பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 4, 2010

மகாத்மாவை கொல்ல ஒரு சதிதிட்டம் - மாரிசெல்வராஜ்






”உனக்கு ஒரு விஷயம் தெரியுமா”

“தெரியாது ஆனால் தோள்ல இருந்து கையை எடுத்துட்டு சொல்லு”

“எனக்கு தெரியும் இன்னைக்கு சாரதா வீட்ல இட்லி அவ டிபன்பாக்ஸ்ல எட்டு இட்லி அமுக்கி அமுக்கி வைச்சிருக்கா காலையில நான்  பார்த்தேன்”

”போடா சோத்துமாடா நான் அதை சொல்லல நீ கேளு”

”சொல்லு ஆனால் வாயிலிருந்து எச்சி தெரிக்காம சொல்லு”
 
“நேத்து அனவரதநல்லூர்ல இருந்த அம்பேத்கர் சிலை மேல எவனுங்களோ சானி அடிச்சு கைய உடைச்சு செருப்பு மாலை போட்டுட்டு போய்ட்டாங்களாம் தெரியுமா”
 
”உனக்கு யார் சொன்னா”
 
”நம்ம முருகன் அண்ணன் தான்”


தமிழ் ஆசிரியை முத்துலெட்சுமி வகுப்புக்குள் வரும்வரை அந்த மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு ”அ’ பிரிவு கடைசி பெஞ்ச் மாணவர்களான அகிலன், ரமேஸ், செந்தில் மூவரும் இப்படித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். இதில் அகிலனுக்கு கொஞ்சம் காது கேட்காது.
“என்னடி இன்னைக்கு வெயில் இந்த கொளுத்து கொளுத்துது யவடி இன்னைக்கு குளிக்காம வந்தது”  ஆசிரியை முத்துலெட்சுமியின் வார்த்தையில் வந்த வேர்வையின் நாத்தமும் உடம்பில் வந்த எதோ ஒரு பவுடரின் வீச்சமும் மாணவ மாணவிகளை பயமுறுத்தியது. முத்துலெட்சுமி டீச்சருக்கு பயப்படாத எந்த கொம்பனும் இங்க இல்லை ஏன்னா இரண்டு தலைமுறையா அவங்கதான் இந்த ஸ்கூல் தமிழ் டீச்சர் . அப்பாக்களையும் நல்லா தெரியும் அண்ணன்களையும் நல்லா தெரியும். வயித்தை கிள்ளிக்கிட்டே செவிட்டுல அறையிறது தான் முத்துலெட்சுமி டீச்சர் ஸ்பெஷல்.

“எல்லாரும் இன்னைக்கு கட்டுரை நோட்டு கொண்டு வந்தாச்சா”
 

“ஆமா டீச்சர்” என்று மாணவிகள் பக்கம் அதிக சத்தமும் மாணவர்கள் பக்கம் குறைவான சத்தமும் வந்து ஓய்ந்தது.
 

“கொண்டு வராத பாண்டியராஜாக்கள் எல்லாரும் எந்திரிச்சு அப்படியே வெளிய வாங்க உங்க முகறையைகள பார்ப்போம்”
 

திரும்பி பார்க்காமல் கரும்பலகையை அழித்தவாறே சத்தமாய் சொன்னாள் முத்துலெட்சுமி டீச்சர். அவள் சத்தத்தில் அவள் வி.எம் சத்திரத்தில் இருந்து அனுபவித்து வந்த வெயிலின் கோபம் இருந்தது. சொல்லி வைத்தார்போல் அகிலன், ரமேஸ், செந்தில் மூன்று பேருமே எழுந்து வந்தார்கள்.

