லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவி இவர். பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது, உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது.இந்த அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது. முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.
பகுதி 3
’துணிவே துணை’ படம் ஓடிய திரையரங்கில் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கூடிய அனுபவம்தான் எனது முதல் அரசியல் அனுபவம்.
முதல் முதலாக திரைப்படம் பார்த்தது, எனக்குள் இனம் புரியாத நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்தது. நான் வேலைக்குப் போய், நான் சம்பாதித்த பணத்தில் படம் பார்த்தேன். இப்படிக் கூட நடக்கும் என நான் நினைத்தது இல்லை. தொழிற்சங்கத்தினர் ’அவசர நிலை அல்லது எமர்ஜன்சி’ குறித்து அடிக்கடிப் பேசிக் கொண்டனர். எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், அந்த அவசரநிலைதான் என் வாழ்க்கையின் போக்கையே மாற்றியது.
அவசர நிலைக்கு முன், வேறு சில சம்பவங்கள் நடந்துவிட்டன. நீலா வீட்டில் தங்கிக் கொண்டு நான் வேலைக்குப் போவது என் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டது. நீலாவின் அப்பா வாட்டாச்சியாரிடம் என் அப்பா பேசி, என்னை வீட்டை விட்டு வெளியேற்றச் சொல்லிவிட்டார். நான் வேறு வழியே இல்லாமல் வல்லத்திற்கே மீண்டும் சென்றேன். நான் வீடு போய்ச் சேர்ந்தபோது இருட்டிவிட்டது. வாட்டாச்சியாரே மென்மையாகப் பேசி என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
வாட்டாச்சியார் என் வீட்டிலிருந்து கிளம்பி, அவரது தலை தெரு முனையில் மறைந்த அடுத்த நொடி விறகுக் கட்டையால் எனக்கு அடி விழுந்தது. அப்பாதான் அடித்தார். அலறினேன், வலியால் துடித்தேன். அம்மா கோபம் கக்கும் கண்களோடு உட்கார்ந்து வேடிக்கை பார்த்தாள். தடுக்க வரவில்லை. ’ஓடுகாலி...ஓடுகாலி’ என்று கத்திக் கொண்டு அடித்தார் அப்பா. சம்பளம் வாங்கி நான் வீட்டுக்குத் தரவில்லை என்பதுதான் அவர்களது ஆதங்கம் என்பது புரிந்தது. சம்பளத்தை நான் ஊதாரித்தனமாகச் செலவு செய்ததாகக் கத்தினார் அப்பா. அம்மாவும் சேர்ந்துகொண்டு கத்தினாள்.
அப்போது எனக்கு நாள் சம்பளம் இரண்டு ரூபாய். பஸ் கட்டணம், தேநீர் செலவு போக பெரிதாக மிச்சம் பிடிக்க முடியாது. ஆனால், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்னை அடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். செலவு போக மீதமுள்ள சம்பளத்தை வீட்டில் கொடுத்துவிடும்படிக் கேட்டிருந்தால் நான் மகிழ்ச்சியோடு கொடுத்திருப்பேன். அப்படிக் கேட்பது ஏதோ ஒருவகையில் என்னை அவர்கள் மகளாக அங்கீகரிப்பதாகக் கூட இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அப்படிப் பார்க்கவில்லை. இப்போது அப்பாவின் இரு மனைவிகளுக்கும் தலா இரு பெண் குழந்தைகள் பிறந்திருந்தார்கள். அவரது தொழில் வருவாய் கூடியிருந்தது.
அவர்களுக்கு இருந்த ஒரே தொல்லை நான் தான். கண்காணா இடத்துக்கு நான் சென்றுவிட்டால் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். உறவினர் வீட்டில் இருந்தது அவர்களுக்கு அவமானத்தைத் தந்ததாக அப்பா அடிக்கும்போது அம்மா கத்தினாள். நான் வீட்டுக்கு வந்ததும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அப்பா ‘சனியன் மறுபடியும் வீட்டச் சுத்தப் போவுது’ என்றார்.
