பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 8, 2010

என் பிரிய மனைவிக்கு/கணவனுக்கு, - இயக்குநர் ராம்



















என் பிரிய மனைவிக்கு/கணவனுக்கு,

நள்ளிரவுச் சண்டைகளை
ஒரு திரைப்படம் பார்க்கும்
பார்வையாளனாய்/பார்வையாளலாய்
நிகழ்த்தி கொண்டே இருக்கிறேன்.

கைதட்டு வாங்கக்கூடிய
வசனங்களை
எந்த முன்தயாரிப்பும் இல்லாமல்
சொல்லி என்னை நானே
ஆச்சரியப்படுத்தி
கொண்டும் இருக்கிறேன்.


நடந்தவாறே பேசும்போதும்
வெடுக்கன உன் முகத்தை
ஏந்தும் போதும்
என் தலையில் நானே
அடித்துக் கொள்ளும் போதும்
ஓங்காரம் இட்டு கத்தும் போதும்
உனக்கெதிராய் தர்க்கங்களை
அடுக்கும் போதும்
உன் குரல்வளையை நெறிக்கும் போதும்
காலால் எட்டி உதைக்கும் போதும்
நாம் பார்த்து பாராட்டிப்
போற்றிய நடிகனின்/நடிகையின்
உடல் அசைவை பாவனையை
தோற்கடித்த போதை
இந்நொடி வரை இருந்து கொண்டே இருக்கிறது.

பலமுறை கனவுகளில்
நான் உன்னை
கொலை செய்து இன்பமாய்
எழும் போது
நீ என் அருகில் உறங்கிக் கொண்டிருக்கிறாய்.

நள்ளிரவு சிறுநீரில்
கனவும் கரைந்து போகிற அறை
நம் படுக்கையறைக்குள்ளேயேதான்
இருக்கிறது.

ஒவ்வொரு காலையிலும்
நான் உன்னிடம் கோரிய
மன்னிப்பு பொய்.
கண்கள் பனிக்க
சொன்ன சமாதன்ங்களில்
இருந்த ஈரம் ஓப்பனையே.

நீ எதற்கு கோபப்படுவாய்
எந்த சொல் உன்னை காயப்படுத்தும்
எந்த பாவனை உன்னை உதாசீனப்படுத்தும்
எதைச் சொன்னால் நீ பெருங்குரலெடுப்பாய்
எதற்கு நீ அஞ்சுவாய்
எதற்கு உன் உடல் படபடக்கும்
எந்த புள்ளியில் நீ மூர்ச்சையடைவாய்
என எல்லாம் எனக்கு
மிகச் சரியாய் தெரியும்.

இருந்தாலும் உன்னை நான் காதலிக்கிறேன்.

வாஞ்சையோடு

உன் கணவன்/மனைவி

- ராம்



தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com