“ஓ! எப்பவும் போல இன்னைக்கும் மூவேந்தர்கள் தானா” கோபத்தை கொப்பளித்தாள் முத்துலெட்சுமி டீச்சர். மூன்று வயிறுகள் நன்றாக திருகி கிள்ளப்பட்டு ஆறு கண்ணங்கள் முத்துலெட்சுமி டீச்சரால் அறையப்பட்டது. “போங்க மூனு பேரும் கிளாஸ விட்டு வெளிய போய் அந்த வெயிலுக்குள்ள போய் நில்லுங்க அப்பத்தான் புத்தி வரும்”



“ஏண்டா செவிட்டு பயல அகிலா உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது 
இந்த கழுதைங்க கூட சேர்ந்து கெட்டு போகாதன்னு ஆ”



“இல்ல டீச்சர் எனக்கு சளி புடிச்சுகிட்டு டீச்சர் அதுதான் டீச்சர் இன்னைக்கு குளிக்காம வந்துட்டேன் நாளைக்கு குளிச்சிர்றேன் டீச்சர்” அகிலன் சொல்லி முடிப்பதற்குள் மொத்த வகுப்பறை சிரிப்பில் அலறியது. 

ரமேஸும் செந்திலும் கூட வலி மறந்து சிரித்தார்கள். ஆனால் முத்துலெட்சுமி டீச்சர் என்னமோ தான் அவமானபடுத்தப்பட்டதாக நினைத்து மறுபடியும் அகிலனை செவிட்டில் அறை விட்டு மூவரையும் வெளியில அனுப்பினாள்.  

நல்ல வெயில் மண்டையை பிளந்தது. பக்கத்து வகுப்பு சிறுவர்கள் ஜன்னலின் வழியாக மூவரையும் பார்த்து சிரித்தார்கள். 

“ங்கொம்மால எவனாவது இங்க ஒரு மரம் வைச்சு தொலைச்சிருக்க கூடாது தினமும் வெயிலுக்குள்ள நிக்க வேண்டியதிருக்கு” செந்தில் அலுப்பாய் கேட்டதுக்கு 

“வேனும்னா நாம நாளைக்கு வரும்போது எங்க வயல்ல வேப்பமரம் சின்னதா நிக்கு புடிங்கிட்டு வந்து வைச்சிருவோம்” அவசரமாய் சொன்னான் ரமேஸ்.
 
“சரி அத விடு அங்க சிலையை உடைச்சது யாரு எந்த ஜாதிகாரனுங்க எவ்வளவு திமிர் இருந்தா ங்கொம்மால”
 
‘டேய் குளிக்கலன்னா டீச்சர் திட்டத்தான் செய்வாங்க நான் தான் குளிக்காம வந்துட்டேன் நீங்க எதுக்குடா குளிக்கல இன்னைக்கு” என்று அகிலன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கழுத்தை நெறிக்க போன செந்திலின் கையை பிடித்து
 
”ஏலேய் இன்னைக்கு நாமலும் எதாவது சிலையை உடைக்கிறோம் எவ்வளவு திமிர் இருந்தா நம்ம அம்பேத்கர் சிலையை உடைச்சிருப்பானுவ”
 
“ஆனால் நம்ம ஊர்லதான் சிலையே இல்லையே  ஆசாரிமார் தெருவுல தங்கா ஆசாரி வீட்டுக்கு முன்னாடி மட்டும் தான் காந்தி தாத்தா முட்டிக்கால் போட்டு உட்காந்தாப்ல ஒரு சிலை இருக்கு”
 
“அதை உடைச்சிடுவோம்”
 
“எப்படி அங்கதான் எல்லாரும் இருப்பாங்களே அதிலும் அந்த கருப்பையாஆசாரிக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்”
 
“லூசுப்பயல இராத்திரி போவோம்டா எவன் இருப்பான்”
 
“ஆமா எதுக்கும் முருகன் அண்ணன்கிட்டையும் ஐடியா கேட்டுக்குவோம்” ரமேஸும் செந்திலும் பேசிகொண்டிருக்கும் போதே அகிலன் ஒரு வால் அந்துப்போன பல்லியை ரசிக்க தொடங்கியிருந்தான். அவன் தலையில் செல்லமாய் ஒரு கொட்டு வைத்தான் செந்தில்.
 
