லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவி இவர். பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது, உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது.இந்த அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது. முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்
பகுதி 2
மாதாவோடு இரவில் பேசுவதும் அதிகரித்தது. மாதா என்றாவது ஒரு நாள் எனக்கான மந்திரத்தைக் கற்றுக்கொடுப்பாள் என என் ஆழ் மனம் நம்பியிருக்கலாம்.
எனக்கு என்ன வேண்டுமோ அதை மாதாவிடம் கேட்டேன். அவள் எனக்கு எது நல்லதோ அதை மட்டும் கொடுத்தாள். இவ்வாறுதான் எனக்குக் கிடைத்தவற்றையும் கிடைக்காதவற்றையும் புரிந்துகொண்டேன்.
SSLC தேர்வு தஞ்சை ஆண்டணீஸ் பள்ளியில் நடந்தது. வல்லத்தில் இருந்து தஞ்சை சென்று தேர்வு எழுத வேண்டும். சக மாணவர்கள் பரபரப்பாக இருந்தனர். நானோ மாதாவிடம் தேர்வுக் கவலைகளை ஒப்படைத்துவிட்டேன். எல்லாத் தேர்வுகளையும் ஓரளவிற்கு எழுதிவிட்டேன். கணக்குத் தேர்வு நாள் வந்தது. கேள்வித் தாள் ஒரே இருட்டாக இருந்தது. ஒரு வினாவிற்குக் கூட விடை தெரியவில்லை. தேர்வுக் கூடக் கண்காணிப்பாளர் வந்து பார்த்தார். என் நிலைமையைக் கூறினேன். அவர் என் காதருகே வந்து ’உன் எதிரில் இருக்கும் மாணவனது விடைத் தாளை உனக்குத் தெரியும்படி வைத்து எழுதச் சொல்கிறேன்’ என்றார். எனக்கு எதிரே இருந்தவன் இப்ராஹீம். அவனும் என்னிடம் ‘பார்த்து எழுது’ என சைகை செய்தான். எனக்கு ஆர்வம் மேலிட்டது. எழுதத் துணியும்போது மாதாவின் முகம் நினைவுக்கு வந்துவிட்டது. மாதா, இயேசு ஆகிய கடவுள்களின் அறிவுரைப்படி காப்பி அடிப்பது தவறு என எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அறிவுரைகள் வேறு அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தன.
வினாத்தாளை அப்படியே விடைத் தாளில் எழுதி வைத்துவிட்டுக் கிளம்பினேன். அந்த நிமிடத்தில்தான் என் வாழ்க்கை நழுவியது என்பது அப்போது புரியவில்லை. இறுதித் தேர்வு முடிந்ததும் எல்லோரும் விடை பெற்றுச் சென்றனர்.
தேர்வு எழுதிய ஆண்டனீஸ் பள்ளிக்கு அருகே உள்ள வியாகுல மாதா கோயிலில் மாதா கண்ணீர் விட்டு அழுவதாக ஒரு சேதி வந்தது. நாங்கள் அங்கே ஓடினோம். மாதா சிலை முன் கூட்டம் கூடியிருந்தது. மாதா சிலையைப் பார்க்கும்போது கண்ணீர் வருவது எனக்குத் தெரியவில்லை. மாறாக, மாதா கண் சிமிட்டுவது போலிருந்தது. நான் குழப்பத்துடன் பல கோணங்களில் பார்த்தேன். மாதாவின் கண்களில் வரும் கண்ணீர் எனக்குத் தெரியவில்லை என்ற துக்கத்தில் எனக்கு அழுகை வந்துவிட்டது. கன்னியாஸ்திரி ஒருவர் என் தலையில் கொட்டினார். திரும்பிப் பார்த்தேன். ’மாதா அழுவது இந்த தேவாலயம் அல்ல. அது வேறு தேவாலயம்’ என்றார் அவர்.
