பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 25, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை - 4 - லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவி இவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது.இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

பகுதி 4

கண்ணம்மா அந்தப் பெண்ணின் பெயர் லட்சுமி என்றாள். என் பெயரில் ஒரு பெண், இவ்வளவு துணிச்சலுடன் இருக்கிறாளே என்று வியந்தேன். அந்தப் பெண் கையில் கம்யூனிஸ்ட் கொடியைத் தாங்கி இருந்தாள். இடை இடையே ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றாள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அதையும் திருப்பிச் சொன்னார்கள். எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.

எனக்குப் புரியாத வார்த்தைகளை அந்தப் பெண்ணும் கூட்டத்தினரும் சர்வசாதாரணமாக முழக்கமிட்டது, எனக்குள் ஒருவித உந்துதலை ஏற்படுத்தியது. அந்த முழக்கம், தலைமை தாங்கிய பெண்ணின் ஆவேசம், துணிவு ஆகியவற்றின் மீது எனக்கு ஆர்வம் பிறந்தது.

மீண்டும் கம்பெனி திறந்தது.

இந்த நேரத்தில் தொழிற்சங்கத்தினர் முணு முணுத்து வந்த அந்த அவசர நிலை வந்தே விட்டது.

1975 ஜூன் மாதம் 25 ஆம் தேதி, பிரதமர் இந்திராகாந்தி இந்தியா முழுக்க எமர்ஜன்சி அறிவித்தார். சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர், எங்களிடம் இதைப் பற்றி ஏற்கெனவே  பேசியிருந்தனர். அவசரநிலை என்றால், அடக்குமுறை கடுமையாக இருக்கும்; காவல்துறையினரின் கையில்தான் ஆட்சி நிர்வாகம் இருக்கும்; யாரையும் கைது செய்யலாம், சிறையில் அடைக்கலாம்; கேள்வி கேட்க முடியாது; அடிப்பார்கள், சுடுவார்கள், சித்ரவதை செய்வார்கள் என்றெல்லாம் கூட்டங்களில் பேசப்பட்டது. அந்தக் கூட்டங்களில் எனக்கு ஏற்பட்ட ஆச்சர்யம் என்னவென்றால், அவசரநிலை பற்றி இவ்வளவையும் பேசிவிட்டு, ‘இதை எப்படிச் சமாளிப்பது என்று பேசுவார்கள். இது எனக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசாங்கத்தை எதிர்த்து, அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எப்படிக் கட்சி வேலை பார்ப்பது என்றுதான் கூட்டங்களில் பேசப்படும். அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி என்பது போர்க்குணம் மிக்கது, அது அரசாங்கத்தையே எதிர்க்கும் என்ற மிகப் பெரிய மரியாதை எனக்கு ஏற்பட்டது.

அவசரநிலை என்றால், கூட்டம் போடக் கூடாது, ஊர்வலம் போகக் கூடாது, வெளி இடத்தில் கூடி நின்று பேசுவதே குற்றம். எங்கள் தொழிற்சங்கக் கூட்டங்கள் தடையில்லாமல் நடந்துகொண்டிருந்தன. காவல்துறை யாரையும் தேடவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. பிறகுதான் தெரிந்தது, தமிழகத்தில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவசரநிலையை எதிர்த்தார். அதனால், அவர் அவசர நிலையின் தாக்கம் தமிழகத்தில் இல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்தியாவின் பிற மாநிலங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியபோது, தமிழகம் மட்டும் சுதந்திரமாக இருந்தது.

இந்த நிலை, ஆறு மாதங்கள் வரை நீடித்தது. 1976 ஜனவரி 31 ஆம் தேதி, இரவு பத்து மணிக்கு இந்திராகாந்தி தமிழக அரசைக் கலைத்துவிட்டார். அடுத்த நிமிடத்திலிருந்து தமிழகம் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளானது. எங்கு பார்த்தாலும் போலீஸ் குவிக்கப்பட்டது. சாலைகள், உணவு விடுதிகள், திரை அரங்கங்கள், மருத்துவமனைகள், தெருக்கள், பள்ளிகள், கல்லூரிகள் என சகல பொது இடங்களும் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டன. கம்யூனிஸ்டுகள், தி.மு.கவினர் மிக மோசமாக ஒடுக்கப்பட்டனர். இப்போதைய தி.மு.க பெரும் தலைவர்கள் அனைவருமே அவசரநிலைக் காலத்தில் துன்பப்பட்டார்கள்.