“இராத்திரி எங்க போறீங்க நானும் வர்றேண்டா”
 
“டேய் இது மட்டும் உனக்கு கேட்டுச்சா சரி வா இராத்திரி நொங்கு களவாண்ட போகலாம்” என்று கொஞ்சம் சத்தமாய் சொன்னான் செந்தில்.
வகுப்பு முடிந்து வெளிய வந்த முத்துலெட்சுமி டீச்சர் தன் முகத்தில் அப்பியிருந்த சுன்னாம்பு துகள்களை துடைத்தவாறு
 
”மூனு நாய்வளும் நாளைக்கு கட்டுரை நோட்டு வாங்கி இன்னைக்கு எழுதிப்போட்டதை எழுதிட்டு வரல தோளை உரிச்சு நடு ரோட்ல காயபோட்டுருவேன்” என்று வேகமாய் கடந்துபோக வகுப்பில் கூச்சலும் கத்தலும் தொடங்கியது.

“யப்பா நான் இன்னைக்கு போய் சாயங்காலமே போய் குளிச்சிருவன்பா இந்த செருக்கி மவகிட்ட எவன் அடி வாங்குவான்” என்று அகிலன் அலுத்துக் கொண்டது யார் காதிலும் நல்லவேளை விழவில்லை. வகுப்பு முடிந்து எல்லாரும் வெளியே ஓட மூன்று பேரும் வேகமாய் முருகனின் பெட்டிக்கடையை நோக்கிப் போனார்கள்.

முருகன். வயது 20 இருக்கும். இரு காலும் ஊனமுற்றவன் என்பதால் அரசாங்கம் கொடுத்த ஒரு பெட்டிக்கடைக்கு முதலாளி. தினத்தந்தி, கல்கண்டு,  முத்தாரம் எப்பாவாவது ஆனந்தவிகடன் கையில் கிடைக்கும் சில சிவப்பு துண்டு பத்திரிக்கைகளும் படித்த அரசியல்வாதி. அகிலன், ரமேஸ், செந்தில் மூவருக்குமே முருகன் தான் குரு. முருகனிடம் கேட்காமல் எதையும் இவர்கள் செய்வதில்லை.இவர்களிடம் பேசுவதுப்போல வேறு யாரிடமும் முருகன் அவ்வளவாக பேசுவதில்லை.
“முருகன்ன ஒரு பெரிய திட்டம் போட்டாச்சு சந்தோசமா! காலையில அவ்வளவு சோகமா இருந்த”

“என்னடா திட்டம்”
 
அகிலன் எப்போதும் போல முருகன் பெட்டிகடைக்கு வந்ததும் எலி பொறியை தூக்கி விளையாடத் தொடங்கிவிட்டான்.
 
“ஆமான்ன அவனுங்க அம்பேத்கர் சிலையை உடைச்சானுவள்ளா அதனால நாங்க ஆசாரிமார் தெருவுல இருக்கிற காந்தி சிலைய உடைக்கப்போறோம்”
 
“அப்படியா நல்லதுடா எப்படா உடைக்க போறிங்க நானும் வரனுமாடா”
 
“நீ வந்தா எல்லாரும் மாட்டிக்குவோம் நாங்க ரெண்டுபேரும் உன்னைய தூக்குவமா இல்ல சிலைய தூக்குவமா நீ வேண்டாம் நாங்களே பார்த்துக்கிறோம் ஏன் உனக்கு காந்தி தாத்தாவை பிடிக்காதா”
 
“ஆமா எனக்கு காந்திய பிடிக்காது”
 
“எதுக்கு”
 
“அம்பேத்கர்க்கு காந்திய பிடிக்காது எனக்கும் காந்திய பிடிக்காது”
 
“அப்படியா அம்பேத்கர்க்கு காந்திதாத்தாவை பிடிக்காதா”
 
“ஆமா அப்புறம் பகத்சிங் சாகிறதுக்கே காந்திதான் காரணம்”
 
“யாரு பகத்சிங் இந்திராகாந்திய சுட்டு கொன்னவனா”
 