அவர் கூறியதில் எனக்கு ஒருவித நிம்மதி ஏற்பட்டது என்னவோ உண்மை. மாதா அழுதால், அவரது கண்ணீர் எனக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஏனென்றால், மாதாவிடம் நான் எதையும் மறைத்தது இல்லை. அதேபோல மாதாவும் நடந்துகொள்ள வேண்டும் அல்லவா.
தேர்வு முடிந்த மறுநாளே அனைவரும் மடத்தை விட்டு வெளியேறினார்கள். என்னையும் வெளியேற்றினார்கள். நான் கன்னியாஸ்திரிகளின் காலில் விழுந்து அழுதேன். மடத்திலிருந்து வெளியேற்ற வேண்டாம் என்று கெஞ்சினேன். வலுக்கட்டாயமாக என்னை வெளியேற்றினார்கள். எலிசபெத்தை அழைக்க அவள் அண்ணன் வந்திருந்தார். சௌந்திரத்தை அழைக்க அவள் அம்மா வந்தார். நான் மட்டும் தகரப் பெட்டியுடன் தனியே மடத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தேன். வீடு அருகேதான் இருந்தது. ஆனால், அங்கு போக மனம் இல்லை. எலிசபெத் எனக்கு ஒரு யோசனை கூறினாள்.
தஞ்சாவூர் யாகப்பா நகரில் என் தூரத்து உறவினரான ஆரோக்கியமேரி அம்மா வீடு இருந்தது. அங்கே போகச் சொன்னாள் எலிசபெத். அவளே என்னை அங்கு கூட்டிச் சென்றுவிட்டாள்.
ஆரோக்கியமேரி அம்மாவுக்கு இரு மகன்கள். அருள்சாமி, ஆரோக்கியசாமி. அருள்சாமி என் அண்ணன். ஆரோக்கியசாமி என் தம்பி. அந்தக் குடும்பத்தில் அடைக்கலமானேன். அங்கெ எனக்கு வேறுவிதமான வாழ்க்கை அனுபவம் கிடைத்தது. கறவை மாடுகள் நிறைய உள்ள வீடு அது. அதிகாலை எழும் அம்மாவோடு சாணி கழுநீர் எடுப்பது தொடங்கி வேலை கடினமாக இருக்கும். பால் கறந்து வீடுவீடாகக் கொடுக்க வேண்டும். மாலை, மீண்டும் மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்ய வேண்டும். அந்தக் குடும்பத்தில் எல்லாரும் உழைத்தார்கள். நானும் உழைத்தேன். இரவில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். அப்போதுதான் ஒரு குடும்பத்தில் வாழும் உணர்வை நான் முதன் முதலில் பெற்றேன்.
அண்ணன் பி.எஸ்.சி முடித்திருந்தது. தம்பி பி.யூ.சி படித்திருந்தது. நான் என் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தேன். தேர்வு முடிவு வந்தது. கணிதத்தில், யாரும் எதிர்பாராத மதிப்பெண்ணை நான் பெற்றிருந்தேன். பூஜ்யம் மதிப்பெண் பெற்றேன். என்னை எல்லோரும் கேலி செய்தார்கள். மீண்டும் தேர்வு எழுத முடிவு செய்தேன். ஆனால் முடியவில்லை. அண்ணன் என்னை டாண்டெக்ஸ் பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டது. என்னை வேலைக்குச் சேர்த்தவர் எம்.கே.பி என்ற எம்.கே.பாலசுப்ரமணியன். இவர் டாண்டெக்ஸில் இயங்குய சி.இ.டி.யூ தொழிற்சங்கத் தலைவர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு.
அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த திருமகள் எனக்குத் தோழியானாள். என்னவிட வயதில் மூத்தவள். யாகப்பா நகரில் இருந்து வேலைக்குச் செல்ல பேருந்து வசதி இல்லை. ஆகவே, என் உறவினரான வாட்டாச்சியார் வீட்டில் தங்கி அங்கிருந்து வேலைக்குச் சென்றேன். அந்த வீட்டில் லீலா என்ற தங்கை இருந்தாள். அவள் மாமா ஜெயபால்தான் தொழிற்சாலையில் கேண்டீன் வைத்திருந்தார். காலை உணவு எனக்குக் கொடுத்துவிடுவார். அவரும் தொழிற்சங்கத்தில் இருந்தார். ஆகவே, எனக்கும் தொழிற்சங்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
நானும் சங்கத்தில் சேர்ந்தேன். சங்கத்தின் அலுவலகம் தஞ்சை அரண்மனைக்கு எதிரே இருந்தது. அப்போது அவசரகாலப் பிரகடனம் பற்றிய பதட்டம் எங்கு பார்த்தாலும் இருந்தது. அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று சங்கத்திற்கு அழைப்பு வந்தது.
ஒரு விடுமுறை நாளில் நானும் திருமகளும் சங்க அலுவலகத்துக்குச் சென்றோம். குறுகலான மாடியில் ஏறிச் சென்றோம். அங்கிருந்த அகலமான அறை ஒன்றில் கூட்டம் நடந்தது. சிலர் மட்டுமே உட்கார்ந்திருந்தனர். கூட்டம் குறைவு என்பதாலேயே எங்களுக்கு பயம் வரத் தொடங்கியது. கூட்டத்தின் நடுவில், கருத்த தடித்த பெரும் தொப்ப்கைக்காரர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது. திருமகளின் கையை நன்றாகப் பிடித்துக்கொண்டேன். நாங்கள் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தோம். தொழிலாளிகள் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கினார்கள். நாங்கள் இருவர் மட்டுமே பெண்கள். எங்களுக்கு அருகே இருந்தவரிடம், ‘யார் அந்த கருத்த தடித்த மனிதர்?’ எனக் கேட்டோம். ‘அவர்தான் தோழர் பாரதிமோகன். கூட்டத்தின் தலைவர்’ என்று மிகுந்த மரியாதைக்குரியவரைப் பற்றி கூறும் தொனியில் பதில் உரைத்தார். கிறிஸ்டி எனும் பெண் தோழர் ஒருவர் வர வேண்டியுள்ளது என்றார்கள்.
நான் மீண்டும் ஒருமுறை தோழர் பாரதிமோகனைப் பார்த்தேன். ’இவரைப் பார்த்தால் கொள்ளைக் கூட்டத் தலைவர் மாதிரி இருக்கிறது’ என்றேன். திருமகள் சத்தமில்லாமல் சிரித்தாள். பின்னர் இருவரும் கூட்டத்திலிருந்து விலகி வெளியே வந்துவிட்டோம். வாசலில் எம்.கே.பி, ஜெயபால் உள்ளிட்ட சிலர் நிறு கொண்டிருந்தனர். ’பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போயிட்டு வந்துடறோம்’ என்று கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாகக் கிளம்பினோம். அருகே இருந்த ஞானம் திரையரங்கத்தில் ‘துணிவே துணை’ படம் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் படம் பார்க்கச் சென்றுவிட்டோம். கூட்டத்திலிருந்து பாதியில் வந்தது குறித்த சாகச மன உணர்வு எங்களுக்கு இருந்தது. ஆனாலும், நம்பிக்கை மோசடியில் ஈடுபடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி மேலிட்டது. அவசரநிலைப் பிரகடன என்றால் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது? ஆகிய கேள்விகளுக்கு எங்கே போய் விடை தேடுவது என்ற கேள்வி என்னைக் குடைந்தது. திருமகள் பொறுமையாக, ’நாளைக்கு கிறிஸ்டி அக்காகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். நீ இப்ப படத்தப் பாரு’ என்றாள்.
இடைவேளையில் வெளியே வந்தபோது, கூட்டத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்களைக் கேண்டீனில் சந்திக்க முடிந்தது. அவர்களில் கிறிஸ்டி அக்காவும் ஒருவர்.
- தொடரும் -
முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்

