பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 14, 2010

இளந்தமிழர் இயக்கம் - ஓர் எளிய அறிமுகம்

வணக்கம், சிங்களவர் சொல்கிற இறுதி யுத்தமும், நம் பார்வையில் தற்காலிக பெரும்பின்னடைவும் ஈழத்தில் நிகழ்ந்து ஒரு வருடம் கழியப்போகிறது. இவ்வொரு வருடத்தில் தமிழகத்திலும் உலகத்தின் ஏனைய பகுதிகளிலும்  பல்வேறு   அமைப்புகள், சிறுஅமைப்புகள், தனிநபர்கள் தங்களால் இயன்ற அளவிலான களப்பணியை ஆற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வமைப்புகளை,தனிநபர்களை மேலும் அறிந்து கொள்வதும்,அமைப்புகளுக்குள் தனிநபர்களுக்குள் பரிமாற்றம் நிகழ்வதும் காலத்தின் அவசியமாய் கருதுகிறோம். விருப்பம் உடையவர்கள் தங்கள் அமைப்பு குறித்தும் தங்கள் செயல்பாடுகள், இலக்குகள் குறித்தும் காட்சிக்கு கட்டுரையாய் எழுதும்படி அன்புடன் கேட்டுக்கொண்டோம். அவ்வேண்டுகோளுக்கிணங்க இளந்தமிழர் இயக்கம் தங்களைக் குறித்த அறிமுகத்தை நமக்குத் தருகின்றனர். அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

இளந்தமிழர் இயக்கம் -  ஓர் எளிய அறிமுகம்

2008ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே, சிங்கள பௌத்த இனவெறி அரசு தமிழீழ மக்கள் மீதான கொடூர இன அழிப்புப் போரை நடத்தி வந்தது. அப்போரின் போது, தமிழ் மக்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டும், அங்கங்களை இழந்தும் உடமைகளை இழந்தும் பாதிக்கப்பட்டு வந்தனர். தமிழீழ மக்களின் துயரங்கள், தாய்த் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கியது.

இந்நிலையில் தான், இப்போருக்கு இந்திய அரசு நிதி, ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வந்தது அம்பலமானது. ‘அகிம்சை’ முறையில் விடுதலை வாங்கியதாகப் பிதற்றிக் கொள்ளும் இந்தியா, ஆயுதங்கள் கொடுத்து தமிழீழ விடுதலையைத் தடுக்க முனைந்தது.

காவிரி, முல்லைப் பெரியாறு, ஒகேனக்கல் என எந்த சிக்கல் வந்தாலும் நியாயம் தமிழ்நாட்டுப் பக்கமே இருந்தாலும் கூட, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் அண்டை மாநிலத்தவரோடு நெருக்கம் பேணி வரும் இந்திய அரசு, தமிழீழ மக்கள் மீதான இன அழிப்புப் போருக்கு உதவியதில் வியப்பில்லை. இந்திய அரசிற்கு தலைமையேற்று நடத்தி வரும் இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரான சோனியா காந்தியும், சிங்கள இனவெறி அரசின் துணையுடன்  தமிழ் மக்கள் மீதான வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும் விதமாக கொடூரமாக நடத்தப்பட்டது இறுதிப்போர்.

சிங்கள பௌத்த இனவெறி அரசின் இன அழிப்புப் போருக்கு துணை நின்ற இந்திய அரசின் கொடுஞ்செயல் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே நடந்தது, மாவீரன் முத்துக்குமாரின் தீக்குளிப்பு.

தமிழீழ மக்கள் மீதான போருக்கு உதவிய இந்திய அரசைக் கண்டித்தும், தமிழக தேர்தல் அரசியல்வாதிகளை நம்பாமல் மாற்று அரசியலைக் கட்டி எழுப்புங்கள் என்று இளைஞர்களுக்குக் கட்டளை விடுத்தும், மாவீரன் முத்துக்குமார் தனது இன்னுயிரைத் தீக்கிரையாக்கினார்.