”டேய் லூசு அவர் கம்யூனிஸ்ட்டா அவர எனக்கு ரொம்ப பிடிக்கும்டா அந்த தொப்பி மீசை எல்லாமே அவர தூக்குல போட்டுடாங்க”
 
“யாரு காந்தியா போட்டார்”
 
“இல்லடா இங்கிலீஸ்காரனுங்க”
 
“அப்ப காந்தி காரணம்னு சொன்ன”
 
“காந்தி நினைச்சா இங்கிலீஸ்காரன்கிட்ட சொல்லி காப்பாத்தியிருக்கலாம் ஆனால் அன்னைக்கு அவர் மெளனவிரதம் இருந்துட்டார். அது சரி அகிலன் வயிறு ஏன் தடுப்பா இருக்கு யார் புடிச்சு இந்த கிள்ளு கிள்ளுனா”
 
“எல்லாத்துக்கும் தான் முத்துலெட்சுமி டீச்சர் வயித்தை திருகிட்டாங்க கட்டுரை நோட்டு  இல்லன்னு” என்று செந்தில் சொன்னதும் முருகன் தன் இரண்டு கால்களையும் இழுவி இழுவி போய் ஒரு சாக்குப்பையில் இருந்த நோட்டுகளில் மூன்று நோட்டுகளை எடுத்து ஆளுகொன்றாய் கொடுத்தான்.
 
“சரி எப்படி உடைக்க போறீங்க”
 
“நடு இராத்திரி போய் சிலையை பேர்த்து எடுத்துட்டு போய் பொட்டக்குளத்து கரையில வைச்சு உடைக்க வேண்டியதுதான்”
 
“நம்ம தொகுதியில நான் எம்.எல்.ஏ ஆகிறதை காந்திதான் அம்பேத்கர்கிட்ட சண்டை போட்டு கெடுத்திட்டார்”
 
“அப்படியா நீ எம்.எல்.ஏ ஆகியிருப்பியா”
 
’ஆமா அம்பேத்கர் சொன்னதை மட்டும் காந்தி கேட்டுருந்தார்னா நானோ இல்ல என் அப்பனோ இல்ல என் மகனோ எம்.எல்.ஏ ஆக வாய்ப்புண்டு ஒரு வேலை நீங்களும் ஆகியிருக்கலாம்”
 
“இப்ப ஆக முடியாதா”
 
“நம்ம ஊருக்கு பஞ்சாயத்து தலைவர் கூட ஆக முடியாது அது இருக்கட்டும் யாருக்கும் தெரியாம பன்னுங்க தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்”
 
பொது வாசகசாலையில் இருந்து மூன்றுபேரும் நடுஇரவில் எழுந்து வந்தார்கள். செந்தில் கையில் ஒரு பெரிய சனல்சாக்கு வைத்திருந்தான். ரமேஸ் ஒரு பெரிய இரும்பு கம்பியும் அகிலன் ஒரு சின்ன கத்தியும் வைத்திருந்தனர். மூவரும் பிராமணச்சேரி வழியாக நுழைந்து சாணக்குடி வழியாக வரும்போது மறக்குடியில் ஒரு நாய் மூவரையும் பார்த்து குலைத்து அதகளபடுத்த பயந்துபோய் மறுபடியும் பறச்சேரி வழியாக வந்து பிள்ளைதெரு வழியாக தங்கா ஆசாரி வீட்டை அடைந்தனர்.
 
“டேய் அங்க சாணாக்குடிக்கு பக்கத்துல தானே பனைமரம் இருக்கு இங்க எதுக்குடா வந்தீங்க” அகிலன் கோபமாய் கேட்டான்.
 