அப்பாவின் வருவாய் உயர்ந்ததும் அவரது இரு மனைவிகளுக்கும் அவருக்குமான நெருக்கம் மேலும் அதிகரித்ததை நான் உணர்ந்தேன். அவரது குடிப் பழக்கமோ அவரது வெறித்தனமோ ஊதாரித்தனமோ அவர் மனைவிகளுக்கு எந்தச் சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை. இது எனக்குள் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பணம் கொடுத்தால் அப்பாவின் செயல்கள் நியாயமாகிவிடுமா? என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. இதனால் என்னால் அந்தக் குடும்பத்தில் ஒட்டவே முடியாமல் போனது.
அன்று இரவு முழுதும் அழுதபடி வழக்கமான என் இருப்பிடமான மாட்டுக் கொட்டகையில் இருந்தேன். மாட்டுக் கொட்டகையில் புதிதாக ஒரு சிக்கல் முளைத்திருந்தது. புதிய மாடுகள் வந்திருந்தன. அதனால், எனக்கான இடம் குறைந்துபோயிருந்தது. கொட்டகையின் கடைசி ஓரத்தில் மட்டும் ஒரு ஆள் படுக்கும் அளவு இடம் இருந்தது.
விடிந்த நேரம் நான் அரை மயக்கத்தில் இருந்தேன். இரவு சரியான தூக்கம் இல்லை. விரகுக் கட்டையால் அடி வாங்கியதால் உடல் முழுக்க ரணமாக இருந்தது. பசியும் சோர்வும் என்னை அழுத்தின.
காலையில் அம்மாவிடம் சாப்பாடு கேட்டேன். அவள், நான் வேலைக்குப் போவதை நிறுத்தினால் சாப்பாடு போடுவதாகக் கூறினாள். அந்தக் கணத்தில் எங்கிருந்துதான் சக்தி வந்ததோ, என் கம்பெனி அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு விறு விறுவென நடந்தேன். வல்லத்திலிருந்து என் கம்பெனி ஏழு கிலோ மீட்டர். நடந்தே கம்பெனிக்கு வந்தேன். திருமகள் நடந்தவற்றைக் கேட்டு வருந்தினாள். தொழிற்சங்கத் தலைவர் எம்.கே.பியும் ஜெயபாலும் எனக்கு ஆறுதல் கூறினர். எக்காரணம் கொண்டும் வேலையை மட்டும் விட வேண்டாம் என்றனர்.
மாலை வீடு திரும்ப மட்டும் பேருந்து பிடித்தேன். தினமும் காலை ஏழு கிலோ மீட்டர் நடந்தேன். பணத்தை மிச்சப்படுத்த இப்படி ஏதாவது செய்ய வேண்டி இருந்தது. காலை உணவு சாப்பிடும் வழக்கம் இல்லாமலே போனது. மதிய உணவை திருமகள், ஜெயபால், எம்.கே.பி என தோழர்கள் கொடுத்தனர். தொழிற்சங்கத் தோழர்கள் உறவு என்னைத் துணிச்சல்காரி ஆக்கியது.
வல்லத்தில் இருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு வேலைக்குச் செல்லும் சத்தியவதி டீச்சர் பேருந்து நிறுத்ததில் அறிமுகமானார். அவரது வாழ்க்கையும் ஏறத்தாழ என்னைப் போலவே இருந்தது. இதனால் எங்களுக்குள் நல்ல நட்பு உருவானது.
எங்கள் வீட்டு மாடுகளில் ஒன்று சினையாக இருந்தது. ஒரு இரவு, அந்தப் பசு கன்று ஈனுவதற்காகக் கத்தியது. நான் பாதித் தூக்கத்தில் இருந்தேன். அம்மாவும் தங்கைகளும் ஓடி வந்தார்கள். அம்மா கன்றை வெளியே இழுத்துப்போட்டாள். நான் ஓரத்தில் ஒதுங்கி நின்றேன். பசுவுக்குச் செய்ய வேண்டிய பக்குவங்களைச் செய்துவிட்டு கன்றைத் தடவிக் கொடுத்துவிட்டு அனைவரும் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். புதிய கன்று எனக்கென இருந்த இடத்தையும் அடைத்துக் கொண்டது. அதன் பிறகு, இரவில் தூக்கம் என்பது ஒரு கனவு போலாகியது.