அந்த ஈகத்தமிழனின், தீக்குளிப்பு எமக்கு இரண்டு உணர்வுகளை வெளிப்படுத்தியதாக இருந்தது. ஒன்று, ஓட்டுப் பொறுக்குவதைத் தவிர்த்த, தமிழ் இனத்திற்கான மாற்று அரசியல் உருவாக்கப்படவில்லையே என்ற ஆதங்கம். இன்னொன்று, தமிழக மாணவர்களும், இளைஞர்களும் சரியான அரசியல் தலைமையின்றிக் கிடக்கிறார்கள் என்ற விரக்தி.

இந்த உணர்வுகளால் உந்தித் தள்ளப்பட்ட அந்த மாவீரன், தனது மரணத்திற்குப் பிறகாவது இதனை செய்யுங்கள் என்று விடுத்த வேண்டுகோளே ‘இளந்தமிழர் இயக்கம்’ உருவாகக் காரணமாக அமைந்தது.

அவரது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், ஒரு புதிய அமைப்பை கட்டமைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். தற்போதுள்ள தேர்தல் அரசியல் சகதியில் இருந்து விடுபட்டு, மாற்று அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற தொலைநோக்கை ஏற்றுக் கொண்டோம். இந்த இரு சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு, மாவீரன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்கள் என உணர்வாளர்கள் நாங்கள் ஒன்று கூடிப் பேசினோம். ‘இளந்தமிழர் இயக்கம்’ உருவானது.

தேர்தல் அரசியலை எக்காலத்திலும் கையிலெடுக்காமல், தமிழ்நாட்டிற்கான மாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை வளர்த்தெடுப்பதே நம் இலட்சியம் என்ற குறிக்கோளோடு இணைந்தோம். இயக்கமானோம். தேர்தல் புறக்கணிப்பு, தமிழீழ விடுதலை, தமிழ்த் தேச விடுதலை உள்ளிட்ட இலட்சியங்களை ஏற்றுக் கொண்டு செயல்படும் அமைப்புகளோடு தோழமையோடு பணியாற்றவும் உறுதிபூண்டோம்.

மாற்று அரசியலை வளர்த்தெடுப்போம் என்ற நம்பிக்கையுடனும், தமிழ்த் தேசிய இனத்தின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடனும் தொடர்ந்து நாம் பணியாற்றி வருகிறோம்.

முதன் முதலாக தமிழக கிராமங்களுக்கு ஈழச்சிக்கலை முன் வைத்து பரப்புரை நடத்தியது, இனவெறி காங்கிரசுக்கு எதிரான தொடர் பரப்புரை நடத்தியது, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் ஐயர், ப.சிதம்பரம் ஆகியோர் போட்டியிட்ட மக்களவைத் தொகுதிகளில் தீவிரப் பரப்புரை மேற்கொண்டு வழக்குகளை சந்தித்தது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டை முற்றுகையிடச் சென்று கைதாகி சிறைபட்டது, ஈழஅகதிகளுக்கு உரிமைகள் கிடைக்க போராடியது, மீனவர் ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிராகப் போராடியது, நளினி விடுதலையை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்களை அம்பலப்படுத்தும் விதமாக, இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற சீக்கியரை போற்றும் படங்களை வெளியிட்டது என தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தின் போராட்டக் களத்தில்,  உயிர்ப்புடன் யாம் இயங்கி வருகின்றோம்.

பதவி, பணம், விளம்பர மோகம் ஆகியவற்றுக்கு அடிமைப்படாத, தியாகமும், போர்க்குணமும் இணையப் பெற்றுள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் ஒன்றிணைத்து புதிய தமிழ்த் தேசிய அரசியல் தலைமுறையை உருவாக்கி வருகின்றது, இளந்தமிழர் இயக்கம். தமிழ்த்தேசியம் நாம் உருவாக்கும் இந்த மாற்றுத் தலைமுறையே தமிழ்த் தேசிய விடியலை பெற்றுத் தரும் என்று உறுதியாக நம்புகிறோம். மாற்று அரசியல் மீது நம்பிக்கையுள்ள இளைஞர்களும் மாணவர்களும் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். மாற்றங்களை ஏற்படுத்துவோம்.

தோழமையுடன்,

க.அருணபாரதி

| ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம் | பேச: 9841 949462 |

| இளந்தமிழர் இயக்கத்தின் வலைதளம்: http://elanthamizhar.blogspot.com |

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com