசுகின்றனர். ”சிங்களப் பெண்ணை கதாநாயகியாக மாற்றியவர் மட்டும் சினிமாவில் இல்லை”. உணர்வாளர் நிறைய பேர் உண்டு. உதவி இயக்குநர்கள் உண்டு. உடனடியாக நீங்கள் மடக்குவீர்கள். “நாளை நீங்கள் எடுக்கப் போகும் படம் சமூகப் பொறுப்புள்ளதாக இருக்குமா?” என்று. ஞானி உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். தன் இனம் அழிகிறது எனும் பொழுது உணர்வுள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள். அப்படி குரல் கொடுப்பதால் அவர்கள் புனிதர்களாகி விடுவதில்லை. ஆனால் அவன் உணர்வாளன் நாளை அவர்களிடமிருந்து நல்ல படமும் வரும். கெட்ட படமும் வரும். அது சமூகம் சார்ந்த ஒன்று.
               
ஆனால் ”விடுதலைப் புலிகளும் தவறு, ராஜபக்‌ஷேவும் தவறு, வாசலில் நின்று கோஷமிடுபவர்களும் தவறு, யுத்ததில் செத்துப் போனது ஈழத்தமிழர்களது தவறு” என்ற ரீதியில் சொல்பவரை என்ன செய்யலாம். ‘அந்நியன் அம்பியிடம்’ இதற்கு என்ன தண்டனை என்று பஞ்சாங்கம் புரட்டச் சொல்லலாமா…..?

எக்கச்சக்க கேள்விகள் கேட்டு எங்களை மடக்குவது உங்கள் பாணி. நிங்கள் தமிழக அரசு தரும் பணத்தை வேண்டாம் என்பீர்களா? செம்மொழி மாநாட்டுக்கு ஒத்துழைக்க மறுப்பீர்களா? அரசு மானியங்களை மறுப்பீர்களா? என்று கேட்கும் உங்களிடம் வாதத்திற்கு ஒன்று கேட்கிறேன். திருவான்மியூர் பத்திரிகையாளர் குடியுருப்பில் அரசு ஒதுக்கிய கோட்டாவில்தானே உங்களுக்கு வீடு கிடைத்தது. அதை சமீபத்தில் விற்றபோது கிடைத்த 45 லட்சத்தை அரசிடமே கொடுத்து விட வேண்டியது தானே. (அதே காலத்தில் உஙகளின் ’தீம்தரிகிட’ இதழை பொருளியல் பிரச்சினை காரணமாக நிறுத்துவதாக அறிவித்தீர்கள்) 
          .
“இலங்கை அரசு நடத்திய யுத்தத்தில் இந்திய அரசும், தமிழக அரசும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவின என்று குற்றம் சாட்டும் சினிமாக்கார அரசியல்வாதிகள்” என்கிறீர்களே ஞானி. உங்களுக்கு அது தெரியாதா? ஜனாதிபதி மாளிகையின் உள் அரசியலையெல்லாம் நாவலாக எழுதக் கூடியவராயிற்றே நீங்கள். உங்களுக்கு அது தெரியாதா ஞானி? 

இந்தியாவின் துரோகத்தை நாங்கள் உங்களுக்கு முன்பே சொன்னோம். இப்பொழுதும் சொல்கிறோம். அழுதோம், துடித்தோம், ஆர்ப்பாட்டங்கள் செய்தோம், டேங்குகளைத் தடுத்தோம், தேர்தல் எதிர்ப்பு செய்தோம், சிறை சென்றோம். தோண்டத் தோண்ட பிணங்களாக வருகின்ற பூமியில் மீதமிருக்கின்ற உயிர்களுக்காக இப்பொழுதும் துடிக்கின்றோம். பின்னிரவுகளில் திடுக்கிட்டு விழிக்கின்றோம். மனநிலை பிறழ்கின்றோம். என்ன செய்வது ஞானி……நாங்கள் இப்படித்தான் “புத்தியில்லாமல் போரடுகிறோம்”

ஹிண்டு பத்திரிகையை ”மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” என்பார் அண்ணா. நீங்கள் ஒரு மேற்கு கே.கே.நகர் நகர் மகாவிஷ்ணுவாய் புரண்டு படுத்துக் கொண்டு கருத்து சொல்கிறீர்கள். ஒன்றைக் கவனியுங்கள் ஞானி இத்தனைக்கு பிறகும் நாங்கள் “வாசலில் நின்று கோஷமிடுபவர்களாகவே இருக்கின்றோம்.” நீங்கள் உங்களுக்குப் பிடித்த பாவ்பாஜியை மேற்கு கே.கே.நகர் நீல்கிரிஸிலிருந்து வாங்கிக் கொண்டு பத்திரமாக வீடு திரும்பிக் கொண்டு இருக்கிறீர்கள்.

வாசலில் நிற்பவர்கள் வாசல் தாண்டாமல் இருப்பது உங்களின் மீதான அச்சத்தினாலோ அல்லது உங்கள் மீதான மரியாதையினாலோ அல்ல ஞானி. 

- சாம்ராஜ்

.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com