பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 21, 2010

ஈழம் - ஓவிய சாட்சியம் - ஒவியர் புகழேந்தி

”போர் முகங்கள்” என்று பெயரிடப்பட்ட ஈழம் குறித்த ஒரு ஓவியக்கண்காட்சியை சமீபத்தில் சென்னையில் ஓவியர் புகழேந்தி நடத்தினார். அதில் இடம் பெற்ற ஓவியங்கள் காட்சியில் தொடராய் வெளிவர இருக்கிறது.  இவ்வோவியங்கள் கூடிய விரைவில் புத்தகமாய் கொண்டு வர இருக்கிறார். நீங்கள் எழுத இருக்கும் பொருத்தமான பின்னூட்டங்களை அப்புத்தகத்தில் வெளியிட விரும்புகிறார். உங்கள் பின்னூட்டங்களை இரண்டு வரியில் இருந்து எத்தனை வரிகளிலும் எழுதலாம். நீளாமான பின்னூட்டங்கள் அளிக்க விரும்புவோர் kaattchi@gmail.com க்கு அனுப்பலாம். 

ஓவியம் : 1
தலைப்பு:  காத்திருப்பு

காத்திருக்கிறோம்
காலத்திற்காகவும்
ஈழத்துக்காகவும் 
-   காசிஆனந்தன்



ஓவியம் குறித்த சில தகவல்கள்:


இரவில் களத்தில் போராளிகள் நகரும் முறை. தரையில் அமர்ந்தே அவர்கள் நகர்வார்கள். 7 பேர் ஒரு குழுவாய் நகர்வார்கள். முன் அமர்பவர் நேர் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து இருக்க அவருக்கு பின் இருப்பவர் இடது  திசையை நோக்கி அமர அவருக்கு அடுத்தவர் வலது திசையை நோக்கி அமர , இறுதியில் இருப்பவர் பின்னோக்கி அமர்ந்து பின் திசையை நோக்க என அனைத்து திசைகளையும் உற்று நோக்கியவாறு ஒரு குழு முன்னேறும். இருளில் எங்காவது ஒளி தெரிந்தால் கண்களை மூடிக் கொள்வார்கள்.விலங்குகளின் கண் இருளில் ஒளியைப் பிரதிபலிப்பது போல் மனிதக் கண்களும் பிரதிபலிக்கும் என்ற நுணுக்கமான ஞானத்தோடு குழு முன்னேறும். 

ஓவியர் புகழேந்தி அறிமுகம்

கலை வடிவங்கள்,கலை யுத்தி,தத்துவம் எல்லாம் சமூகத்தில் இருந்தே பிறக்கின்றன. கடந்த 30 வருடங்களில் ஈழயுத்தம் தமிழ் படைப்பு மனதில்,ஆக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் நம் இலக்கிய ஜாம்பவான்களும், புத்திஜீவிகளும் தத்துவங்களையும், இலக்கிய யுத்திகளையும், இலக்கிய வடிவங்களையும் மேற்குலகில் இருந்தும் பிற உலகில் இருந்தும் கடன் வாங்கின. அவ்வாறு கடன் வாங்கியவைகளுக்கு பின்நவீனத்துவம், இருத்தலியல், மிகை எதார்த்தவாதம், அமைப்பியல் என பெயர் வைத்து மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட படைப்புகளையும் தத்துவத்தையும் உருவாக்கினார்கள் அல்லது மொழிபெயர்த்தார்கள் அல்லது திருடித் தந்தார்கள். தனக்கான தத்துவத்தை தன் வாழ்வில் இருந்தும் தன் சமூகத்திலிருந்தும் உருவாக்காத இனம் அடையாளமற்றுப்போகும். தன் மொழியில் மற்ற இனத்தின் கலையை அது வெளிப்படுத்தும். ஆக தமிழில் எழுதுவதால் மட்டுமே ஒரு இலக்கியம் தமிழில் எழுதப்பட்டதாகது. நம் தத்துவ சூழலும் கலைச்சூழலும் இந்நிலையில் இருக்க சிலர் மட்டும் இதிலிருந்து விலகி நிற்கிறார்கள். தங்களது படைப்பு மனதை சமகால தமிழ் வாழ்விலிருந்து கண்டடைகிறார்கள். அப்படி கண்டடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஓவியர் புகழேந்தி.

1983 ல் இருந்தே ஈழப்போரட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். commercial art ஐ ஓவியக்கல்லூரியில் தேர்ந்தெடுத்திருந்தவர் ஈழப்போராட்டத்தாக்கத்தினால் painthing துறைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறார். தன் கலையின் நோக்கத்தை தன் கலையின் ஆன்மாவை அவர் கண்டு கொண்டதே இம்மன மாற்றத்திற்குக் காரணம்.  ஈழப்போராட்டம் இவரை சகல் மனித குலத்தையும் நேசிக்கவைத்ததாகவும் தன் கலையை வள்ர்த்ததாகவும் சொல்கிறார்.  ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சாதீய வன்முறைக்கெதிரான ஓவியங்கள், கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியினால் துரத்தியடிக்கப்பட்ட தமிழரின் துயர் நிறைந்த ஓவியங்கள், பாபர் மசூதி இடிப்பின் பயங்கரவாதத்திற்கு எதிரான ஓவியங்கள், வெண்மணித்தீயில் வெந்து மடிந்து தலித்துகளின் அலரலை பதிந்த  ஓவியங்கள், சோமாலியா பஞ்சம்,வியட்நாமில் அமெரிக்காவின் பய்ங்கரவாதம், ஹிரோசிமா வாங்கிக் கொண்ட அமெரிக்க அணுகுண்டு,  கியூபா புரட்சி, நெல்சன்மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, ஒரிசா புயல்,குஜராத் பூகம்பம், அம்பேத்கார்,தாகூர், சுபாஷ் சந்திர போஷ், ஆர்மேனிய நிலநடுக்கம் என இவர் ஓவிய உலகம் விரிகிறது.

27ஆண்டுகளாக ஒவியப்பணி ஆற்றி வரும் இவர் தஞ்சாவூர் மாவட்டம் தும்பத்திக் கோட்டையில் பிறந்தவர். குடந்தை ஒவியக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் ஐதராபாத் மத்தியப்பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிபையும் முடித்துள்ளார்.தற்போது சென்னை ஓவியக்கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். புகழ் பெற்ற ஓவியரான   எம். ஃப். உசேனால் தேர்வு செய்யப்பட்டு  1987 ம் ஆண்டு கல்கத்தாவில் இளைஞர்களுக்கான தேசிய விருதை பெற்றதில் இருந்து இன்று வரை பல்வேறுப்பட்ட அங்கீராகங்களை பெற்று வ்ருகிறார்.

- காட்சி




தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com