கம்பெனிக்கு ஒரு மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நான் போகும் இடம் அறியாமல் தவித்தேன். கண்ணம்மா என்ற பெண் எங்கள் வீட்டுக்கு வந்தாள். என் அம்மாவின் தங்கை என்று அவளை அனைவரும் கூறிக்கொண்டார்கள். கண்ணம்மா என்னைப் பார்த்து, இரக்கப்பட்டு கம்பெனி திறக்கும் வரைக்கும் கண்டமங்கலம் என்ற கிராமத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறினாள். நானும் சம்மதித்தேன்.
கண்டமங்கலம் காவிரிக் கரையில் இருக்கும் கிராமம். நெல் வயல்கள் நிறைந்த செழிப்பான ஊர். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்றிருக்கும். வாய்க்கால்கள் சலசலக்கும். அங்கே எனக்கு உற்சாகம் கிடைத்தது. பிள்ளை வாய்க்கால் என்ற வாய்க்காலில் குளிக்கச் செல்வோம். சிறுவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள். சில வேளை, தூண்டிலில் தண்ணீர் பாம்புகள் சிக்கும். பாம்புகளைப் பார்த்ததும் எனக்கு நடுக்கம் ஏற்படும். அந்தச் சிறுவர்களோ, பாம்பைக் கையால் பிடித்து தலையைச் சுற்றி ஒரே அடி அடித்துக் கொல்வார்கள். தண்ணீர் பாம்புகளைத் தேடிப் பிடித்து வாலைச் சுழற்றி விளையாடுவது அவர்களுக்குப் பிடித்தமானது. இந்தக் காட்சிகள் எனக்குள் துணிச்சலை வரவழைத்தன.
பிள்ளை வாய்க்காலில் ஒரு நாள் குளித்துக் கரை ஏறியபோது, பெரும் கூட்டமாக மக்கள் திரண்டு வந்துகொண்டிருந்தனர். அனைவரது முகங்களிலும் கோபாவேசம் தெறித்தது. இப்படியான ஆவேசமான கூட்டத்தை நான் இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன். அந்தக் கூட்டத்தில் கணிசமாக பெண்களும் இருந்தனர். இதைவிட ஆச்சர்யம், அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி வந்ததே ஒரு பெண் தான். தலைமை தாங்கிய பெண், ‘அஞ்சமாட்டோம் அஞ்ச மாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்’ என்றாள். கூட்டத்தில் வந்த அனைவரும் அதை ஆவேசமாகத் திருப்பிச் சொன்னார்கள். அந்த வார்த்தைகளை உச்சரித்தபோது அந்தப் பெண் முகமும் உடலும் முறுக்கேறியதைக் கண்ட எனக்கு சிலிர்ப்பாக இருந்தது.
அந்தப் பெண், ஒல்லியாக நெடு நெடு என்ற உருவத்துடன் இருந்தாள். அவள் இடது கன்னத்தில் ஒரு மறு இருந்தது. கன்னங்கள் ஒட்டிப் போயிருந்தன. ஆனால், கை கால்கள் வரிச்சு வரிச்சாக உறுதியுடன் இருந்தன.
கண்ணம்மா அந்தப் பெண்ணின் பெயர் லட்சுமி என்றாள். என் பெயரில் ஒரு பெண், இவ்வளவு துணிச்சலுடன் இருக்கிறாளே என்று வியந்தேன். அந்தப் பெண் கையில் கம்யூனிஸ்ட் கொடியைத் தாங்கி இருந்தாள். இடை இடையே ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றாள்.
- லெட்சுமி அம்மா

