பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 26, 2010

இயக்குநர் சீனுராமசாமி கவிதைகள் - 1

அறிமுகம்

இயக்குநர் சீனுராமசாமி, பூர்வீகம் மதுரை. படித்தது மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி. மணம் புரிந்திருப்பது தமிழாசிரியை. மகள் பெயர் தியானா செந்தமிழ். முதல் திரைப்படம் கூடல் நகர். “ தென்மேற்கு பருவக்காற்று” கூடியவிரைவில் திரையரங்குகளில் வீச இருக்கிறது. முதல் கவிதை நூல் “ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்”. காட்சியில் இவரது கவிதைகள் தொடராக வெளிவருகிறது.






1.



பகல் சூரியன்.


அவள் குளக்கரையில்
கால் நனைத்த நிமிடத்தில்
நடுக்கமுற்றது
அப்பொழுது அது
வெளிர்மஞ்சள் நிறமாயிருந்தது.

பின் பலாச்சுளை உதடுகளை
பொட்டல் வெளியில்
கவ்விய தருணத்தில்
இடையே நழுவியது
அப்பொழுது அது கருஞ்சிவப்பில்
பழுத்திருந்தது.

அவள் கைகளைப் பற்றிக் கொண்டு
தேவாலய வெளி பிரகாரத்துக்குள்
திரிந்த பொழுது
அது கோபுரபின் பகுதியில்
மறைந்திருந்தது.

அவள் அவனோடு
முயங்கிய பகலில்
ஜன்னலோரத்தில் அது
இறந்து கிடந்தது.

- சீனுராமசாமி



தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com