“ஆமா சொன்னா மட்டும் இவருக்கு கேட்டுரும் போல சத்தம்காட்டாம வாடா” என்று செந்தில் அதட்ட
 
“இப்படி தங்கா ஆசாரி வீட்டுக்கு முன்னாடிதான் நொங்கு குமிச்சு போட்டுருக்காங்கன்னு நேத்தே என்கிட்ட சொன்னா என்னவாம்” என்று அகிலன் சலித்து கொண்டதை பார்த்து ரமேஸும் செந்திலும் சின்னதாய் சிரித்துக்கொண்டார்கள். நல்ல கும்மிருட்டில் காந்தி தனியாய் சின்ன கம்பை ஊனியவாறு முட்டிகால் போட்டு அமர்ந்திருந்தார். ஒரு வெள்ளாடு தன் குட்டிகளோடு காந்திக்கு முன்னால் படுத்து அசைபோட்டு கொண்டிருப்பது யாருக்குமே தெரியவில்லை.
 
அகிலனின் காதில் செந்தில் “ டேய் அகிலா நீ இங்கயே நின்னு ஆள் யாரும் வர்றாங்களான்னு பார் நாங்க போய் சாக்குல தூக்கிட்டு வந்திடுறோம்” எல்லாம் சரியாய் புரிந்தது போல் அகிலன் தலையை ஆட்டியதும் செந்திலும் ரமேஸும் காந்தி சிலையை நோக்கி ஊர்ந்து ஊர்ந்து போனார்கள்.
 
ஆள் அரவத்தை உணர்ந்துகொண்ட வெள்ளாடு தன் குடும்பத்துக்கு எச்சரிக்கை ஒளி எழுப்பி வேகவேகமாய் இடம்பெயரச்செய்தது. ரமேஸ் காந்தி சிலை அசைத்து கம்பியை வைத்து தென்ன முயல காந்தி மிக எளிதாக செந்திலின் பக்கம் சாய்ந்தார்.
 
“ டேய் ரமேஸ் , காந்தி தாத்தா என்ன சாதிடா”
 
“ஐயரா இருக்கும்”
 
“உனக்கு யார் சொன்னா”
 
“நம்ம முருகன் அண்ணந்தான் சொன்னான் கோமனம் பாய்ச்சிருக்கதை பார்த்தா அப்படித்தான் தோனுது” மெதுவாக செந்தில் காந்தியின் சிமெண்ட் முதுகில் பூனூல் இருக்கிறதா என்று தடவிப்பார்த்தான்.
 
“ஏலேய் பூனூல் இல்லடா”
 
“அப்படின்னா என்ன சாதியாடா இருப்பார்”
 
“வேற என்ன சாதியா இருப்பார்”
 
“ஒருவேளை ஆசாரியாய் இருப்பாரோ”
 
“எப்படி சொல்ற”
 
“இல்ல ஆசாரி தெருவுலதான சிலை வைச்சிருக்காங்க”
 
காந்தியை சாக்கு மூட்டைக்குள் தினித்து இருவரும் தூக்க முடியாமல் தூக்கி நடக்க அகிலனும் வந்து சேர்ந்து கொண்டான் அகிலனின் முகத்தில் இப்போது அவ்வளவு சந்தோசம் இருந்தது.
 
“ஏண்டா எல்லாத்தையும் அள்ளிட்டு வந்தீட்டீங்களா நல்லா பார்த்தீங்களடா ஒரே கடுக்காவா இருக்கப் போகுது” என்று அகிலன் சொன்ன போது ரமேஸ் ஆத்திரத்துடன்
 
“டேய் செவிடா வாய மூடிக்கிட்டு சத்தம் காட்டாம வா”
 
“மயிறு நாங்களும் காவலுக்கு இருந்திருக்கோம் எனக்கு இதில பங்கு இருக்கு” என்று அகிலன் சொல்லி சிரிக்க இப்போதும் மூன்று பேருமே சிரித்தார்கள் யாருக்கும் தெரியாமல். சரியாக பொட்டைகுளம் தாண்டி சொக்கர்கோவில் முன்னாடி வந்து நிலவு ஒளி தெரியாத இடத்தில் சாக்கு மூட்டையை இறக்கி வைத்தார்கள்.
 