தமிழ்நாட்டில் காவல்துறை ஆட்சிதான் நடந்தது. எங்கள் தொழிற்சங்கக் கூட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி மிகவும் ரகசியமாகத் திட்டமிடப்பட்டது. தஞ்சைப் பெரியகோயிலுக்குப் பின்னே, செவ்வப்பநாயக்கன் வாரி என்ற பகுதி உண்டு. சேப்பனாவாரி என அதை அழைப்பார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் பகுதி இது. அங்கே, சுப்ரமணியன் என்ற ஒரு தோழரின் வீடு இருந்தது. அங்கு அனைவரும் கூட வேண்டும் என்று தகவல் வந்தது.

நான் வேலை பார்த்த டாண்டெக்ஸ் தொழிற்சங்கத்தினர் மட்டுமல்ல, எதிரே இருந்த பஞ்சாலை சங்கத்தினரும் வருவார்கள் என்றாள் திருமகள். நாங்கள் தனித் தனியாக, ஏதோ உறவினர் வீட்டுக்குப் போவது போன்ற பாவனையில் சேப்பனாவாரிப் பகுதிக்குள் சென்றோம்.

தோழர் சுப்ரமணியத்தின் மனைவியும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். அவர் எங்கள் எல்லாரையும் வரவேற்றார். அவரது வீட்டில் சட்ட விரோதமான கூட்டம் கூடுகிறது என்ற எந்தப் பதட்டமும் இல்லை. நாங்கள் அனைவரும் வீட்டின் உள்ளே கூடினோம்.

அந்தக் கூட்டத்தில் இருவர் மட்டும் புதுமுகங்களாக இருந்தனர். தோழர் கணபதி, அவர்களை அறிமுகப்படுத்தினார். ஒருவர், வெங்கட்ராமன். இன்னொருவர் டேவிட்.

டேவிட், மீசை இல்லாமல் இருந்தார். மா நிறம், முன்னே சற்றே சுருண்ட தலை முடி, வேட்டி சட்டை அணிந்திருந்தார். வெங்கட்ராமன் மீசை இரு புறங்களிலும் கீழ் நோக்கி வளைந்திருந்தது. இடது வாகு எடுத்து படியச் சீவி இருந்தார். வெளுத்த நிறம். கையில் ஒரு கைக் குட்டை வைத்துக் கொண்டு அடிக்கடி, உள்ளங்கைகளைத் துடைத்துக் கொண்டார். அவசரநிலைக் காலத்தில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று இவர்கள் இருவரும் விளக்கினார்கள்.

எனக்கு திகிலாக இருந்தது. நான் ஏன் இங்கு வரவேண்டும் என்று தோன்றியது. நான் ஒன்றும் கம்யூனிஸ்ட் அல்ல. நான் ஏன் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும்? இந்திராகாந்திக்கும் எனக்கும் என்ன பிரச்சினை? என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் எலாம் என் பெற்றோரால் வந்தவைதானே தவிர, இந்திராகாந்தியால் வந்தவை அல்லவே.

என்னால் என் பெற்றோரையே எதிர்க்க முடியவில்லை. இந்திராகாந்தியை எப்படி எதிர்ப்பது? இப்படி விதவிதமான கேள்விகள் என்னைக் குடைந்தன. தோழர்கள் டேவிட்டும் வெங்கட்ராமனும் பேசி முடித்தார்கள்.

இங்கு வந்ததற்கான காரணம் என்ன என என்னை நானே கேட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், என் வாழ்க்கையின் மிக முக்கியமான சந்திப்பாக அது அமையும் என நான் அந்த நேரத்தில் நினைக்கவில்லை. உண்மையில் இந்திராகாந்திதான் என் வாழ்க்கையைத் தீர்மானித்தார் என்பதே உண்மை!

                                                                                                                   - லெட்சுமி அம்மா


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com