நான் கார்த்திக் நேத்தா. சேலம் மாவட்டம், சின்னனூர் கிராமம். திரைத் துறையில் பாடலாசிரியராக வளர்ந்து வருகிறேன்.
இவருடைய கவிதைகள் காட்சியில் தொடராய் வெளிவருகின்றன.
கிராபைட் வெளி
எண்பது பக்க நோட்டில்
ஆளுக்குப் பாதி பாதி பக்கங்கள்
என்று தீர்மானித்துக் கொண்டோம் .
நீயொரு கத்தரிக்காயை
பூசணிக்காய் அளவு வரைந்தாய் .
நான் தக்காளிக்கு மஞ்சள் நிறம் தீட்டி
உருளைக்கிழங்கு ஆக்கினேன் .
நீயொரு பென்சில் வரைந்து ,
'என் ரப்பர் பென்சிலையே அழிக்கும்'
என்று அழித்தாய் .
நான் வரஸ்ரீ டீச்சரை வரைந்து ,
பிரம்பால் அடித்தேன் .
நீ உன் பங்குக்கு டீச்சரை
முட்டி போட வைத்தாய் .
நானொரு பறவை வரைந்து
பறக்கவிட்டேன் .
நீ வானம் வரைந்து வேலி
கட்டிக்கொண்டாய் .
நான் அம்மாவை வரைந்து
கோல் மூட்டினேன் .
நீ அம்மாவின் மடியில் விசும்பி
தூங்கும் உன்னை வரைந்தாய் .
நான் எண்பது பக்க நோட்டை வரைந்து
நம் இருவரின் பெயரையும் எழுதி வைத்தேன் .
நீ பழம் விட்டாய் . நானும் விட்டேன் .
- கார்த்திக் நேத்தா