”என்ன பண்ண”
 
“இப்படியே இருக்கட்டும் நாம இரண்டு பேரும் சேர்ந்து போய் பெரிய கல்லை எடுத்துட்டு வந்து சாக்குக்குள்ள வைச்சு பூனையை அடிச்சு கொல்ற மாதிரி ஒரே போடா போட்டு சிலையை உடச்சிட்டு அப்படியே போயிருவோம் என்ன”
 
“நல்ல ஐடியா”
 
அகிலனை சிலைக்கு பக்கத்தில் இருக்க சொல்லிவிட்டு ரமேஸும் செந்திலும் கல் தேடிப் போக அகிலனும் அவர்கள் பின்னாடியே போனான். தவனை மடையின் பக்கத்தில் கிடந்த ஒரு பெரிய கல்லை செந்திலும் ரமேஸும் தூக்க முயல
 
“டேய் எதுக்குட இவ்வளவு பெரிய கல்லு”
 
“வாய மூடிட்டு வந்து தூக்குடா”
 
“ஓ நொங்கை உடக்கிறதுக்கா” என்று அகிலனும் சேர்ந்து கல்லை தூக்கும்போது தான் தூரத்தில் வடக்கு திசையில் இருந்து இரண்டு மூன்று சைக்கிள்கள் வருவது தெரிந்தது. அவர்கள் ஏதும் இரண்டாம் காட்சி சினிமாவுக்கு போனவர்களாக இருக்கும் போல பாட்டும் கூத்துமாய் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும் மூன்று பேரும் பக்கத்தில் இருந்த வாழைத் தோட்டத்திற்குள் குதித்து உட்காந்து கொண்டார்கள்.
 
“ஏலேய் ங்கொம்மால எந்த தேவிடியா மவனோ காந்தி சிலைய தூக்கிட்டு வந்து போட்டுருக்கானுவ”
 
“ஏலேய் தேடுங்க இங்கினத்தான் இருப்பானுவ இது சின்னசாதி பய மக்களாத்தான் இருக்கும்”
 
“சிலைய உடைச்சிட்டானுவளா”
 
“இல்ல வலது கை மட்டும் உடைச்சிருக்கு”
 
வாழை தோட்டத்திற்குள்ளும் அந்த சத்தங்கள் குதிக்க மூன்று பேரும் மேற்கு திசையை நோக்கி தலைதெறிக்க ஓட தொடங்கினார்கள் ஓடிகொண்டே இருந்தார்கள் சத்தங்கள் விரட்டுவது நின்றபின்னும் ஓடி கொண்டிருந்தார்கள்.
 
“ச்ச பேசாம ஆளுக்கு ஐஞ்சஞ்சு நொங்கு கொலைய எடுத்துட்டு வந்து குட்டி பரும்புல உட்காந்து சாப்பிட்டிருக்கலாம் இப்படி வம்பாக்கிட்டீங்களடா இனி உங்கள நம்பி வரக்கூடாதுப்பா” என்று அகிலன் சொல்லும்போதே முத்துலெட்சுமி டீச்சர் வகுப்புக்குள் வந்துவிட்டாள்.
 
“என்ன பாலாப்போன பாண்டிய மக்கா நோட்டு வாங்கி எழுதியாச்சா எங்க எந்திரிச்சு எழுதுனத படிங்க பார்ப்போம்”  ரமேஸ் , அகிலன், செந்தில் மூவர் இனைந்து சத்தமாக படிக்க தொடங்கினார்கள்.
 
“தலைப்பு.
தேசப்பிதா காந்தியடிகள்,



முன்னுரை


நம் நாடு இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலேய ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடந்தது. அந்த அடிமை விலங்கை உடைத்து சுதந்திரம் அடைவதற்காய் எண்ணற்ற தலைவர்கள் நமக்காய் போராடினர் அவர்களுள் முதன்மையானவர் இந்திய மக்களால் மகாத்மா என்றும் தேசப்பிதா என்றும் அழைக்கப்ப்ட்ட மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.

- மாரிசெல்வராஜ்


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com